archiveபுதியன விரும்பு

இன்றைய புத்தகம்கல்விநூல் அறிமுகம்

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா? – இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா!

மாணவர்களுக்கு இருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள், நாடெங்கும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அவற்றில் படித்த பிறகு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை விளக்குகிறது ‘புதியன விரும்பு’ என்னும் புத்தகம். பல தமிழ் தினசரிகளிலும் வார இதழ்களிலும் பணியாற்றியுள்ள மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இவர் கல்வித் துறை தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் தனித்தன்மையுடன் எழுதியவர்.
நுழைவுத்தேர்வுகளின் நுட்பங்கள்
இந்தப் புத்தகம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. நுழைவுத்தேர்வுகள் என்பது முதல் பகுதி. மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி அறிவியல், டிசைன் படிப்புகள், தொழில் படிப்புகள் (Professional courses) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வரும் பல்வேறு படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன.
இத்தனை படிப்புகளா!
‘என்ன படிக்கலாம்’ என்ற இரண்டாவது பகுதி வேளாண் படிப்புகள், மீன்வளப் படிப்புகள், இந்திய மருத்துவம் – ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள், சட்டப் படிப்புகள், கவின்கலைப் படிப்புகள், திரைப்படத் தொழில்நுட்பப் படிப்புகள் என பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு இருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் அனைத்தையும் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது. 30-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் பற்றிய அறிமுகமும் அவற்றை எப்படி, எங்கே படிக்கலாம் என்பது குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன.
மூன்றாவது பகுதி நாட்டின் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களையும் அங்கு என்னென்ன படிக்கலாம் என்பதையும் அறிமுகப்படுத்துகிறது. ‘எங்கு படிக்கலாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பகுதி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமேட்டிகல் சயின்ஸ், மத்தியத் தோல் ஆராய்ச்சி நிலையம், கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்.ஐ.டி.எஸ்.), வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஃபுட்வேர் டிசைன் இன்ஸ்டிடியூட் எனப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத கல்வி நிறுவனங்களையும் அங்கே கிடைக்கும் வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது.
விரிவான விடைகள்
‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ என்ற கடைசிப் பகுதி உயர்கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பல முக்கியமான கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. பொறியியல் கல்லூரிகளின் தரம் பெரிதும் கேள்விக்குள்ளாகிவிட்ட சூழலில் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்ற தனித் தலைப்பின்கீழ் பொறியியல் கல்வியில் சேரும் முன் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய விஷயங்களை விளக்குகிறது. பொறியியல் கவுன்சிலிங் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளில் கல்விக் கடன், கல்லூரியில் சேரத் தேவையான பல்வேறு சான்றிதழ்கள், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் தனித் தனியாக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்தரக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்புகள் பற்றிய அறிமுகம் கிராமப்புற மாணவிகள் கவனிக்க வேண்டிய தகவல்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் பலர், உயர்கல்விப் படிப்புகளுக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பது தெரியாமல் தங்கள் ஊரில் இருக்கும் கலை-அறிவியல் கல்லூரிகளிலோ தொலை தூரக் கல்வி மூலமாகவோ ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்து பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஏழைகளுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த பரந்துபட்ட அளவில் தகவல்கள் போய்ச் சேர இதுபோன்ற புத்தகங்கள் பெரிதும் உதவும்.

புத்தகத்தை இங்கு வாங்கலாம்

 

(நன்றி: தமிழ் இந்து)