archivebookreview

Book Review

தரமான சமமான கல்வி கிடைக்கும் வரை… ஓய்ந்திருக்கலாகாது : கல்விச் சிறுகதைகள் – தேனி சுந்தர்

பாலமுருகன் எழுதிய பள்ளித்தளம், பூமணியின் பொறுப்பு, கிருஷ்ணன் நம்பி எழுதிய சுதந்திர தினம், தோப்பில் முகமது மீரான் எழுதிய தங்கராசு, பாவண்ணனின் சம்மதங்கள் ஏன்?, சு.வேணுகோபால் எழுதிய மெய்ப்பொருள் காண்பது அறிவு, இலட்சுமணப் பெருமாள் எழுதிய ஆதாரம், பாமா எழுதிய எளக்காரம், மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய பிரம்புபதேசம், தி.ஜானகிராமனின் முள்முடி, புதுமைப்பித்தனின் மோட்சம், சுந்தர ராமசாமியின் எங்கள் டீச்சர் என இந்நூலில் உள்ள கதைகள் பதிமூணில் ஒன்று தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியது..
இந்தக் கதைகளை உள்வாங்கிப் படிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை வரவைக்க முயற்சி செய்யக்கூடும்.. வந்த குழந்தைகளை அன்பாக அரவணைக்கக் கூடும். பிரம்புகளை ஒடித்துத் தூக்கி எறிந்துவிட்டு பிரம்பு வாத்தியாரில் இருந்து பரமசிவம் வாத்தியாராக மாறக்கூடும். குறைந்தபட்சம் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவையாவது தரமாக வழங்க முயற்சி எடுக்கக்கூடும்.. கால்கள் கூச, உள்ளம் உதற பயந்துபயந்து பள்ளிக்குள் வரக்கூடிய ஏழை எளிய மக்களை மரியாதையாக நடத்தக்கூடும்.. தங்களைக் கற்றல் கற்பித்தலில் முழுமனதோடு ஈடுபடுத்திக் கொள்ளக்கூடும்.. அனைவரின், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தரமான சமமான கல்வி கிடைக்கும் வரை, குழந்தைகளுக்கு பள்ளிகள் மகிழ்ச்சியான இடமாக மாறும் வரை ஓய்ந்திருக்கலாகாது என்று கல்வி உரிமைக்காக களம் இறங்கக்கூடும்.
பாலமுருகனின் பள்ளித்தளம் என்கிற சிறுகதை மலைவாழ் குழந்தைகளின் கல்வி குறித்து பேசுகிறது. தன்னார்வ ஆசிரியரின் முயற்சியில் சிறிய இடத்தில் ஒரு பள்ளி உருவாகிறது. குழந்தைகளை ஈர்க்கிறது. அவர்களை முழுமையான மனிதர்களாக உருவாக்கும் அக்கறையோடு இயங்குகிறது. தன்னார்வ ஆசிரியருக்கு மலேரியாக் காய்ச்சல் வந்து தொடர்ந்து செல்ல முடியாத, சங்கடமான சூழ்நிலை உருவானாலும் மாற்று ஆசிரியர் கொண்டு குழந்தைகளின் கல்வி தொடர்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளியை அரசே ஏற்று நடத்தும்.. ஒரு ஆசிரியரும் ஒரு சத்துணவு பணியாளரும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வருகிறது. கல்வியாண்டின் துவக்கத்தில் மிகப்பெரும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் காத்திருந்த மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அக்கறை இல்லாத போது எவ்வளவு பெரிய ஏற்பாடும் அர்த்தமற்றதாகி விடுகிறது. குழந்தைகள் மறுபடியும் மாட்டுப்பட்டிக்குச் செல்வதும், குழந்தைகள் விளையாட உருவாக்கப்பட்ட அந்தச் சிறு மைதானம் புதர்மண்டிப் போவதுமான சம்பவங்கள் நமக்கு வேதனையான உண்மைகளை உணர்த்துகிறது.
பாமாவின் எளக்காரம் கதையில் பள்ளி வளாகம், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சமூகம் முழுவதும் நிரம்பி நிலைபெற்றிருக்கும் சாதியச் சிந்தனைகள் குறித்துப் பேசுகிறது. சத்துணவு சாப்பிட தட்டு எடுத்து வர மறந்த குழந்தை ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த இன்னொரு குழந்தையின் தட்டைக் கேட்கிறது. அதற்கு மேலத்தெரு குழந்தைகள் சேர்ந்து அடிஅடின்னு அடிக்கிறார்கள். மறுநாள் குழந்தை பள்ளிக்கே போகப் பயந்து மறுக்கிறது. விசயம் தெரிந்து அம்மா கொந்தளித்து ஆசிரியரிடம் கேட்கிறார். உங்க குழந்தை செய்ஞ்சது தப்பில்லையா என்கிறார். தலைமை ஆசிரியரும் அதயே தான் கேட்கிறார். செய்யாத குற்றத்திற்கு வெள்ளக்கண்ணுவின் மகன் குற்றஞ்சாட்டப்பட்டு, எதிர்த்துக் கேட்டதற்காக வெள்ளக்கண்ணும் தாக்கப்படுகிறார். இந்தச் சாதிக்கும்பல் நடத்தும் பள்ளியின் மீது காரித்துப்பிவிட்டு வெளியேறுகிறார் வெள்ளக்கண்ணு..
பூமணியின் பொறுப்பு சிறுகதை.. ஆசிரியரின் பொறுப்பற்ற தன்மை குறித்து பேசுகிறது. விடுமுறைகளை வெறுக்கும் ஆசிரியர். நிம்மதியாகத் தூங்க உதவுகிற இடமாக இருக்கிறது பள்ளிக்கூடம்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் கதையில் எப்பாடுப்பட்டாவது குழந்தைகளைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறிவிட துடிக்கும் குடும்பத்தின் கதை. மதுரை விடுதியில் பெரிய மகன் படிப்பான். ஒன்றரை வருடமாகி விட்டது. ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டவனைப் பார்ப்பதற்காக மதுரைக்குப் போவார் அப்பா. பண்ணையாரிடம் கைமாற்றாக வாங்கிப்போன ஐம்பது ரூபாயில் போக்குவரத்துக்கும் கடையில் சாப்பிட்டதுக்குமே பெருமளவு செலவாகி இருக்கும். மகனைப் பார்த்ததும் மிச்சம் இருக்கும் பணத்தையும் அவனது செலவுக்கு கொடுத்துவிட்டு வருவார். திரும்ப பஸ் ஏறப் போய் நிற்கும் போது தான் மனம் படபடக்கும்.. நடந்தே போயிடலாமா? ஒரு கணம் யோசிப்பார். எவ்வளவு தூரம் நடக்க முடியும்? மீண்டும் விடுதிக்கே சென்று நிற்பார். அப்பா கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இனிமேல் என்னைப்பார்க்க வரலைன்னு சண்டைபோட மாட்டேன்ப்பான்னு சொல்லி விடுவான் பையன்.
தங்கராசு கதை.. கல்வியின் மூலமாக கரையேறத் துடிக்கும் பாவப்பட்ட மக்களை உதைத்து வெளியே தள்ளும் பள்ளிக்கூடங்கள் பற்றியது. மதிப்பெண் சான்றிதழை விட சாதியும் பணமும் தான் தங்கராசு படிக்கணுமா வேணாமாங்கிறதை தீர்மானிக்கிறது. எப்படியாவது மகனை படிக்கவச்சு வாத்தியாராக்குவேன்னு தாலியை அடகுவச்சு பட்டிணத்து பள்ளிகளை எல்லாம் தட்டிப் பார்ப்பாள், அழுவாள்.. கெஞ்சிப்பார்ப்பாள் அந்த ஏழைத்தாய். ஒவ்வொரு காரணமாகச் சொல்லி விரட்டியடிப்பார்கள். கிறித்தவப்பள்ளி, இஸ்லாமியப்பள்ளி, இந்து உதவிபெறும் பள்ளி, அரசுப்பள்ளி, முனிசிபல் பள்ளி எதுவும் இவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத போது பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். நல்ல மதிப்பெண்கள் இருக்குதும்மா.. கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்பி வந்த பையன் தன் கனவுகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான்..
ஆதாரம்.. விடுதியில் சேர சாதிச் சான்றிதழ் வேண்டும். சக்கிலியச் சாதின்னு நிரூபிக்க அதிகாரிகளுக்கு ஆதாரம் வேண்டும். அந்தப் பையனின் அம்மா ஊரார் காலிலும் அதிகாரிகளின் காலிலும் விழுந்து தவிக்கிறார். மண்டையச் சிரைத்து மூளியாக்கி இவள மூணு சனிக்கிழமை ஊர் முச்சந்தியில் உக்கார வைக்கணும்னு சாதிக்காரர்கள் சொல்கிறார்கள். காலையும் மாலையும் ஒன்பது மைல் தூரம் நடந்தே போகிறான். இருட்டிய பிறகு தான் வீடு வந்து சேர்கிறான். ஒருநாள் அப்பனைத் தேடி சுடுகாட்டுக்குப் போவான். வேளாளர் சாதியில் செத்தவரை எரித்த வகையில் ஐம்பது ரூபாய் கூலி கொடுத்ததற்காக பஞ்சாயத்தில் இருந்து கொடுத்த சிட்டையைக் காட்டி இதைப் பத்திரமாக வீட்டில் வை. இல்லைன்னா போனமுறை முப்பது தானே கூலி கொடுத்தோம்னு சொல்லிடுவாங்க.. தடம் தெரியும்போதே வீடுபோய்ச் சேருன்னு சொல்லி மகனை வீட்டுக்கு அனுப்புவான் தொத்தன். பையனுக்கு அதெல்லாம் காதில் கேட்காது.. தாசில்தார் கேட்ட ஆதாரம்.. ஆதாரம் தான் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்..
சுதந்திர தினம், இந்தியா சுதந்திரமடைந்த சமீபத்தில் எழுதப்பட்ட கதை.. சுதந்திரத்திற்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையைச் சித்தரிப்பதாக இருக்கிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் வருகைக்காக பசித்துக் கிடக்கும் குழந்தைகள் நிலை இன்றுக் கூட தொடர்கதையாகத்தான் இருக்கிறது..
பிரம்புபதேசம், சம்மதங்கள் ஏன்? மோட்சம் ஆகிய கதைகள் ஆசிரிய வன்முறைகள், தயவுதாட்சண்யமில்லாத பிரம்படிகள் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் கதைகள்.. பாடங்கள், மதிப்பெண்கள் அதற்கான நெருக்கடிகள், அதனால் குழந்தைகளுக்கு எழும் மன உளைச்சலை அடிப்படையாக கொண்ட கதை பதிமூணில் ஒண்ணு,  எங்கள் டீச்சர் கதை பாடம், மதிப்பெண், தேர்ச்சி, முதலிடம், ஆசிரியர்களிடையேயான உறவு, போட்டி போன்றவற்றை மையப்படுத்தியது.
முள்முடி ஒன்று தான் குறைந்தபட்ச வன்முறையாக வார்த்தை வன்முறை பற்றி பேசுகிறது. குழந்தை உளவியல் சார்ந்த கதை.. முள்முடி கதையில் யாரையும் அடிக்காத ஆசிரியராகக் கொண்டாடப்படுகிறார் அனுகூலசாமி. ஓய்வுபெற்ற அன்று ஒரு குழந்தை தன் தாயோடு வந்து நிற்கிறான். அவர் சொன்ன ஒரு வார்த்தையால் மற்ற குழந்தைகளின் புறக்கணிப்புக்கு ஆளான அந்த ஒரே ஒரு மாணவனுக்காக கடைசியில் அவர் வருந்த நேர்கிறது. முள்முடியாய்த் தலையை அழுத்துகிறது அந்தச் சம்பவம்..
குழந்தைகள் பள்ளிக்கு வருவதும் கல்வி கற்பதும் அவ்வளவு எளிதான நிகழ்வுகள் அல்ல. அவை இன்னும் பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரும் போராட்டங்களாகவே இருக்கின்றன. உள்ளே நுழைவதும் தொடர்ந்து கற்பதும் நிறைவு செய்வதும் வாழ்க்கையில் கல்வியின் துணையால் உயர்ந்து நிற்பதும் பெரும் சரித்திரச் சாதனைகளாகவே இருக்கின்றன என்பதை உணர்த்தும் கதைகள்..
அரசி, ஆதி வள்ளியப்பன் ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது..
–தேனிசுந்தர்
Book Review

நூல் மதிப்புரை: அவளோசை – முத்துக்குமாரி

ஆசிரியராக பணிபுரிவதால் பல குடும்பங்களில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். பெண்களில் படித்த, படிக்காத பெண்கள், கூலி...
Book Review

சென்னையிலிருந்து 400 கி.மீ – திரு. மானா பாஸ்கரன் | புத்தக விமர்சனம் | வீரசாேழன்.க.சாே.திருமாவளவன்

#Bookday #April23 புத்தகம் - சென்னையிலிருந்து 400 கி.மீ ஆசிரியர் - திரு. மானா பாஸ்கரன் வெளியீடு - முற்றம்...
Book Review

கவிஞர் பா. மகாலட்சுமியின் கற்பனையில் பொம்மைகளும் வெட்கப்படுகின்றன – புத்தக விமர்சனம் | கவி வெற்றி

#bookday நூல் : "குளத்தில் மிதக்கும் சிறகு" (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : பா.மகாலட்சுமி பதிப்பகம்: தழல் பதிப்பகம் பக்கங்கள்...
Book Review

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் – புத்தக விமர்சனம் | கார்த்திக் குமார்

#Bookday முகில் அவர்கள் எழுதிய "ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் " வாசகர்களை சுண்டி இழுக்கும் நடை, ஒலிம்பிக் பற்றிய அரிய...
Article

‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர் தமிழில்: ச.வீரமணி

(“அர்பன் நக்சல்” என்ற சொற்றொடர் ஒருசமயம் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட விவசாயிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றையதினம் அது,...