archivestory books

ArticleBook Review

நிகோலாய் கோகாலின் ’ஓவர்கோட்’, அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தைச் சொல்லிடும் கதை – பெ.விஜயகுமார்

 

உலகளவில் புனைவிலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்து, புதுப்புது முயற்சிகள் செய்து சாதித்துக் காட்டியவர்கள் ரஷ்ய எழுத்தாளர்கள். லியோ டால்ஸ்டாய், அண்டன் செக்காவ், மாக்சிம் கார்க்கி, ஃபியோடார் டோஷ்டோவிஸ்கி, இவான் துர்கெனிவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், மிக்கேல் ஷோலாக்கோவ் என்று ரஷ்ய புனைகதை எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது மட்டுமல்ல வலுவானதுமாகும். இவ்வரிசையில் நிகோலாய் கோகால் (1809-1852) தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார். சார் மன்னர் குடும்பத்திற்கு ஆதரவான அரசியல் நிலைபாடுடையவராகவும், மத விஷயங்களில் ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் சார்பாளராகவும் இருந்தார். இருப்பினும் தன்னுடைய படைப்புகளில் முற்போக்கு சிந்தனைகளையே வெளிப்படுத்தினார். கோகால் ரஷ்ய மொழியில் எழுதினாலும், உக்ரெய்ன் மண்ணின் மணத்துடனேயே அவரின் கதைகள் மணந்தன. யதார்த்தவாதத்துடன் மிதமான கற்பனாவாதமும் இணைந்து கோகாலின் புனைகதைகள் வெற்றி பெற்றன. சார் மன்னரின் ரொமனொவ் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துக் கொள்ளாமல் மன்னர் ஆட்சி காலத்திய குறைபாடுகளை அவரால் விமர்சிக்க முடிந்தது. “நாம் எல்லோரும் கோகாலின் ’ஓவர்கோட்’ லிருந்து வெளிவந்தவர்கள் தான்”, என்று டோஷ்டோவிஸ்கி பெருமையுடன் சொல்லுமளவிற்கு கோகால் சிறந்து விளங்கினார். அவரின் ’ஓவர்கோட்’ சிறுகதையும் உலகச் சிறுகதைகளில் நட்சத்திரமாக மின்னுகிறது.

அரசு அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் உளவியலை ஆழ்ந்து அளந்து பார்க்கிறது ‘ஓவர்கோட்’ சிறுகதை. அரசு அதிகாரம் தரும் போதை அவர்களை நிலைகுலையச் செய்கிறது. இப்போதை தரும் தடுமாற்றத்தில் சாதாரண மக்களைத் துச்சமாக மதிக்கிறார்கள். பிரமிடு வடிவ அதிகார அமைப்பில் அடிநிலை ஊழியர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களைக் கேவலமாக நடுத்தும் அதிகாரிகளின் ஆணவத்தை பல சிறுகதைகளும் சித்தரித்துள்ளன. பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த்தின் ’பதவி விலகல்’ சிறுகதை ஆணவம் கொண்ட ஆங்கில அதிகாரியையும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் இந்திய குமாஸ்தாவையும் சித்தரிக்கிறது. இந்தியக் காவல்துறை ஆணையத்தின் அறிக்கை ஒன்றில் ஒரு அதிகாரியின் மனந்திறந்த, நேர்மையான பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது என்பதை, “பணக்காரர்களிடம் கைகட்டி சேவகம் செய்பவர்களாகவும்; நடுத்தர வர்க்கத்தினரை  உதாசீனப்படுத்துபவர்களாகவும்; அடித்தட்டு மக்களிடம் இரக்கமின்றி முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்களாகவும் இருக்கிறது”, என்று  வெளிப்படையாக எழுதியுள்ளார். இந்த அணுகுமுறை இந்திய காவல்துறைக்கு மட்டுமன்றி உலகுக்கே பொதுவானதென்பதை இக்கதை உணர்த்துகிறது. கோகால் ‘ஓவர்கோட்’ சிறுகதையில் (1942) அககி அககேவிட்ச் என்றொரு அப்பாவி குமாஸ்தா படும்பாட்டை சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார்.

Ode to Russian Nikolai Gogol, the bizarre and beautiful literary …

’அககி’ என்ற விநோதமான பெயருக்கு மட்டுமல்ல விநோதமான வாழ்வுக்கும் அடையாளமானவர் அககி. அககி பீட்டர்ஸ்பெர்க் நகரில் ஏதோவொரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார். ”அது எந்த அலுவலகம்” என்று கேட்கும் வாசகர்களுக்கான பதில்,”எந்த அலுவலகமாக இருந்தால் என்ன?; எல்லா அலுவலகங்களும் ஒரே மாதிரியாகத்தானே இருந்து தொலைக்கின்றன”, என்பதே கதை சொல்லியின் காட்டமான பதில். அககி ஐம்பது வயது நிறைந்த எளிமையான மனிதர். அவருடைய வருமானத்திற்கு எளிமைதான் சாத்தியப்படும் என்பது வேறு விஷயம். எப்போதும் கசங்கிய ஆடையுடனும், கவலை தோய்ந்த முகத்துடனும் காட்சியளிப்பார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அவரைக் கேலி பேசுவார்கள். தன்னைக் கேலி செய்வதைப் பொருட்படுத்தமாட்டார். அலுவலகத்தில் அவருக்கிட்ட பணி நகல் எடுப்பதுதான். மனிதன் நகல்எடுப்பதில் சளைப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை உலகத்திலேயே மிகச் சிறந்த வேலை நகல் எடுப்பதுதான். வேலையில் அப்படியொரு அர்ப்பணிப்பு! அதே வேலையை, அதே அலுவலகத்தில், அதே இடத்தில் வேலை பார்த்தும் அலுக்காதவர். அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதும் ஒரு கட்டுக் கோப்புகளை எடுத்துச்செல்வார். வீட்டில் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நீண்ட நேரம் விளக்கு வெளிச்சத்தில் நகல் எடுத்துக்கொண்டுதான் இருப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தைக் கழித்துவிட்ட அககி இல்லறம் நல்கிடும் சுகத்தினையும் அறிந்திறாதவர். ஒரு சிறிய மாடி வீட்டில் குடியிருப்பு. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு நடந்தே போய்வருவார்.

பீட்டர்ஸ்பர்க் நகரில் குளிர்காலம் பொல்லாதது. நல்ல வலுவான கோட் இல்லாமல் சமாளிக்க முடியாது. மைனஸ் டிகிரி குளிரைத் தாங்குவதற்கு ஓவர்கோட் அவசியம் வேண்டும். அககி நல்லதொரு கோட் இல்லாமல் தவித்தார். கிழிசல்கள் நிறைந்த அவருடைய  ஓவர்கோட் நைந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை ஓவர்கோட் என்று சொல்வதே தவறு. ஒரு நாள் தனக்கு நன்கு பரிச்சயமான டெய்லர் பெட்ரோவிட்ச் என்பவரை அணுகி தன்னுடைய பழைய ஓவர்கோட்டைச் சரி செய்து தருமாறு கேட்கிறார். ஓவர்கோட்டின் நிலைமையைப் பார்த்த டெய்லர் ”இதனை நிச்சயம் சரி செய்ய முடியாது; புதிய ஓவர்கோட் தைத்துக்கொள்வதே நல்லது”, என்றார். புதிய கோட் தைப்பதற்கு 150 ரூபிள்கள் ஆகும் என்றதும் அதிர்ந்து போகிறார். இருப்பினும் பணம் சேமிக்கத் தொடங்கினார். இதற்காக பல அடிப்படை வசதிகளையும் இழக்கத் தயாரானார். ஆண்டு இறுதியில் கிடைக்கும் போனஸ் பணத்தைக் கொண்டு ஓவர்கோட் தைத்துவிடுவது என்ற முடிவெடுத்தார். போனஸ் பணம் வந்ததும் அககியும், பெட்ரோவிட்ச்சும் நகரின் துணிக் கடைகளில் அலைந்து தேவையான துணிகளை எடுக்கிறார்கள். மார்டன் ரோமக் கம்பளித் துணி விலை அதிகம் என்பதால் அதனைத் தவிர்த்து பூனை ரோமத்தில் செய்யப்படும் கம்பளித்துணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெட்ரோவிச் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் மட்டுமல்ல ஒரு கண்ணில் பார்வை இழந்தவருங்கூட. இருப்பினும் நண்பருக்காக அதிக சிரத்தை எடுத்து தைக்கிறார். இரட்டைத் தையல் போட்டு, கலிக்கோ துணியில் லைனிங் வைத்து, அழகிய மெட்டல் பட்டன்களுடன் ஓவர்கோட் தைத்து முடிக்கிறார்.

Libravox Audio Book - Nikolai Vasilievich Gogol - The Cloak (The ...

தன்னுடைய கைவண்ணத்தில் நேர்த்தியாகச் செய்து முடித்த ஓவர்கோட்டை நண்பரின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் செல்கிறார். நண்பரிடமிருந்து தையற் கூலியாக வெறும் 12 ரூபிள்கள் மட்டுமே வாங்கிக் கொள்கிறார். அககி மிகுந்த மகிழ்ச்சியுடன் அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்கிறார். தன்னுடைய ஓவர்கோட் அழகாக இருக்கிறது என்ற நினைப்பே அவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. ‘ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் அககியிடம் இதுநாள் வரை இருந்த அவநம்பிக்கை மறைந்துவிடுகிறது. மிடுக்கு  நடையுடன் கம்பீரமாக அலுவலகம் செல்கிறார். எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவருடைய பணிக்காலத்தில் முதன் முதலாக கிடைக்கும் பாராட்டு மழையில் நனைகிறார். சிலர் ”அககியின் புது ஓவர்கோட்டைக் கொண்டாடுவோம்! அககி ஒரு டிரீட் கொடுக்கட்டும் என்கிறார்கள்”. அககி பதறுகிறார். இருந்த பணமெல்லாம் கோட் தைப்பதற்கே போய்விட்டதே! தலைமை குமாஸ்தா தான் விருந்து தருவதாகச் சொல்லி எல்லோரையும் தன்னுடைய வீட்டுக்கு அழைக்கிறார். பொதுவாக இது போன்ற விருந்துகளுக்கெல்லாம் அககி செல்வதில்லை. ஆனால் புது ஓவர்கோட் தரும் தெம்பிலும், உற்சாகத்திலும் விருந்துக்குக் கிளம்புகிறார். வீதியில் நடக்கும் போது கண்ணில் தட்டுப்படும் பெண்களைக் கண்டு கிளர்ச்சி அடைகிறார். ஒரு துணிக்கடையில் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் பெண்ணின் படத்தைப் பார்த்துப் பரவசமடைகிறார். அப்பெண்ணின் உடைக்கு வெளியே தெரியும் கால்களை மெய் மறந்து உற்று நோக்குகிறார் ஒரு வித்தியாசமான மனிதராக தலைமை குமாஸ்தா வீட்டுக்கு வந்து சேருகிறார்.

தன்னுடைய புது ஓவர்கோட்டை ஸ்டாண்டில் பத்திரமாக மாட்டிவைத்துவிட்டு விருந்தில் கலந்துகொள்கிறார். பல சுற்றுகள் ஒயின் குடித்த போதையில் நேரம் போனதே தெரியவில்லை. மணி பனிரெண்டாகிறது. கீழே விழுந்துகிடக்கும் தன்னுடைய கோட்டை உதறி எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். பீட்டர்ஸ்பர்க் நகரத் தெருக்களில் இவ்வளவு இருட்டில் அவருக்கு நடந்து பழக்கமில்லை. ஒருவித பதற்றத்துடனும், பயத்துடனும் நடந்துவருகிறார். திடீரென்று இருவர் அவரெதிரில் வந்து மோதி நிற்கிறார்கள். அவரின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு அவருடைய புது ஓவர்கோட்டைக் கழற்றிக் கொண்டு போய்விடுகிறார்கள். அககி அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாது வீடு நோக்கி நடக்கிறார். ஒரு பாலத்தின் அருகில் இரவு நேரக் காவலன் ஒருவன் நிற்பதைப் பார்த்து அவனிடம் தனக்கு நேர்ந்த இழப்பை விவரிக்கிறார். அவன் தான் ஒற்றையாளாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், மறு நாள் காலை போலீஸ் சூப்பிரடெண்ட் அலுவலகம் சென்று முறையிடுமாறும் சொல்கிறான். கோட் தொலைந்த சோகத்துடன் முகத்தில் விழுந்த அடியின் வலியும் சேர்ந்துகொள்ள பாவம் தள்ளாடியபடி வீடு வந்து சேருகிறார். மறுநாள் காலை அவர் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணி தனக்கு போலீஸ் சூப்பிரடெண்ட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தியைத் தெரியும் என்பதால் அவள் உதவியுடன் காவல்துறை அதிகாரியைச் சந்திக்குமாறு சொல்கிறாள். ஆனால் காவல்துறை அலுவலகத்தில் நீண்ட காத்திருப்பிற்குப் பின்னரே அவரை அதிகாரியைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. தன்னை ஒரு குமாஸ்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுமே அதிகாரி அவரை அலட்சியமாகப் பார்க்கிறார். அவரின் அழுக்கான உடை, பரிதாபமான தோற்றம், பேசுவதில் இருந்த தயக்கம் இவைகளைப் பார்த்த அதிகாரி அவரை விரைவில் விரட்டிவிடுவதில் குறியாக இருக்கிறார்.

The Overcoat eBook by Nikolai Gogol - 9781504035439 | Rakuten Kobo

மாநகரச் ’சிறப்பு அதிகாரி’யைச் சந்திக்கச் சொல்லி அனுப்பிவிடுகிறார். அடுத்த நாள் மாநகரச் ’சிறப்பு அதிகாரி’ அலுவலகம் சென்று காத்திருக்கிறார். அங்கும் எந்தவித இரக்கமும் இல்லாமல் விரட்டப்படுகிறார். ’சிறப்பு அதிகாரி’ யின் மிரட்டலும், விரட்டலும் அககியை நடுங்கச் செய்கிறது. பயந்துபோய் வீடு வந்து சேருகிறார். மன உளைச்சல், உடல் அசதி, கடுமையான குளிர் எல்லாம் ஒன்று சேர அடுத்த நாள் காய்ச்சலில் படுத்துவிடுகிறார். மருத்துவர் மருந்து கொடுத்தும் பயனில்லை. காய்ச்சலின் உச்சத்தில் புலம்புகிறார். உடல்நிலை மோசமடைந்ததும் மருத்துவர் குறைந்த விலையில் ஒரு சவப்பெட்டியைத் தயார் செய்யுமாறு வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணியிடம் சொல்கிறார். அவருடைய மரணமும், அதையொட்டிய இறுதி நிகழ்ச்சிகளும் ஆரவாரங்கள் ஏதுமின்றி நடந்து முடிகிறது. பீட்டர்ஸ்பர்க் நகரத் தெருக்களில் இரவு நேரங்களில் பேயொன்று அலைவதாகவும்; அது ஓவர்கோட்டுகளைப் பிடுங்க முயற்சிப்பதாகவும் பலரும் சொல்கின்றனர். இதற்கிடையில் மாநகரச் ’சிறப்பு அதிகாரி’ தான் அககியிடம் அநியாயமாக நடந்துகொண்டோமே என்று நினைக்கிறார். அககியின் பரிதாபமான பார்வை அவர் கண்முன் நிழலாடுகிறது. மனச்சாட்சி உறுத்துகிறது. குற்ற உணர்வு மேலிட செய்வதறியாது இரண்டு ரவுண்டு மது குடித்துவிட்டு தன் காதலியின் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார். அவருடைய காதலி ஒன்றும் அவரின் மனைவியைவிட அழகியும் அல்ல, இளமையானவளும் அல்ல. இருப்பினும் அழகான பெண்டாட்டி இருந்தாலும், அசிங்கமான வைப்பாட்டியைத் தேடித்தானே இத்தகு ஆணவமிகு அதிகாரிகள் அலைகிறார்கள். வேலைக்காரனைக் கூப்பிட்டு ஸ்லெட்ஜ் வண்டியை எடுத்துவரச் சொல்கிறார். வண்டி விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் போது அவரது ஓவர்கோட்டை யாரோ பிடித்து இழுப்பதுபோல் தெரிகிறது. அககியின் வெளுத்த முகத்தைக் காண்கிறார். கண்களில் கோபம் கொப்பளிக்க “வா! வா! உனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்”. என்று அவரின் ஓவர்கோட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறது அககியின் பேயுருவம். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பீட்டர்ஸ்பர்க் நகரில் பேய் நடமாட்டம் இல்லை என்று பேசிக்கொண்டார்கள். மாநகரச் ”சிறப்பு அதிகாரி’யின் ஓவர்கோட்டைப் பிடுங்கிக் கொண்டதில்  திருப்தியடைந்து அககியின் மனம் அமைதி அடைந்திருக்கலாம்!

——-பெ.விஜயகுமார்.

  ————————————————–

Web Series

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

  பா.செயப்பிரகாசம் மிகத் தெளிவான, அழுத்தமான வெளிப்படையான அரசியல் பார்வை கொண்ட படைப்பாளி பா.செயப்பிரகாசம். இடதுசாரி இயக்கத்தில் 60களின் பிற்பகுதியில்...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி

இது ஒரு மொழிபெயர்ப்பு  நூல் , மொழிபெயர்த்தவர் கழனியூரான். நெல்லையைச் சேர்ந்த இவர் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்து இருக்கிறார்....
Gowri Lankesh
Book Review

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து...
1 2 3 4
Page 1 of 4