archivetamil article

Article

சர்வதேச எழுத்தறிவு தினமும் புதிய கல்விக் கொள்கையும் – பேரா.நா.மணி

 

இன்றைய உலகில், ஐந்தில் ஒருவருக்கு கல்வி இல்லை. அதிலும் குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை. ஆறு கோடி குழந்தைகள் பள்ளி விட்டு துரத்தப்பட்டு உள்ளனர். கொரானா பாதிப்பின் முதல் சில மாதங்களிலேயே 190 நாடுகளை சேர்ந்த, 62‌.3 விழுக்காடு பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேசிய மாதிரி கூறெடுப்பு ஆய்வு நிறுவனத்தின் 75வது கணக்கெடுப்பின்படி, 23 விழுக்காடு மக்களுக்கு எழுத்தறிவு இல்லை. கொரானா பாதிப்பு காரணமாக தமிழ் நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் கூட சேர்க்கை மிகவும் மந்தமாக இருக்கிறது. 14 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பல்வேறு வேலைகளுக்கு சென்று கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் தான் 44வது சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . யுனெஸ்கோவின் கூற்றுப்படி, 773 மில்லியன் வயது வந்தோர் மற்றும் இளைஞர்களுக்கு எழுத்தறிவு இல்லை. 617 மில்லியன் பள்ளி செல்லும் குழந்தைகள் குறைந்த பட்ச கற்றல் அடைவுகளை எட்ட முடியவில்லை. நூறு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கொரானாவால் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை, இந்த ஆண்டுக்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளது. “கோவிட் 19 நெருக்கடி காலம் மற்றும் அதற்கு பிந்தைய காலத்திற்கு தேவையான எழுத்தறிவு, கற்றல் கற்பித்தல் முறைகள்” என்ற தலைப்பை மையப் பொருளாக தேர்வு செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச எழுத்தறிவு தினத்திற்கு ஒரு நாள் முன்பு, செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, இந்தியப் பிரதமர் கவர்னர்கள் மற்றும் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் “புதிய கல்விக் கொள்கையை அச்சுப் பிசகாமல் அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார். பாராளுமன்றத்தில் வைத்து, விரிவாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத புதிய கல்விக் கொள்கையை இப்போது மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை புறம் தள்ளி ஆளுநர்கள் வழியாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி என்பது பொதுப் பட்டியல் அல்லது ஒத்திசைவு பட்டியலில் இருக்கும் ஒரு பொருள் என்பதையே மறக்கடிக்க வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்கட்டும். இந்திய சராசரி கல்வியறிவு அற்றவர்கள் விகிதம் 23 விழுக்காடாக இருக்கும் இன்றைய நிலையில், பாலினப் பாகுபாட்டு பதினான்கு விழுக்காடு இருக்கிறது. அதாவது ஆண்கள் எழுத்தறிவு இன்மைக்கும் பெண்கள் எழுத்தறிவு இன்றைக்கும் பதினான்கு விழுக்காடு இடைவெளி உள்ளது. இத்தகைய நிலையில் புதிய கல்விக் கொள்கையை பிரதமர் குறிப்பிடுவதைப் போல கறாராக அமுல்படுத்தினால், அதே கல்விக் கொள்கை குறிப்பிடுவதைப் போல 2030 ஆண்டில் 100 விழுக்காடு பள்ளி சேர்ப்பு விகிதத்தை எட்டிவிட முடியுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பரந்து விரிந்த நம் நாட்டில், சாதீய ரீதியாக, பொருளாதார ரீதியாக, பூகோள ரீதியாக, பண்பாட்டு ரீதியாக பல்வேறுவிதமான விதமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இதனைத் துல்லியமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்காவிட்டாலும், தோராயமாக பலருக்கும் தெரியும்.

இத்தனை வகை ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டு இதற்கு ஏற்ற வகையில் காத்திரமான கொள்கைகளை வகுத்து நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். அனைவருக்கும் அடிப்படை கல்வி, அனைவருக்கும் குறைந்த பட்ச எழுத்தறிவு என்பது போன்ற திட்டங்கள் எட்டவே முடியாத இலக்குகள் அல்ல. ஆனால் இன்றுவரை அனைவருக்கும் எழுத்தறிவு என்பதுகூட ஒரு கனவாகவே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை 1966 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எழுத்தறிவு தினத்தை கடைபிடித்து வந்தாலும் இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு தான் தேசிய எழுத்தறிவு முனையம் உருவாக்கப்பட்டது. 1990களில் தொடக்கத்தில் ‌ தேசிய எழுத்தறிவு இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அறிவியல் இயக்கங்கள் பெருமளவில் பங்கு பெற்றன. தமிழ் நாட்டில் அறிவொளி இயக்த்தை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் முன் நின்று நடத்தியது.

இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் அதிகரித்த எழுத்தறிவு வளர்ச்சிக்கும் மக்கள் அறிவியல் இயக்கங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்கள் அறிவியல் இயக்கங்கள் பங்களிப்பு இன்றி இன்றும் கூட சக்சார் பாரத் என்ற பெயரில் எழுத்தறிவு இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றோ முடிவுக்கு வந்துவிட்ட அறிவொளி இயக்கம் பற்றி இன்றும் எல்லோருக்கும். ஆனால் சக்சார் பாரத் குறித்து எத்தனை பேருக்கு தெரியும்? இதுதான் இன்றைய வயது வந்தோர் கல்வியின் நிலை.

மொத்த மக்கள் தொகையில் இன்றும் கால் பங்கு மக்கள் படிப்பறிவு அற்றவர்களாக உள்ள நிலையில் அதனைத் தீர்க்க வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். 1990களில் நடந்த அறிவொளி இயக்கத்தின் பங்கை தவிர்க்க இயலாமல் அங்கீகரிக்கும் புதிய கல்விக் கொள்கை ஆவணம், 100 விழுக்காடு எழுத்தறிவை 2030 ல் எட்டுவோம் என்கிறது ‌.

நூறு விழுக்காடு எழுத்தறிவை சமூகப் பங்கேற்போடும் தொழில்நுட்ப துணை கொண்டும் அடைவோம் என்று பறைசாற்றுகிறது.

அடுத்து நூறு விழுக்காடு எழுத்தறிவை எட்ட ஒரு புதிய கலைத்திடத்தை உருவாக்குவோம் என்கிறது இக்கொள்கை. அறிவொளி இயக்கப் பணிகளில் ஈடுபட்ட அதன் அடிபட்ட தொண்டர்களுக்கு கூட தெரியும். அப்போது தயாரிக்கப்பட்ட கலை திட்டம் பாடத்திட்டம் கற்றல் பொருட்கள் கற்றல் வடிவங்கள் என எல்லாம் அன்றைய அறிவொளியில் பணியாற்றிய கல்வியாளர்கள் தொண்டர்களின் களப் பணி, களப் பயிற்சிகள், களப் பரிசோதனைகள் மூலம் மேம்படுத்தப்பட்டவை. பேராசிரியர் மாடசாமி எழுத்தாளர் தமிழ் செல்வன் பேராசிரியர் காளீஸ்வரன் உள்ளிட்டோரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் இதற்கு சான்று. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு தனது கற்றல் வளங்களை பயிற்சிகளாக வழங்கி வரும் தற்போதைய தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் அன்றைய அறிவொளி தொண்டர்கள் போன்றவர்கள் சாட்சி. இதுபோன்ற எண்ணற்ற வயது வந்தோர் கல்வி நிபுணர்கள், களப்பணியாளர்கள் பயிற்சியாளர்கள் அதற்காக தங்கள் வாழ்நாளை இழந்தவர்கள், குடும்பத்தையே இழந்தவர்கள் ஏராளமானோர் நாடு முழுவதும் உள்ளனர். ஆனால் இவர்களில் யாரும் இந்த புதிய கல்விக் கொள்கை தயாரிப்பில் வயது வந்தோர் கல்வியை வளப்படுத்த கருத்துக் கூற அழைக்கப்படவில்லை.

அதன் வெளிப்பாடாக, 100 விழுக்காடு எழுத்தறிவு எவ்வாறு எட்டப்படும் என்ற தனது திட்டமிடலின் போதாமையில் ஆவணத்தை படிக்கும் போது பளிச்சென்று தெரிகிறது. வயது வந்தோரை தேடிச் சென்று, அவர்கள் இருப்பிடத்திலேயே அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், அவர்களுக்கு உள்ளணர்வூட்டி விமர்சன விழிப்புணர்வு கல்வி கொடுத்த நிலைமாறி, ஆர்வம் உள்ள எழுத்தறிவு அற்றவர்கள் அருகில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் பொது நூல்களுக்கு தேடி செல்ல வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. வயது வந்தோர் எந்தப் பள்ளிகளை கல்லூரிகளை தேடிச் சென்று பயில இயலும் என்று அனைவருக்கும் தெரியும். வயது வந்தோர் கல்வியை இணையம் வழியாக சாதித்து விட முடியும் என்று நம்பும் ஆவணமும் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித் தவர்களே எழுத்தறிவு எண்ணறிவு இன்றித் வாழ்கின்றனர். இவர்கள் எந்த இணையவழியை பயன்படுத்த இயலும்? நன்கு படித்தவர்களே இணையத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கும் போது படிக்காத மக்களை இணைத்தை பயன்படுத்தி எழுத்தறிவு பெற வேண்டும் என்பது ஏளனமாக தெரிகிறது. தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நாடு முழுவதும் சராசரி பங்கேற்பு 50 விழுக்காட்டிற்கும் குறைவே. படிக்காத பாமர மக்களுக்கு இணைய வழியில் எழுத்தறிவு என்ற இந்தக் கொள்கை வகுத்தவரிகளின் தெளிவை என்ன சொல்வது?
புதிய கல்விக் கொள்கை வாயிலாக நடைமுறைக்கு வரவிருக்கும் மூன்றாம் வகுப்பு முதலான பொதுத் தேர்வுகளே பல இலட்சக்கணக்கான மாணவர்களை பள்ளி விட்டு துரத்திவிடும்.

பத்து கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்படுவதாலும் வளாகப் பள்ளிகள் என்ற நடைமுறையாலும் நாடு முழுவதும் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பது திண்ணம். கல்வி உரிமை மறுக்கப்படுவர்கள், சாதியின் வழியாக பணிக்கப்பட்ட தொழில்களின் வழியாக தொடரும் அவமானங்களை களையவே விடுதலை பெறவே மக்கள் கல்வி பெறுகின்றனர். இப்போது கல்வியில், அதுவும் துவக்க நிலையில் சாதி வழி தொழில் தான் தனக்கு சாத்தியமாகும் என்று தெரிந்தால் பலர் படிப்பை தொடரப் போவதில்லை.

இதுவும் கல்லாதவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். கொரானாவால் புலம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை மீண்டும் படிக்க வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொரானா காலத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்ட ஏராளமான குழந்தைகள் மீண்டும் பள்ளிகள் திறக்கும் போது பள்ளி திரும்புவார்களா என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் வயது வந்தோர் கல்விக்காக தங்கள் வாழ்க்கையையே அற்பணிப்பு செய்தவர்கள், “நான் ஒரு அறிவொளி பயித்தியம்” என்று மார்தட்டிக் கொள்பவர்கள், இங்கு “ஓர் அறிவொளி பயித்தியம் உறங்கிக் கொண்டிருக்கிறது” என்று தன் கல்லறையின் மீது எழுதச் சொன்னவர்கள் மனம், புதிய கல்விக் கொள்கை வழியாக அதிகரிக்க இருக்கும் கல்லாமையை நினைத்து என்ன பாடுபடும் என்று தெரியவில்லை.

“அடிப்படை கல்வியை ஓர் அடிப்படை உரிமையாக பாவிக்க வேண்டும். அடிப்படை கல்வி ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையில், சமூக வாழ்வில், ஆயுள் பரியந்தமான கற்றலில், தொடர் கற்றலில், அடிப்படை கல்விக்கு ஓர் முக்கிய பங்கு இருக்கிறது. அனைத்து வளர்ச்சி போக்குகளின் பெருக்கி அல்லது ஆதார சுருதி அடிப்படை கல்வி” என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அத்தோடு எழுத்தறிவுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று உலகளாவிய ஆராய்ச்சி ஆதாரங்கள் இருப்பதாக புதிய கல்விக் கொள்கை கூறிக் கொள்கிறது. இதனைத் தான், புதிய கல்விக் கொள்கை என்பது “தாழ்பூவில் உள்ள பூநாகம்” என்று அழைக்கின்றனர்.

கட்டுரையாளர்: தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.

Article

அறிவியல் மாநாடுகள்: இன்று அறிவியலாளராக இருப்பது… டாக்டர் பி.கே.ராஜகோபாலன் (தமிழில் தா.சந்திரகுரு)

  டாக்டர் பி.கே.ராஜகோபாலன், முன்னாள் இயக்குநர், வெக்டர் கட்டுப்பாடு ஆய்வு மையம், புதுச்சேரி ஃப்ரண்ட்லைன், 2020 ஜூலை 31 அறிவியல்...
Article

தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா –

ஜூலை,15 - தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம்...
Article

ரயில்வேயும் – பொருளாதார மூட நம்பிக்கைகளும் – வே. மீனாட்சி சுந்தரம்

 ரயில்வே கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப் போவதாக மோடி-அமித்ஷா அரசு  அறிவித்துள்ளது.  இந்திய ரயில்வே என்பது இந்திய  அரசியல் பொருளாதார...
Article

வரலாற்றின் தவறான படிப்பினைகளையே நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – சமர் ஹலர்ங்கர் (தமிழில் தா.சந்திர குரு)

அனைத்து தலைவர்களுமே பொய் சொல்கிறார்கள், தவறு செய்கிறார்கள். ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தங்களுடைய பொய்களை சிறந்த தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள், தங்களுடைய...
Article

அஞ்சலி: மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் | பூ.கொ. சரவணன்

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்கள் காலமானார். தஞ்சைக்கு அருகில் உள்ள நாஞ்சிக் கோட்டை எனும் ஊரில் பிறந்து வளர்ந்தார். அப்பா ரயில்வே...
Article

மோடிஜீயின் திடீர் லடாக் பயணம் – கே.ராஜூ

  கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் சீன-இந்திய எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டது தேசத்தில் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரம்....
Article

தனியார் கல்வியும், ஆன்லைன் வகுப்பறையும்

வணக்கம், இந்த கோவிட்-19தில் கோவிடை விடவும் அதிகம் பேசு பொருளாய் மாறி இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஆசிரியராய் எனக்கிருக்கும்...
Article

கொள்ளை நோயும், முதலாளித்துவ தொற்றும் – ச.லெனின்

இங்கிலாந்து  தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து எங்கெல்ஸ் விரிவாக ஆய்வு செய்திருந்தார். அங்குத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடிசைப் பகுதியில் அவ்வப்போது நோய்த் தொற்று...
Article

அதீத தாழ்வு மனப்பான்மையும் அங்கீகாரத் தேடலும் -இரா முருகவேள்

ஜெயமோகனுக்கு ஒரு பதில் எழுதியே ஆக வேண்டுமா என்ன? ஆனால் அது நிகழ்ந்தே விட்டது என்று நண்பர்கள் போனிலும் முகநூலில்...
1 2 3 23
Page 1 of 23