Poetry

ஸ்டாலின் சரவணன் கவிதைகள்!!

Spread the love
1.
நானே எனக்கு!

பற்றிக்கொள்ள இரு கைகளையே

உற்றுக் கவனிப்பவர்கள்
தேம்பி அழத் தோள்களுக்காக
ஏங்கி இருப்பவர்கள்
தூரத்தில் கேட்கும் பாடலுக்காக
காதுகளைத்  தீட்டிக் கொள்பவர்கள்
இவர்கள்
நோயுற்றவர்கள்
நானோ
எனக்கான கைகளையே இறுக்கிக் கொள்பவன்
என் தோளில் நானே சாய்ந்து அழுபவன்
எனக்கான பாடலுக்காக விரல்களைக்
கம்பியில் அறுத்துக் கொள்பவன்
நானே ஆரோக்யாவான்!
தரதரவென இழுத்து வேனில் ஏற்றி
ஒரு ஸ்டெதஸ்கோப்பிற்கு என் இதயத்தை தள்ளுகின்றனர்
அதன் சீரான இசைக்கு கண் மயங்கும்
மருத்துவரோ
எழுந்து என் கைகளைக் கோர்த்துக் கொண்டு
ஆடத் தொடங்கிவிட்டார்
இன்னொரு கைகளை விரும்பாத நானோ
உதறிவிட்டு ஓடத் தொடங்குகிறேன்
ஒரு நோயாளியை இழக்க மருத்துவமனைக்கு விருப்பமில்லை.
அதோ
அவனேதான் பிடியை நழுவ விட்டுவிடாதீர்கள்!
2.
நீலம் பாரிக்கும் தொண்டைகள்!
ஒரு வட்டத்திற்குள் நடப்பதென்பது
இலகுவானது தான்
மனமோ
 நடப்பதை விட்டுவிட்டு
அதிகாரி ஊதும்
விசிலுக்கு லயப்பட்டுவிட்டது
அதோ அவர் ஊதுகிறார்
நான் நடக்கிறேன்
என் வீட்டுக்கு நூறு கிலோமீட்டர் தள்ளி என்றாலும்கூட
அவர் ஊதலை நிறுத்தினால்
நான் நிற்கப் பழகிவிட்டேன்
எல்லாம் ஒரு விளையாட்டாகி நாட்களாகி விட்டன.
வேனலுக்கு ஆறுதலாக
சுழன்று கொண்டிருக்கும்
மின்விசிறி வரையும் வட்டத்தை
ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.
மனமோ தாறுமாறாக தெருவில்
சட்டையைக் கிழித்துக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறது.
நேரலையில்
சமூக ஆர்வலர்கள் மின் கட்டணத்தில்
சலுகை கோருகின்றனர்
பீஸ் கட்டை பிடுங்கியே பழக்கப்பட்டு விட்ட
மின்வாரிய அதிகாரியோ வாயில்
பேட்டரியை அதக்கிக் கொண்டு
சமாளிக்கிறார்.
சிதைவுற்ற மனமோ மின்விசிறிகளின் தகடுகளைப்
பிடுங்கிக் கழுத்தை
கரகரவென அறு என்று
கூப்பாடுப் போடத் தொடங்குகிறது
அதற்குள்
வீட்டு வாசலுக்கு கணக்கெடுப்பாளர் வந்துவிட்டார்
இருமுபவர் எத்தனைப் பேர்
சளி வடிகிறதா
காய்ச்சலுக்கும் உங்கள்
வீட்டு உறுப்பினர்களுக்கும் தொடர்பு உண்டா?!
சோற்றை இலையில் போட்டதும்
மூக்கில் ஏற ஓடோடி வந்து நிற்கும்
இந்த பரமன்
எங்கள் தொண்டைகளின் கிருமிகளை தான் வாங்கிக் கொள்ளக்கூடாதா!?
எல்லோர் கவனமும் தானாக தொண்டைக்குப் போகிறது
கணக்கெடுப்பு முடியும் வரை ஒருவரும் இருமி விடக்கூடாது
தொண்டையில் கைகளை நெறித்துக் கொள்கிறோம்
இப்போது
தானாக உயரும் உங்கள் கைகளுக்கு
நான் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள இயலும்!?
3.
ஒரு மலை
…….. வனம்
……..நதி
அரசாங்கம் கண்ணில் பட்டதும்
அதனைச் சுற்றி சாலைகள் உருவாகும்
பிறகென்ன
புதிய நில வரைபடம்
அச்சுக்கு செல்லும்.
4.
கரப்பான் பூச்சிகள்
நசுக்க இலகுவானவை.
ஆனால்
வேகமான ஓடும் கால்கள் உடையன.
அதுவும் அவை உடலை
ஆட்டிக்கொண்டு ஓடுவதை
ரசிக்கத்தக்கவன்
அதனை அவ்வளவு சீக்கிரத்தில்
நசுக்கிவிட முடிவதில்லை.
-ஸ்டாலின் சரவணன்
முகவரி:
எம்.ஸ்டாலின் சரவணன்
157 பெரியகடை வீதி
கரம்பக்குடி அஞ்சல்
புதுக்கோட்டை மாவட்டம்
PIN code 622302
செல் : 9842505065 / 9894468634

Leave a Response

Top Reviews

Video Widget

gallery