archiveLandslides

Article

நிலச்சரிவுகளும் தேயிலைத் தொட்ட தொழிலாளிகளும் – இரா.இரமணன்.

 

ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம் பெட்டிமுடியில் பெரு மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். பலரின் உடலைக்கூட  கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட விபத்துகள் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பல ஆண்டுகளாக நடைபெறுகின்றன. எனவே நிலச்சரிவு மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் குறித்த சில விவரங்களைப் பார்க்கலாம்.

பகுதி 1

நிலச்சரிவு என்றால் என்ன?

             பாறைகள், நிலப்பகுதிகள், சிதைவுகள், குப்பை கூளங்கள் ஆகியவை புவிஈர்ப்பு விசையால் மலைச்சரிவுகளில் கீழ்நோக்கி வருவதை நிலச்சரிவு என்கிறோம். நிலத்தடி நீரின் அழுத்தம், எரிமலை வெடிப்புகள், நில நடுக்கம், மண் அரிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் மலைச்சரிவானது தனது ஸ்திரத் தன்மையை இழக்கும்போது நிலச்சரிவு ஏற்படுகிறது. கல் குவாரிகள், சாலை அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற மனித நடவடிக்கைகளும் காரணமாகின்றன. மரங்களும் புல் வெளிகளும் வெள்ள ஓட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியும்  மண் அரிப்பை தடுத்தும் நிலச்சரிவிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. எனவே அவைகளை அழிப்பதும் நிலச்சரிவிற்கு காரணமாகின்றது.

அபாய மண்டலங்கள் 

         இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை ஐந்து  அபாய மண்டலங்களாக பிரித்துள்ளனர்.

 1. இமய மலையின் மேற்குப் பகுதிகள் (உ.பி, உத்தாரஞ்சல், ஹி.பி, ஜம்மு காஷ்மீர்)
 2. இமயமலையின் கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகள் (மே.வ, சிக்கிம்,அருணாச்சலப் பிரதேசம்)
 3. நாகா அரக்கன் மலைத்தொடர் ( நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா)
 4. பீடபூமி விளிம்புப் பகுதிகள், வடகிழக்கு இந்தியாவிலுள்ள மேகாலாயா பீடபூமிப் பகுதிகள் 
 5. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி ( மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு)

இந்தியாவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சில 

 1. அஸ்ஸாம் கவுகாத்தியில் 1948ஆம் ஆண்டு பெருமழையில்  ஒரு கிராமம் முழுவதும் அழிந்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 2. மேற்குவங்கம் டார்ஜிலிங்கில் 1968இல் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து போயினர்.
 3. இந்தியாவில் நடந்தவைகளில் மோசமானதாகக் கருதப்படும் உத்தரகாண்ட் மால்பா நிலச்சரிவு 1998இல் ஏற்பட்டது.ஆகஸ்ட் 11-17 தேதிகளுக்குள் அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில்  ஒரு கிராமம் முழுவது அடித்து செல்லப்பட்டு 380பேர் உயிரிழந்தனர்.
 4. மும்பை புறநகரில் ஜூலை 2000இல் ஏற்பட்ட விபத்தில் 67பேர் இறந்தனர்.
 5. கேரளாவில் 2001இல் ஏற்பட்ட அம்பூரி நிலச்சரிவில் 40பேர் உயிரிழந்தனர்.
 6.  உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஜூன் 2013இல் பெருவெள்ளத்தில் 4200 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 5700க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது.
 7. மகாராஷ்டிரா மாநிலம் மாலின் நிலச்சரிவில் ஜூலை 2014இல் 151 உயிரிழப்பும்  100 பேர் காணாமலும் போயினர்.   

பெட்டிமுடி நிலச்சரிவு குறித்து தெரிந்து கொள்ளுமுன் அது அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பற்றி சில விவரங்கள் பார்க்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலை

 1. 1.குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பரந்து விரிந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலை  ஒரு உலக அதிசயம்.
 2. இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருகிறது.
 3. இதன் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை. மேலும் ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கியது. பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேற்படுத்தினர்.
 4. நீலகிரி பகுதியில் பல அயல் தாவரங்கள் பயிரிடப்பட்டதால் அங்கு இயற்கையாக வளர்ந்துகொண்டிருந்த தாவரங்கள் அழிக்கப்பட்டன.

More bodies recovered from landslide debris in Kerala - GulfToday

மேற்குத் தொடர்ச்சி மலை புவியியல் குறித்து நிபுணர்கள் கருத்து சில 

 1. அரபிக் கடலிலிருந்து ஈரப்பதத்துடன் வரும் காற்றை மேற்குத் தொடர்ச்சி மலை மேலெழும்பச் செய்து மலைச் சரிவுகளிலும் உச்சிப் பகுதிகளிலும் அதிக மழைப் பொழிவை ஏற்படுத்துகிறது. 
 2. மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகள் அதிக பட்ச சூழல் கூருணர்வு பகுதிகள் (highest ecological sensitivity (ESZ1) என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் கட்டுவது, சாலை போடுவது, குவாரிகள் செயல்படுவது, சுரங்கங்கள் தோண்டுவதுஇயற்கைத் தாவரங்களை அழித்து தோட்டப்பயிர்கள் செய்வது, பெரும் இயந்திரங்களைக் கொண்டு நிலப்பரப்பை சமமாகுவது போன்றவை இந்தப் பகுதிகளில் நிலச்சரிவுக்கு இட்டு செல்லும் என்கிறார் மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் நிபுணர் குழுவின் தலைவர் காட்கில். 
 3. 33டிகிரிக்கு மேல் சாய்வான செங்குத்துப் பகுதிகள் நிலச்சரிவு அபாயத்துக்குள்ளாகக் கூடியவை. 2018, 2019 ஆண்டுகளில் பெரும்பாலான நிலச்சரிவுகள் இப்படிப்பட்ட பகுதிகளில்தான் நடந்துள்ளன.     
 4. கடந்த ஒரு நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் புல்வெளிகளில் 50% நிலப்பரப்பு ஒற்றைப் பயிர் தோட்டங்களாகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதுவும் நிலச் சரிவுக்கு காரணம். 
 5. தென்கிழக்குப் பருவமழைப் பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் அடை மழைக்கு இட்டு செல்கின்றன.  

பெட்டிமுடி 

பெட்டிமுடி அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் 3000 மீட்டர் உயரமும் 80 டிகிரி வரை  சரிவும் கொண்டது.

கேரளாவில் சாதாரணமாக ஆகஸ்ட் ஒரு மாதத்தில் 427 மிமீ மழை பதிவாகும். ஆனால் இந்த வருடம் முதல் பத்து நாட்களிலேயே 476மிமீ மழை பெய்துள்ளது. 

ஆகஸ்ட் ஆறாம் தேதி இரவு நிகழ்ந்த கிளவுட் பர்ஸ்ட்(cloud burst) எனும் நிகழ்வு நிலச்சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய நேரத்தில் நிகழும் பெரு மழைப் பொழிவையே கிளவுட் பர்ஸ்ட் என்கிறார்கள்.

ஆகஸ்ட் 2-7 தேதிகளுக்குள் பெட்டிமுடியில் 184செமீ மழை பெய்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வானிலை வலைத்தளப் பதிவாளர் பிரதீப் ஜான் கூறுகிறார். இது இடுக்கி மாவட்டத்தில் இந்த நாட்களில் பெய்த மிக அதிக  மழை அளவாகும்.

பெட்டிமுடி நிலச்சரிவு குரிசுமாலா என்கிற நீரோடையில் தொடங்கியதாக வனத் துறையினர் கூறுகிறார்கள். அங்கு இரண்டு நீரோடைகள் ஒன்று சேர்வதாகவும் அருகில் மேலும் ஒரு நீரோடை உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.  இந்த இடம் கண்ணன்தேவன் தேயிலை நிறுவனத்தின் நிலப்பரப்பின் விளிம்பிற்கும் இரவிகுளம் தேசியப் பூங்காவிற்கும்  அருகில்  உள்ளது.

பெட்டிமுடி மலைச்சரிவின் கடைசி இடம் என்பதால் ஐந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் தொடங்கிய நிலச்சரிவு வெள்ளத்தின் வேகத்தில் மரங்களையும் சேறு சகதிகளையும் புரட்டிக்கொண்டு வந்து இந்த இடத்தில் கொட்டிக் குவித்துவிட்டது. தேயிலைத் தொழிலாளிகள் லாயம் எனும் வரிசை வீடுகளில் வசிக்கிறார்கள். அதுவும் உயிரிழப்புகளுக்குக் காரணம்.

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் 

தாவரங்களின் பரப்பை அதிகப்படுத்துவது, பயிர்களை முறையாகத் தேர்ந்தெடுப்பது, ஸ்திரமற்ற சரிவுகளில் சாலைகளை அமைக்கும்போது போதுமான பொறியியல் வடிவமைப்பு போன்றவற்றை நிபுணர்கள் குழு பரிந்துரைக்கின்றது.

2011இல் தாங்கள் அளித்த அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் நிலச்சரிவுகளையும் உயிரிழப்புகளையும் பெருமளவு தவிர்த்திருக்கலாம் என்கிறார் மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் நிபுணர் குழுவின் தலைவர் காட்கில்.  (Western Ghats Ecology Expert Panel report submitted in 2011)

கடந்த மூன்றாண்டுகளாக கேரள மக்கள் மனப்பான்மையில் மாற்றங்கள் வந்துள்ளதாகக் கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள் அர்ஜுன் ரகுநாத் மற்றும் கல்யாண் ராய். அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை மிக அதிகமாக பின்பற்றுகிறார்கள். விபத்துக்குள்ளாகும் பகுதிகளை மீண்டும் மதிப்பீடு செய்வது, அங்கிருந்து 3000மக்களை வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடியமர்த்தியது ஆகிய நடவடிக்கைகளினால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

                             *************************

She Wanted To Be A Doctor And Help The Family But Now They Are All Gone In Munnar Landslide

தேயிலைத் தோட்டமும் தொழிலாளிகள் நிலையும் 

தேயிலை வணிகம் ஒரு பருந்துப் பார்வை 

தேயிலை கிழக்கிந்தியக் கம்பெனியால் 1685ஆம் ஆண்டு சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரு வணிகமாக இருந்தது. அது 1750இல் இந்தியா முழுவதும் செய்யப்படும் வணிக மதிப்பைவிட அதிக வருவாய் தருவதாக இருந்தது. 1833இல் இந்த வணிகத்தை கம்பெனி இழந்தது. இதற்குப் பிறகு அஸ்ஸாமில் தேயிலை வளர்வது காணப்பட்டது. 1838இல் இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. 1860இல் தேயிலை உற்பத்தி ஒரு மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது. இன்றைக்கு (2019ஆம் ஆண்டு) அது 1339.7 மில்லியன் கிலோவாக உள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு $830.9 மில்லியன். உலகில் தேயிலை ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா அடங்கிய பகுதிகளில் தேயிலை 106850 ஹெக்டேர்களில் பயிரிடப்படுகிறது. இது நாட்டின் தேயிலை பயிரடப்படும் மொத்த பரப்பளவில் 18.95% ஆகும். இந்தப் பகுதிகளில் தேயிலை உற்பத்தி 243.71 மில்லியன் கிலோ ஆகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் இது 20.16% ஆகும்.(2013-2014 புள்ளி விவரம்)

             மூணாறு தேயிலை தோட்டத்தின் தோற்றம் பூஞ்சார் தம்புரான் என்பவர் கண்ணன் தேவன் மலைக் கிராமத்தை லண்டனை சேர்ந்த ஜான் டேனியல் மன்றோவுக்கு 1877இல்   குத்தகைக்கு கொடுத்ததிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரம் அடைந்தபிறகு அந்நிய செலாவணிக் கட்டுப்பாடு சட்டத்தின் விளைவாக ஜேம்ஸ் பின்லே குழுமம் டாட்டா குழுமத்துடன் இணைந்து டாட்டா-பின்லேவாக மாறியது. 1983இல் இந்த நிறுவனம் முழுவதும் டாட்டாக்களின் உரிமையாக மாறி இந்தியாவின் மிகப் பெரிய தேயிலைத் தோட்டமாக உருவெடுத்தது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் நிலை

இந்திய தேயிலைத் தோட்டங்களில் 10இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்ட,பழங்குடி மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். 50%க்கும் அதிகம் பெண்கள். தமிழ்நாட்டில் நீலகிரியில் இதில் இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.

உடல்நலம் பாதிப்பு 

         தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் நிலை மிகக் கொடுமையானது. பின்பக்கம் இருக்கும் கூடையின் கயிறுகள் வயிற்றில் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். இதனால் கர்ப்பப்பைகள் இறங்கிவிடுகின்றன. பலருக்கு அதை எடுக்க வேண்டியதாகி விடுகிறது. ஸ்பாண்டிலைட்டிஸ் எனும் கழுத்து நோயும் ஆர்த்திரைட்டிஸ் எனும் மூட்டு நோயும் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு 150கிலோ தேயிலை பறிக்கவேண்டும். வெயிலிலும் மழையிலும் வேலை செய்யவேண்டும். அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சும். மயங்கி விழுபவர்கள் மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் வேலை செய்யத் தொடங்க வேண்டும். தேயிலையைப் பறித்துப் போடுவதற்கு கூடைகள் கூட கொடுக்கப்படுவதில்லை. எனவே அவர்கள் வயிற்றில் சாக்கைக் கட்டிக்கொண்டு நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். அதனால் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது. சுத்தமான குடி நீர்கூட இல்லாததால் அவர்களது உடல்நலம் அதிக ஆபத்துக்குள்ளாகிறது.  

வசிப்பிட கொடுமைகள் 

பெரும்பாலான தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் எஸ்டேட் உள்ளேயே வசிக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் சிதைந்த நிலையில் உள்ளன. வீடுகளில் கழிப்பறைகள் கிடையாது. நிலச்சரிவின்போது மரங்கள் முறிந்து வீடுகள் மீதே விழும். விலங்குகளுடனான மோதலையும் எதிர்கொள்ள வேண்டும்.’ 

என்கிறார் நீலகிரி தேயிலை தொழிலாளிகள் சங்கத் தலைவர் பத்ரி.  

‘250சதுர அடி வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகளுடன் வாழ்வது கடினம். கழிப்பறைகள் இல்லாததால் இரவில் குடியிருப்பைவிட்டு வெளியே செல்லும்போது விலங்குகளையும் பாம்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கிறது’ 

என்கிறார் ஆவணப் பட தயாரிப்பாளரான தவமுதல்வன். ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் மழைக் காலத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஒழுகத் தொடங்கும்.

ஓய்வு கால அச்சமும் கண்துடைப்பு வசதிகளும்  

இவைகளைவிட அவர்கள் அஞ்சுவது ஓய்வுக் காலத்தைத்தான். அவர்களின் ஒரே வீடும் பறிபோய்விடும். ஓய்வு பெற்ற உடனே வீட்டைக் காலி செய்ய வேண்டும். அவர்களிடம் இருக்கும் சொற்ப சேமிப்பில் வீட்டு வாடகை கொடுக்க இயலாது. தோட்டத் தொழிலாளிகள் சட்டம் 1951இன் படி ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்திற்கும் தங்குமிடம் தர வேண்டும். குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த வேண்டும். சுகாதாரமான நிலையை உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்த சட்டம் மழை, குளிரிலிருந்து தொழிலாளியைப் பாதுகாக்க குடை, கம்பளி, மழைக்கோட், மற்ற வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இவையெல்லாம் கண் துடைப்பாகவே இருக்கிறது என்கிறார்கள் தொழிலாளிகள். 

உறிஞ்சப்படும் உழைப்பு 

ஆனால் இவைகளையெல்லாம் தருவதற்குப் பதிலாக தொழிலாளிகள் அதிக உற்பத்தி செய்வதற்கு மழைக்காலத்தை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். மழைக் காலத்தில் தேயிலை நன்கு வளரும். எனவே எட்டு மணி நேரத்தில் அதிகமாக பறிக்குமாறு சுமையை ஏற்றுகிறார்கள். அதிகப்படியான நேரத்திற்கு ஓவர் டைம் தர வேண்டும் என்பதால் மழைக்காலத்தில் அதே எட்டு மணி நேரத்தில் பறிக்க வேண்டிய இலக்கை அதிகப்படியாக நிர்ணயிக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன் ரூ 15/ஆக இருந்த நாள்கூலி இப்பொழுது ரூ330/ ஆக உயர்ந்துள்ளது.

குழந்தைகளின் கல்வி,தேயிலைத் துளிர்களைப் பறிப்பதற்கு இயந்திர முறை, நில உரிமை  போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக தொழிலாளிகள் ஐந்தாண்டுகளுக்கு முன் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் ஒற்றை அறைக் குடியிருப்புகளில் வசிப்பது அப்போது ஊடகங்களில் வெளிவந்தது. அப்போது தேயிலை நிறுவனங்கள் குடியிருப்பு வசதிகளை அதிகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தன. ஆனால் செய்யவில்லை.

கொரோனா காலத்திய துன்பங்கள் 

கொரோனா பரவல் இவர்களது துன்பங்களை அதிகப்படுத்தியிருக்கிறது. ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரே படுக்கையில் ஐந்தாறு பேர் படுத்து தூங்கும் நிலைமையில் தனிமனித விலகலை எப்படிக் கடைப்பிடிக்க முடியும் என்கிறார் செயற்பாட்டாளர் கோமதி..

                                           *********

உசாத்துணைகள் (References)

committee chaired by K P Sudheer, executive vice president of Kerala State Council for Science, Technology and Environment.

Arjun Raghunath and Kalyan Ray/ Thiruvananthapuram, New Delhi/ DHNS

 • https://www.thenewsminute.com/article/modern-day-bonded-labour-inhuman-work-conditions-tn-tea-estate-workers-130659

https://www.onmanorama.com/news/kerala/2020/08/11/forest-dpt-traces-

https://www.firstpost.com/india/tea-plantation-workers-bear-brunt-of-idukki-landslide-activist-says-inadequate-housing-compounded-woe

 • https://exampariksha.com/landslides-in-india-himalayas-geography-study-material-notes/
 • https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/landslides-india-283441-2015-07-20

https://www.nabard.org/demo/auth/writereaddata/ModelBankProject/1612162143Tea_plantation_for_small_tea_growers_(E)in_Himachal_Pradesh.pdf

 • https://indianexpress.com/article/india/cloudburst-could-have-set-off-deadly-landslide-in-kerala-says-official-6557434/
 • https://www.ibef.org/exports/indian-tea-industry.aspx
 • https://www.cec-india.org/our-work.php?wid=9

facebook post @Ks Rajan Cdk(https://www.facebook.com/thenilgiris/posts/3736698483025925)