archiveBabasaheb Ambethkar

நேர்காணல்

“ பாபாசாகேப் அம்பேத்கரிடமிருந்து என்னுடைய துணிவு வருகிறது “ -இயக்குனர் பா.ரஞ்சித் நேர்காணல்: சந்திப்பு : பாரதி சிங்காரவேல் (தமிழில் : கமலாலயன்) 

 

‘வயர் ‘ இணைய இதழுக்கு அளித்த இந்த நேர்காணலில், சாதிப்பாகுபாடுகளின் பாரபட்சங்களுக்கு எதிராக எழும் எதிர்ப்பு குறித்தும்,அமெரிக்காவில் எழும் கறுப்பினப் பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்து இது எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியும், தனது படங்களில் வெளிப்படும் குறியீட்டியம் குறித்தும் இயக்குனர் பா.ரஞ்சித்  விரிவாகப் பேசியிருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித்,அபத்தப்புனைவாக அமைந்த அட்டகத்தி (2012 ) யிலிருந்து, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த காலா (2018) வரை, வணிகரீதியாகவும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்; விமரிசனரீதியாகவும்  பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார்;கடும் விமரிசன எதிர்வினைகளையும் அவர் பெற்று வந்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் முதன்முறையாக வெளியான ‘அட்டகத்தி’ படம், தமிழ்த்திரையுலகின் மையநீரோட்ட மிகுபுனைவுப் படங்களுக்கான வாய்ப்பாட்டை உடைத்தெறிந்தது. அடுத்து அவர் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படம் (2014 )  கூர்மையாகவும், அரசியல் தன்மையுடையதாகவும் அமைந்திருந்தது. அதோடு,தமிழ்நாட்டில் மிகப்பரவலாக நடைமுறையில் இருக்கும் அரசியல் சுவரெழுத்து-

ஓவியப்பரப்புரைப் பண்பாட்டை மையமிட்டதாக அமைந்தது.

கபாலி (2016)யில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியும்,காலா (2018)வில் நிலச்சீர்திருத்தம் பற்றியும் பேசியிருக்கிறார் ரஞ்சித். இரண்டிலுமே ரஜனிகாந்த் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களின் வழக்கமான பார்வையாளர் திரளுக்கு வெளியே மிக நன்கறியப்பட்ட ஒரு பெயராக ரஞ்சித்தின் பெயரை இவை பிரபலமாக்கின.

Pa Ranjith Is The Conscience The Indian Film Industry Desperately ...

அவருடைய ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்,லேடீஸ் அண்ட் ஜென்டில்மன் , டாக்டர் ஷூ மேக்கர் மற்றும் பிற ஆவணப்படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.அதே போல,பரியேறும் பெருமாள்,இரண்டாவது உலகப்போரின் கடைசி வெடிகுண்டு –ஆகிய முழு நீளத் திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளது.

‘வயர்’ இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், ‘வெகுமக்கள் திரைப்படங்கள்’, சாதிப் பாகுபாடுகள்,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றிரஞ்சித் விரிவாக  உரையாடியிருக்கிறார் :

    கேள்வி : மையநீரோட்டத் தமிழ் சினிமா பெரும்பாலும் அரசியல் மயமானதாகவே இருந்து வந்திருப்பதுதான் என்ற போதும்,உங்களுடைய சொந்தப்படங்களில் கலகத்தன்மை வாய்ந்த ஒரு கருத்தியல் நகர்வு இடம்பெற்றிருக்கிறது.’வெகுமக்கள் திரைப்படங்கள்’ பெற்றிருக்கும் முக்கியத்துவம் என்ன? இப்போது மாறியிருப்பது எது?

  பதில்;  கலை வெளிப்பாட்டுச் சாதனங்கள்/ஊடகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் ,மக்கள் நடுவே சினிமா மிக ஆழமாகப் பொதியப்பட்டதாக இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் அது மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.திராவிட இயக்கத்தின் பரவலைத் திரைப்படம் தூண்டி கொழுந்து விட்டு எரியச் செய்தது.காரணம்,தமிழ்மக்கள் திரைப்படத்தை வெற்றுப் பொழுதுபோக்காக மட்டும் நினைத்து விடவில்லை.தமிழ்ப் பண்பாட்டு,தமிழ்மொழிப் பெருமித உணர்வுகளை முன்னணியில் வெளிக்காட்டவும் , தாங்கள் எந்தெந்தப் போராட்டங்களுக்காகக் களத்தில் நின்றார்களோ அவற்றுக்காகவும், தமது கட்டளைகளைச் செயல் வடிவமாக்குவதற்கான அறைகூவலைப் பிரகடனம் செய்யவும் திராவிடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு ‘வெளி’யையும் உருவாக்கியிருந்தனர்.

பிந்தைய ஆண்டுகளில்,நில அடையாளங்கள் பற்றிய படங்கள் பல, (குறிப்பாக,மிகவும் பிரபலமாக வழங்கிய கிராமப்புறக் கதையாடல்கள்) ‘தமிழ்ப்பண்பாட்டைக் கொண்டாடுகிறோம்’ என்ற போர்வையின் கீழ், ஆதிக்கம் செலுத்தி வந்த சாதியினர் தமது சாதிப் பெருமிதத்தைப் பேசும் படங்களாகி விட்டன.இத்தகைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தலித் என்ற முறையில் என்னுள் எழுந்த கேள்விகள் இவை : “ இந்தப் படங்களில் நான் எங்கே இருக்கிறேன்? இவற்றில் என்னுடைய சமூகத்துக்கான நீதி எங்கே?தமிழ்ப்பண்பாட்டைப் பற்றித்தான் இவர்கள் பேசுகிறார்கள் எனில்,என்னுடைய பண்பாடு ஏன் இவற்றில் சித்தரிக்கப்படவேயில்லை?”

    கே.: தமிழ்த் திரைப்படங்களை உருவாக்குவோர்,’சமூக உணர்வு’ என்பதன் ‘போலிமை’யை எப்படிச்செய்கிறார்கள் ?

     ப.: தலித் கதை மாந்தர்களைப் பற்றிய சித்தரிப்புகள் வலி நிறைந்தவையாகவே அமைந்திருந்தன.ஒன்று,அவர்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டு விடுவார்கள்;அல்லது, கதையினுள் அவர்களை வெறுமனே உள்ளிணைத்துக் கொள்வதே ‘புரட்சிகரமான’ செயலாகக் கருதப்படும். மேலாதிக்கம் செலுத்தி வந்திருக்கும் சமூகங்கள் பின்பற்றி வரும் பாகுபாட்டு நடைமுறைகள் சித்தரிக்கப்படாமலே தவிர்க்கப்பட்டு விடும்.

Rajinikanth's Kaala Kalikaraan BEATS Kabali - here's how ...

இந்தச் சூழலில், என்னுடைய கதைகள் எதைச் சொல்ல வேண்டும் என்பதைப் பிரதிபலித்தாக வேண்டும்.வன்முறை,சாதியப் பாகுபாடு –இவற்றின் அடிப்படையில்  உருவானதே எனது பண்பாடு என்று வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமென நான் விரும்பினேன்.அதோடு கூட, உடைகள்,உணவு ,இசை –ஆகியவற்றினூடாக தலித்துகள் தமது அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்கான வழிகள் ஏன் துடைத்தழிக்கப்பட்டு விட்டன எனக் கேட்கவும் விரும்பினேன்.இன்றைய தினம்,தலித் கதாபாத்திரங்களை எழுதும் போது மேலதிகம் தன்னுணர்வு உடையவர்களாக இருக்கின்றனர்.பெருமளவுக்குத் தெளிவு இருப்பதாகத் தோன்றுகிறது.

    கே. : தலித் கதாபாத்திரங்களைப் பற்றிய உங்களுடைய சொந்த எழுத்துக்கு எது தரவுகளைத் தருகிறது ?

     ப. :  முதலாவதாக, இந்தக் கதைகளில் என்னையே நான் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன்.அடுத்து, ‘ சமுதாயத்தில் நான் எங்கே நிற்கிறேன் ?’ என்று கேட்டுக்கொள்கிறேன்.

வேறு எவரொருவரையும் விடவும், பாபாசாகேப் ( பி.ஆர்.)அம்பேத்கரே என்னுடைய திருவுரு. தலித்துகளின் பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வு காண காந்தியும்,காங்கிரசும் முயலவில்லை என்று அவர் எண்ணியபோது,அம்பேத்கர் அவர்களை எதிர்த்தார். அது ஒரு புறமிருந்த போதிலும்,சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சர் என்ற வகையில்,மாற்றத்துக்கான சட்டங்களை இயற்றுவதற்குக் கிடைக்கும் வழிவகைகளை அவர் வரவேற்றார்.ஓர் உத்வேகமளிக்கும் ஊற்றுக்கண்ணாக அவரை நான் காணும் அதே சமயம், நான் படைக்கும் கதாபாத்திரங்கள்,எழுதியிருந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொரு தலித் சமூகத்திலும் எப்படி ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய கிராமத்தில், சட்டக்கல்லூரிக்குப் படிப்பதற்குப் போன முதலாவது மாணவர் எனது சகோதரர்தான். மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர் உதவினார்.

அங்கிருந்துதான் எதிர்ப்பு உருவாகி வருகிறது;எனவே, நான் எழுதுகிற கதாபாத்திரங் களுக்கான சிந்தனையும் வருகிறது.இழிவுபடுத்தும் நிகழ்வுகளை மட்டுமே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை எனக்கில்லை.சினிமாவில் அவை போதுமான அளவுக்கு இருக்கின்றன.ஒரே மாதிரியாக,அச்சில் வார்க்கப்பட்ட பலிகடாக்களைப் போன்ற மனிதர்கள் இருக்கின்றனர். அரைகுறை ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு,தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து நிற்பதற்குக் கூட அவர்களால் முடிவதில்லை. அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு நாயகன் தேவைப்படுகிறான். இந்தப்படிமம்,சுக்கு நூறாகச் சிதறடிக்கப்பட வேண்டிய ஒன்று;காரணம்,நான் அப்படியான ஒரு நிலையில் இல்லை. எனக்காக நானே நிற்க முடியும். எனது துணிவு அம்பேத்கரிடமிருந்தே வருகிறது. இம்மாதிரிக் கதாபாத்திரங்களைத் திரைப்படங்களில் சித்தரிப்பதற்கு,ஒரு வகையான எதிர்ப்பண்பாடு உதவியாக அமைகிறது. இதற்கான வகைமாதிரியாக நான் சுட்டிக்காட்டுவது, கறுப்பின மக்கள் வாழ்க்கைகளின் சித்தரிப்புகள் –ஸ்பைக்-லீயினுடையவற்றையே.அது ஹாலிவுட் வடிவச் சட்டகத்திலிருந்து நேர் எதிரானது.

  கே. : சாதிய ஒடுக்குமுறையைப் பற்றி குரல் எழுப்புகிற மைய நீரோட்டப் படங்களும் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்,வன்முறையும் கண்களைக் கவரும் காட்சிகளுமே கதையின் பெரும்பகுதியில் நிரம்பியிருக்கின்றன. உங்களுடைய பார்வைகள் ?

     ப. : இத்தகைய படங்களை உருவாக்குவோரின் நோக்கங்களை நான் ஐயுறவில்லை. அவர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டுமென விரும்புகின்றனர் என்று தோன்றுகிறது. ஆனால், இம்மாதிரிப் படங்கள் வெளியானபிறகு அவற்றைப் பற்றிய விவாதங்கள் நடத்தப்பட்டாக வேண்டும். எனது சமூகத்தினர் மீது இழைக்கப்படுகிற வன்முறைகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்பதைப் பதிவு செய்ய நீங்கள் மறுத்து விட்டு, எனது சமூகத்தினர் மீது இழைக்கப்படும் வன்முறையை மட்டும் சித்தரிக்க முடியாது. தலித்துகளிடம், “ நீங்கள் கட்டாயம் மவுனமாகப் பலிகடாக்களாகத்தாம் இருந்தாக வேண்டும் ; வேறு சில குறிப்பிட்ட நபர்கள்தாம் உங்களைக் காப்பாற்ற முடியும் “ என்று சொல்லுகிற அரசியலை அது நிறுவுவதாக இருக்கிறது.

ஓர் இயக்குனர் என்ற முறையில்,நடைபெற்றுக் கொண்டிருக்கிற அட்டூழியங்களை வரைகலையாகத் திரைப்படங்களில் சித்தரித்துக் காட்டுவதை நான் விரும்ப மாட்டேன். வெளிப்படையான,முழுவிவரங்களுடன் அவற்றை மீண்டும் உருவாக்கிக் காட்சிப்படுத்துவது என்பதே அதனளவில் மற்றொரு வன்முறை அடுக்காக அமையும்.பார்வையாளர்களிடம் இருந்து உணர்ச்சிமயமான எதிர்வினையை எழுப்புவதற்கு இது ஒன்றுதான் வழி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

pa ranjith | Tumblr

  கே. ; எதிர்க்கதையாடல்கள் பற்றி நீங்கள் பேசும்போது, காலா படத்தில் இராவணனை நாயகனாகவும்,ராமனை ஆக்கிரமிப்பாளனாகவும் சித்தரித்ததன் மூலம் சாதிய எதிர்ப்புக் கருத்தியல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பழைய தமிழ்த் திரைப்படங்களில் கருநிறத் தோல்,விசுவாசம்,அளவு மீறிய அடிமை மனோபாவத்துடன்,எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியப்படக்கூடிய பாத்திரமாக வருவோரைச் சித்தரிக்கப் பயன் பட்ட பெயரை, இப்போது கபாலியில் கதாநாயகனுக்கு வைத்திருக்கிறீர்கள். இது என்னவிதமான தாக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது ?

     ப. : ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்ட கதையாடல்களில் நாயகனின் அற விழுமியப்பண்பு நலன்களுக்கு வெறும் துணைக்கருவிகளாக மட்டுமே யாரெல்லாம் விளிம்புகளில் நின்ருந்தார்களோ அவர்களை நாயகர்கள் ஆக்குவதுதான், மையத்துக்குக் கொண்டு வருவதுதான் இதிலுள்ள மையப்புள்ளி. பிராமணீய அமைப்புமுறையினுள் புத்தரைப் பொருத்தப்பாடு உடையவராக ஆக்குவதைப் பற்றி அம்பேத்கர் பேசுகிறார். கருநிறத் தோலுடன் இருப்பவர்களின் நிறம் எதை அடையாளப்படுத்துவதாக இதுவரை இருந்து வந்திருக்கிறது ; வேதங்களின் கதைகளில் எப்படி வாழ்க்கைமுறைகள் எங்களை வில்லன்களாகச் சித்தரித்து  வந்திருக்கின்றன என்பனவற்றைப் பற்றியும் கூட அவர் பேசியிருக்கிறார்.இந்த உண்மைகளின் முன்னால், இவையெல்லாம் என்னுடைய கதைகள் அல்லவென்பதை நான் கூறியாக வேண்டியிருக்கிறது.

கே. : தமிழ்சினிமாவில் கவனமிக்க குறியீட்டிய மரபு வழியில்,சட்டகத்திற்குள் சில குறிப்பிட்ட வண்ணங்களைத் திரும்பத் திரும்பத் தெளிக்கிறீர்கள்.சிவப்பு,நீலம்,கருப்பு ஆகிய நிறங்கள் தனித்து வெளிப்பட்டு நிற்கின்றன.அவற்றின் முக்கியத்துவம்?

    ப. : நான் அட்டகத்தி படத்தின்போது வண்ணங்களைப் பற்றிய தன்னுணர்வுடன் இருந்திருக்க்கவில்லை.” காதல் என்பது தூய்மையானது “ என்ற பிரபலமான சிந்தனையின் மேற்போர்வையை உரித்துப் பார்ப்பதைப் பற்றின படந்தான் அது. இந்தக் கருதுகோளை  வைத்துக் கொண்டு இளம்வயது மக்கள் எப்படிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியது. மாட்டுக்கறியைக் காட்சிப்படுத்தும் ஒரு காதல்காட்சியைப் போல, ஒரு தலித்தியக் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய கருதுகோள்களை ஆய்வுக்குட்படுத்துவதற்கான ஒரு வழிமுறைதான் அந்தப்படம்.

If it's a war, enemy must be fought: Pa Ranjith on politics, films ...

அட்டகத்தியில் எதைச் சொல்லுவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேனோ, அதை மெட்ராஸ்  படத்தில் என்னால் சொல்ல முடிந்தது. தமிழ்நாட்டில் அரசியலுக்கான ஓர் உருவகமாக அங்கு சுவர் ஒன்று நின்றது ; தலித் அடையாளத்திற்கான ஒரு குறியீடாக நீலம் ஆனது. சில சமயங்களில், இந்த வண்ணங்களுக்குள் மிகவும் அதிகமாகப் புகுந்து வாசிக்கும் போக்கு தெரிகிறது. அது ஆர்வமூட்டுவதாகவும்,துயரப்படுத்துவதுமாக இருவகையிலும் அமைகிறது.

காலா படத்தில், நான் மிகவும் கவனமாக வண்ணங்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி இருந்தேன்.கருப்பு என்பது ஏன் கீழான ஒன்றாகப் பொருள்கொள்ளப்படுகிறது; வெள்ளை என்பது ஏன் மேலாதிக்கம் செலுத்துவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது –என்பனவற்றின் வேர்களைத் தேடிக்கண்டடையவே அவ்வாறு செய்தேன். காலா படத்தின் இறுதிக்காட்சியில் நீலம்,கருப்பு,சிவப்பு –ஆகியவை ஒன்றாகக் கலந்து வருவது என்னுடைய அறிக்கையாக அமைந்திருக்கிறது : அம்பேத்கரியம்(நீலம்),பெரியாரியம்(கருப்பு),இடதுசாரியம்(சிவப்பு)-மூன்றும் ஒன்றிணைவது ஒடுக்குமுறை ஆட்சிகளைத் தோற்கடிப்பதற்கு ஓர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

கபாலி,தமிழ் சினிமாவின் நிறுவப்பட்டு விட்ட சொல்லாடல்களைத் தகர்க்கிறது :

கே. : மைய நீரோட்டத் தமிழ்த் திரைப்படத்தில் முதன்முறையாக என்பதாகக்கூட இது ஒருவேளை இருக்கலாம் : கபாலி படத்தில் சினுவா அச்செபே,மால்கம் எக்ஸ் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.இனரீதியான நீதிக்கான போராட்டம், இந்தியாவில் சாதி எதிர்ப்பு மனித உரிமைகள் இயக்கங்களுக்கு இன்னமும் உத்வேகமளிப்பதாக இருக்கிறதா?

   ப. : சாதி,இனம் ஆகிய இருவேறு ஒடுக்குமுறைகள் சார்ந்து,இரண்டின் வரலாறுகளும் ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரியானவையாக அமைந்திருக்கவில்லை; எனினும்கூட , பெரும் அளவுக்கு ஒற்றுமையான அம்சங்களைக் கொண்டவையாகவே உள்ளன. பிரித்து வைப்பது என்ற நடைமுறையின் கீழ், ஒரு குழந்தையாக நானுமே கூட வாழ வேண்டியிருந்திருக்கிறது. ஒரு கடையின் பிரதான கதவு வழியாக நான் அதற்குள் நுழையவே கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தேன். அந்தக்கடையின் உரிமையாளர்,ஒரு சிறிய குச்சியைக் கொண்டுதான் நான் கொடுக்கும் பணத்தைக் கையாளுவார். ஒரு பொம்மையை நான் வாங்குவதற்கு முன்பு, அதைத் தொட்டுப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அவர் என்னை ஒருபோதும் அனுமதித்ததே கிடையாது.

கறுப்பினப் பண்பாட்டுப் படைப்புருவாக்கங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது. அவர்களின் கறுப்புத் தன்மையைக் கொண்டாடுவதில் தொடங்கி,அவர்களுடைய சமூகங்களின் பேரழிவுக்குக் காரணமான பிரச்சினைகளைப் பேசுவது வரை,அதை அவர்கள் மிக நன்றாகவே செய்கின்றனர். மைய நீரோட்டத்துக்குள் அவர்கள் தங்களைத் தாங்களே மேன்மைமிகு சிகரங்களென உயர்த்தி நிறுவிக் கொண்டவர்கள். இந்தப் பண்பாட்டு வெற்றியின் தாக்கம்,குறிப்பாக இசைப்பண்பாட்டுக் களத்தின் தாக்கம் மிகப்பெரும் அளவிலானது ; காரணம், உலகளாவிய ஒருமைப்பாட்டினை வளர்த்து எடுப்பதற்கும் அது உதவியாக அமைந்திருக்கிறது.இன்றைய ‘கறுப்பின உயிர்களே முக்கியம்’ என்ற பதாகையேந்திய எதிர்ப்புகள் சர்வதேச ஆதரவினைப் பெற்றிருக்கின்றன ; அவர்களுக்குப் பின்னால் வெள்ளையின மக்களும் கூட அணிதிரண்டு நிற்கின்றனர்.

சாதி எதிர்ப்பு இயக்கம் மட்டுமே இங்கு அதே போன்ற ஆதரவினை, ஒன்று,இசை அல்லது திரைப்படம் மூலம் அடையக்கூடுமானால் அது வெல்லும்.

The game changer - CINEMA News - Issue Date: Jun 18, 2018

கே. : உங்கள் மீது திரும்பத் திரும்ப வைக்கப்படும் விமரிசனம்- ஒரு தலித் கதாநாயகனின் வேடத்தில் நடிப்பதற்கு, ரஜனிகாந்தை நடிகராகத் தேர்வு செய்வது பற்றியதாக இருக்கிறது. சினிமாவும்,அரசியலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து இழையோடுகிற ஒரு மாநிலத்தில் இது சிக்கலான தொடர்விளைவுகளைக் கொண்டதாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ப. : ஒரு விஷயம்,பொதுவெளியில் ஒருமுறை முன்வைக்கப்பட்டு விடுமானால்,அது கொண்டிருக்கக்கூடிய நோக்கங்கள் ,அதன் தாக்கங்கள் பற்றிய பரிசீலனையும் அங்கு கட்டாயம் நிகழவே செய்யும். சூப்பர்ஸ்டாரின் விஷயத்தில்,படத்தின் கதை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.அவர் அந்தக் கதையை விரும்பினார். அவரைப் பொறுத்தவரை,சினிமா என்பது சினிமா ; அவ்வளவுதான் ! ஒரு தொழில் என்ற முறையில்,அதற்கு அவர் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இங்கு நிகழ்ந்தே தீர வேண்டிய மாற்றங்களைப் பற்றி உரையாடுவதற்கு சினிமா என்பது எனக்கு ஒரு வாய்ப்பு. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய இந்த இரு படங்களிலுமே நான் எதைப்பற்றி உரையாட வேண்டுமென்று விரும்பினேனோ அதற்கு அவர் ஆதரவாகவே இருந்தார். அவருடைய பொதுவான அரசியலுக்கும், என்னுடைய அரசியலுக்குமிடையே நிச்சயமாக எந்த ஓர் இணைப்பும் கிடையாது. நான் அவற்றை என்னுடைய படங்களில் வைக்கவுமில்லை. என்னுடைய சொந்தக்கருத்தியல் நம்பிக்கைகளில் நான் சமரசம் எதையும் செய்து கொள்ளவுமில்லை. இயக்குனரின் நடிகராகவே அவரை நான் காண்கிறேன். படத்தின் கதையை அவர் விரும்பும் பட்சத்தில்,இயக்குனரின் மனம் நிறைவடையும் வரையில் அவர் அதில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்.

கே. : உழைக்கும் வர்க்க,தலித் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள்,இந்திய சினிமாவில் கிரிமினல்களாகவே அமைகின்றன. அதைப்பற்றிய கவலை உங்களுக்கும் கூட இருக்கவே செய்கிறது .பிறகு ஏன் கபாலியிலும்,காலாவிலும் நாயகர்கள் வன்கும்பல்  தலைவர்களாக இருக்கிறார்கள் ?

   ப. : இல்லை,காலாவில் அவர் வன்கும்பல் தலைவர்  அல்லர் ! அதன் அடிப்படையான கருத்து இதுதான் : ஓர் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக,தனது உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள எந்தெந்த வழிகள் எல்லாம் தனக்கு வாய்க்கின்றனவோ அவற்றை எல்லாம் பயன்படுத்துகிற ஒருவர்தான் அவர். அந்தப் பாத்திரத்தைப் போன்றவர்கள் உண்மை வாழ்க்கையில் இருக்கவே செய்கின்றனர்.ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்பதற்குக் காலா பின்பற்றும் வழிமுறை அவரை ஒரு வன்கும்பல் தலைவராக்கி விடுகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கபாலி படத்தில்,மலாய் தமிழர்களின் வரலாற்றைப் பற்றிய கதை அது. காலனிய காலத்து மலைத்தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியாற்றிய காலத்திலிருந்து, தற்போதைய இனக்குழுக் கூட்டங்கள் வரையிலான உழைப்பாளிகள் அவர்கள். சீன மக்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த உறவைப் பற்றிய கதையாகவும் அது இருந்தது. மெட்ராஸ் படமும் கூடத்தான் ஒரு வன்கும்பல் திரைப்படம் என முத்திரையிட்டு அழைக்கப்பட்டது. அது உண்மையல்ல. தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவரும் வன்கும்பல் தலைவராகி விடுவாரா என்ன ? மேலாதிக்கம் செலுத்துகிற ஒரு சமூகத்திலிருந்து யாரேனும் ஒருவர் வந்து இதே காரியத்தைச் செய்தால், அத்தகையவர்கள் புரட்சிக்காரர்கள்.ஒடுக்கப்பட்டு வரும் நபர்கள் இதைச் செய்தால்,அவர்கள் ரவுடிகள். நல்லது,அம்மாதிரியான பிம்பத்துக்குச் சமூகந்தான் பொறுப்பு.

Murugan Manthiram on Twitter: "Pa. Ranjith's debut Hindi film is ...

கே. : உங்களுடைய முதலாவது இந்தித் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் அறிவிப்புச்                      செய்திருக்கிறீர்கள். பிர்சா முண்டாவின் வரலாற்றைப் பற்றிய திரைப்படம். சமூக நீதி என வரும்போது, தற்போதைய பாலிவுட் திரையுலகம் போன்ற ஒரு சூழலில் இன்றைய வெளி எதுவாக இருக்குமென்று உங்களுடைய பார்வைக்குத் தோன்றுகிறது ?

   ப. : இத்தகைய பிரச்சினைகள் பற்றிய படங்களை உருவாக்குவதற்கு,சமீப காலங்களில் அங்கு சில முயற்சிகள் நடந்து வருவதை என்னால் காண முடிகிறது. மாஸான் படம் ஓர் எடுத்துக்காட்டு. சாய்ராட் என்ற படத்தை நான் விரும்புகிறேன்; ஆனால், அது மராத்தி மொழிப்படம். ஆர்ட்டிகிள்-15 இப்போது வருவது சாத்தியமாயிருக்கிற நிகழ்வு. அது எப்படிப் போகிறதென்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய புரிதலில்,பாலிவுட் மிக மிக முதலாளியத் தன்மை வாய்ந்தது. எந்தப் படங்கள் விற்பனையாகுமோ, அம்மாதிரிப் பிரச்சினைகளைப் பற்றிய படங்களைத்தான் அவர்கள் உருவாக்குவார்கள். அந்தப் பாதையிலிருந்து விலகி வேறு பாதையில் போக முயற்சி செய்வதற்கு, மக்கள் எவற்றுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றின் மீது கவனங்குவிப்பதை நோக்கி நகர்வது நடைபெற்றாக வேண்டுமென்ற தேவையிருக்கிறது. அந்தத் திசையை நோக்கிய ஒரு மெதுவான சாய்வு இப்போது நிகழ்கிறது.

  கே. : உங்கள் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ள இயக்குனர்கள் யார் ?

ப. : வேறு பலருள் , Birdman , The Revenant ,Amores Perros –  போன்ற படங்களை உருவாக்கிய  Alejandro Gonzalez Inarritu    ஒருவர்.மனித உணர்ச்சிகளின்  வீச்செல்லையை அவர்  எப்படிப் படம் பிடிக்கிறார் என்பதை நான் நேசிக்கிறேன். அவருடைய படங்களில் கொஞ்சம் ஆன்மிகமயமாக்கும் போக்கும் இருக்கிறது. அவருடைய நம்பிக்கைகளின் விளைவு அது என்பது உண்மைதான். அவரைத் தவிர்த்துப் பார்த்தால், அந்திரேய் தார்கோவ்ஸ்கி , ஸ்பைக் லீ –போன்றோரின் படங்களையும் நான் நேசிக்கிறேன்.

–பாரதி சிங்காரவேல், ஒரு பண்பாட்டுச் செய்தியாளர்; தமிழ்த் திரைப்படம் ,எதிர்ப்புப்பண்பு கொண்ட இசை, அரசியல் –ஆகியவற்றுக்கிடையே நிகழும் பரிவர்த்தனைகளில் ஆர்வங் கொண்டிருக்கிறார்.