Thursday, June 4, 2020

archiveayesha era natarasan

Article

பள்ளியில் ஆன்- லைன் எனும் மாற்றாந்தாய் கல்வி..! -ஆயிஷா.இரா.நடராசன்

 

நேற்று முன்தினம் நடந்த உண்மை சம்பவம் இது… நான் வசிக்கும் திருப்பூர் குமரன் தெருவில் நாலு வீடு தள்ளி மூன்று ஒன்டிக்குடித்தனம் இருக்கும் ‘போர்ஷன்’ வீட்டில் ஒரு பக்கம் – இரு அறைகள் கொண்ட இடம்.- காலியாக உள்ளது. காலியாக இருக்கிறதே என பக்கத்து ‘போர்ஷன்’ பையன் (பதினோராம் வகுப்பு) தன் ‘ஆன்-லைன்’ வகுப்பை – எந்த தொந்திரவும் இன்றி ஆழமாகப் பயில சென்றிருக்கிறார்.பாடம் கைபேசியில் நடக்கும்போது என்ன செய்தாரோ மின் பிளக் மாட்டபோய் ஷாக் அடித்து சுருண்டுவிட்டார். அரைமணி நேரம் கழித்து எதேச்சையாக கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தோம், எல்லா சலசலப்பும் ஓய்ந்த பிறகு அந்த அறையில் அந்த கைபேசியில் அவருக்கு என்ன ஆனது என்பதை பற்றி எல்லாம் எந்த சுரனையும் இல்லாமல் ஆன்லைன் ஆசிரியரின் குரல் பாடத்தை கத்திவிட்டு ஹோம் அசைன்மண்ட் கொடுத்துக்கொண்டிருந்தது. இதயமும், இரத்த ஓட்டமும் இல்லாத இந்த இயந்திரத்தனத்தை ‘கல்வி‘ என்று எப்படி அழைக்கமுடியும்?வெறும் தொலைக்காட்சி சேனல் மூலம் கல்வி சாத்தியமா?ஆனால் அதைத்தான் மத்திய அரசு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.

‘தி மார்டர்ன் டைம்ஸ்’ படத்தில் சார்லி சாப்ளின் நடிப்பில் சென்ற நூற்றாண்டில் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு எதுவரை செல்லும் என்பது குறித்த கற்பனை காட்சியை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம்….. உங்கள் முயற்சி எதுவுமே தேவை இல்லாமல் உங்களை சாப்பிடவைக்கும் கருவிக்கு டெமோ காட்ட வருவார்கள்.ஆலை முதலாளி அப்பாவி வேலையாளான சாப்ளினை வைத்து பரிசோதிப்பார். இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில்  நிலமை பெரிதாக மாறிவிடவில்லை. கரோனா காலத்தில் பாடம் நடத்தும்.‘கருவி’ – ஆன்லைன் – டெமோவுக்கு சாப்ளினாக நம் குழந்தைகளை இன்றையகல்வி வர்த்தகம் பயன்படுத்துகிறது.ஆய்வுக்கூட எலிகளைப்போல பரிசோதிக்கிறது. உப்பு எவ்வளவு குறைக்கலாம் காரம் எவ்வளவு சேர்க்கலாம் என்பதற்கான ஒத்திகை இவை ஆனால் நம் குழந்தைகளுக்கு நோய்தொற்று இருக்கிறதா என அறிவதைவிட அவர்களுக்குள் கற்றல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிந்து  சொல்வதாக சில ஆன்லைன் ஆஃப்கள் இப்போது  விளம்பரம் செய்வதுதான் நகைச்சுவை அவலத்தின் உச்சம். இதெல்லாம் தனது புதிய கல்விக்கொள்கையில் ஏற்கனவே மோடி அரசு மக்கள் பின்பற்றவேண்டும் என ‘ஆசை ஆசையாய்’ அறிவித்த கல்வி – வர்த்தகம் கரோனா தந்த குருட்டு அதிர்ஷ்டமாக நாடாளுமன்றத்தில் நிலைவேறாமலேயே அது இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதை பார்க்கும் அரசு அதை இனிவரும் நோய்-விடைபெற்ற காலத்திலும் இதை நிறுத்திக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

இந்த ஆன்லைன் மூலம் நடப்பது கல்வியா எனும் கேள்வியிலிருந்து நாம் தொடங்கலாம். அமேசானிலும் ஃபிளிப்கார்டிலும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறோமே…. ஏன் ஸ்விகியில் உணவு அறிவித்த அறை மணியில் வீடுதேடி வந்து விடுகிறதே. கடைக்கும் போகவேண்டாம், ஹோட்டலுக்கும் போகவேண்டாம். அதேபோல் பள்ளிக்கூடம் போகாமலேயே ஆன்லைனில் ஆர்டர் செய்து படித்தவிடமுடியாதா நவீன அறிவியல் நமக்கு கொடுத்திருக்கும் இதுபோன்ற வாய்ப்பை வீட்டில் இப்போது சும்மா இருக்கும் குழந்தைகளுக்கு ‘நேரத்தை வீணாக்கமல்’ கல்விக்காக – இடைவெளி வராமல் தொடர்வது நல்லதுதானே. இவை பொதுவாக இன்று சொல்லப்படும் மத்தியதர வர்க்க, வசதி படைத்த வீடுகளில் இருந்து கேட்கும் வார்த்தைகள். ‘ஆன்லைன்‘ வகுப்பில் கூட இல்லாத  ஒரு பள்ளியில் சேர்த்துட்டு இன்று கஷ்டமாக உள்ளது என்று சொல்பவர்களும் உண்டு.

online-education-industry-in-india-will-touch-1.96-billion-by-2021 ...

‘ஆன்-லைன்’ அல்லது ஸ்மார்ட்போன் நம் குழந்தைகளுக்கு புதிதல்ல. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கூட ஒரு ஸ்மார்ட் போன் இன்று உள்ளதென்றால் நாம் சைனாகாரனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். நம் குழந்தைகள் இந்த மின்னுனு- கருவிகளை பயன்படுத்துவதில் நம்மைவிட பலமடங்கு சூரர்கள்.அதிலும் அவர்கள் பார்க்காத வீடியோ விளையாட்டுகளா.பள்ளிக்கே லீவு போட்டு டிமிக்கி கொடுத்துவிட்டு பப்ஜிவிளையாடும் விளையாட்டு வெறிபிடித்த பல சாம்பியன் குழந்தைகளை நாம் பார்க்கவில்லையா.இந்த மின்னனு கருவிகள் நம் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் உளவியல் உடலியல் கொடுமைகளை பிறகு பார்ப்போம்.வன்முறை வீடியோ விளையாட்டுகளின் விபரீத விளைவுகளை குறித்து தனியே ஒரு புத்தகமே எழுதலாம்.ஆனால் கல்வி?

ஆன்லைனில் வகுப்பறைகள் சாத்தியமா? நேற்று காய்கனி கடையில் நான் சந்தித்த ஒரு ஆசிரியர் கால்குலஸ்(அதாவது) நுண் கணிதம் பாடப்பகுதியை – சூம்(Zoom)லேயே  முடிச்சுட்டேன்’ என்றபோது எனக்கு பகீரென்றது. புதியக் கல்விகொள்கை ரொம்ப நயவஞ்சகமாக சர்வதேச ஆன்லைன் வர்த்தகமாக உயர்கல்வி மாற்றப்படவேண்டும். என்று அறிவித்ததை வீராப்போடு எதிர்த்த நம் மக்கள் கல்வி  நாயகர்கள் சிலர் தற்போது வெப்மினார்களில் புகுந்து இதுவே எதிர்காலம் என நடக்கப்போவது தெரியாமல் திருவாய் மலர்கிறார்கள்.

கற்றல் நடவடிக்கை என்பது  (1) கற்றல் நோக்கம் (2) பாடப்பொருள் மீதான ஈடுபாடு (3)ஈடுபாட்டை ஊக்குவிக்கும் கற்பித்தல் நடவடிக்கை (4) கேள்விகள் மற்றும் கலந்துரையாடுதல், தேடல் மூலம் நடக்கும் சுயமதிப்பீடு  (5) கற்றதை தன் மொழியில் மறு உற்பத்தி செய்வதன் மூலம் சுய அறிவாக மாற்றுதல் (6) வகுப்பறை செயல்பாடுகள் விவாதங்கள், குழுத்தேர்வு பிறகு மாதிரி தேர்வுஎன பலபடி நிலைகள் கொண்டது. மேற்கண்ட பட்டியல் பாடத்துக்கு பாடம் வேறுபடும்.மொழிப்பாடம் சம்ந்தப்பட்ட கற்றல் கற்பித்தல் படிநிலைகள் வேறு கணிதத்திற்கு வேறு.அறிவியல் பாடத்திற்கான கற்றல் கற்பித்தல் படிநிலைகள் வேறு.அதுமட்டுமல்ல இந்த கற்றல் படிநிலைகள் குழந்தைகளின் வயதை பொருத்தும் மாறும்.இதெல்லாம் பெரும்பாலும் கல்வி சம்பந்தப்பட்ட யாவருமே அறிந்ததுதான்.இதில் எதுவுமே ஆன்லைன் கல்வியில் சாத்தியம் இல்லை என ஆய்வுகள் நிருபித்துள்ளன.

உயிருள்ள சக மனிதரான ஆசிரியர் நம் குழந்தைகள் முன்னால் நின்று நிஜ உருவமாய் தன் கருத்துகக்களை தன் அனுபவ அறிவையும் சேர்த்து நம் அடுத்த தலைமுறை வழங்கும் வகுப்பறைக் கல்வி, பல பரிமாணங்களை கொண்டது. தனி மனித உளவியலால் மாற்றங்களை சுவீகரிக்கும் வல்லமை கொண்டது.அதை ஒரு தொலைக்காட்சிக்குள் அடக்குதல் சாத்தியமே இல்லாத விஷயம்.

Covid-19 outbreak: As schools across India shut down, is the ed ...

இது இந்த குழந்தைக்குப்புரியும்… அதே அந்த பயலுக்கு புரியாது என தன் தொனியை கற்பிக்கும் விதத்தை லேசாக ஆளுக்குதக்கவாறு மாற்றி அசத்துபவரே ஆசிரியர்…. ‘அங்கென்ன வேடிக்கை  இங்கே கவனி’ என்கிற குரல் கணினியில் கேட்காது. ‘புரியலையா… என்ன முழிக்கீறீங்க…. திரும்ப நடத்துறேன் கவனி’ என ஆன்லைன் வகுப்பு சொல்லாது. ‘டேய்… தூங்காத..? என்று அது குரலை உயர்த்தி கவனிக்க வைக்காது.ஆன்-லைன் வகுப்பை பொருத்தவரை நீங்கள் மாணவர்கள் அல்ல லட்சக்கணக்கான நுகர்வோரில் ஒருவர்.

மழலை வகுப்புகளை கூட ஆன்லைனில் நடத்த இன்று நடக்கும் முயற்சி நம்மை அதிரவைக்கிறது. ஆசிரியர் தலையில் கைவைத்து தலை இது கழுத்து என்று நேருக்குநேர் நடத்தி கற்றலை இனிக்க வைப்பதை இயந்திரத் தனமாக குழந்தைகளை கணினி மானிட்டரை பார்த்து செய்யவைப்பது மகா அபத்தம் உண்மை வகுப்பறைக்கும் காட்சிப்படுத்தலுக்கும் இடையிலான வேற்றுமை எத்தகைய உளவியல் சிக்கல்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க இருக்கிறோம்.

கல்வியியல்  தொழில்நுட்பம், வன்பொருள் (Hardware) மென்பொருள் (Software) மற்றும் இ-கற்றல் கோட்பாடு இது மூன்றையும் உள்ளடக்கியது ஆகும் ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டை உடனிருந்து ஊக்கப்படுத்தி அவரது தேர்ச்சி முடிவு மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்க உப செயல்பாடாக பயன்படுத்திட அதுவும் கல்லூரி கல்வியியல்- உருவான  ஒன்று அது. மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கே- ஒரு குறிப்பெடுக்கும் வசதிக்காக நூலகங்களுக்கு மாற்றாக அது கொண்டுவரப்பட்டது.

இன்றைய இந்த ஆன்லைன் கற்றலின் அரசியல் பின்னனியும் வரலாறு 1960களை சார்ந்தது.கற்றலை அனைவருக்கும் சமமாக வழங்கும் சமத்துவ கல்விக்கு எதிராக தோன்றியது. 1960ன் நீக்ரோ மாணவர் கிளர்ச்சி சிவில் உரிமை இயக்கமாக அமெரிக்காவில் மார்டின் லூதரின் தலைமையில் பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக வெடித்தபோது தோன்றியது, இந்த ஆன்-லைன் எனும் மேல்தட்டு வர்க்க கல்வி அவதாரம் வெள்ளை அமெரிக்க பிரஜைகளுக்கு இணையான கல்வி தங்களுக்கும் வழங்க சம உரிமை கிடைக்க மாபெரும் கிளர்ச்சியாக நீக்ரோ மாணவர் எழுச்சி தீப்பொறியாகி எங்கும் பரவியது. ஒன்றல்ல, இரண்டல்ல  89 நகரங்களில் சாலைகளில் வந்தமர்ந்த கருப்பின மாணவர்கள் அமெரிக்க அரசு நடத்தும் கல்வியில் சம அந்தஸ்த்தை உரிமையாக பெற்றார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சிறைசென்றதன் மூலம் கிடைத்த உரிமை அது.

இதனால் கலங்கிப்போன மேல்தட்டு வெள்ளைபேரினவாதிகளுக்கு  வரப்பிரசாதமாய் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகம், மேம்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி எனும் திட்டத்தை அறிமுகம் செய்தது. பாட்ரிக் சப்பஸ் மற்றும் ரிச்சர்டு அட்கின்கள் போன்ற முதலாளிய ‘உளவியல்’ நிபுணர்கள் அப்போதைய கணினியை பயன்படுத்தி    ஆரம்ப கணிதம் (Arithmetic) மற்றும் எழுத்து கூட்டுதல் (Spelling)  ஆகியவற்றை தட்டச்சு அமைப்பு வழியே கற்கும் வரலாற்றின் முதல் ஆன்-லைன்  வகுப்புகளை கலிபோர்னியாவில், பாவ்லோ அல்டோ ஒன்றிணைந்த கல்வி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளிக்கூட வெள்ளை இனத்து குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தார்கள். இதன் அடுத்த படிநிலையாக 1961 டிசம்பரில் இலியோனிஸ் பல்கலைகழகம் உயர்கல்விக்கு அதை விஸ்தரித்தது.

Computer Aided Learning Services in Gurgaon, DLF Phase 3, by ...

தற்போதுள்ள அமைப்புப் படியான கணினி உதவியுடன் கற்றல்(Computer Assisted Learning) 1986ல் வந்தது ஆகும். 64 கம்யூட்டர்களைக் கொண்டு அதே இலியோனிஸில் எலெக்ட்ரானிக் யுனிவர்சிட்டி நெட் ஒர்க்ஸ் எனும் பல்கலைகழகம் தொடங்கியது.அது.ஒவ்வொரு கணினியோடும் ஒரு ஆசிரியரும் இருப்பார். ஆனால் பிற்கால ஆன்-லைன் வகுப்புகள் பாடங்களுடன் அந்த படிப்பை சிலமணி நேரம் கவனித்து முடித்தால் சான்றிதழ்கள் பெறுகிற ஒன்றாக அதாவது அதற்கும் கல்வி சான்றிதழ் அந்தஸ்த்தை வழங்கினார்கள். ஆன்-லைன் கல்வி குறித்த கல்விக்கோட்பாடுகளின் தனித்தன்மையை அறிந்தால் இவ்வகை கணினி வழி செயல்பாடுகள் கற்றலுக்கு உதவியாக இருக்க வந்த இணை செயல்பாடாகவே இருக்கமுடியும் என்பது புரியும் கணினி வழி இணையக்கல்வியின்  அறிவாற்றல் ஏற்றுதல் –கோட்பாடு (ரிச்சர்டு மெய்யர்) குறிப்பிட்டு பேசப்படவேண்டிய ஒன்று அது மல்டிமீடியா வழியில் கற்றலை மேம்படுத்தும் தகவமைப்புகளை முன்மொழிந்த  1980களின் கோட்பாடு. பல்கலைகழக மாணவர்களை பயன்படுத்தி  பரிசோதிக்கப்பட்டது. இந்த கோட்பாடு குறித்த முக்கிய விமர்சனம்.பரிசோதனைகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பலரும் பாடங்கள் குறித்து ஏற்கனவே பொது வகுப்பறையில் முழுமையாக அறிந்தவர்களாக இருந்தனர் என்பது. ஏற்கனவே வகுப்பறையில் பங்கேற்று கற்றதை மேம்படுத்தவே ஆன்-லைன் கல்வி என்பதுதான் மெய்யரின் ஆரம்பகால கருத்தாக இருந்தது.

இந்த அறிவாற்றல் தொழில் நுட்ப கோட்பாட்டில் சில மாற்றங்களை முன்மொழிந்த ஜான் ஸ்வெல்லர், ஒவ்வொரு கணினி வழிபாடத்தொகுப்பிலும் அடிப்படை அறிவாற்றல் படிநிலைகளை சேர்த்தார். செயல்பாடு ஒன்றை முன்மொழிதல் செயல்பாட்டை விவரித்தல், அதற்கான சேமிப்பு குறிப்புகளை வழங்குதல் மற்றும் செயல்பாட்டை செய்து முடித்தல் என்பதாக படிநிலைகள் அமைந்தன. பொதுவகுப்பறை ஒன்றில் பாடத்தை அறியவும் புரியவும் கற்றலை மேம்படுத்தவும் வழங்கப்படும் சுய தேடல் செயல்திட்டங்களுக்கு (Projects) உதவுவது எனும் முக்கிய மைல்கல்லை ஜான் வெல்லரின் கோட்பாடு அடைந்து காட்டியது.

மற்றபடி 1990 கள் மற்றும் 2000ங்களில் வந்த ஆலன் பாடிலி, கிரஹாம் ஹிட்ச்போன்றவர்களின் கோட்பாடுகள் தொழில் நுட்பமாக மாறியபோது, பாடப்பொருளை காட்சிப்படுத்துவதோடு (ஆசிரியரின்) குரலும் சேர்ந்து ஒப்பவையாக இணையக்கல்வி  மாற்றப்பட்டது. அமெரிக்க ஆங்கிலம் வேறு, இங்கிலாந்து ஆங்கிலம், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா… என ஆங்கிலம்  வேறுபட்டதால் கிரஹாம் ஹிட்ச் குரல்பதிவுகளை மாணவர் தாய்மொழிக்குரலாக்கும் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வை கற்பவரின் கைகளில் தருகிறார். ஆலன் பயிவியோ அறிமுகம் செய்த கற்றல் பாடப்பொருளின் அனிமேஷன், ஒற்றை மீடியாவை மல்டிமீடியா ஆக்கி நம் வகுப்பறை ஸ்மார்ட் போர்டுகளில் கொண்டு வந்து சேர்த்தது.

இன்று வீட்டில் குழ்ந்தைகளை வதைக்கும் சூம்(Zoom) வகை செயலிகள் பெரிய கார்பரேட் நிறுவனம் பல ஊர்களில் வேலைசெய்யும் தன் ஊழியர்களுக்கு டார்கெட் கூட்டங்கள் நடத்துவதற்காக  உருவாக்கப்பட்டவை. குழந்தைகளுக்கு இருபது நிமிடத்தில் நுண்கணிதம் நடத்த தரவுகளுடன் உருவானவை அல்ல. சூம் நிறுவனர் சீனத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் தொழில்நுட்ப நிபுனர் எரிக் யுவான் தனது யூனிகார்ன் கார்பரேட் வழியாக ‘வீடியோ வழி உரையாடல்’ (Vedio Chat) செயலியாகவே அதை 2013ல் அறிமுகம் செய்தார். அயல்நாட்டில் வேலைபார்க்கும் ஒரு குடும்பத்தலைவர் உலகெங்கும்  சிதறுண்ட தன் குடும்ப உறுப்பினர்களிடம் வாரம் ஒருமுறை அளவளாவிட குடும்பத்தை உருபெருக்க(ZOOM) உதவியது அது.

Zoom Video Conferencing - how to stay safe and secure whilst using ...

திடீரென்று இந்த நோய் தொற்று காலத்தில் இலக்கிய கூட்டம் முதல் மருத்துவ அறுவை சிகிச்சை, பாராளுமன்ற குழுக்கூட்டம், சார்க்- சேவை என பயன்பாடு அதிகரித்து எரிக்யுவானை திக்குமுக்காடவைத்தது. ஆனால் ஒரு மூன்றாம் வகுப்பு மழலையை கணினி முன் உட்காரவைத்து பெருக்கல் கணக்கு  நடத்திடவும் ஆங்கில இலக்கணம் நடத்தவும் அது பயன்படுமா என்பதில் யுனிகார்ன் நிறுவனத்திற்கே சந்தேகம் உள்ளதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ இதழ் தெரிவிக்கிறது. இன்றைய மற்றொறு ஆன்லைன் வகுப்பு கூகுள்- வகுப்பறை செயலி இது ஆசிரியரை காட்டும் அல்லது பாடத்தை (பலகை) காட்டும் சராசரி வகுப்புபோல இரண்டையும் காட்டாது.பள்ளி மாணவர்களின் கவனக்குவிப்பு அதாவது ஒருமுகப்படுத்துதல் அவர்களது வயதைப்பொருத்து சில நிமிடங்களே சாத்தியம். அதை மேலும் மேலும் தன் பக்கமும் பாடத்தின் மீதும் ஈர்க்கும் மந்திர சக்தி(யுக்தி) நேரடியாக தோன்றும் ஆசிரியர் கையில்தான் உள்ளது.

ஆனால் ஆன்லைன் பாடங்களே முழுமையான வகுப்பறை ஆகமுடியுமா. உயர்கல்வியும் முடித்தபிறகு வேலை ஒன்றில் சேர்ந்தபின் மிகமிகத்தேவையான ஒரு திறனை கற்பிக்க  பகுதிநேரத்தில் இணைய – பயிற்சி என்பது வேறு. நம் 2004ம் ஆண்டு இந்தியாவின் முதல்கல்வி செய்றகை கோளை அனுப்பினோம்.என்றாலும் 1986 முதல் தொலைதூர கல்வி எனும் அஞ்சல்வழி கல்வியை நடத்திவருகிறோம்.செயற்கை கோளை பயன்படுத்தி தொலைக்காட்சி வழியே போதனைகள் கூட இருந்தது.எல்லாமே உயர்கல்வியில் தான் இப்போது பல பல்கலைகழகங்களில் ஆன்லைன் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.பள்ளிக்கூடத்தில் அல்ல.

ஒன்றாம் வகுப்பில் நுழையும் 100 மாணவர்களில் 27 பேர் மட்டுமே கல்லூரி பட்டம்  பெறுகின்றனர். என்பதே புள்ளிவிபரங்கள் காட்டும் அவலநிலை.பள்ளியில் நுழையும் 100 மாணவர்களில் 80 பேருக்கு மேல் பட்டப்படிப்பை முடிக்கும் கனடாவில் கூட ஆன்லைன் படிப்புகள் இல்லை. நம் நாட்டில் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு உள்ளூர் கல்லூரிகளை மூடிவிட்டு ஆன்லைனில் சர்வதேச கல்வி என கொண்டுவரப்படும் புதிய வர்த்தகக்கல்வி  ஏற்படுத்தபோகும் விளைவுகள் நடுங்கவைக்கின்றன.

இது ஒருபுறம். வெறும் தொலைகாட்சி பார்ப்பதுபோல காதில் இயர்போன் மாட்டிய வசதிப்படைத்த வீட்டு சிறார்கள் சமீபகாலமாக திரும்பத்திரும்ப செய்தி சானல்களில்  வருகிறார்கள். மற்றப்படி தன் குடும்ப துணிமூட்டையை சுமந்தபடி  கூட்டத்தோடு சோர்வுடன் நடக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் வீட்டு சிறார்களும் செய்தி சானல்களில் வருவதை பார்க்கிறோம். கல்வியின் அடிப்படை நோக்கம் என்ன…  ‘எல்லாவகை கல்வியின் அடித்தளநோக்கமும் சமூக விடுதலைதான்’ என்பார் மார்க்கிய அறிஞர் கிராம்சி.ஆன்லைன் கல்வியின் நோக்கம் என்ன?ஊரடங்கின் போது நோய்பீதிக்கு நடுவே பாடத்தை கணினி வழியே தந்து வேலை நாளாக்கி சிறுவர்களின் மீது பரிசோதிப்பதா.6.7 சதவிகித குடும்பங்களில் தான் கணினி வசதி உள்ளது என்பதுதானே உண்மை.

கற்றல் குழந்தைகளுக்கு உள்ளே எப்படி நடக்கிறது.கற்றல் பாடப்பொருள் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு தொடங்குகிறது.பாடப்பொருள் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு தொடங்குகிறது. பாடப்பொருள் சார்ந்து தன் வகுப்பறை சகாக்களுக்க முன் தனக்கு எவ்வளவு தெரியும் அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை அளவளாவும் ஒரு வகுப்பறை கலந்து உறவாடுவதன் மூலம் ஒரு குழந்தை பெறும் கற்றலின் முழுமையை ஆன்-லைன் பாடம் எப்படி வழங்கமுடியும் ஆன்லைனில் மட்டுமே கல்வியை தொடர்ந்தவர்களுக்கு ஏற்படும் மனோவியல் பாதிப்புகள் குறித்த ஓக்லஹாடா பல்கலைகழக  உளவியலாளர் டக் வாலன்டினாவின் மூன்று முடிவுகள் நம் அதிரவைக்கின்றன.

Is Zoom safe to use? Here's what you need to know - Los Angeles Times

  1. ஆன்-லைன் மாதகணக்கில் தொடரும்போது வாழ்க்கை தனக்கும் தொலைதொடர்பு கருவிகளுக்கும் இடையிலானது…. தனக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலானது அல்ல என ஒரு குழந்தை நம்புகிறது. தன்னிடம் பெற்றோர்கள் பேசவதைவிட டெக்ஸ்ட் செய்வது குழந்தைக்கு அதிகம்.மன அமைதி தரும் அளவுக்கு அது உள்வாங்குகிறது.பெரும் மனச்சோர்வும் வெளி ஆட்கள் குறித்த அச்சத்தோடு இருக்கும் ஒரு சமூகத்தை அது உருவாக்கும்.
  2. ஆன்-லைன் கல்வி மட்டுமே பெற்று வாழும் ஒரு குழந்தை சமூகத்திலோ அல்லது தனக்கேயோ நடக்கும் எந்த பிரச்சினைக்கும் உடனே எதிர்வினையாற்றுகின்ற திறத்தை இழக்கிறது. ‘பாடத்தை’ பார்த்தப்படியே இருக்கும் டிஜிட்டல் உலகைவிட்டு விலக முடியாமல் தன்னால் தலையீடு செய்யமுடியாத உலகமாக ஏற்று தன்னை சுற்றி நடப்பவைகளை வேடிக்கை மட்டுமே பார்ப்பவையாக அவை உளவியல் பாதிப்பு அடைகின்றன. ஒரு குழுவாக செயல்பட பிறகு அதனால் ஒருபோதும் முடியாது.
  3. ஆன்லைன் கல்வியை மாதக்கணக்கில் தொடர்ந்தால் எதிர்கற்றல் (Negative Learning) எனும் விபரீதம் நடக்கிறது. கற்போரின் (குழந்தைகளின்) உணர்வுகள் வெளியிட முடியாமல் தொடர்ந்து அழுத்தப்படுவதால் எதையும் கற்பதன் மீதான ஆர்வம் விடைபெறுகிறது.கல்வி என்றாலே வெறுத்து அதனை ஓடவைக்கிறது.கரோனாவை விட இவ்வகை நிலை கொடியது அல்லவா.

‘எதிர்வினை ஆற்றுவதன் மூலமே கல்வி சாத்தியம்’ என்பார்.நோம் சாம்ஸ்கி. தான் ஏற்கனவே அறிந்த தனக்கு சொல்லப்பட்ட ஒன்றின் மீதான  சந்தேக உணர்வும் அது தவறெனில் எது உண்மை…. என்பதை நோக்கிய உரையாடலும் இல்லாமல் நடப்பது கல்வி இல்லை’ என்று தனது கற்றல் கற்பித்தல் கோட்பாட்டில் அவர் விளக்குவார். அத்தகைய உண்மையான கற்றல் என்பது பொது வகுப்பறைகளில்  மட்டுமே சாத்தியமாகும்.

இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா. பின் அவசரம் அவசரமாக ஆன்-லைன்  கல்விக்கு அது சாமரம் வீசுவது ஏன் பலவகையான சந்தேகங்கள் எழுவது நியாயமே. கிராமப்புற கல்வியை கைவிடுதல், அடித்தள மக்களின் உயர்கல்வி ஆசையை சிதைத்தல், மருத்துவ கல்வி(நீட் மூலம்) நிர்முலமாகி லட்சகணக்கில் செலவுசெய்து பல ஆண்டுகள் பயிற்சி வகுப்புகளில் படித்தால் மட்டுமே சாத்தியம் என்பதுபோல ஏனைய படிப்புகளையும் ஏழைகளுக்கு எட்டாததாக்கிவிடுவது…. சர்வதேச பல்கலைகழகங்களை நாட்டிற்குள் வரவைக்கும் வர்த்தக கார்பரேட் கல்வி சதியே ஆன்லைன் கல்வி. கல்வி முழுவதும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு குவிய செய்யப்படும் இன்னொரு முக்கிய திணிப்பு.குறிப்பாக தாய்மொழிக்கல்வியை இத்தோடு கிடப்பில் போட இருக்கிறார்கள்.இன்னொன்று.இப்படி அடுக்கிக்கொண்டே  போகலாம்.

ஆன்-லைன் கல்வி என்பது இன்ற இந்தியாவின் மிக பிரமாண்டமாக வளர்ந்துவரும் பலகோடிகள் குவிக்கும் வர்த்தகம் ஆகும். 2011ல் வெறும் 17 கோடியாக இருந்த இந்திய ஆன்-லைன் கல்வி (பெரும்பாலும் பல்கலைகழகங்களில் நடந்தது) வியாபாரம் மோடி அரசு பதவியேற்ற 2014க்கு பிறகு வளர்ந்து 2015ல் 117 கோடியாகி இன்று 3600 கோடி வர்த்தகமாக மாறிவிட்டது. செயற்கை நுண்ணறிவு இயந்திரகற்றல் பிக்-டேட்டா என அது விரிவடைந்து வருகிறது. பைஜீ ரவீந்திரன் (BYJU’s) வம்சி கிருஷ்ணா(வேதாந்து) என இருந்த அந்த வியாபாரத்தில் சமீபத்திய வரவு மோடியின் உற்ற நண்பர் முகேஷ் அம்பானியின் எம்பைப் (Embibe) நிறுவனம் தனது ரிலையன்ஸ் டிஜிட்டல் வழியே தற்போதைய லாக்டவுன் தொடங்கிய மார்ச் 24க்கு 27 நாட்கள் முன்பு பிப்ரவரியில் அம்பானி ஆன்-லைன்  கல்வி (Embibe)  வர்த்தகத்தில் 500 கோடி ஒரே நாளில் முதலீடு செய்துள்ளார். மத்திய அரசுக்கு ஆன்-லைன் கல்வி மீது திடீர் காதல் வந்ததற்கு மூலக்காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

Are scientists the new priests? Faith in science in the times of ...
Yuval Noah Harari turns to the future | Philonomist

ஆனால் கல்வியின் எதிர்காலம் குறித்து சமீபத்தில் சாப்பியன்ஸ் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் எதிர்கால அறிவியலின் வல்லுநரும் மனித வள அறிஞரும் பேராசிரியருமான யுவால் நோவா ஹராரி முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். எதிர்கால கல்வி குறித்த தொழில்நுட்ப கோட்பாடாக அது பேசப்படுகிறது.அதன்படி பார்த்தால் மத்திய அரசின் நோக்கம் நமக்கு ஓரளவு பிடிபடுகிறது.

உடனடி எதிர்காலத்தில் கல்வி அரசுகளால் பிரஜைகளின் மூளையை ஹேக்கிங்(Hacking) அதாவது தலையீடு செய்து தங்களுக்கு சாதகமாக மாற்றவதற்கு பயன்படுத்தப்படும். ஏற்கனவே இணையத்தில் நாம் கண்காணிக்கப்பட்டு நம்   இணையத்தேடல்கள் துல்லியமாக கண்காணித்து கணக்கெடுத்து மெகா டேட்டாவாக பேணப்பட்டு வருவது இன்றைய யதார்த்தம். இணையத்தில் நீங்கள் எந்த வகையில் தேடலை மேற்கொண்டாலும் உங்கள் அபிமான விஷயங்களை உங்கள் முன் விளம்பரமாக இது கொண்டு வந்து கொட்டுகிறது அல்லவா இதுவே நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதற்கு சான்று.

இந்திய பிரஜைகளுக்கு கரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பதை வேவு பார்க்க ஆரோக்கிய சேது ஆப் இன்று ஏறக்குறைய எல்லாருக்குமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம் வீட்டருகே யாருக்காவது நோய் தொற்று இருந்தால் நமக்கு அது தெரியவருவது நல்லதுதானே ஆனால் நம் உடல் வெப்பநிலை ரத்த ஓட்டம் மன – ஓட்டம் என பதிவுசெய்து  அறிய அரசு விரைவில் இந்த செயலி மூலம் ஏனைய விஷயங்களை  இணைக்க முடியும். நோய் தொற்று முடிந்த பிறகு இந்த செயலி தொடருமானால் அதை நாம் நம் கைபேசிகளில் இருந்து முற்றிலுமாக அப்புரப்படுத்த முடியாது.நம்மை பின் தொடர அரசுக்கு அது பயன்படும்.

அதேபோல பள்ளிக்கல்வி சம்பந்தப்பட்ட ஒரு செயலியை ஒவ்வொரு மாணவரும் பதிவிறக்கம் செய்ய மத்திய அரசுதிட்டம் வைத்திருக்கிறது. ஆன்லைன்  வகுப்புகளின் பலவகை செயற்கூறுகளில்  அதுவும் அடக்கம். நம் குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகள்  – கற்கும் ஆற்றல் ஆரம்பத்தில் கவனமாக சரிச்செய்யப்படுவதாகத்தான்  சொல்வார்கள். பிறகு அதன்வழி தொடங்கும் குழந்தைகளை மூளைச்சலவை செய்யும் ஹேக்கிங், ஆசாபாசங்களை மாற்றி முழு ‘மோடி பிரஜை’ களாக அவர்களை மாற்றுவதற்கான முதல்படிதான் ஆன்-லைன் கல்வி.உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இன்று இதுதான் நடைமுறை.

பொதுவாக இன்று தமிழ்கக் கல்வித்துறை சுயசிந்தனையுடன் இயங்கவில்லை.மத்திய அரசு தரும் நிர்பந்தத்தால் ஆன்-லைனுக்கு இன்-லைன் ரோடு போட ஒரு அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது அது என்பதே உண்மை.

. நம் அப்பாவிக்குழந்தைகளை ஆன்-லைன் எனும் போலியான பணம் பிடுங்கும்  கொடூர மாற்றாந்தாயிடம் ஒப்படைத்து கை கழுவுகிறது அரசு. இப்போது நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் இதுவே நிரந்தர புதைகுழியாகி சமத்துவக்கல்வி எட்டாத கனவாகும்.

Image

(ஆயிஷா. இரா. நடராசன். கல்வியாளர், எழுத்தாளர்)

Article

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் மற்ற நாடுகள் காட்டும் மாற்று வழிகளும் -ஆயிஷா இரா. நடராசன்

  கரோனா நோய் தொற்று-பேரிடர் காலம், நமது பொதுக் கல்வி சார்ந்த பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஊரடங்கு காலத்தில்- குறிப்பாக...
Article

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா. இரா.நடராசன்)

   (தி கிராண்ட் டிசைன்…. நூலில் இருந்து)      நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் என்பதை புரிந்துகொள்ள நாம் புவி...
Book Reviewநூல் அறிமுகம்

ஆயிஷா.இரா.நடராசனின் கணிதத்தின் கதை | நூல் மதிப்புரை சிவராமகிருஷ்ணன்

கணிதம் ஒரு ஏட்டுச்சுரைக்காய். பள்ளிக்கூடத்தில படிக்கிற இந்த கணிதத்தை வைச்சு நாம என்ன பண்ண போறோம் ? கணக்கு பிணக்கு...
Book Reviewநூல் அறிமுகம்

ஆயிஷா இரா. நடராசனின் ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – நூல் மதிப்புரை மு.சிவகுருநாதன்

(பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வெளியீடாக வந்துள்ள ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ என்ற...
Book Reviewஇன்றைய புத்தகம்

ஆயிஷா. இரா. நடராசனின் ஆதியின் அறிவியல் கொண்டாட்டம் | மதிப்புரை ம.கா.சச்சின் சூர்யா

"ஆதியின் அறிவியல் கொண்டாட்டம்" . இதை எழுதியவர் ஆயிஷா. இரா. நடராசன் அவர்கள். வெளியிட்டவர்கள்: பாரதி புத்தகாலயம் இதில் பல...
1 2 3 5
Page 1 of 5