Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – M. சுரேந்திரன்.

Spread the love
இரா.முத்து நாகு எழுதிய சுளுந்தீ வெறும் “நாவல்” எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பு ஆகும். சுளுந்தீ எனும் சொல்லே பெருவாரியான தமிழ் மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு சொல். தலைப்பு போலவே மொத்த நூலின் உள்ளடக்கமும் இன்றைய ஏழு கோடி தமிழ் மக்களும் அறியாத எண்ணற்ற செய்திகளை உள்ளடக்கிய ஒரு கலைப்பெட்டகம். தமிழ் மக்களின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, மன ஓட்டங்கள் போன்றவை எவ்வாறு சில நூற்றாண்டு காலத்திற்குள் அழிந்து, சிதைந்து, உருக்குலைந்து போனது என்ற வரலாற்றைச் சொல்லும் கலைக்களஞ்சியமாக இந்த நூல் விளங்குவதுதான் இதன் சிறப்பாகும். கதையின் மைய ஓட்டமாக ராமன் எனும் ஒரு நாவிதனும், பன்றிமலைச் சித்தரும், தளபதியான முத்து இருளப்ப நாயக்கரும் இன்னும் சில பாத்திரங்களும் வருகிறார்கள். ஆனால் கதையின் உண்மையான நாயகனாக ஆசிரியர் குறிப்பிடுவது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களே ஆவர்.
இந்த நாவல் பண்டுவர்கள் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவாக இருப்பதை உணர முடியும். பண்டுவம் என்பது மருத்துவம் எனும் பொருள்படும். இன்றைய நாளில் முடிதிருத்துவோர் என்று அழைக்கப்படுபவர்கள் அந்நாளில் நாவிதன், பரிகாரி, அம்பட்டன், மருத்துவன் எனும் பெயர்களால் அழைக்கப்பட்டனர். ஆங்கில மருந்துகளின் வருகைக்கு முன் தமிழ் மக்களின் மருத்துவமானது, நாவிதர்கள் வசமிருந்த, பண்டுவத்தையே நம்பி இருந்தது. அத்தகைய பண்டுவத்தில் மருந்தாக இயற்கையில் கிடைக்கும் சில வேதியியல் பொருட்களையும், இயற்கை விளைவித்துக் கொடுத்த மூலிகைகளையும் பயன்படுத்தினர். அப்படி மருத்துவத்திற்கு பயன்படும் பொருட்களாக தாளகம், துத்தம், பூதம், மனோசீலம், வெடியுப்பு, இந்துப்பூ, சவுட்டுப்பு, கெந்தகம், ஊசிகாந்தம்,  நாவி, கடுக்காய், மாச்சக்காய், தான்றிக்காய், பூண்டு, மிளகு, கல்பாசம்  ஆகியவற்றை நாவலாசிரியர் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். நாவிதர்கள் கதையை சொல்ல வந்த ஆசிரியர், பாண்டியர்களுக்கும், விஜயநகர அரசர்களுக்கும், ஏற்பட்ட சச்சரவுகளை சொல்லிக் கொண்டு போகிறார். விஜயநகர ஆட்சி வந்தபின் பாண்டியர்களிடம் வேலை பார்த்த அந்தணர், பண்டாரம், தச்சர், குயவன், செட்டி, சாலியன், செம்மான்  போன்ற குடி தொழில் செய்த குலங்களுக்கு பதிலாக, அரண்மனைக்கு வேண்டிய தெலுங்கு, கன்னடம் பேசுகிறவர்களை விஜய நகரத்திலிருந்து கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் எப்படி தமிழ் பேசும், மக்களுக்குள் வந்து சேர்ந்திருப்பார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவே பதிலாகும்.
அலோபதி என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவம் தமிழ் மண்ணில் காலூன்ற தொடங்கும் முன்னர் இருந்த மருத்துவ முறையும் அதை கையாண்ட மருத்துவர்களும் எங்ஙனம் பல்வேறு அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காக அழிக்கப்பட்டனர் என்பதை இந்த நூல் விலாவாரியாக எடுத்துரைக்கிறது. பன்றிமலை சித்தரும் அவர் சிஷ்யனான ராமன் எனும் இரு பாத்திரங்களின் மூலம் கதையோடு கதையாக பல்வேறு நோய்களான ரத்த கழிச்சல், அடிபட்ட வீக்கம், பாம்புகடி, கத்திக்குத்து காயம், ஓரண்டவாயு, ஆண் பெண் மலட்டுத்தன்மை, விஷக்கடி, மலச்சிக்கல், ஆண்மைகுறைவு, தசைப்பிடிப்பு, வெட்டவாயு, தொண்டைப்புண் மற்றும் பதினெட்டு வகையான ஜன்னி ஆகிய நோய்களுக்கு இந்நூலில் மருத்துவம் சொல்லப்பட்டுள்ளது! நாவல் முழுதும் ஏராளமான சொலவடைகள், ஆங்காங்கே நாவலுக்கு மெருகூட்டுவதை உணர முடிகிறது. அரண்மனைக்காரி, மார்பு பெருக்க மருந்து கேட்கிறாள். மருந்து சொல்லும்முன் ஆசிரியர் ஒரு சொல வடையை சொல்கிறார். “குளத்தில் பிடிக்காத மீன் பெருகும், கை படாத முலை சிறுக்கும்” எனும் சொல வடையை சொல்லி, பே பீக்க இலையை கசக்கி மார்பில் தேய்க்க பால் மடி கணக்கும் என்று மருத்துவம் சொல்கிறார்.
சுளுந்தீ பற்ற வைக்கும் – 'தீ ...
“ஆவாரை பூக்கலேன்னா, சாவோரை பாக்கலாம்” என்பது சொலவடை. “மங்கின காலத்துக்கு மாங்காய், பொங்கின காலத்துக்கு புளி” என்பது இன்னொரு சொலவடை. மாங்காய் அதிகமாய் விளையும் காலத்தில் மழை குறைவாகப் பெய்து பஞ்சம் நீடிக்கும், கூடவே இன்னொரு தகவலையும் ஆசிரியர் சொல்கிறார். மழை வரம் வேண்டி கோழிகள் வெயிலில் படுத்து “மழை வரும் என்று அவைகளுக்குத் தெரிந்தால்தான் அவை எழுந்திருக்கும். இல்லையெனில் அப்படியே உயிரைவிடும்” என்ற கிராமத்து மக்களின் நம்பிக்கைகளை கூறுகிறார்.
ராமன் என்ற நாவிதனின் வாழ்க்கை சம்பவங்களை ஒட்டிச் சொல்லும் இந்நாவலில், நாவிதர்களின் பெருமை, அவர்கள் தொழிலில் சந்திக்கும் சங்கடம், நாவிதர்கள் பின்பற்ற வேண்டிய கமுக்கம் என சங்கதிகளை பல்வேறு இடங்களில் நாவலாசிரியர் கூறுகிறார். நாவிதர்கள் தொழிலில், அவர்கள் தாண்டிவரும் பல்வேறு சங்கடங்களையும், இறந்தவர்களின் உடலுக்கு, ஒரு நாவிதன் செய்யும் சடங்குகளையும் விரிவாக விஞ்ஞான பூர்வமாக பதிவிடுகிறார். பிணத்தைக் குளிப்பாட்டி, குங்கிலியம், சாம்பிராணி சேர்த்தரைத்து பிணத்தின் மேலே பூசினால் பிணம் நாற்றமெடுக்காது. கிருமியும் பரவாது என்ற விஞ்ஞான கருத்தை பதிவிடுகிறார். ஒரு மனிதனின் உடலை, அவனை அடுத்து தெரிந்தவன் நாவிதன். அதன்பின் அவன் மனைவி என்று சொல்வதன் மூலம், நாவித தொழிலின் உன்னதத்தை உரக்கப் பேசுகிறார்.
இன்றைய முகச்சவரம் செய்யும் ரேசர்களும், பிணத்தை வைக்கும் (Freezer) பிரீசர் பாக்சும் இல்லாத காலத்தில், நம் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் எனும் கதையை பக்கம் பக்கமாக விவரிக்கிறது இந்த நூல். குறிப்பாக இறப்பின் போது நடக்கும் சடங்குகளை, அவற்றிற்கான பின்னணிக் காரணங்களோடு விளக்கமாக உரைக்கிறார். இந்த விவரங்களுக்கு இடையே  தொன்று தொட்டு வந்த பல்வேறு நம்பிக்கைகளும் அடங்கும். இன்று நவநாகரீக உலகமாக மாறிப் போய், தன் மரபையும், கலாச்சார அம்சங்களையும், மறந்துபோன தமிழர்களுக்கு, இந்நூல் அவர்களின் முன்னோர்களை பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களை அள்ளி வீசும் கலைக் களஞ்சியமாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
தீப்பெட்டி பயன்பாட்டுக்கு வருமுன், மக்கள் எப்படி தங்கள் தினசரி உபயோகத்திற்கு, தீயை பாதுகாத்து வந்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் பதில் தெரியாது. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இப்புதினத்தில் ஆங்காங்கே விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்நாட்களில் ஊருக்குப் பொதுவாக உள்ள அக்கினிக் குண்டத்தில் தீக்கங்குகள் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும். ஏதோ ஒரு சமயத்தில் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் சண்டையில் தீ வைப்பது நடந்துவிட்டதால், இது ஆட்சியில் உள்ள அரண்மனையாளர்கள் கவனத்திற்கு வர, அம்மன் கோவிலில் இருந்த அக்கினிக்குண்டம் அகற்றப்பட்டது.  அகற்றப்பட்ட அக்கினிக்குண்டம், அரண்மனை குடிபடை தலைவர்கள் வீட்டுமுன் அணையாமல் எரிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதையே இன்னொருவிதமாக சொல்வதெனில், வீட்டில் அடுப்பு பற்ற வைக்கக்கூட குடிமக்கள், அரண்மனையார் தயவில் வாழவேண்டி இருந்தது என்பதே நாம் அறியும் செய்தி.
இந்த புதினத்தில் இன்று புழக்கத்தில் இல்லாத ஏராளமான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அத்தகைய வார்த்தைகள், சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
“சுளுந்தீ, தளுகை, பொடவு, தமிர், கவ்வை, கமுக்கம், இருபிறவி, சவுடி, வரை, அலுங்கு, கூந்தாளம், நாம்பல், கெவி, வல்லை, கால்மொழி,  சத்தை, நாங்கிலி, குதுவலை, ஈராங்காயம், கிணிங்கிட்டி, சொதை, சோட்டாள் போன்றவை அவற்றுள் சில.”  இவையன்றி, நாவல் முழுக்க ஏராளமான தாவரங்களின் பெயர்களை போகிற போக்கில் நாவலாசிரியர் சொல்லிச் செல்கிறார். அந்த தாவரப் பெயர்களில் பல்வேறு மூலிகைச் செடிகளின் பெயர்களும் அடக்கம். அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள செடி, கொடி மரங்களின் பெயர்கள் சிலவற்றை பார்ப்போம்:
“ உசில இலை, கல் இச்சி மரம், கருங்கொடி வேலி, பேக்கடுகு,  தோதகத்தி, உசில், சாக்கணத்தி, தலைசுருளி, ஊணங்கொடி, கிளாச்சிக்காய்,  கச்சகுமட்டிக்காய், தெள்ளுகொடி, பொன்னாவரை, நீர்மருது, விராளி, நொச்சி, சித்திக்கொடி, மாசிக்கொடி, வெள்ளரருகு, இச்சிமரம்,   உசிலஇலை , வெப்பாள இலை, குள்ளைப்பூ” ஒரு நாவல், நாவல் என்ற உள்ளடக்கத்தை மீறி நாவலின் ஓட்டத்தையும் மீறி, எத்தனை விதமான செய்திகளை சொல்ல முடியும் என்பதற்கு, இந்நாவல் ஓர் உதாரணம் ஆகும். துணிதுவைக்கும் நுணுக்கத்திலிருந்து, பூமியின் ஆழத்தில் நீரோட்டத்தைக் கண்டு பிடிக்கும் கூவக சாத்திரம், குதிரையை வகைப்படுத்தும், குதிரைவாகடக் கலை என எண்ணற்ற சேதிகளை உள்ளடக்கியதுதான் சுளுந்தி நாவல். துணிகளை துவைத்து வெளுக்க வெள்ளாவியில் அடுக்கும்போது கூட குலவாரியாக, கீழே மேலே என்று பார்த்து அடுக்கிய செய்தியை, படிக்கும் போது இந்த சமூகம் எத்தகைய மோசமான நோயினால் பீடிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதே அவலம் இன்றுகூட சற்றே மாறுபட்ட வடிவத்தில் சமூகத்தில் ஊடும் பாவுமாய் இழையோடியிருப்பதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.
நாவிதர்களின் வாழ்க்கை கதை ...
குலநீக்கம் என்ற பெயரில் சாதாரண குடிமக்கள் அனுபவித்த வன்கொடுமை பற்றிய செய்திகள் நெஞ்சை உருக்குவன. குலநீக்க காரணங்களும், அதனால் கீழ்த்தட்டு மக்கள் அனுபவித்த துன்பங்களும், குலநீக்கத்தில் இருந்து விடுபட நடைமுறை படுத்தப்பட்ட சடங்குகளும், தமிழ்மக்கள் வரலாற்றில் ஒரு பெரும் துயரம் ஆகும். இதுவரை வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தியாகும் இது என்று கூட கூறலாம்.
இதுவன்றி paranorm வகையில் சொல்லத்தக்க சில செய்திகளும் நூலில் காணப்படுகிறது. பசு ஒன்று சினையாகி கன்றினை பெற்றெடுக்காமலே பால் கறக்க வைக்கும் வித்தை ஒரு மருத்துவக் குறிப்பு என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. கிணற்று நீரை உறைய வைத்து அதன்மேல் தலையில் நடப்பது போல் நடப்பதாக ஒரு செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இதுவன்றி குறளிவித்தை பற்றிய ஒரு விரிவான செய்தி ஒரு சம்பவம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்நாவல் பல கேள்விகளுக்கு விடைதரும் ஒரு வரலாற்று பெட்டகமாகவும், தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்கள் இடையே வழங்கிவரும் கதைகள் குறித்தும் மிக சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது. நாவல் முழுக்க ஏராளமான ஊர்கள் பற்றிய குறிப்புகள், ஆறுகள் என பல்வேறு புவியியல் உருகளை உள்ளடக்கி இருக்கின்றது.
இதுவன்றி, சமணம் அழிந்த கதை, நம் சமூகத்துக்குள் புகையிலை வந்த கதை, சிற்பக்கலை மற்றும் இதுவரை வெளிவராத எண்ணற்ற செய்திகளை மிகமிக நுணுக்கமாக நாவலின் ஓட்டத்தில் ஊடே ஆசிரியர் சொல்லிச் செல்லும் நயத்தைக் கண்டு வியக்காமலிருக்க முடியவில்லை. மொத்தத்தில், சுளுந்தி எனும் இந்த நாவல், நாவல் என்ற ஒரு சொல்லுக்குள் அடக்க முடியாத பன்முக தோற்றங்களைக் கொண்டு விளங்குவதை இதை வாசிக்கும் யாரும் உணராமல் இருக்க முடியாது! சுளுந்தீ தமிழ், இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி படைப்பு என்பதும், இது சாகித்ய அகாதமி போன்ற பெருமைக்குரிய பரிசுகளுக்கு உகந்த நூல் என்றும் நிச்சயமாக சொல்ல முடியும்.
நூல்: சுளுந்தீ  நாவல்
ஆசிரியர்: இரா.முத்து நாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம்
விலை: ₹450.00
********

Leave a Response