archiveconsumer

Article

கொரோனா காலத்தில் நுகர்வோர் – பிலிப் கோட்லர் (தமிழில் பேரா.மு.மாரியப்பன்)

 

அமெரிக்காவின் சாராசோட்டா நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருந்த பத்து அம்சங்களின் மீது கொரோனா நோயால் ஏற்பட இருக்கக்கூடிய பல்வேறு பாதிப்புகள் குறித்து மிகச்சிறிய அளவிலான மெய்நிகர் கருத்தரங்குகள், 2020ஏப்ரல், மே மாதங்களில் அந்த நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டன.  

சந்தைப்படுத்துதல் நுட்பம் குறித்த திறன் பெற்ற உலகின் தலைசிறந்த வல்லுநர், சந்தைப்படுத்துதல் சிந்தனை குறித்த மிகச்சிறந்த வழிகாட்டி, நவீன சந்தைப்படுத்தலின் தந்தை என்று பரவலாக அறியப்படும் பிலிப்கோட்லர், நுகர்வியம் குறித்து, ’கொரோனா காலத்தில் நுகர்வோர்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை சாரா சோட்டா நிறுவனத்திற்காக எழுதியுள்ளார். 

கொரோனா வைரஸ் மூலம் கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி இறப்பு மற்றும் பேரழிவிற்கான பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. உலகெங்கிலும் பலலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதால், உலகம் மாபெரும் மந்தநிலையில் வீழ்கின்ற ஆபத்தில் உள்ளது. உடல்நலம் மற்றும் பொருளாதாரீதியான தாக்கம், குறிப்பாக ஏழைகள் மீது பேரிடியாக விழுந்திருக்கிறது. நிலவுகின்ற தண்ணீர்ப் பற்றாக்குறையால், இவர்களில் பலரும் கைழுவும் வாய்ப்பைக்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது, சேரிகளில் குடியிருப்பவர்கள், சிறையிலிருப்பவர்கள் மற்றும் அகதிகளாக கூடாரங்களில் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று பல லட்சக்கணக்கானவர்களுக்கு என்ன நேரப்போகிறது? 

PRI Webinar: California, the Coronavirus, and Capitalism - Pacific ...

வணிகநடவடிக்கைகள் முடக்கப்பட்டு செயலிழந்து வருகின்றன. வீட்டிலேயே இருக்கவேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும், அடிக்கடிகைகளைக் கழுவ வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தப்படுகிறது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பலதரப்பட்டப் பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலவாரங்கள், மாதங்கள் அல்லது பல வருடங்களுக்கு இந்த கோவிட்-19 நோய் நீடிக்கக்கூடும் என்பதால், முகக்கவசங்கள், கழிவறைத்தாள்கள் உள்ளிட்ட பிறபொருட்களையும் மக்கள் வாங்கிப் பதுக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கஅரசாங்கம் இரண்டு லட்சம் கோடி டாலர் அளவிற்கான உதவித் தொகுப்பை அனுமதித்துள்ளது. வால்ஸ்ட்ரீட்டின் பொதுநலனுக்காக அறிவிக்கப்பட்டிருப்பதையே அதன் விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஏழைத் தொழிலாளர்களுக்கான சிறியஅளவிலான நிதியுதவி, முக்கிய வீதிகளில் செயல்படுகின்றவர்களுக்கு என்றும் எதுவும் அறிவிக்கப்டவில்லை. வருமான ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரைந்து அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய இடர்பாடுகளும், கவலைகளும் நிறைந்த இந்தக்காலகட்டம், மக்கள் மத்தியில் புதிய நுகர்வோர் மனப்பான்மையையும், இன்றைய முதலாளித்துவத்தின் தன்மையை மாற்றுகின்ற நடத்தைகளையும் கொண்டுவரப்போகிறது என்றே நான் எதிர்பார்க்கிறேன். இறுதியாக, தாங்கள் எதை நுகர்கிறோம், எந்த அளவிற்கு நுகர்கிறோம், இவையனைத்தும் வர்க்கப் பிரச்சனைகள் மற்றும் சமத்துவமின்மையால் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றன என்பதை மக்கள் மறுபரிசீலனை செய்வார்கள்.முதலாளித்துவர்களின் எதிர்பார்ப்புகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, புதிய சமத்துவம் நிறைந்த முதலாளித்துவத்துடன் இன்றைய பயங்கரமான காலகட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய தேவை மக்கள் அனைவரிடமும் ஏற்பட்டு இருக்கிறது.

எல்லையற்ற நுகர்வைச் சார்ந்திருக்கும் முதலாளித்துவம்           

தொழிற்புரட்சி தோன்றிய காலத்திற்கும் முந்தைய காலத்திலிருந்து நாம் ஆரம்பிக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் தொழில்துறைப் புரட்சியின் விளைவாக, உலக மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை, அளவு ஆகியவை வெகுவாக அதிகரித்தன. நீராவி இயந்திரம், இருப்புப்பாதைகள், புதிய இயந்திரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயம் ஆகியவை பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனைப் பெரிதும் அதிகரித்தன. அதிக உற்பத்தியைத்தொடர்ந்து அதிக நுகர்வு என்பது தவிர்க்க முடியாததானது. அதிக நுகர்வு அதிக முதலீட்டிற்கு வழிவகுத்தது. எப்போதும் அதிகரித்துவருகின்ற பொருட்களுக்கான உலகில், அதிக முதலீடு உற்பத்தியை அதிகரித்தது.

மக்கள் பொருட்களின் எண்ணிக்கைளும், அவற்றைத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் பெருமகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைத் தெரிவுசெய்வதின் மூலம் அவர்கள் தங்களைத் தனித்தன்மையுடன் வைத்துக்கொள்ளமுடிகிறது.  உற்பத்தியாளர்கள் வழங்குகின்ற வியக்கத்தக்க சலுகைகளால், மக்களால் அளவில்லாமல் பொருட்களை வாங்க முடிகிறது.        

பொதுமக்கள் நுகர்வோர்களாக மாறுவது அதிகரிக்கிறது. நுகர்வு ஒரு வாழ்க்கை முறையாக, பண்பாடாக மாறுகிறது. தீவிரமான நுகர்வோர்களால், உற்பத்தியாளர்கள் லாபமடைகின்றனர். பொருட்களுக்கான தேவை மற்றும் அவற்றின் நுகர்வை அதிகரிப்பதில் உற்பத்தியாளர்கள் ஆர்வம் கொள்கின்றனர். 

தேவையை அதிகப்படுத்துவதிலும், அவற்றை நுகர்வதற்கு அதிகமாகச் செலவு செய்யத் தூண்டுவதிலும் உற்பத்தியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அவர்கள் பத்திரிக்கை விளம்பரங்கள், விற்பனை அழைப்புகள் மீது கவனத்தைத் திருப்பினர். புதியவகையான ஊடகங்கள்வந்தபோது, அவர்கள்தொலைபேசி, ரேடியோ, டிவி, இணையம் மூலமாகச் சந்தைப்படுத்துதலை நோக்கித் திரும்பினர். நுகர்வோரின் வேட்கை மற்றும் வாங்கும்திறனை அதிகரிக்கும் அளவிற்கு, வணிக நிறுவனங்களால் அதிகலாபத்தைப்பெற முடிகின்றது.  

The Theory of the Leisure Class eBook: Veblen, Thorstein: Amazon ...

ஆரம்பத்திலிருந்தே இத்தகைய நுகர்விய எழுச்சி குறித்து, பார்வையாளர்கள் சிலர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். பொருட்கள் மீதான பொதுமக்களின் இத்தகைய ஆர்வம் மதக்கருத்துக்கள் மற்றும் ஆன்மீக விழுமியங்களுடன் போட்டியிடுவதை, பல மதத்தலைவர்களும் கண்டனர். மிகவும் கண்டிப்பான விழுமியங்கள், அதிக அளவில் பொருட்களை வாங்குவது மற்றும் கடனாளியாவதிலிருந்து சிலமக்கள்குழுக்களைத் தடுத்து நிறுத்தின. தங்கள் செல்வவளத்தைப் பகட்டாரவாரத்துடன் வெளிப்படுத்துவதற்காக பொருள்களை வாங்குகின்ற செல்வச்சிறப்புடைய நுகர்வோர்கள் குறித்து சிலர்முரண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

பொருளாதார வல்லுனர் தோர்ஸ்டன் வெப்லென் ’கவனத்தைக் கவரும் நுகர்வு’ பற்றி முதன்முதலில் எழுதியவர், மக்களை தியான வாழ்க்கை முறைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை ஒரு நோயாக அவர் கண்டார். தன்னுடைய ’ஓய்விலிருக்கும் பணக்கார வர்க்கம் குறித்த கோட்பாடு’ (தியரி ஆஃப் தி லெஷர் கிளாஸ்) என்ற புத்தகத்தில் தங்களுடைய சமூக அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற நோயை வெப்லன் அம்பலப்படுத்தினார். ஒருவேளை அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால், நாடுகடத்தப்பட்ட, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபரின் மனைவியான இமெல்டா மார்கோஸ் 3,000 ஜோடி காலணிகளை வைத்திருந்தார் என்ற செய்தியைக் கேட்டு அவர் உண்மையில் திகைத்துப் போயிருப்பார்.

அதிகரித்துவரும் நுகர்விய எதிர்ப்பாளர்கள்

 நுகர்விற்கு ஏதிரான இயக்கங்கள் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இத்தகைய நுகர்விய எதிர்ப்பாளர்களை, நாம் குறைந்தபட்சம் ஐந்துவகையில் வேறுபடுத்திப்பார்க்கலாம். 

முதலாவதாக, பல நுகர்வோர்கள் குறைவாகச் சாப்பிடுவது, குறைவாக பொருட்களை வாங்குவது என்று தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கி (life simplifiers) கொண்டுள்ளனர். வீடுமுழுவதும் குப்பைகள் போன்று இறைந்து கிடக்கக்கூடிய பொருள்களுக்கு எதிராக அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாது, தேவையற்றுக் கிடக்கின்ற தங்கள் உடைமகளைக் குறைத்துக் கொள்ளவிரும்புகிறார்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றைக்கூட சொந்தமாக வைத்திருப்பதில் ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கின்ற சிலர், அவற்றை வாடகைக்குப் பெற்றுக்கொள்வதையே விரும்புகிறார்கள்.

Episode #83 // Degrowth 2014 // Part B ] - Extraenvironmentalist

இரண்டாவதாக, நுகர்வுஎன்பதுஅளவிற்கதிகமான நேரத்தையும் உழைப்பையும் விரையம் செய்கின்ற கேடானதன்மை கொண்டதாகஇருக்கிறதென்ற உணர்வு கொண்ட ‘வளர்சிக்கெதிரான’ செயற்பாட்டாளர்களாக (degrowth activists)  மற்றொரு பிரிவினர்இருக்கின்றனர். 

“உலகம் என்பதுநம்மைப்பொறுத்தவரைமிகப்பெரிது…

பெறுவதும், இழப்பதும்என்று, நமதுஆற்றலைநாம்வீணாக்குகிறோம்:

நமக்கானதுஎன்றுஇயற்கையில் நாம்பார்ப்பது அதிகமில்லை;

நமதுஇதயங்களை நாம்தொலைத்துவிட்டோம், நமக்குகிடைத்தமோசமான வரம்!”

நுகர்வின் அளவானது பூமியின் தாங்கும் திறனை விஞ்சிவிட்டதென வளர்ச்சிக்கெதிரான செயற்பாட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள். 1970ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 370 கோடியாக இருந்தது. 2011ஆம்ஆண்டு வாக்கில், அது 700 கோடியாக அதிகரித்து, இன்று (2020) 770 கோடி என்ற அளவில் உள்ளது. 2050ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 980 கோடியாக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்திருக்கிறது. இந்தப் பூமியால் அந்த அளவிற்கான மக்களுக்கு உணவளிக்க முடியாது என்பது பெருங்கவலையாக இருக்கப்போகிறது. சாகுபடி செய்யக்கூடிய நிலத்தின் அளவு குறைவாகவும், மேல் மண்ணின் வளம் மோசமாகிக்கொண்டும் இருக்கிறது. பெருங்கடல்களின் பல பகுதிகள் கடல்சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் இல்லாத ‘இறந்த மண்டலங்களாக’ மாறியிருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கவேண்டும், பொருள்களுக்கான நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று வளர்ச்சிக்கெதிரான செயற்பாட்டாளர்கள் குரலெழுப்புகின்றர். வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுகின்ற வாழ்க்கைத் தரத்தை, சாத்தியமே இல்லாததை அடைய விரும்புகின்ற, வளர்ந்துவருகின்றஏழை நாடுகளில் உள்ள மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள். பேராசை கொண்ட உற்பத்தியாளர்கள் ’போலியான மற்றும் நீடித்திருக்க முடியாத தேவைகளை’  உருவாக்கத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக இந்தவகைச் செயற்பாட்டாளர்கள் காண்கின்றனர். 

மூன்றாவதாக உள்ள பருவநிலைச் செயற்பாட்டாளர்கள்(climate activists), வெளியிடப்படும் கரிமப்பொருள்தடங்கள் உருவாக்குகின்ற காற்று மற்றும் நீர்மாசுபடுத்துதல் மூலம்அதிக அளவில் பொருள்களை வாங்கக்கூடிய நுகர்வோர்கள் நமது பூமிக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தீங்கு மற்றும் ஆபத்துகளைப் பற்றி கவலைகொள்ளக்கூடியவர்களாக உள்ளனர்.  பருவநிலைச்செயற்பாட்டாளர்கள் இயற்கை மற்றும் அறிவியல்மீது திடமான மரியாதை உடையவர்களாக, பூமியின் எதிர்காலம் குறித்து மெய்யான அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். 

File:Degrowth-2014-leipzig-demonstration-1-klimagerechtigkeit ...

நான்காவதாக, ஆரோக்கியமான உணவைத் தெரிவுசெய்பவர்கள் (sane food choosers) சைவஉணவு உண்பவர்களாகஇருக்கிறார்கள். நம்முடைய உணவிற்காக, விலங்குகளைக் கொல்வது குறித்து இவர்கள் வேதனைப்படுகிறார்கள். அனைவராலும் ஏதாவதொரு தாவரம், காய்கறி மற்றும் பழஉணவுகளிலிருந்து சிறந்த மற்றும் சத்தான உணவைச்.சாப்பிடமுடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள். தங்களுடைய லாபத்திற்காக, கால்நடை வளர்ப்பவர்கள் பசுக்கள், கோழிகள் போன்ற விலங்குகள் விரைவில் வளரும் வகையில் அவற்றைக்கொழுக்க வைத்து, பின்னர் கொல்கிறார்கள். ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வதற்கு15,000 முதல் 20,000 லிட்டர் வரையிலான தண்ணீர் தேவைப்படுகிறது. அதேபோன்று விலங்குகளுக்கு உணவளிப்பதற்கான பொருட்களும்தேவைப்படுகின்றன.    

ஐந்தாவதாக, தற்போது இருக்கின்ற பொருட்கள் எதையும் அழிக்காமல், அதற்குப் பதிலாக அவற்றை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்துதல், பழுதுபார்த்துப் பயன்படுத்துதல், மறுவடிவமைத்துப் பயன்படுத்துதல் அல்லது தேவைப்படுகின்ற மக்களிடம் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவாக வாதிட்டுவருகின்ற, வளங்களைப்பேணுகின்ற செயற்பாட்டாளர்கள் (conservation activists) பற்றி நாம் கேள்விப்படுகிறோம்.  வளங்களைப்பேணும் ஆர்வம் கொண்ட இவர்கள், தொழில்நிறுவனங்கள் சிறந்த, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பொருட்களை குறைந்த அளவில் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பெண்களின் ஆடைகளை ஒவ்வொரு இரண்டு வாரத்திற்குமொரு புதிதாக வடிவமைத்து, அவை இரண்டு வாரத்திற்கு மட்டுமே கிடைக்குமாறு செய்து வருகின்ற ‘ஜாரா’ போன்ற நிறுவனங்கள் மீது இவர்கள் கண்டனக்குரல் எழுப்புகிறார்கள். திட்டமிடப்பட்டு வழக்கற்றுப்போகுமாறு செய்யக்கூடிய எந்தவொரு செயலையும் இவர்கள் எதிர்க்கின்றனர். ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலுக்கு எதிரான உணர்வுடையவர்களாக இருக்கின்ற இவர்களில் பலரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக, உலகமயமாக்கலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  

நுகர்விய எதிர்ப்பு இயக்கம், அதுதொடர்பான அதிகஅளவிலான இலக்கியத்தை உருவாக்கி இருக்கிறது. ’இலச்சினைகள் வேண்டாம், அது அனைத்தையும்மாற்றும்’ (No Logo, This Changes Everything), ’அதிர்ச்சிக் கோட்பாடு’ (The Shock Doctrine)போன்ற புத்தகங்களை எழுதிய நவோமி க்ளீன் நுகர்வியம் குறித்த முக்கியமான திறனாய்வாளர் ஆவார். மார்க் அக்பர் மற்றும் ஜெனிபர் அபோட் எழுதிய ’தி கார்ப்பரேஷன்’ (The Corporation) என்ற ஆவணப்படத்தையும் இதற்குச் சான்றாகக் காணலாம்.

நுகர்வோரின் கருத்துப் போக்குகளை வணிகங்கள் எவ்வாறு நிலை நிறுத்துகின்றன

marketing: Time for reinvention: Why HR is the new Marketing - The ...

வணிக நிறுவனங்கள் அதிக லாப நோக்கத்திற்காக, நுகர்வை எல்லையில்லாமல் விரிவுபடுத்துவதில் உள்ளார்ந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளன. நுகர்வை அதிகரிக்கவும், பிராண்டுகளைத் தேர்வுசெய்ய வைப்பதற்கும்அவை மூன்று விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. முதலாவதாக, புத்தாக்கம்; வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும் வாங்குதலையும் அதிகரிக்கும் வகையில், கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை உருவாக்குதல்.இரண்டாவதாக, சந்தைப்படுத்துதல்; நுகர்வோரைச் சென்றடைவதற்கான வசதிகளை ஏற்படுத்தி, பொருள்களை வாங்குமாறு அவர்களை ஊக்கப்படுத்துவது.

மூன்றாவது விதிமுறையாகக் கடன்; சாதாரணமாக வாங்கமுடிந்ததைவிடக் கூடுதல்பொருள்களை குறைந்த வருமானம் கொண்டவர்கள் வாங்க இயலுமாறு செய்தல்.  நுகர்வுப்பழக்கத்தை நம் வாழ்வு முறையாக ஆக்குவதைவணிகங்கள் தங்களுடையகுறிக்கோளாகக் கொண்டுள்ளன. அவற்றின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு, சில நுகர்வோர் நடவடிக்கைகளைச் சமயச்சடங்குகளாகவே அவர்கள் மாற்றிவிட்டிருக்கின்றனர். ஹாலோவீன், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற விடுமுறைநாட்கள் வாங்குவதைத் தூண்டுவதற்காகவே ஊக்குவிக்கப்படுகின்றன. வணிகநிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை வாங்க வைப்பது மட்டுமல்லாமல், அவை விரைவாகப் பயன்படுத்தப்படுவதையும் விரும்புகின்றன.  இதனால் எப்பொழுதும் இல்லாத  விகிதத்தில், பொருள்கள் தீர்ந்துபோவது, தேய்மானமாவது, கழிக்கப்படுவது ஆகியவை தொடர்ந்து அதிகரிக்கின்றன. 

வணிகநிறுவங்கள் விளம்பரங்களைப் பயன்படுத்தி, அந்தப்பொருட்களால் மட்டுமே மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தரமுடியும் என்று கருதக்கூடியவகையில், அவற்றை கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என்றதொரு மிகைப்படுத்தப்பட்ட உலகுஉண்மையில் இருப்பதான நிலைமையை உருவாக்குகின்றன.  நுகர்வோரின் வாழ்க்கைக்கே அர்த்தத்தைத் தருவதாக பொருள்களை மறுவடிவமைத்து, அதனைக்கட்டாயமாக வாங்கத்தூண்டுகின்ற வகையில் ஒரு பிராண்டை நிறுவனங்கள் உருவாக்குகின்றன. ஒருவர் தேர்வுசெய்கின்ற பிராண்ட், அவர்யார்?… அவருடையமதிப்புஎத்தகையது?… என்பதற்கான சமிக்ஞையைத் தருகிறது.  கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட சித்திரங்கள் மற்றும் அவற்றின் பொருள்மூலமாக ஒருவருக்கொருவர்அ றிமுகமில்லாதவர்களைக் கூட இந்த பிராண்ட் ஒன்று சேர்க்கிறது.

நுகர்விய எதிர்ப்பு முதலாளித்துவத்தை எவ்வாறு மாற்றும்

Sanktionen für streikende Schüler - Landkreis Ludwigsburg ...

முதலாளித்துவம் என்பது தொடர்ச்சியான, முடிவே இல்லாத வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டதொரு பொருளாதார முறையாகும். மக்களுக்கு பொருட்களின் மீதிருக்கின்ற வேட்கை அளவற்றதாக உள்ளது, முடிவில்லாத வளர்ச்சிக்கான ஆதாரமாக, பூமியில் உள்ள வளங்கள் வரம்பற்று இருக்கின்றன என்ற இரண்டு கருத்துகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கருத்துக்களும் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, தொடர்ச்சியாகப் பொருள்களை அதிகம் நுகர்கின்ற முயற்சியில் சோர்வுற்ற பெரும்பாலானவர்கள், திகட்டிவிட்ட மனநிலைக்கு உள்ளாகியிருக்கின்றனர். இரண்டாவதாக, பூமியின் வளங்கள் வரம்பிற்குட்பட்டவையே, அவை வரம்பிற்குட்படாதவை அல்ல. அதிகரித்துவரும் உலக மக்கள்தொகையுடன் சேர்ந்து, அதிகரித்துவருகின்ற பொருள்களுக்கான தேவைகளை இந்தபூமியால் பூர்த்தி செய்ய முடியாது.

இதுவரையிலும், பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஒரேயொரு அளவீட்டு முறையை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றன. அந்த அளவீட்டு முறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தால், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்தமதிப்பே, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அளவிடப்படுகிறது.

தொழிலாளர்கள் மிகக்கடினமாக, கூடுதல்நேரம் உழைப்பதன் மூலமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2 அல்லது 3 சதவீதம் அதிகரிக்கின்ற நிகழ்வை நாம் கற்பனை செய்து கொள்வோம். ஓராண்டில் இரண்டு வாரத்திற்கு மட்டுமே அவர்களுக்கு விடுமுறை உண்டு. ஓய்வெடுத்துக் கொள்வதற்கோ அல்லது தாங்கள் இழந்த ஆற்றலை மீட்கும் வகையில் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கோ இந்தசிறிய அளவிலான கால அவகாசமே அவர்களுக்கு உண்டு. எதிர்பாராத மருத்துவச் செலவுகளினால், சிறிய அளவிலான அவர்களின் சேமிப்பில் பலத்த அடி ஏற்படுவதால் அவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.  தங்கள் குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்ப இயலாமல் போகக்கூடும். அதனால், அவர்களுடைய குழந்தைகள் குறைவான திறன்களை உடையவர்களாகவும், குறைந்த வருவாய் ஈட்டும் ஆற்றலுடையவர்களாகவும் ஆகிவிடக்கூடும். ஒருவகையாகச் சமாளித்து, கல்லூரிக்குச் செல்கின்ற மாணவர்கள் பெரும் கடனுடனே தங்களுடைய பட்டத்தைப் பெறுகிறார்கள். பட்டதாரிகள் 1.2 லட்சம்கோடி டாலர் அளவிற்குக் கல்லூரிக் கடனைச் சுமந்துகொண்டிருக்கின்றனர். அவர்களால் வீட்டுவசதிப் பொருட்களையோ அல்லது குடியிருப்பதற்கான வீட்டையோ வாங்க முடியாது, ஏன், அவர்களால் திருமணம் செய்து கொள்ளக்கூட முடியாது. இத்தகைய சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், நாட்டின் சராசரி நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உண்மையில் குறைந்துபோயிருக்கிறது. 

பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான புதிய வழிமுறைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இப்போது சில நாடுகள் ஓராண்டின் மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி (Gross Domestic Happiness) அல்லது மொத்த உள்நாட்டு நல்வாழ்வு (Gross Domestic Well-Being) போன்ற சிலஅளவீடுகளைத் தயாரித்து வருகின்றன. ஸ்காண்டிநேவிய நாடுகளில் உள்ள குடிமக்கள், அமெரிக்கக் குடிமக்களைவிடக் கணிசமான அளவில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் அனுபவித்துக் கொண்டு, மிகச்சிறந்த பொருளாதாரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. நுகர்விற்கான நமது அடிமைத்தனம், நம்மையே நுகர்ந்து கொண்டிருக்கிறதா? 

உற்பத்தித்திறனால் கிடைக்கக் கூடிய ஆதாயங்கள் சமமாகப் பகிரப்படாமலிருப்பது, பொருளாதார வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பிரச்சினையின் ஒரு முக்கியமான  பகுதியாக இருக்கிறது. வணிகநிறுவனங்களின் தலைமைநிர்வாக அதிகாரிகளுக்கு, அவர்களிடம் வேலை பார்க்கின்ற தொழிலாளிகளின் சராசரியான ஊதியத்தைப்போல் 300 மடங்கு ஊதியம்அதிகமாக வழங்கப்படுகிறது. சிலர் தங்களுடைய தொழிலாளர்கள் சம்பளமாக எவ்வளவு வீட்டிற்குக் கொண்டு செல்கிறார்களோ, அதைவிட1100 மடங்கு அதிகமாகத் தங்களுடைய வீட்டுச் செலவிற்காக எடுத்துச் செல்கின்றனர். பொருளாதார அமைப்பு இவ்வாறான செயற்கையான ஏற்ற இறக்கத்துடனே இருக்கிறது. தொழிற்சங்கங்களின் வீரியத்தைக் குறைப்பதில், தங்களுக்கோஅல்லது முதலாளிகளுக்கோ எவ்வளவு ஊதியம்கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசமுடியாத நிலையில் தொழிலாளர்களையும் வைத்திருப்பதில் பெருநிறுவனங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.           

இத்தகைய பெருமளவிலான சமனிலையற்ற ஊதிய அமைப்புமுறை குறித்து சில கோடீஸ்வரர்கள் கூட வருத்தமடைந்திருக்கிறார்கள். பில்கேட்ஸ், வாரன் பஃபெட் போன்றவர்கள் உயர்வருமானத்திற்கான வரிவிகிதத்தை அதிகரிக்கவேண்டுமென்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். 2018ஆம்ஆண்டு வரிச் சீர்திருத்தத்தின் விளைவாக, இந்த உயர்விகிதம் 37 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகளிலோ, செல்வந்தர்கள்70 சதவீதம்வரியாகச் செலுத்துகின்றனர். அங்கே அனைவருக்கும் சுகாதாரம், கல்லூரிக்கல்வி ஆகியவை இலவசமாகக் கிடைக்குமாறு செய்திருக்கும் மிகச்சிறந்தபொருளாதாரம் இருக்கிறது. கோடீஸ்வரக் குடிமகனான நிக் ஹனாவர் இதைப் பற்றி டெட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். எதிர்பாராத புதியஇடத்திற்குச் சென்றுசேரப்போகிறீர்கள் என்று சககோடீஸ்வரர்களை அவர் எச்சரித்திருக்கிறார். அதிக ஊதியங்களைக் கொடுக்குமாறும், அதிக வரியைச் செலுத்துமாறும், உற்பத்தித்திறனிலிருந்து பெறக்கூடிய ஆதாயங்களைத் தொழிலாள வர்க்கத்துடன் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளுமாறும் அவர் தனது சகாக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நன்றாகச் சாப்பிட, வாடகை செலுத்த, போதுமான சேமிப்புடன் ஓய்வுபெற என்று போதுமான அளவிற்கு தொழிலாளவர்க்கம் சம்பாதிக்க வேண்டும். இன்றைக்கு தாங்கள் உடனடியாகச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்துவதற்குத் தேவையான 400 டாலர்களைக்கூடத் திரட்டமுடியாத நிலையிலேயே, பல தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

கோவிட்-19 நெருக்கடியை முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கிறது

முதலாளித்துவம் மற்றபிற காரணங்களுக்காகவும் மாறக்கூடியதாக இருக்கிறது. அதிகஎண்ணிக்கையிலான நுகர்வோர்கள், நுகர்வியத்திற்கெதிராக இருக்கத்தீர்மானித்துவிட்டால், அவர்கள் மிக் குறைவாகவே செலவுசெய்வார்கள். காலம்காலமாகநமது பொருளாதாரத்தின் 70 சதவீதஅளவிற்கான ஆதாரமாக அவர்களுடைய செலவுதான் இருந்துவருகிறது. அது குறைந்துவிட்டால், நமது பொருளாதாரத்தின் அளவும் சுருங்கிவிடும். அதனால் ஏற்படுகின்ற மந்தநிலை, அதிக அளவிலான வேலையின்மைக்கு வழிவகுத்துவிடும். இந்த உண்மையுடன், தானியங்கி இயந்திரம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் ஏற்படுகின்ற வேலை இழப்புகளையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காக,  வேலையின்மைக் காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, உணவுச்சீட்டுகள், குறைந்தவிலையில் உணவை வழங்குகின்ற சமையலறைகள், சமூக உதவிகள் போன்றவற்றிற்காக முதலாளித்துவம் அதிக அளவில்செலவு செய்ய வேண்டியதேவையேற்படும். 

Capitalism in the time of Coronavirus - The Startup - Medium

முதலாளித்துவம் அதிக பணத்தை அச்சிட வேண்டியிருக்கும். கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொண்டு அவநம்பிக்கையுடன் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவிற்கான செலவினத்திற்காக அமெரிக்கக் குடியரசுகளின் சட்டமாமன்றம் வாக்களித்து, அது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். 2 லட்சம் கோடி டாலர் என்பது குறுகிய கால ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்கு மட்டுமே உதவும், மேலும்பல லட்சம் கோடிகளைச் செலவிட வேண்டியதிருக்கும். தற்போதுள்ள வரி வருவாயால் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான நிதிப்பற்றாக்குறைக்கே இத்தகைய நடவடிக்கைகள் வழிவகுக்கும். முடிந்தவரையிலும், வரி விகிதங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட வேண்டும். ஏழைகள் படுகின்ற துயரம் மற்றும் கஷ்டங்களால், பொதுவாக பணக்காரர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை. ஆனால், இது தான் அதிகமான ஊதியத்தைக் கொடுப்பதற்கும், அதிக அளவில் பகிர்ந்து கொள்வதற்கும் பணக்காரர்களைப் பொறுத்தவரை சரியான தருணமாகும். தற்சமயம் இருக்கின்ற இந்தநெருக்கடியில், தலைமை நிர்வாக அதிகாரிகளும், அதிக ஊதியம் வாங்குகின்ற ஊழியர்களும் தங்களுடைய ஊதியத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். போயிங் விமான நிறுவனநிர்வாகிகள், சமீபத்திய நெருக்கடிகாலத்தில் எந்த ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் வேலை செய்வதாகக் கூறி ஒருமுன்னுதாரணத்தை ஏற்படுத்திஇருக்கின்றனர்.

கோவிட்-19 நெருக்கடிச் சூழல் முடிவுறும் சமயத்தில், முதலாளித்துவம் ஒரு புதிய நிலைக்கு நகர்ந்திருக்கும்.  எதை நுகரவேண்டும், எந்தஅளவிற்கு நுகரவேண்டும் என்பது குறித்து புதிய சிந்தனையுடன் நுகர்வோர்கள் இருப்பார்கள். நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள புதிய நிலைமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

  • சில பலவீனமான நிறுவனங்களும், பிராண்டுகளும் அடையாளம் இல்லாமல் போய்விடும். நம்பகமான,  திருப்திகரமான மாற்று பிராண்டுகளை நுகர்வோர் கண்டுகொள்ள வேண்டியிருக்கும்.
  • நமது உடல்நலம் எவ்வளவு பலவீனமானது என்பதை கொரோனா வைரஸ்நமக்கு உணர்த்தியிருக்கிறது. கூட்டமாகஇருக்கும்போது, நமக்கு எளிதாக சளித்தொந்தரவு ஏற்படக்கூடும். பிறரைச் சந்திக்கும்போது, அவர்களுக்கு வாழ்த்துசொல்லும்போது கைகுலுக்குவதை நாம்நிறுத்த வேண்டும். கிருமிகள்,  காய்ச்சல்களுக்கு அதிக எதிர்ப்பைத்தரக்கூடிய சிறந்த ஆரோக்கியமான உணவுகளை நாம் உண்ண வேண்டும்.

 

  1. நமது சுகாதார அமைப்பின் போதாமை, அவை ஏற்படுத்துகின்ற பெரும் செலவு ஆகியவற்றைக் கண்டு நாம் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். கூடியமட்டும் மருத்துவமனைக்குச் செல்லாமலிருக்க வேண்டும். மிகவும்பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும்.
  2. தொழிலாளர்கள் வேலைகளைத் திரும்பப் பெற்ற பிறகும், இந்தநெருக்கடிகாலத்தில் ஏற்பட்ட திடீர்வேலை இழப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியும், வேதனையும் அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றகாயம், அவர்களுடைய அடிமனதில் வடுவாகவே இருக்கும். தங்கள் பணத்தைச் செலவுசெய்வதிலும் சேமிப்பதிலும் அவர்கள் இன்னும் அதிககவனத்துடன் இருப்பார்கள்.                              
  3. வீட்டில் தங்கியிருக்கும் இந்தக்காலகட்டம், தங்ளுடையஉணவுத் தேவைகளை தாங்களே தயாரித்துக் கொள்ளக்கூடிய தயாரிப்பாளர்களாக பல நுகர்வோர்கள் மாறுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகம்சாப்பிடுவது, காய்கறிகள் மற்றும் மூலிகைகள் போன்றவற்றை அதிகமாகத்தோட்டத்தில் வளர்த்தல், வெளியே சாப்பிடுவதைக் குறைத்தல் போன்றவை நிகழும்.
  4. குடும்பம், நண்பர்கள், சமூகம் ஆகியவற்றின் தேவை குறித்த விசயங்களுக்கு நாம்அதிக மதிப்பை அளிப்போம். சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வுசெய்வதற்கும், பொருத்தமான ஆடை மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை வலியுறுத்துவதற்காக நாம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்குவோம்.
  5. பிராண்டுகள் தங்களிடம் இருக்கின்ற சீரிய நோக்கங்களையும், பொதுநன்மைக்காக அவைஎவ்வாறுசேவையாற்றுகின்றன என்பது போன்ற விஷயங்களைத் தொழில்நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்பதை நாம் எதிர்பார்ப்போம். 
  6. பூமியின் நிலையற்ற தன்மை, காற்று மற்றும் நீர் மாசுபாடு, நீர்ப் பற்றாக்குறை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கத்தொடங்குவார்கள்

The Coronavirus Outbreak Has Shown That Capitalism Is Failing ...

வேலை, குடும்பம், ஓய்வு நேரம் ஆகியவற்றிற்கிடையே சிறந்த சமநிலையை உருவாக்கப் பெரும்பாலான மக்கள் முயற்சிப்பார்கள். பொருட்கள் மீதான ஆர்வம் என்ற அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, சிறந்த வாழ்க்கைக்கான பிற பாதைகளை உணர்ந்து அதனை நோக்கி நகர்ந்து, நுகர்வோரியத்திற்குப் பிந்தைய நிலையை நோக்கி அவர்கள்பயணிப்பார்கள்.

திறன்மிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த இயந்திரமாக மட்டுமே முதலாளித்துவம் இருந்து வருகிறது. அதுசமத்துவமான பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த இயந்திரமாகவும் இருக்கமுடியும். பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்துவதால் மட்டுமே, முதலாளித்துவம் சோஷலிசத்திற்கு மாறிவிடாது. ’பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகும்போது ஏழைகளுக்கு எல்லாம் கிடைக்கும்’ என்ற தவறான மற்றும் ஆதாரமற்ற பொருளாதாரக் கோட்பாட்டைவிட்டு நாம் விலகிவிட்டோம். உண்மையில், உழைக்கும் வர்க்க குடும்பங்கள் செலவழிப்பதற்கான அதிகமான பணத்தைத் தருவதன்மூலம் மட்டுமே, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகமுடியும்.

பணக்காரர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய, அனைவருடைய நலனுக்குமான, வலுவான பொதுச்சுகாதார அமைப்பு தேவையென்பதை கொரோனா வைரஸ் நெருக்கடி நமக்கு உணர்த்தியிருக்கிறது. முதலாளித்துவத்தை மறுபரிசீலனைசெய்து, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமான வடிவத்திற்கு அதை மறுகட்டமைத்து, மாற்றுவதற்கான நேரம் இது. ஸ்காண்டிநேவிய நாடுகளைப் போல அதிகம் பகிர்ந்து கொள்ள கற்றுக்கொள்வோம். இல்லையெனில் ஒற்றைப்பொருளை ஏற்றுமதிசெய்து, பலவீனமான பொருளாதாரத்துடன் இருக்கின்ற சர்வாதிகாரமுறையில் ஆட்சிசெய்கின்ற நிலையற்ற அரசின் குடிமக்கள் என்ற மோசமான நிலையை நாம் அனைவரும் சந்திக்கநேரிடும். அது நம் அனைவரையும் பாதிக்கின்ற ஒன்றாகவே இருக்கும்.  

2020 ஜுன் 04

https://sarasotainstitute.global/the-consumer-in-the-age-of-coronavirus/

தமிழில்

பேரா.மு.மாரியப்பன் 

இணைப்பேராசிரியர், பொருளாதாரத்துறை,

வி.இ.நா. செந்திகுமாரநாடார் கல்லூரி, 

விருதுநகர்