archiveArivudai Nambiyum Aattukuttiyum

Story

சிறுகதை: அறிவுடை நம்பியும் ஆட்டுக்குட்டியும் – நிகில் ரூபன்

“ஏம்பா இவன என்னன்னு கேளுங்க” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

“பால்வாடிக்கு அனுப்பி வச்சா, அங்கெல்லாம் சின்னச் சின்ன பசங்க படிக்கிறாங்களாம்,  தொரை இங்கதா படிப்பானாம்,  அடம்பிடிச்சு என்ன இழுத்து வந்துட்டான்.” என்ற அந்த மூதாட்டியின் முகம் வரிக்கோடுகளால் வரைந்து வைத்தது போலிருந்தது.

பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் மத்தியில், இப்படி ஒருவனா?

” ஏன்டா பால்வாடிக்கு போக மாட்டேன்ற” என்றேன்.

” சார் அங்க நான் கேட்கிற எதுக்கும் பதில் சொல்லவே மாட்றாங்க. என்ன   உட்காரு, உட்காருன்னே சொல்லிட்டு இருக்காங்க. எப்பயும் ஒரே பாட்ட தான் சொல்லித்தராங்க. எனக்கு அங்கப் போகப்பிடிக்கல”. என்பவனிடம் என்ன சொல்வது.

தேடலின் உச்சத்தில் இருக்கிறான் இவன். உச்சந்தலையில் கொட்டி இவனை உட்கார வைப்பது கடினம் என்று புரிந்து கொண்டேன்.

” உன் பேர் என்னடா?”

” அறிவுடைநம்பி சார் “

பொருத்தமான பெயர் . அவன் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தேன். ” நல்லா படிக்கணும் சரியா? உன்ன இங்க சேத்துக்கிறோம்.” என்றேன்.

வேகமாகத் தலையாட்டிக் கொண்டே அவன் பாட்டியைப் பார்த்து சிரித்தான்.

ஆசிரியர்கள் ஓய்வறையில் அவனைப் பற்றிய பேச்சுதான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அவன் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் அவனைப்பற்றி பேசிப் புலம்புவது வாடிக்கையான ஒன்றாகி போனது.

“என்ன சார் அவன்,  ‘அ’ ஏன் இப்படி போடணும்னு கேட்டா நான் என்னதான் சொல்கிறது ?” இது தமிழாசிரியர்.

” சார் இதை ஏன் 1 னு சொல்றீங்க? , இதை ஏன் 5 னு சொல்றீங்க? , இதெல்லாம் யாரு கண்டுபிடிச்சது?” னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது? ” வகுப்புல சும்மாவே இருக்க மாட்டேன்றான். எல்லாத்துக்குமே ஏன்? எதுக்கு? ன்னு எல்லாத்துக்கும் ஒரு கேள்வி வேற”. இது கணக்கு ஆசிரியர்.

நாடு தழுவிய நிலையில் SOP ...

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவன் கேள்விக்கணைகள் இன்னும் கூர்மையானது. அதை ஆசிரியர்கள் படும் சிரமத்தில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்தது.

அவன் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் என்றில்லை, கண்ணுக்கு யார் அகப்படுகிறார்களோ அவர்களிடம் கேள்வியை கேட்டு விடுவான். அவன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறதோ இல்லையோ, அதற்கு ஈடாக அதட்டலும் அதிகாரத் துரத்தலும் தான் அவனுக்கு கிடைககும்.

ஒரு நாள் கண்ணன் சார்( அறிவின் சமூக அறிவியல் ஆசிரியர்) அவனைத் தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருந்தார். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவன் கன்னத்தில் விழுந்தது அடி. அழுது கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

ஓய்வறையில் கண்ணனும் நானும் மட்டுமே இருக்கும் தருணம் அன்று மதியமே வாய்த்தது.

” என்ன கண்ணன் சார் இன்னைக்கு காலையிலேயே அந்த அறிவுப்பயலப் போட்டு வறுத்தெடுத்துட்டுருந்தீங்க போலருக்கு” என்றேன்.

இதைக் கேட்டதும் அவர் முகம் இறுகியது.

“அட ஏன் சார் கடுப்பேத்துறீங்க?, அவன என்னைக்கு தலைமுழுகப் போறேன்னு தெரியல. ஒவ்வொருநாளும் அவனோட தொல்ல தாங்க முடியல. அவன் ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி. யாரு சார் அவனுக்கு அறிவுன்னு பேர் வச்சது, பெரிய முட்டாளா இருக்கான். அவன மாதிரி ஒரு கிறுக்கன என் சர்வீஸ்ல நான் பார்த்ததில்ல. என்றார் .

” அப்படி என்ன சார் ஆச்சு?” இது நான்.

இவன் எல்லாம் படிக்க வல்லனு யார் அழுதா? அவனும் அவன் உடம்புல வீசுற ஆட்டு நாத்தமும், ச்சே.. அவன பார்த்தாலே பத்திகிட்டு வருது சார். ஆடு மேய்க்கிற நாயி, ஆடு மேச்சுக்கிட்டே கெடக்க வேண்டியதுதானே, இதெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து நம்ம உசுர எடுக்குது. எவேவனுக்கோ சாவு வருது, இவனுக்கு வாரமாட்டேங்குதே ! ” என்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினார்.

எவ்வளவு பெரிய சாபம்? அதிகபட்சம் ஒரு கேள்விதானே. இவரிடம் இதைப் பற்றி கேட்டால் இன்னும் அவனுக்கு என்னென்ன சாபம் வந்து விழும் என்று தெரியாது, என்ற நினைப்பில் அடுத்து எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன். அறிவு , ஆயிசா நடராஜனின் கதையில் வரும் ஆயிசாவாக மாறிவிடக் கூடாதல்லவா.

அன்று மாலையே அறிவை வெளியில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். மேய்த்துக் கொண்டிருந்தான் என்பதை விட,  ஆட்டுடன் கட்டிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

” டேய், அறிவு”

” சார்”

“இங்க என்னடா பன்ற?”

“ஆட்டோட வெளையாடிட்டு இருக்கேன் சார்”

” ஏண்டா இப்படி மண்ணுல படுத்து உருண்டுட்டு இருக்க?, பாரு டிரஸல்லாம் எப்படி அழுக்காயிடுச்சுன்னு”, என்றவாறு அவனை அருகில் இழுத்துப் பிடித்து, தூசி தட்டி விட்டுக்கொண்டே கேட்டேன். ” ஆமா இன்னைக்கு காலையில கண்ணன் சார் ஏண்டா உன்ன அப்படி அடிச்சாரு?, அவர் அப்படி கோபப்படுற அளவுக்கு நீ என்ன கேட்ட? ” என்றேன்.

“கேள்வி கேட்டதுக்குதான் சார் அப்படி வாங்கி கட்டிகிட்டேன். அவர் வகுப்புல எப்பவும் நான் இப்படித்தான் சார் அடியும் , திட்டும் வாங்கி கிட்டே இருப்பேன்”. என்றான் மிகச் சாதாணமாக.

கிராமத்து வாழ்க்கையின் எந்த ...

இதை எப்படி இவனால் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது?  என்று எனக்குப் புரியவில்லை.

“அப்படி என்ன கேள்விடா கேட்ட? ” என்றேன்.

” அத சொன்னா நீங்களும் திட்டுவீங்க சார்” என்றான்.

” திட்ட மாட்டேன் சும்மா சொல்லுடா”. இது நான்.

” அவர் தான் சார் சொன்னாரு நம்ம நாட்டுக்கு காந்தி தாத்தா தான் சுதந்திரம் வாங்கி கொடுத்ததுனு”.

“சரி”

” அவர் தென்னாப்பிரிக்காவிலருந்து வரலைன்னா நம்ம நாட்டுக்கு யாரு சார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருப்பாங்கனு கேட்டேன்”

” அதுக்கு அவரு உங்க அப்பத்தாதான், சும்மா உட்காரமாட்ட, எப்ப பாத்தாலும் தொணத்தொணன்னு, என் உசுர வாங்குறதுக்குன்னே என் வகுப்பில வந்து ஒக்காந்திருக்கு, சனியன்னு சொல்லி திட்டினாரு சார், இனிமேல் என் வகுப்புல நீ எந்த கேள்வியும் கேக்கக் கூடாது, மீறி கேட்ட அவ்வளவு தான்னு சொன்னாரு சார். நான் அதுக்கு, நீங்க தான சார் எந்த சந்தேகமிருந்தாலும் என்கிட்ட கேளுங்கனு சொன்னீங்க, அதுனாலதான் கேட்டென்னு சொன்னேன். அதுக்கு தான் சார் அடிச்சாரு” என்றான் .

தூக்கிவாரிப்போட்டது எனக்கு. சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு. ஏன்? எதற்கு? எப்படி? என்பதுதானே கல்வி. இதற்குத்தானே பாடத்திட்டம், கலைதிட்டம் , கருமாந்திரம் எல்லாம். அவனை வாரி அணைத்துக் கொண்டேன். என் கண்கள் கலங்கிவிட்டன. அறிவு எத்தனை பொருத்தமான பெயர். இவனை தட்டிக்கொடுத்து அல்லவா வளர்க்க வேண்டும். கொட்டி,  மட்டம் தட்டி உட்காரச் சொல்லக்கூடாது.

” உங்களுக்கு தெரியுமா சார் காந்தி தாத்தா இல்லன்னா, யாரு சுதந்திரம் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு?” என்றான்.

” காந்தி இல்லன்னா, அவர் மாதிரி வேற ஒரு தலைவர் போராட்டத்தை முன்னெடுத்து நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருப்பாங்கப்பா.” என்றேன்.

எனக்குத் தோன்றிய பதில்தான் இது. இத்தகைய பதில்களை எதிர்பார்த்துதானே கேள்விகள் கேட்கப்படுகிறது.

” ஏன் சார் மக்களா போராடி சுதந்திரம் வாங்கி இருக்க முடியாதா?”

ஐயோ! இவனை இப்போதைக்கு திருப்திப்படுத்த முடியாது போலருக்கே. கேள்விகளால் நிறைந்து வழியும் உருவமாக இருந்தான் அவன்.

” மக்கள் மட்டும் போராடினாலும் சுதந்திரம் கெடச்சிருக்கும். ஆனா அந்தப் போராட்டம் எப்படி இருக்கனும்?, எப்படிப் போராடனும்னு எடுத்துச் சொல்ல ஒரு தலைவர் வேணும். மக்கள் சார்பா, வெள்ளைக்காரன் கிட்ட பேச ஒருத்தர் வேணுல. ” என்றேன் .  இந்த பதில் அவனை திருப்திப்படுத்தி இருக்குமா? என்று தெரியாது.

” சரிடா நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம்” என்று அங்கிருந்து நகர்ந்தேன். பதில்களின் பற்றாக்குறை காரணமாகவே அங்கிருந்து பயந்து வந்தேன் என்பதுதான் உண்மை.

இப்பொழுதெல்லாம் அறிவுடை நம்பியின் வகுப்பாசிரியர் என்ற முறையில் அவன் மீது வரும் புகார்களை மிகக் கவனமாகவே அணுகுகிறேன்.

ஒரு நாள் வருகைப் பதிவு செய்துகொண்டிருந்த பொழுது…

“அப்பாஸ்”

” உள்ளேன் ஐயா”

” அன்பழகன்”

” உள்ளேன் ஐயா”

” அறிவுடை நம்பி”

” டேய் அறிவுடை நம்பி”

” ஐயா அவன் இன்னைக்கு லீவுயா.

” இந்தாங்கைய்யா லீவு லெட்டர்” இது சண்முகம்.

வாங்கிப் பார்த்த எனக்கு அந்த விடுப்பு கடிதம் மிகப் பெரிய ஆச்சரியம் அளித்தது. நம்பியின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை. அம்மா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டிலுள்ள ஆட்டினைப் பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லாத காரணத்தால், இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு எழுதப்பட்டிருந்தது.

எனக்குத் தெரிந்து, நான் படித்த காலங்களிலும் சரி, வேலைப்பார்க்கும் இத்தனை காலங்களிலும் சரி, உண்மையான காரணம் சுமந்து ஒரு விடுப்பு கடிதம் பள்ளிக்கு இன்று தான் வந்துள்ளது. அவனைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும் போலிருந்தது. அந்தக் கடிதம் எனக்கு வேறு ஒரு உணர்வைத் தந்தது. மாணவர்களிடம் நாம் இன்னும் கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கிறதோ தெரியவில்லை.

இப்படித்தான் ஒருநாள்,

” கண்ணுகளா, எல்லோரும் நாளைக்கு வரும்போது எதிர்காலத்தில் என்னவாக ஆகணும் ? நீங்க என்ன வேலை செய்ய விரும்புறீங்கனு   ஒரு வெள்ளைத்தாளில் எழுதிட்டு வரணும் “என்றேன்.

வழக்கம்போல் டாக்டர், என்ஜினியர், கலெக்டர் என்று இருந்த கடிதங்களுக்கு மத்தியில் அறிவின் கடிதம் என் கையில் சிக்கியது. அடப்பாவி என்ன இது? அவனின் கடிதம் இப்படி இருக்கக் கூடாது. என்னுள் கோபத்தைத் தூண்டிய அந்த கடிதம் அறிவின் மேல் வருத்தத்தை ஏற்படுத்தியது.

” அறிவு இங்க வாடா”

” சார்”

” இந்தப் பேப்பர்ல எதிர்காலத்தில் என்ன ஆகணும்னு எழுதி வச்சிருக்க?”

” சார்” என்றான்.

” என்னடா இது கந்து வட்டிக்காரன் ஆகனும்னு எழுதி வச்சிருக்க?. இதுதான் உன் எதிர்கால லட்சியமா?” என்றேன்.

” ஆமாங்க சார் ” என்றான்.

இவன் தெரிந்துதான் சொல்கிறானா இல்லை தெரியாமல் சொல்கிறானா? இல்லை இதற்கும் இவனிடம் ஏதாவது ஒரு காரணம் இருக்குமா? என்று குழப்பத்தில் நான் இருந்தேன்.

” ஏன்டா இப்படி எழுதின?” என்றேன். என் குரலில் கோபம் கொஞ்சம் தணிந்திருந்தது. அது அவன் பதட்டத்தைக் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். அவன் முகம் கொஞ்சம் இயல்பானது.

” சார் அவங்ககிட்டதா நிறைய பணம் இருக்கும். அப்பாகிட்ட  காசு கேட்டா, நான் என்ன கந்துவட்டி கொடுத்தா சம்பாதிக்கிறேன்? எப்ப பாத்தாலும் காசு காசுன்னு அறிக்கிறன்னு” சொல்றாரு.

Reports from Karuna-Shechen - GlobalGiving

” எங்க வீட்டுல கறி  எடுக்கனும்னா கந்து வட்டிக்கு காசு வாங்கி தான் எடுப்பாங்கலாம் சார். எங்க பாட்டி சொன்னாங்க,  எங்க வீட்டுல இருக்கற ஆட்டுக்குட்டிக்கூட இப்படி வாங்குனது தானாம் சார். அதனாலதான் நான் அப்படி எழுதினேன்” என்றவன், மெல்ல என் அருகில் வந்து, ” எங்க சமூக அறிவியல் சார் கூட கந்துவட்டி கொடுத்துதான் சம்பாதிக்கிறாருன்னு நீங்க கூட ரமேஷ் சார் கிட்ட பேசிட்டு இருந்தத நான் கேட்டேன் சார்” என்றதும் எனக்கு அவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தவறு அவனிடம் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

” கண்ணன் சாருக்கு என்ன ரமேஷ், காந்துவட்டிக்குக் குடுத்து சம்பாரிக்கிறாரு. செலவு செய்ய அஞ்ச மாட்டாரு. நாம அப்பிடியா, இறுக்கிப் பிடிச்சு செலவு செய்யனும்”. என்று நான் சொன்ன வார்த்தைகள்தான் இவை.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தேன். இப்படித் தினமும் ஏதாவது ஒரு படிப்பினையை எனக்குக் கற்றுக் கொடுப்பவன் அறிவு. ஆசிரியர்களைப்  போல் மாணவர்கள் கற்றுக் கொடுப்பதற்கு மெனக்கெடுவதில்லை.

இப்படித்தான் ஒரு நாள் பள்ளிக்கு ஆட்டுக்குட்டியுடன் வந்துவிட்டான். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.

” என்னடா அறிவு ஆட்டுக்குட்டிய இங்கேயே கூட்டிட்டு வந்துட்ட?” என்று கேட்டால் சாதாரணமாக பதில் வந்தது அவனிடம்.

” சார், பாட்டிக்கு உடம்பு சரியில்ல, அம்மா வழக்கம்போல வேலைக்கு போயிட்டாங்க. இவன கவனிக்க ஆளு இல்ல சார். இத காரணமா வச்சு எத்தன நாள் லீவு போடுறது. அதான் சார் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.

அவன் புத்தகப் பையோடு புல்லுக்கட்டு பையும் கொண்டு வந்திருந்தான் என்பதுதான் சிறப்பு. புற்களை சிறுசிறு கட்டுகளாகக் கட்டி ஒரு பையில் எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் இருக்கும் போது அவ்வப்போது அனுமதி கேட்டு வெளியே சென்று ஆட்டிற்கு புல்லும், தேவைப்பட்டால் தண்ணீரும் வைத்து விட்டு வருவான். அவனது நடவடிக்கைகளைக் காண கண் கோடி வேண்டும். கண்ணன் சாருக்கு தான் அவனது நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது பாடவேளைகள் இரண்டிலும் கண்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆட்டினை கவனிக்க அறிவால் முடியவில்லை. ஆடும் அவனின் வருகையை எதிர்பார்த்ததுபோல் கத்திக்கொண்டேதான் இருந்தது. பள்ளியின் அமைதி சற்று குறைந்து போனாலும் அந்நாளின் கடைசி பாடவேளை என்பதால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. வயதுக்கு மீறிய அவன் பொறுப்பு, சில ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு சில நாட்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்கும் போது சில சுவாரசியமான பதில்கள் கிடைப்பதுண்டு. சில நேரங்களில் அவர்களின் வயதுக்கேற்ற சிறுபிள்ளைத்தனமான பதில்களும் வரும். சமயங்களில் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் எதிர்க் கேள்விகள் வந்து விழும். அவை நம்மை ஓடி ஒழியச் செய்துவிடும். அப்படி ஒரு நாள் எனக்கு வந்தது.

” டேய் உங்க குடும்பத்தில உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்? ஏன் ரொம்பப் பிடிக்கும்? ஒவ்வொருத்தரா சொல்லுங்க பாக்கலாம்” என்றேன்.

எல்லோரும் வழக்கம் போல் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என அவர்களின் சந்தோஷங்களுக்கு ஏற்றார்போல் தேர்வு செய்து காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அடுத்து அறிவு. அமைதியாக எழுந்தவன், கையைக் கட்டிக்கொண்டு,  என் கண்ணை பார்த்து ” ஆட்டுக்குட்டி தான் சார் இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது” என்றான்.

” சார் அவன் பட்ட பேரு ஆடுதான் சார்” என்றான் தங்கமணி.

” சார் இது சமூக அறிவியல் சார் வச்ச பேரு சார்”  இது பழனியம்மாள்.

” ஆமா சார்” , என்று வகுப்பறையே  சிரித்தது.  அறிவும் தான்.

“கண்ணன் சாரா உனக்கு இந்த பேரு வச்சது?”

” ஆமா சார். ஆனா அவர் இவன் பட்டப்பேர சொல்லிக் கூப்டுறப்பலாம் சாருக்கு தெரியாம காலர தூக்கி விட்டுக்குவான் சார்”. இது கனகவேல். மீண்டும் எங்கும் சிரிப்பு.

அழகிய தமிழே !: ஆட்டுக்குட்டி

” எல்லோருக்கும் அவங்க பட்ட பேர் சொல்லிக் கூப்பிட்டா கோபம் வரும், ஆனா எனக்கு என்னோட பட்டப்பேர் சொல்லிக் கூப்பிட்டா சந்தோசமா இருக்கும் சார். சும்மா கோவப்படுற மாதிரி நடிச்சா பசங்கத் திரும்பத் திரும்பக் கூப்பிடுவாங்க.  எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும், மனசுக்குள்ளேயே குத்திச்சுக்குவேன் சார்” என்றான்.

” ஏண்டா அம்மா, அப்பா, பாட்டின்னு  யாரையாவது சொல்லுவன்னு பாத்தா ஆட்டுக்குட்டினு சொல்ற” என்றவுடன்  வகுப்பறையே சிரித்தது ஆனால் அவன் முகம் மட்டும் சோகமாய் மாறியது.

” உங்களுக்கு யாரு சார் ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்டான்.

கேள்விகளால் வளர்கிறவன் இவன்.

” என் மகன், அம்மா, அப்பா, மனைவி, அப்புறம் நீங்க” என்றேன்.

” ஏன் சார் எல்லாரையும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?”

” நான் அதிக நேரம் செலவிடுறது இவங்க கூட தான், நான் அதிகம் அக்கரை வச்சிருக்கிறதும் இவங்க மேல தான். அதனால் தான் இவங்க, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்”. என்றேன்.

அவன் உதட்டின் ஓரத்தில் ஒரு சிறு சிரிப்பு உதித்தது. ” அதுனாலதான் சார் எனக்கு என் ஆட்டுக்குட்டிய ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.

” என்னடா சொல்ற?” என்றேன்.

” சார் எங்க அம்மா ஒருநாள் கூட என்கிட்ட பாசமா பேசினதில்ல. பக்கத்தில போனாலே எறிஞ்சு எறிஞ்சு விழுவாங்க. காரணமே இல்லாம என்ன திட்டுவாங்க. அப்பாவுக்கு குடிக்க மட்டும் தான் தெரியும். பக்கத்தில போனாலே தூர போடா தேவிடியா பயலேனு திட்டுவாரு. நீ எனக்கு தான் பொறந்தையாடான்னு என்ன அடிப்பாரு. ஆட்டுக்குட்டி தான் சார் இதெல்லாம் செய்யாம எப்பவும் என்கூடயே விளையாடிட்டு இருக்கும். அதனாலதான் சார் அத எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றான் சாதாரணமாக.

இந்த வயதில் வாழக்கூடாத ஒரு வாழ்வை அறிவு  வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது என் மனதை கணமாக்கி, கண்களை குளமாக்கியது. அவனது பெற்றோரைச் சந்தித்து இது குறித்து ஏதாவது செய்யமுடியுமா என்று யோசித்தேன். யோசிக்க மட்டுமே முடிந்தது எதுவும் செய்யமுடியவில்லை.

ஒரு நாள், ஒரு நடுத்தர வயதுக்காரர், அறிவுடன் என்னிடம் வந்தார்.  நான் இருக்கும் வகுப்பறைக்கு சற்று தள்ளி அவனை நிறுத்தியவர் என்னிடம் வந்தார். மிகவும் படபடப்புடன் என்னிடம் வந்தவர்,

 ” சார் அறிவ வீட்டுக்குக் கூட்டிட்டு போகனும்” என்றார்.

” ஏன் ? எதுக்கு?”

” சார் அவனோட அப்பா செத்துட்டாரு சார். தூக்கு போட்டுக்கிட்டாரு” என்றார் கண்ணீர் மல்க.

” ஐயையோ, எதுக்கு? என்னாச்சு? ” என்று என் கேள்விகளை அடுக்க, பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லை என்பதால், சரி என்று மட்டும் தலையாட்டினேன்.

அடுத்து ஒரு நிமிடம் கூட என்னால் பாடம் நடத்த முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு நானும் அறிவின் வீட்டுக்குச் செல்வது என முடிவெடுத்தேன். கண்ணன் சாரிடம் இதை பற்றிச் சொல்ல ” அப்பாடா !  இனி கொஞ்ச நாளைக்கு அவனோட தொல்லை இருக்காது, கொஞ்சநாள் நிம்மதியா இருக்கலாம்” என்று சிரித்தார்.

மனசாட்சி இல்லாத மிருகமாய் என் கண்ணுக்கு தெரிந்தார் அவர்.

ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது அறிவின் அப்பாவின் உடல்.  ஆங்காங்கு சிலர் நின்று கொண்டிருந்தனர். பிணத்தை எடுப்பதற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது.

மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை ...

” இப்படி பச்ச மண்ண அனாதையா தவிக்க விட்டுட்டு போயிட்டியேடா என் ராசா! கொஞ்சம் கூட இந்தப் பையனோட  நெனப்பு வல்லையாடா உனக்கு ! இவன தனியா வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேனோ !  இந்தக் குடும்பத்தை இப்படி சீரழிச்சிட்டு  போயிட்டாளே சண்டாளி! அவன் நாசமா போக ! நடுத்தெருவில் பிச்சை எடுத்து, புழுவு வச்சு சாவ ! ஓடுகாலி முண்ட ! அவ அறிப்ப அடக்க, இந்த குடும்ப வெளக்க அனச்சுட்டு போயிட்டாளே ! நான் என்ன பண்ணுவேன்” என்ற அந்தக் கிழவியின் ஒப்பாரி அங்கிருந்த காற்றையும் கரைய வைத்தது.

அறிவு, அப்போதும் அந்த ஆட்டுக்க்குட்டியுடன் தான் இருந்தான்.  கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. ஆடு அந்தக் கண்ணீரை மெதுவாக நக்கிக் கொண்டிருந்தது.

  ———- முற்றும் ——–

நிகில் ரூபன்