archiveracism

Article

அமெரிக்காவில் இனவெறி கொடூரம் – நிகழ் அய்க்கண்

11.06.2020 நிலவரப்படி  உலகளவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள முதல் பத்து நாடுகளைப் பட்டியலிடும்போது,அதில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வலதுசாரி அரசியலை முன்னெடுத்து வருவதாக இருப்பதைக் காணமுடியும்.

கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவும்,பிரிட்டனும்தான் முதன்முதலாக நவதாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய நாடுகளாகும்.அச்சமயத்தில்,கருத்தியல்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது எனவும் இனி,நாகரீகங்களுக்கிடையே மோதல் காலம் ஆரம்பமாகுவதாகக் கூறப்பட்டது.

அப்போது, கூறப்பட்ட அக்கருத்துக்களை, இன்றைய நிலையில் வைத்துப்பார்க்கும் போது, கருத்தியல்களின் காலமும் (முதலாளித்துவம் x சமதர்மம்) இன்னும் முடிவடைந்துவிடவில்லை என்பதைக் காலம் உணர்த்தியிருக்கிறது. அதேபோல,மத அடிப்படையிலான கலாச்சாரமானது காலத்திற்கேற்றவாறு இன்னும் மேம்பட்ட நிலையை அடைவதற்குப்பதிலாக, ஒரு பக்கம், மதங்களுக்கிடையே மோதல்கள் உருவாகி மனித இன வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம்,ஒரே மதக்கலாச்சாரத்திற்குள்ளும் இன ரீதியிலான பாகுபாடுகள் ( கருப்பு x வெள்ளை ) வேறூன்றி ஆங்காங்கே வெடித்துக்கிளம்பி எழுகின்றன.

கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தும் சந்தைமயக்கொள்கைகளை திவீரமாக அமல்படுத்திவரும் வலதுசாரி ஆட்சியாளர்களின் ஒருங்கிணைந்த ஒரே மந்திரம் போட்டி – தகுதி – திறமை – லாபம் -இனவெறி என்பதாகும். ஆட்சி அதிகாரத்தில், இக்கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதற்கு, இவர்களுக்கிடையிலான பரஸ்பர நலன்களே காரணம்.அதாவது, தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்களை  ஆட்சியாளர்கள் தொடர்ந்து முடக்கி வைப்பதில் கார்ப்பரேட்டுகளின் நலன் அடங்கி உள்ளது. அதுபோல,தொழிலாளர்கள் வர்க்கமாக அணி திரள்வதை மறுத்து, அதற்குப்பதிலாக இன-மத-சாதி ரீதியாக அணிதிரட்டுவதில் வலதுசாரிகள் குறியாய் இருக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள்  வர்க்கத்தின் அடிப்படையிலும், இன – மதம் – சாதி எனும் அளவில் பிளவுண்டு இருப்பது வலதுசாரிகளுக்கு வசதியாய் போய்விடுகிறது. 

வலதுசாரிகள் ஆட்சியில் இருக்கும்போது, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் கார்ப்பரேட்டுகளின் நோக்கம் நிறைவேறுவது மிகவும் எளிதாகிவிடுகிறது.

அமெரிக்கா பொலிஸ் ஆராயகம் - 10 வயது ...

கொரோனா வைரஸ் தொற்றானது, கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி லாபத்தைக் குறைத்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான காலத்திலும் கூட, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகக்கூறி, ஊரடங்கைத் தளர்த்தி உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஆட்சியாளர்கள் காட்டுகிற அவசரத்திலிருந்து, இந்த ஆட்சி மக்களின்  நலனுக்காக அன்றி, கார்ப்பரேட் நலனுக்காகச் செயல்படுகிறது என்பதை  உலகளாவிய தொழிலாளர்கள்-கருப்பு இனத்தவர்-தலித்-மதச்சிறுபான்மையினர்கள் உள்ளிட்டோர்  நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.  

நவதாராளமயத்தின் விளைவுகளால், ஏற்கனவே,பல்வகையான சமத்துவமின்மை விரிவடைந்து கொண்டே வருவது கண்கூடாகத்தெரிகிறது. தற்போது,கொரோனா வைரஸ்ஸும் தன் பங்கிற்கு ஏழை மக்களிடமிருந்து வேலை, ஆரோக்கியம், உயிர், உணவு உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டே வருகிறது. நிலைமை எப்படியிருப்பினும், இனவெறிகொண்ட வலதுசாரி ஆட்சியாளர்கள் மற்றும் லாபவெறிகொண்ட கார்ப்பரேட்டுகள் ஏழைமக்களை விட்டுவிடுவதாக இல்லை. 

மக்களை காப்பாற்றிடுவதாக உறுதியேற்ற ஆட்சியாளர்கள்,இந்நெருக்கடியான வேளையில், ஊரடங்கை அமல்படுத்தி ஒருபுறம், கார்ப்பரேட்டுகளுக்கு என்னவெல்லாம் உபகாரம் செய்யமுடியுமோ அவையெல்லாம் செய்கின்றனர். மறுபுறம் சட்ட- ஒழுங்கை காரணங்காட்டி ஏழைமக்கள் மீது எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறைகளைக் கையாள முடியுமோ அவ்வாறே செய்தும் முடித்திடுகின்றனர்.

எந்த அளவுக்கு இங்கே லாபத்திற்கும்,சந்தை மதிப்பீடுகளுக்கும் வலது சாரி அரசியலுக்கும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தளங்களில் பல்வகை பாதிப்புக்களை  ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலை கொள்வதில்லை.

 எப்பொழுதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியானச்சூழலைச் சந்திக்கிறதோ,அல்லது மந்த நிலை நீடிக்கிறதோ, அப்பொழுதெல்லாம் வலதுசாரிகள் இதனைச் சாக்காக வைத்து, தங்களது  மறைமுக அஜண்டாவை ஆசைதீர நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை.இந்தமுறையும் அவர்களுக்குக் குறி தப்பவில்லை. 

கார்ப்பரேட் நலன்களையும்,வலதுசாரி அரசியலையும் முன்னெடுத்துப் பிற உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அது மட்டுமல்லாது, உலகளவில் உணவுப்பொருள், எரிபொருள், டாலர் ஆகியவற்றினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் வழியாக, பிற உலக நாடுகளையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. 

உலகில் பிற நாடுகளைவிட, பொருளாதாரம்-இராணுவம்-தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் நாடு என அமெரிக்காவைக் கூறுவதுண்டு. அமெரிக்கா,இப்படி உயர்ந்து நிற்பதற்குப்பின்னே கறுப்பின மக்கள் நூற்றாண்டு கணக்காய் அடிமைகளாக இருந்து, உழைத்துப் பெருக்கிய மூலதனமே காரணம் எனும் வரலாற்றை அங்கிருக்கும் பலர்  மறந்துவிடுகின்றனர்.

நீச்சல் குளத்தில் இனவெறி ...

கறுப்பின மக்களினது வரலாற்றையும், அம்மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள  உரிமைகள் பற்றியும் தங்களது வசதிக்காகப் புறந்தள்ளிவிட்டு. இனவெறியை கடைபிடித்துவரும் துவேஷ எண்ணங்கொண்ட வலது சாரி அமெரிக்காவுக்கு, தன் சக வலதுசாரி நாடுகளுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக முதலிடம் உண்டு.

உலகளவில்,ஜனநாயகத்திற்கும் – மனித உரிமைக்கும் காப்புரிமை பெற்ற  ஒரே தாதாவாக, அமெரிக்கா திகழ்வதுபற்றி அந்நாட்டு ஆட்சியாளர்கள் அடிக்கடி கூறிக்கொள்வதுண்டு. அப்பேற்பட்ட நாடானது, ஹாங்காங் என்று வரும் போது பதற்றத்துடன் சீறுகிறது. அதே சமயம்,தன் சொந்தநாட்டு குடிமகனை காவல்துறை மிருகத்தனமாக கொலை செய்ததற்கு எதிராக மக்கள் அணிதிரளும்போது மட்டும் இராணுவத்தை வரவழைக்கப்போவதாக அச்சுறுத்துகிறது.

உலக நாயகனாகத் தன்னை அறிவித்துக்கொள்ளும், அமெரிக்காவிலேயே, கடந்த காலங்களிலிருந்து கறுப்பின மக்கள் மீதான நிறுவன அளவிலான பாகுபாடும்,காவல்துறையின் மிருகத்தன தாக்குதல் மற்றும் கொலைகளும்  தொடர்ந்து நடந்து வந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளது.

கடந்த மே மாதம் 25-ந்தேதி அமெரிக்காவின் மின்னேபொலிஸ் எனும் நகரில்,வெள்ளையின போலீஸ்காரர் ஒருவர்,பட்டப்பகலில் சாலையோரத்தில் அனைவரும் பார்த்திருக்க,ஜார்ஜ் ப்ளாய்ட் எனும் கறுப்பினத்தவரின் கழுத்தில் தனது கால் முட்டியால் அழுத்தியே 8 நிமிடம் 46 நொடிகளில் கொலைசெய்திருக்கிறார்.”தன்னால் மூச்சுவிட முடியவில்லை” என ஜார்ஜ் ப்ளாய்ட் கதறியும் விடவில்லை அந்த போலீஸ்காரர்.இச்சம்பவம்தான் உலகம் முழுக்க வாழ்ந்துவரும் கறுப்பின மக்களை ஆவேசத்திற்கு உள்ளாக்கி, வெள்ளை நிற ஆதிக்கத்திற்கும், காவல்துறை கொடூர கொலைவெறிக்கும் எதிரான  ஒரு போராட்டத்தினை, அனைத்து வகையான மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து நடத்த வைத்திருக்கிறது.

இனவெறியை வெறுக்கும் வெள்ளையின ...

இப்போராட்டமானது,இந்நாள்வரைக்கும் அமெரிக்காவில் மட்டும் 140 நகரங்களுக்கு மேலாகப் பரவி எழுச்சியுடன் நடந்துவருகிறது. அது மட்டுமின்றி, உலகின் பிறகண்டங்களுக்கும் வேகமாகப் பரவி அங்குள்ள மக்களையும் பாகுபாடின்றி இனவெறிக்கு எதிராக அணிதிரள வைத்துள்ளது.

அமெரிக்காவில், குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றிவரும் கறுப்பினத்தவர்களில் பலருக்கு,மருத்துவக்காப்பீடு எடுக்க போதிய வசதி இருப்பதில்லை. இதன் காரணமாக,கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பலியாகியிருக்கின்றனர். ஊரடங்கின் காரணமாக,ஏற்கனவே பார்த்துவந்த வேலையும் சிலருக்குப் பறிபோய் விட்டது. இந்நிலையில் இனவெறிக் கொடுமையினால் நிகழ்ந்த இப்படுகொலையானது, கறுப்பின மக்களை  மொத்தமாக வெகுண்டெழ வைத்திருக்கிறது.

அமெரிக்காவில் அடிமை முறைச்சட்டம் அமலாகி 157 ஆண்டுகள் ஓடிவிட்டது. அந்நாட்டினது அரசியல் அமைப்புச்சட்டமும் அனைவரும் சமம் என்பதனையே உறுதிசெய்கிறது. இருந்தும், 400 வருடங்களுக்கு முன்பு(1619),அடிமைமுறையை உருவாக்கிய  ஆதிக்க காலத்திலிருந்து, இன்று வரையிலான ஜனநாயகக் காலம் வரை வெள்ளையின மக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் நிறுவன அளவிலும் நிறவெறியானது  தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதிலிருந்து, அவர்களுடைய மனப்பாங்கில் எவ்வித மாற்றமுமின்றி தொடர்வதையே உணர்த்துகிறது. 

அமெரிக்கர்களிடம் காலங்காலமாய் உள்ள துரிதமாகப்  பொருளீட்டவேண்டும் எனும் பேராவல், நுகர் விய கலாச்சாரம் ஆகியனவும் கூட, கறுப்பின மக்களின் மீதான மதிப்பினை குறைத்து மதிப்பீடு செய்யவும்,அவர்களது உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாகவும் ஆகிவிட்டது எனவும் கருதமுடிகிறது.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, 13 சதவிகிதமாகும். இனவெறி எனும் வைரஸ் நிறுவன அளவில் எங்கெல்லாம் கலந்திருக்கின்றது என்பதை கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாக இருக்கின்றன. 

  • 2013 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை 1944 கறுப்பினத்தவர்கள் போலீஸ் காரர்களின் கொடூர தாக்குதல்களினாலும், துப்பாக்கிச்சூட்டினாலும் பலியாகியிருக்கின்றனர்.

  • 03.06.2020 அன்றுவரை வேலைவாய்ப்பின்மையானது கறுப்பினத்தவர்களிடையே 16.7 சதவிகிதமாகவும்,வெள்ளையர்களிடையே 14.2 சதவிகிதமாகவும் உள்ளது.

  • அதே போல, கொரோனா தொற்றினால்  இறந்தவர்களின் பட்டியலினைப்பார்த்தால்,வெள்ளையினத்தவர்களைவிட கறுப்பினத்தவர்களே அதிகம் பேர் இறந்திருக்கின்றனர்.காரணம் மருத்துவக்காப்பீடு வசதி இன்மையே .

  • சிறையில் இருப்பவர்களில் 33 சதவிகிதம் பேர் கருப்பினத்தவர்களாவே இருக்கின்றனர்

  • இதே போன்று, வீடற்றவர்களின் பட்டியலினைப்பார்த்தாலும்,கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கையே வெள்ளையர்களைக்காட்டிலும் அதிகம் இருக்கிறது.

ஒரு சமூகம் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கு, அங்கு நிலவும் இனவெறியினை ஆதாரமாகச் சுட்டிக்காட்டிட முடியும்.இனவெறி என்பது  பொதுச்சுகாதாரமின்மையின் ஒரு விளைவுங்கூட. ஒருநாட்டில், பொதுச்சுகாதாரம்  முறையாகப் பேணப்படும் போது,அது பொருளாதாரத்தையும் ஆரோக்கியமானதாக்கிடுகிறது.இக்கூற்றிலிருந்து,தேச மக்களின் நலனுக்கு,  சமூகம்  – இனவெறியின்மை – பொதுச்சுகாதாரம்-பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு அவசியம் என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

புவி தட்ப வெட்ப நிலை மாறுதலையும் கொரோனா வைரஸ்ஸையும் எப்படி, பிரித்து அறிய முடியாதோ, அந்த அளவுக்கு இனவெறியையும் வலதுசாரி அரசியலையும் பிரித்தறிவது கடினம் என்றாகிவிட்டது.

கருப்பின தொழிலாளி படுகொலை ...

இனவெறியுங்கூட,தேசியவாதம்,தேசபக்தி போன்றதொரு மனப்பாங்குதான்.மக்களை முக்கியமான விஷயங்களிலிருந்து  திசைதிருப்ப வலதுசாரிகளுக்கு இது வசதியாக இருக்கிறது.

அமெரிக்காவில் பாகுபாடின்றி,எல்லோரும் சேர்ந்து ஒரு சிலரின் லாபத்துக்காக உழைக்கின்றனர்.அந்த ஒரு சிலரும், வலதுசாரிகளின் துணையுடன் கறுப்பின மக்கள் மீது பாகுபாடு காட்டி, அவர்களது வாழ்வைமட்டும் பலவாறாகப் பறித்துக்கொள்கின்றனர்.இதுதான் இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனப்  பொதுவெளியில் முழங்கி, ஒருவாக்கு-ஒருமதிப்பு எனும் அடிப்படையில்,தேர்வாகி ஆட்சியில் அமரும் வலது சாரிகள், அதே மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடனும்,பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்குப்பதிலாக,ஜனநாயகத்தின் கூறுகளை  கொஞ்சம்கொஞ்சமாக உருவிவிட்டு,அதற்கு ஈடாக மக்களைப் பிளவு படுத்தும் வலது சாரி கருத்தியல்களை சர்வ வல்லமைமிக்க அதிகாரத்தின் துணைகொண்டு உள் நுழைத்து விடுகின்றனர்.இதனால் இரட்டிப்பு பயனடைவது பெரும்பான்மை வெள்ளையின மக்கள்தான்.

கருப்பு இனத்தவரைப் பொருத்தமட்டில்,அதுநாள் வரையில்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு,தேசத்தின் குடிமகனாக வாழ்ந்து பழகிய கருப்பினமக்கள் இனி,நிறத்தின் அடிப்படையிலும், ஜனநாயக நிறுவனங்கள் வழியாகவும் பாகுபாடு காட்டி ,பழக்கப்படுத்த முனையும்போது, ஒவ்வொரு நொடியும் அந்நியமாகிற நிலை.

வெளிப்படையாக,ஒவ்வொரு குடிமகனுக்குரிய அனைத்துவித உரிமைகளும் கறுப்பினத்தவருக்கும் உறுதியளிக்கப்படுகின்றன,ஆனால், மறைமுகமாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதியளிக்கப்பட்ட யாவும் கறுப்பினத்தவருக்கு மட்டும் மறுக்கப்படுகிற நிலை.

இறுதியாக,சந்தைமயகாலத்தில்,கார்ப்பரேட்டுகளும் வலதுசாரிகளும் சேர்ந்து வர்க்க அரசியலை முடக்க, சர்வ அதிகார பலத்துடன் இன-மத-சாதி வெறி சார்ந்த  பிளவு அரசியலை வலதுசாரிகள் கையிலெடுத்துள்ளனர். வலது சாரிகளின் இத்தகைய அரசியல் வைரஸ்ஸை விடக்கொடியது  என இனிவருங்காலங்களில் மக்கள் உணருவர்.

வீட்டிலேயே இருக்கவும் : உயிர்களைக்காக்கவும்  என்று கூறியே   இனவெறிக்கொலை நிகழ்த்தும் காலமிது.

Poetry

கவிதை: கறுப்பு என்பது நிறமல்ல – ஆரூர் தமிழ்நாடன்

கறுங்குருதி படிந்த இந்த பூமியின் தோலை உறித்தெறியுங்கள். அந்த வானத்தின் தசையையும் கிழித்தெறியுங்கள். திசைகளின் வன்ம நாவையும் துண்டாடி வீழ்த்துங்கள்!...
Book Review

’நேட்டிவ் சன்’ ஆப்பிரிக்க அமெரிக்கர் ரிச்சர்டு ரைட் எழுதிய இனவெறியைத் தோலுரித்துக் காட்டும் நாவல்! – பெ.விஜயகுமார்

கறுப்பின உழைப்பாளி ஜார்ஜ் ஃப்ளாய்டை இனவெறி பிடித்த அமெரிக்கக் காவல்துறை அதிகாரி செவ்வின் என்பவன் கழுத்தை நெறித்துக் கொல்லும் போது...
Article

கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

  பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக்...