Web Series

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்

Spread the love

சமீப காலமாக நாட்டின் எல்லைப் பகுதியில் நடந்துகொண்டு இருக்கும் சம்பவங்கள் இரண்டு நாடுகளுக்குமே சிக்கலை உருவாக்கியுள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த கட்டுரை எழுதும் சமயத்தில் இது தொடர்பாக வந்த தகவல்களும் கொஞ்சம் ஆறுதல் கொடுத்தாலும், ஸ்பெட்ரத்தின் ஆதிக்கத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. டி.எக்ஸ் இந்தியா எனும் குழு இது தொடர்பாகக் கொடுத்த தகவல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

டி.எக்ஸ் இந்தியா

உலகம் முழுவதும் தெலைத்தூரத்தில் இருந்து வரும் வானொலி அலைகளைக் கண்காணிப்பவர்களை ஆங்கிலத்தில் மானிட்டர்ஸ் என்று கூறுவார்கள். இந்தியாவிலும் அது போன்ற ஒலி அலைகளைக் கண்காணிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் எல்லாம் குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். அப்படியான ஒரு குழு தான் இந்த டி.எக்ஸ் இந்தியா குழு. இதில் ‘டி’ என்பது டிஸ்டன்ஸ், ‘எக்ஸ்’ என்பது ஏதேனும் ஒரு வானொலி என்று எடுத்துக் கொள்ளலாம். இப்படித் தொலை தூரத்தில் இருந்து வரும் வானொலி அலைகளைக் கேட்பவர்களை ‘டி.எக்ஸர்’ என்று  கூறுவர்.

DX India Special QSL Card (Source: DX India Yahoo Group)

டி.எக்ஸ் இந்தியா குழுவானது 2001 அக்டோபர் 1, அன்று ஹைதராபாத் ஜோஸ் ஜேக்கப் மற்றும் புது தில்லி அலோகேஷ் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டதாகும். இந்த யாகூ குழுவில் தற்பொழுது வரை 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் சிற்றலை வானொலிகளைக் கேட்பதோடு, இந்த ஸ்பெக்ட்ரத்தினை கண்காணிப்பவர்களாகவும் உள்ளனர். உங்களுக்கும் இந்தக் குழுவில் இணைந்துகொள்ள ஆர்வம் எனில் அவர்களின் மின் அஞ்சல் முகவரியைக் கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களைப் பற்றிய அறிமுகத்தினையும், நீங்கள் வைத்துள்ள வானொலிப் பெட்டிகளின் விபரங்களையும் கூறி இணைந்து கொள்ளலாம்.

இன்றைய தினம் இந்த குழுவினை இங்குப் பேசுவதற்குக் காரணம், சமீபத்தில் டி.எக்ஸ் இந்தியா குழுவில் பகிர்ந்த செய்தி தான். நமது அகில இந்திய வானொலி பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் ஒலிபரப்பி வருவதை ஏற்கனவே கூறியுள்ளோம். அதில் சீன மொழியில் தினமும் மாலை 05.15 முதல் 06.45 வரை 16 மீட்டர் பேண்ட், 17510 சிற்றலை வரிசையில் ஒலிபரப்பி வந்தது. ஒரு சில காரணங்களுக்காக இந்த மாதம் ஜூலை 1, முதல் அந்த அலைவரிசையை 16 மீட்டரிலேயே 17,595ற்கு மாற்றம் செய்துள்ளது. அதே போன்று திபெத்திய மொழியில் தினமும் மாலை 05.45 முதல் 07.00 மணி வரை 31 மீட்டர் 9450 சிற்றலை வரிசையில் ஒலிபரப்பி வந்ததை, தற்பொழுது 9580 சிற்றலை வரிசைக்கு மாற்றம் செய்துள்ளது. வழக்கமாக இது போன்ற அலைவரிசை மாற்றங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஆனால், இந்த முறை நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அலைவரிசைகளும் மாற்றப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் ஜாமிங். இது பற்றி விரிவாகக் கடந்த கட்டுரையில் எழுதியிருந்தோம். கடுமையான இடையூறு (ஜாமிங்) இருந்ததனால் ஏற்கனவே ஒலிபரப்பி வந்த சிற்றலை வரிசைகளை அனைத்துலக தொலைத்தொடர்பு ஆணையத்தின் அனுமதியுடன் மாற்றியுள்ளது அகில இந்திய வானொலி. இந்த அலைவரிசைகள் மாற்றம் செய்யப்பட்ட பின்னும் தொடர்ந்து ஜாமிங் அந்த பழைய அலைவரிசையில் தொடர்ந்தபடி இருந்தது.

கடந்த 6 ஜூலை, முதல் அந்த 16 மற்றும் 31 மீட்டார்களில் ஜாமிங் நிறுத்தப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் மீண்டும் அகில இந்திய வானொலி ஒலிபரப்ப தொடங்கிய புதிய அலைவரிசைகளில் ஜாமிங் தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், அனைத்து நாடுகளும், இந்த ஸ்பெக்ட்ரத்தினை கூர்ந்து கவனித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நமது அண்டை நாடுகள், நாம் எந்த அலைவரிசைகளில் ஒலிபரப்புகிறோம், என்ன ஒலிபரப்புகிறோம் என்பதைக் கூர்ந்து அவதானித்து வருகின்றன.

Source: http://airddfamily.blogspot.com

சீனம் மற்றும் திபெத்திய மொழி ஒலிபரப்பானது 500 கிலோ வாட் சக்தி கொண்ட சிற்றலை ஆண்டனாக்களைக் கொண்டு பெங்களூரிலிருந்து திபெத் மற்றும் வட கிழக்கு ஆசியாவிற்கு ஒலிபரப்பப்படுகிறது. இந்தியாவிலேயே மிகச் சக்தி வாய்ந்த சிற்றலை ஒலிபரப்பு தளமாகப் பெங்களூர் உள்ளது. இங்கு தற்பொழுது ஐந்து 500

கிலோ வாட் சக்தி கொண்ட டிரான்ஸ்மிட்டர்கள் உள்ளன. இந்த இடத்திலிருந்து தான் உலகின் பெரும்பான்மையான நாடுகளை நமது அகில இந்திய வானொலி சென்றடைகிறது. தற்சமயம் நாம் வங்காள மொழியில் பங்களாதேஷ் நேயர்களுக்கும், பலுச்சி, சிந்தி மற்றும் உருது மொழியில் பாகிஸ்தான் நேயர்களுக்கும், தாரி மற்றும் புஷ்து மொழிகள் ஆப்கானிஸ்தான் நேயர்களுக்கும், நேபாளி மொழியில் நேபாளுக்கும், தமிழில் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்கும் ஒலிபரப்பி வருகிறோம். இதில் 1000 கிலோ வாட் சக்தியில் மத்திய அலைவரிசையில் கொல்கத்தாவில்  உள்ள சின்சுரா என்னுமிடத்தில் இருந்து ஒலிபரப்புவதே மிகவும் சக்திவாய்ந்த மத்தியலை டிரான்ஸ்மிட்டராகும். இது போன்ற டிரான்ஸ்மிட்டர்களை உலகின் ஒரு சில வளர்ந்த நாடுகள் மட்டுமே கொண்டுள்ளன. அகில இந்திய வானொலி ஒலிபரப்பும் அனைத்து வெளிநாட்டு மொழி ஒலிபரப்புகளையும் பிரசார் பாரதியின் இணைய தளத்தில் கேட்கலாம். (முகவரி கீழே)

தமிழகத்தின் பெருமை

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நமது நாட்டிலிருந்த மொத்த அகில இந்திய  வானொலிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அதில் இரண்டு வானொலிகள் தமிழகத்திலிருந்தன. ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் இருந்தன. இன்று நம் நாட்டில் உள்ள மொத்த அரசு வானொலிகளின் எண்ணிக்கை 311 ஆகும். இதில் தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 15 வானொலிகள் சிற்றலை, மத்தியலை மற்றும் பண்பலை வானொலிகள் ஒலிபரப்பி வருகின்றன.

இதில் தமிழகத்திற்கு பெருமைத்தரக்கூடிய விடயம் என்னவெனில், இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி நாகர்கோவிலில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பண்பலை வானொலி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் சமுதாய வானொலியும் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அது இன்றும் அண்ணா எஃப்.எம் என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மீனவர்களுக்கான வானொலி இராமேஸ்வரத்தில்  தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பேரிடர் கால வானொலியும் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டது. இது இன்றும் கடலூரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக சமுதாய வானொலிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. தற்சமயம் இங்கே 40 சமுதாய வானொலிகள் செயல்பட்டு வருகிறது.

Anna FM (www.dxersguide.blogspot.com)

சுதந்திர ஆசிய வானொலி

எங்கெல்லாம் செய்திகள் மக்களைச் சென்றடையத் தடை விதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த சுதந்திர ஆசிய வானொலி தனது சேவையைச் செய்து வருகிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் உண்டு. இந்த சுதந்திர ஆசிய வானொலியை நடத்துவது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டிலேயே செய்திகளுக்குச் சுதந்திரம் சமீபகாலமாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது நகை முரண்.

Radio Free Asia (www.rfa.org)

நாம் இங்கு இந்த வானொலியைக் காணக் காரணம், ‘ஜாமிங்’. உலகிலேயே மிக அதிகமாக ஜாமிங்கிற்கு உள்ளாகும் வானொலியும் இது தான். அதற்குக் காரணம், இது ஒலிபரப்பும் மொழிகள். மக்கள் செய்திகளை அறிந்து கொள்வது என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால், இன்றும் பல்வேறு நாடுகளில் உண்மைச் செய்திகள் தடை செய்யப்படுகின்றன. அவர்களுக்காக அமெரிக்காவினால் தொடங்கப்பட்டது தான் இந்த ‘சுதந்திர ஆசிய வானொலி’ (Radio Free Asia).

இந்த வானொலி இன்றும் மான்டரின், கான்டொனீஸ், வியட்நாமீஸ், பர்மீஸ், கொரியன், கமெர், லாவே, உய்குர் மற்றும் திபெத்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்து வருகிறது. இதில் திபெத், மான்டரின் மற்றும் கான்டொனீஸ் ஆகிய மொழி ஒலிபரப்புகள் அதிகப்படியாக ஜாமிங் செய்யப்படுகின்றன. மற்றவை அவ்வப்போது செய்யப்படுகின்றன.

சமீப காலமாக இந்த வானொலி அனைத்து வடிவங்களிலும் தனது ஒலிபரப்பினை செய்துவருகிறது. அதாவது சிற்றலை மட்டுமல்லாது இணையம், செயலி, டிஜிட்டல், செயற்கைக்கோள், டி.டி.ஹெச், முக நூல், யூ டியூப் என அனைத்திலும் ஒரே சமயத்தில் ஒலிபரப்பினை செய்வதால், ஜாம் செய்யும் நாடு இந்த அனைத்து வடிவத்தினையும் தடை செய்ய வேண்டியுள்ளது. அதனால் தான் இன்றும் ஒரு சில அண்டை நாடுகளில் ஜி.மெயில், கூகுள், யூ டியூப், வாட்ஸப், முக நூல் என அனைத்து வகையான சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேயர்கள் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவர்களைத் தடை செய்வது கடினம்.

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

DX India: dx_india-subscribe@yahoogroups.com

AIR External Service: https://prasarbharati.gov.in

Radio Free Asia: https://www.rfa.org

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: ardicdxclub@yahoo.co.in

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.co.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/spectrum-war-amateur-radio-series-3/

2 Comments

  1. சிறப்பான பதிவு. வானொலி குறித்த ஏராளமான தகவல்கள்.

Leave a Response