Book Review

புத்தக அறிமுகம்: நான்காம் ஆசிரமம் – பெ. அந்தோணிராஜ் 

Spread the love
    R.சூடாமணி தமிழகத்தின் பெண் எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்கவர்.
      காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். புராண கதாபாத்திரங்களை மனிதர்களாக மட்டுமே அணுகமுடியும். அவதாரம் போன்ற தெய்வீக கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்ன முற்போக்குவாதி சூடாமணி. அதுமட்டுமல்ல தன்னுடைய பதினோரு கோடி பெறுமானமுள்ள சொத்தை தொண்டு நிறுவங்களுக்கு எழுதி வைத்து புரட்சி செய்தவர், பிரமிப்பாக இருக்கிறது அல்லவா, கதைகளும் அவ்வாறே நமக்கு பிரமிப்புகளை கொடுக்கும்.
         நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்ணின் துயரப்பாடுகள், மனித மனதின் இயல்புகளை தன்னுடைய படைப்புகளில் விவரித்தவர். மனச்சலனங்கள், உணர்வுபோராட்டங்கள், உன்னதங்கள் ஆகியவையே இவருடைய கதைகளில் பேசப்பட்டிருக்கும்.
       “அக்கா” என்ற கதையில் வரும் பர்வதம், தங்கைகளுக்கோர் வரம். மின்னல் கீற்றாய் மறந்துவிட்ட தன் தாம்பத்ய வாழ்வை பற்றி யோசனையற்று தன் தங்கைகள் வந்து தங்கிப்போகும் அந்த ஒரு இரண்டுமாத காலத்திற்காக பத்து மாதங்கள் காத்திருக்கும் ஒரு பாசம் மிகுந்த ஒரு உறவு யாருக்கு கிடைக்கும். அக்கதையில் வரும் கங்காக்கள் ஊர் தோறும் இருக்கிறார்கள், மற்றவரின் வாயைபிடுங்கி வரும் வார்த்தைகளில் வெளிப்படும்  வரும் உணர்வுகளை ரசிப்பவர்கள் இருக்கும் வரை கங்காக்களும் இருக்கவே செய்வார்கள். சாதாரணமாக மிக கவனமின்றி நம்மிடமிருந்து வெளியேறும் சின்ன வார்த்தைகள் கூட ஒருவரை எந்தளவுக்கு புண்படுத்தும் என்பதை அருமையாக கூறியுள்ளார். உறவுகளுக்குள் எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.
       “ஒரு கீற்றுப் பொன்” என்ற கதையில் வரும் சாமா நம் மனதை தொடுவார். ஒரு மனிதன் வாழ்நாள் முழுதும் ஒரே மாதிரியான குணம் கொண்டவனாக இருக்கமுடியாதுதானே. தன்னுடைய தரித்திரத்தை போக்குவதற்கு மாதம் தோறும் தனக்கு உதவியளிக்கக்கூடிய ஒருவரின் மகனுக்கு தானும் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து, ரயில் ஏறப்போகும் சமயம் அவசர அவசரமாக தன் கையில் இருக்கும் ஒரு பேப்பர் பொட்டலத்தை கொடுத்து விட்டு நகரும்போது, அதனுள் இருக்கும் நான்கு வாதாங்கொட்டை மிட்டாய்களை பார்க்கும் பொது கண்ணீரால் நம் கண்கள் நிறைந்து போகிறது. அந்த நெருங்கலான வடிவம் கண்ணை விட்டு அகலாமல் இன்னும் இருக்கிறது.
ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள் ...
        அடுத்து, “அன்னையின் முகத்துப் புன்னகை” எனும் கதை,   இளம் வயதில் விதவையான ஒரு தாய்க்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கும் மணியை போன்றவர்களை பார்க்கும் பொது பீஷ்மர் போன்ற ஒரு மனிதனும் உண்மைதானோ என எண்ணதோனுகிறது. அந்த அன்னையின் மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள் அப்பப்பா பிரமாதம். ஒவ்வொரு கணமும் தன் மகனின் முகத்தையே பார்த்து, வருத்தம் வந்தாலும் அதையும் மீறிய ஒரு மகிழ்ச்சியும் அவளிடம் காணமுடிகிறது. அன்னையை எப்போதும், எந்தவொரு கணத்திலும் சந்தோஷமாகவே வைத்துக்கொள்ள விரும்பும் மணி, அன்னையர்க்கு ஒரு வரம்.
       “நான்காம் ஆசிரமம்” என்ற கதை, உண்மையில் இது சாத்தியமா என்று எண்ண வைக்கின்ற கதை. வேதங்களில் கூறும் ஒரு மனிதனுடைய நான்கு வாழ்க்கை நிலைகள் ஏன் பெண்களுக்கும் இருக்கக்கூடாது என்று வினா எழுப்பும் ஒரு கதைதான் நான்காம் ஆசிரமம். ஒரு பெண் எழுத்தாளர் இதை எழுதும்போது எத்தைகைய எதிர்வினைகள் வந்திருக்கும் என்று என்னும்போது எழுத்தாளரின் உறுதியை பாராட்டவே வேண்டும். சங்கரி 16 வயதில் காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள், 21வயதில் மறுமணம் நடக்கிறது, திருப்தியான தாம்பத்ய வாழ்க்கையின் விளைவாக இரண்டு குழந்தைகள். குடும்பத்தை உதறி விட்டு கணவனிடமிருந்து விவகாரத்துப் பெற்றபின்னர், தன்னை விட 20வயது மூத்தவரான ஒரு பேராசிரியரைவிரும்பி திருமணம் செய்துகொண்டு, பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து அவரிடமிருந்து விடுபட எண்ணி மீண்டும் ஒரு தடவை விவாகரத்து பெற விரும்புகிறாள். அதை அந்த பேராசிரியர் மறுக்க மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள். இக்கதையில் வரும் இரண்டாவது கணவனும், மூன்றாவது கணவனும் பேசுவது மாதிரி கதை அமைந்துள்ளது. இருவருமே சங்கரியை நான்கு புரிந்து கொண்டவர்கள். சங்கரிக்காக பரிதாபப் படுகிறார்கள். இக்கதையில் சூடாமணியின் எழுத்து திறத்தை நன்கு அறியலாம். உதாரணத்துக்கு ஒன்று,  அவள் ஏன் காதல் கல்யாணம் முதலில் திருமணம் செய்துகொள்கிறாள் என்பதை பேராசிரியர் கூறுவது மாதிரி அமைந்துள்ளது.
“அந்த பதினாறு வயது பருவம் என்பது, இந்த உலகம், உயிர்களெல்லாமே புத்துணர்ச்சியோடு, ஒரு அற்புதமாய் தோன்றுகிற பருவம். இதயம் கண்விழிக்கின்ற நேரம் (இப்படி ஒரு நேரத்தை இது படிக்கிறவரை கேள்விப்பட்டதில்லை). எல்லாமும் பேரழகாயும், பேராச்சர்யமாய் காணும்  புதுமைப் பருவம், ஒவ்வொரு நாளுமே ஒரு கனவாக மயக்க போதை தரும் இன்பப் பருவம் அந்தப் பரவசத்தில்தான் அந்த முதல் கல்யாணம் நடந்தது. “
     “அவள் ஒரு விரிவு, அவள் ஒரு முழுமை, அவள் ஒரு பெருக்கம், அவைகளை பிறப்புரிமையாகக் கேட்கும் முதிர்ச்சியல்லவா அவளுடையது”.
        இக்கதை படித்த அன்று பவா செல்லத்துரையின் “தஸ்லிமா “பற்றி அவரின் பேச்சைக் கேட்டேன். ஆச்சரியமாக இருந்தது, வசதிமிக்க வாழ்வை சட்டென உதறிவிட்டு கணவனிடமிருந்து பிரிந்து ஆட்டிச குழந்தைகளுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட தஸ்லிமாவை கேட்க நேரிடும்போது அந்தக் கதையில் ஒரு சமாதானம் ஏற்பட்டது.
படித்தவை ரசித்தவை – 10 | arusuvai
       “விருந்தினர்களில் ஒருவன்” என்ற கதையில் சுகந்தி, இளவயது, இரண்டாம் தாரமாக நடுவயது நடேசனுக்கு மனைவி, தன் அழகை பேணிக்காப்பவள், அந்த வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் ஒருவனான இளைஞனிடம் கணநேரத்தில் தன்மனதை விட்டுவிட்டு, பின் அதற்காக வருத்தப்படுவதும் இறுதியில் இதையெல்லாம் புரிந்து கொண்டு சுகந்தியின் முதுகைத்தடவி ஆறுதல் ஏற்படுத்தும் நடேசன் , வாழ்வின் தடுமாறல்களையும், உன்னதங்களையும் உணர்த்துகிறார்கள். இதை வாசிக்கவும் பரசுராமர் கதை நினைவுக்கு வருகிறது. அன்று மனதில் ஒரு ஓரத்தில் சபலப்பட்டு நின்ற ரேணுகாவை இப்படி ஆறுதல் படுத்தியிருந்தால், பாவம் பரசுராமர் தன் தாயை கொலை செய்திருக்க மாட்டாரே.
நடராஜனிடம் இருந்த ஒரு முதிர்ச்சி அன்று அந்த பரசுராமரின் தந்தையான முனிவருக்கு இல்லையே!! வருத்தப்படமட்டுமே முடியும்.
       “தனிமைத் தளிர்” என்ற கதையில், சிறுமைத்தனமே குணமாயுள்ள ஒரு IAS அதிகாரியான ஒரு தந்தையும், தாயின் அன்புக்காக ஏங்கும் குழந்தை கண்ணகியும், இவர்களுக்கு இடையில் கிடந்து அல்லாடும் தாயும்தான் கதை மாந்தர்கள். தன்னை நிராகரித்த பெற்றோரை இறுதியில் நிராகரிக்கும் கண்ணகி, நம்முள் பரிதாபத்தை ஏற்படுத்துகிறாள்.
        “செந்திரு ஆகிவிட்டாள்” என்ற கதையில், ஒரு பெண் மனைவியாக, தாயாக, சிறந்த மாமியாராக வாழ்ந்து முடித்த பின்னர், ஓய்வுநிலையில் அதுவரை தன்னுள் ஒளிந்திருந்த பாடகியை, டைலரையும், ஆசிரியரையும், சமூக ஈடுபாட்டையும் வெளிக்காட்டி நிஜமான மனுசி வெளிப்பட்டதை அருமையாக காட்டியுள்ளார்.
     மேலும் இந்நூலில் கதைகள் உள்ளன. அனைத்துமே சிறந்த கதைகளே. ஆனந்தவிகடனில் சிறுகதை சிகரங்கள் என்ற வரிசையில் வந்துள்ள அருமையான புத்தகங்கள்.
      பெண் தன்னுடைய சுதந்திரத்திற்காக யாரை எதிர்பார்க்கவேண்டும்? பெண்ணின் இளமைதொட்டு, முதுமை வரை அவள் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு தடைக்கற்கள், அவள் சந்திக்கும் ஆண்கள் அவளுக்கான சுதந்திரத்தை போற்றுகிறார்களா? என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நூல்: நான்காம் ஆசிரமம் 
ஆசிரியர்: R.சூடாமணி 
பதிப்பகம்: விகடன் 
விலை: ரூ. 95
அன்புடன்,
பெ. அந்தோணிராஜ் 
தேனி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery