Article

”சூட்கேஸ் – கேக்” இரண்டும் வேறு வேறல்ல. -இரா. தங்கப்பாண்டியன்

Spread the love

 

கடந்த  இரண்டு  நாட்களாக  வெளி மாநிலங்களிலிருந்து  தினக் கூலியாக வந்தவர்களைச்  சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் சக அலுவலர்களோடு சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறேன்…  மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற  மாநிலங்களைச் சேர்ந்த உழைப்பாளிகள். வேலையன்றி ஏதுமறியாதவர்கள். முகாம்களுக்குள் நுழையும் வாகனங்களைப் பார்த்ததும் தேவதூதர்களைக் கண்டது போலப் பரவசம் அடைகிறார்கள்.

பாவம் இந்தி தவிர வேறெந்த மொழியுமறியாத சனங்கள்…..சொந்த மண்ணில் வாழ வழியில்லா நிலையில் தம்மை ஆண்ட பரம்பரைகள் கை கழுவிய நிலையில் நாடே பரதேசமென்று எங்கெல்லாம் வேலைக்கு ஆட்கள் தேவையோ அங்கெல்லாம் புறப்பட்டு வந்த உழைப்பாளிகள்.  கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக, செங்கற்சூளைத் தொழிலாளர்களாக, கட்டிடத் தொழிலாளர்களாக, மலைப்பிரதேசங்களில் தேயிலை காப்பித் தோட்டத் தொழிலாளர்களாக, உயர்தர உணவு விடுதிகளில் எடுபிடிகளாக வந்து சேர்ந்தவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் நிற்கிறார்கள். தங்க வைக்கப்பட்ட முகாம்களில் திக்குத் தெரியாமல் விழி பிதுங்கு நிற்கிறார்கள்.

மலுங்க  மலுங்க விழித்துக் கொண்டு, தங்கள் கண் முன் நடப்பது  ஏதுமறியாத   படிப்பறிவு வாசம் அறியாத, ஊரடங்கு காலத்தில் மட்டுமே பள்ளிக்கூடம் ஒதுங்கிய சிறுவர்கள்…..தனது வாழ் நாள் முழுவதும் துன்பம் மட்டுமே எஞ்சிய  நிலையில் தேசாந்திரம் சென்றாவது தங்கள் பிள்ளைகள் வாழத் துணையிருப்போம் என எண்ணி பேரன் பேத்திகளைப் பராமரிக்க வந்த  குறுகிப்போன முதியோர்கள்…..  சொந்த ஊருக்குப் போன பிறகே சீவி முடிப்பேன் என்று சபதம் போட்டது  போலத் தலைவிரி   கோலமாய் சுல்லி அடுப்பின் முன் அமர்ந்து சப்பாத்தி  சுடும்  பெண்கள்……

முகாம்களில் உள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச உதவிகளாவது கிடைக்கிறதா என்று ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு தாங்கள் சுட்டு வைத்திருக்கும் சப்பாத்திகளைத் தந்து சாப்பிடச் சொல்லும் பண்பு…..

இவர்கள் பேசும் மொழி புரியா விட்டாலும் அதிலுள்ள பரிதவிப்பை அறிந்து கொண்டு தங்களால் இயன்றதைச்  செய்யும்  உள்ளூர்  உழைப்பாளிகள்….. தெரியாத மொழியில் உணர்வுகளோடு உரையாடிக் கொள்ளும் சைகை பாஷைகள்…..

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய  லாரிகளோடு  ஆட்களையும் வாடகைக்குக் கூட்டி வந்த கங்காணிகள்…  தொழிலாளர்கள் பசியோடு இருந்த நேரமெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து விட்டு இப்போது முகாம்களில் உள்ளவர்களின் மனசைக் கரைத்து எப்படியாவது அவர்களை சொந்தவூர்  செல்ல விடாமல்  தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் முதலாளிகள்…..

…..இப்படியெல்லாம் மக்களைத் துன்பக் கேணியில் தத்தளிப்பதைப் பார்த்து விட்டு என்னால் எப்படி கவிதை படிக்க முடியும்….?  சொந்த சகோதரர் சோற்றுக்காய் வரிசையில் நிற்கும் போது நானெப்படி தனித்திருந்து  கதையெழுத  முடியும்….?

நாடு விடுதலை அடைந்த காலத்திலிருந்து நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து விழுக்காடு மக்கள் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் நிலையில் தான் நம் தேசம் இன்னும் உள்ளது. தங்களின் சொந்த ஊரை விட்டு, மாவட்டம், மாநிலத்தை விட்டு 4.14 கோடித் தொழிலாளர்கள் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எழுபது விழுக்காட்டினர் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 

Just Let Us Go Home': Tamil Nadu's Migrant Workers At Mercy Of ...

தமிழக தொழிலாளர் நலத் துறைக்காகத் தனியார் நிறுவனம் சார்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும், 14 சதவீதம் பேர் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளிலும், 11.4 சதவீதம் பேர் கட்டுமான துறையிலும் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்ஜினியரிங் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் 3 லட்சம் பேர், டெக்ஸ்டைல் மற்றும் அதைச் சார்ந்த தொழிற்சாலைகளில் 2 லட்சம் பேர், கட்டுமான துறையில் ஒரு லட்சம் பேர், ஓட்டல், லாட்ஜ், உணவகங்களில் 98 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மையாலும், குறைந்த சம்பளம் கிடைப்பதாலும்தான் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்து வந்து பணிபுரிகின்றனர். நம்முடைய தேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பது வேதனையானது. 

பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பிழியப்பட்ட தொழிலாளர் உழைப்பின் வலியைப் பற்றி விடிய விடியப்  புலம்பினாராம்  பாரதியார்…. இதோ  இன்று  நம் ஊரில்  நம் மக்கள் வேலையின்றி வாழ்வின்றி எதிர்கால வாழ்வின் பயத்தில்  தவிக்கிறார்கள்….வெளி மாநிலத்திலிருந்து  வந்தவர்களுக்குச்  சொந்த ஊர்  செல்ல வழியில்லை உள்ளூரில்  உள்ள உழைப்பாளிக்கு ஊரடங்கு காலத்தில் உணவில்லை.

நாடெல்லாம் பரவிக் கிடக்கும் கல்யாண மண்டபங்களில் அடுப்பூட்டி விதவிதமாய் உணவு சமைத்து கோடிக்கணக்கான இலைகளில் பரிமாறிய லட்சக்கணக்கான சமையல் தொழிலாளிகளுக்கு வேலையில்லைஅடுத்த வேளை உணவுக்காய் தெரிந்தவர் அறிந்தவர்களின் வீடுகளில் கடன் கேட்டு  நிற்கிறார்கள்…..

மாசி பங்குனி சித்திரைத் திருவிழாக்களில் வீதி வீதியாய் மேளமிசைத்து, தப்படித்து, உறுமி தட்டி, ஊரையே அதிர வைத்த கலைஞர்களின் குடும்பங்களில் இன்று வறுமை இசைக்கப்படுகிறது. கேட்க வேண்டியோரின் காதுகளில் தான்  ஈயம் அடைத்துக் கொண்டது

வண்ண வண்ண விளக்குகளாலும், மெல்லிசையாலும் விதவிதமான பாடல்களோடு அனைத்து தரப்பினரின் மனங்களைக் கவர்ந்த மைக்செட்காரர்களில் வாழ்வில் சோகம் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக விலகல் என்பது இவர்களைப் பொறுத்த வரையில் எதிர்கால வாழ்வின் மீது விழுந்த பேரிடர். ஊரடக்கிப் பந்தல் போட்டவர்கள் எல்லாம்  அவரவர் வீடுகளின் முன் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Why India's Legal and Labour System Needs to be Reconfigured to ...

உங்கள் முன் யாசித்து நிற்பவர்களைக் கூர்ந்து பாருங்கள் அவர்களில் வேலனாக, வள்ளியாக, சிவனாக, நாரதராக வந்து பிரம்மாண்டம் தந்த  ராஜபார்ட் நடிகர்கள் இருப்பார்கள்…  திருவிழாக்கள் வரும் போது  இவர்கள் வருவார்கள்.  திருவிழாக்களே இல்லாத போது யார்  உதவுவார்கள்?

முகநூலிலும்  வாட்ஸ் அப்பிலும் நாகரீகமாக ஹாய் சொல்பவரின் முகவரி தேடிப் பாருங்கள்…. உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் மூன்று மாதம் சம்பளம் வாங்காத ஆசிரியர்களாக இருப்பார்கள்….. நட்பு வட்டத்தில் இணைந்த பிறகு நாகரீகமாய் கடன் கேட்கக் கூடும். மறுக்காமல் இருப்பதைக் கொடுங்கள். பணிக்காலமெல்லாம் யாருக்காக விசுவாசத்தைக் காட்டினார்களோ அந்த முதலாளிகள்  கண்டு கொள்ளாததால்  உங்களிடம்  வருகிறார்கள்…..

….இப்படி தேசமெல்லாம்  எளியோர் சாகும் இழி நிலை எப்போது முடியுமோ தெரியாது. அப்போதும்  இப்போது போலவே சொல்வார்கள்….  ”நோயோடு வாழுங்கள் என்று தானே சொன்னோம். சாகவா சொன்னோம்.” என்றும்  ”சூட்கேஸைச்  சுமங்கள் ” என்றும்.

நீரோவின்  வாரிசுகளுக்குத் தெரியாது.. பஞ்சத்தால்  புலம் பெயரும் மக்கள் சுமந்து செல்வது துயரங்களை மட்டும் தானன்றி சூட்கேஸ்களை அல்ல என்று, நோயை விடவும் கொடியது வறுமை என்றும், அதனினும் கொடியது சொந்த நாட்டில் அகதியாகி நிற்கும் அவலம் என்றும்.

அவர்கள் வாங்கிய சூட்கேஸைப் போலவே, அவர்கள் சுமந்த சூட்கேஸைப் போலவே எல்லோரும் வாங்கிச் சுமப்பார்கள் என்று நினைத்திருப்பார்கள். பசித்த வயிற்றிற்கு ரொட்டி இல்லையே என்ற போது , ”ரொட்டி இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பரம்பரையின் எச்சங்களிடமிருந்து வந்த மிச்ச வார்த்தைகளே இவைகள்.

 பாவம்  அறிந்தே  தவறு செய்யும் அவர்களைக் காலம் பார்த்துக் கொள்ளட்டும். அறியாது சாகக் கிடக்கும் எளிய  சனங்களை நாம் காப்பாற்றுவோம். நம்மால்  இயன்றதைச்  செய்வோம்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery