Article

வானில் ஒரு நெருப்பு வளையம்..! – பா. ஸ்ரீ குமார்

Spread the love

 

இம்மாதம், ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12 மணிக்கு, வட இந்தியாவில் சில இடங்களில் “வானில் ஒரு நெருப்பு வளையம்” தெரியும்.முழு வளையச் சூரிய கிரகணத்தை, கர்சனா,  சூரத்கர்க், சிர்சா, ஷிவான், குருஷேத்ரா, யமுனா  நகர், டேராடூன், நியூ தெஹரி மற்றும் ஜோஷிமத் ஆகிய நகரங்களில் உள்ளவர்கள் தெளிவாகக் காண முடியும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் பகுதி சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிக்கலாம். ஜூன் 21-ம் தேதி பகல் 10.30 மணிக்குச் சூரியனின் மேற்குப் பகுதியை நிலவானது மெதுவாக மறைக்கத் தொடங்கும், அது மெல்ல மெல்ல நகர்ந்து சூரியனின் மையப் பகுதியை நண்பகல் 12 மணிக்கு மறைக்கும். அப்போது, சூரியனின் விளிம்பு பகுதிகள் தெரியும், இது ஒரு நெருப்பு வளையம் போலக் காணப்படும். இந்த வளையம் 30 முதல் 40 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். அதன் பின் நிலவு சூரியனை விட்டு மெதுவாக விலகும்.

கிரகணம் என்றால் என்ன? சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத் தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல் தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம்.ஒரு ச ிற ிய ந ிலா எப்படி சூரியனை மறைக்கிறது? சூரியனின் விட்டம் 13,91,980 கி.மீ., நிலவின் விட்டம் வெறும் 3476 கி.மீ.தான். அதாவது, சூரியன் நிலவைவிட சுமார் 400 மடங்கு பெரியது. கடுகு மறைத்து பூசணிக் காய் காணாமல் போகுமா? அளவில் சிறிய நிலவு சூரியனை எப்படி மறைக்கும்? இங்கு தான் தொலைவு முக்கிய பங்கு வகிக்கிறது.

Image

நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 3 லட்சத்து 84 ஆயிரத்து நானூறு கிலோ மீட்டர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு தெரியுமா? 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். எனவே நமது பார்வைக்குச் சூரியனும் நிலவும் ஒரே அளவில் இருப்பது போலத் தெரியும். உயரே வெகு தொலைவில் பறக்கும் பெரிய விமானத்தின் உருவம் தாழ்வாகப் பறக்கும் கழுகின் அளவாகத் தென்படுவது போல, பூமியிலிருந்து பார்க்கும் போது சூரியன் மற்றும் நிலவின் உருவம் சற்றேறக்குறைய சமமாக இருக்கும்.ஜ ூன் 21 அன்று வளைய வடிவ கிரகணம் ஏன் ஏற்படுகிறது?

நிலவு பூமியை நீள் வட்டப் பாதையில் அதாவது கோழிமுட்டை வடிவில் சுற்றிவருகிறது. பூமியும் சூரியனை நிலவைப் போல நீள் வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. அவ்வாறு சுற்றிவரும்போது, அருகே உள்ள புள்ளியில் வரும்போது அதன் காட்சிக் கோணம் பெரிதாகவும், தொலைவில் உள்ள நிலைக்குச் செல்லும்போது காட்சிக்கோணம் சிறியதாகவும் ஆகும். கிரகணம் நடைபெறும் ஜூன் 21-ம் தேதி சூரியனின் பிம்பம் சற்றே பெரிதாக இருக்கும். உருவில் சற்றே பெரிதாக உள்ள சூரிய பிம்பத்தை நிலவால் எளிதில் முழுமையாக மறைக்க முடியாது. ஒரு நேர்கோட்டில் சூரியன், நிலவு மற்றும் பூமி வரும் போது அன்று அளவில் பெரிதாகத் தெரியும் சூரியனை, இடையில் உள்ள நிலவு மறைக்கத் தொடங்கும். அப்போது தொடங்கி, ஒரு கட்டத்தில் நிலவு சூரியனை முழுமையாக மறைப்பது போலத் தெரியும்.

Image

சூரியனின் மையப் பகுதி மட்டும் மறைய, விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்கும். இது வானில் தெரியும் ஒர் அற்புதக் காட்சி, இதைத் தான் வளையச் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். மொத்தத்தில், “கிரகணம்  என்பது ஒரு நிழல் விளையாட்டு தான்”. சூரியன், நிலா மற்றும் பூமி விளையாடும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை நாம் அனைவரும் கண்டு ரசிக்கக்  கிரகணம் என்பது வெறும் பார்வை சார்ந்த விஷயம் மட்டுமே. சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. நமக்கும் எந்தவித மாற்றமும் ஏற்படாது. சூரிய ஒளியை மறைக்கும் மரம் எப்படி தரையில் நிழலை ஏற்படுத்துகிறதோ, அதுபோல சூரிய ஒளியை மறைத்து நிலா நிழலை ஏற்படுத்துகிறது. மரம் நிழலை ஏற்படுத்தும் போது சூரிய இயக்கத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதுபோல, நிலா சூரியனை மறைக்கும்போது எந்தவிதத் தாக்கமும் இருக்காது.

சூரிய கிரகணம் பொதுவாக மூன்று கிரகணங்களாகப் பார்க்கப்படுகிறது. முழுச் சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளையச் சூரிய கிரகணம் போன்றவை ஆகும். சூரியனில் எத்தனை சதவிகிதம் நிலவினால் மறைப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து சூரிய கிரகணங்கள் அழைக்கப்படும். சூரிய கிரகணத்தை பார்க்கப் பாதுகாப்பான கண் கண்ணாடிகள் அண ிய வேண்டியது அவசியமா? ஆமாம், நூறு சதவீதம் அணிய வேண்டும். சூரியனிலிருந்து வரும் நேரடிக் கதிர்கள் மிகவும் பிரகாசமாகவும், வெப்பமாகவும் இருப்பதை அறிவோம். நமது கண்கள் மிகவும் அற்புதமானவை. மேலும், உணர் உறுப்பான விழித்திரையில் உள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்கவும், மின் சமிக்ஞைகளை மூளைக்குக் கடத்தவும், அதன் மூலம் உருவங்களைப் பார்க்கவும் உதவுகின்றன. ஆகவே மிகவும் பிரகாசமான நேரடி சூரிய ஒளிக்கதிர்களைப் பார்ப்பதால் பார்வை இழப்பு ஏற்படும்.

Image

எனவே பாதுகாப்பாகச் சூரிய கிரகணத்தைக் கண்டு களிக்கப் பாதுகாப்புக் கண் கண்ணாடிகள் அணிய அறிவுறுத்தப்படுகிறது. கிரகணம் அன்று கண்களைப் பாதிக்கும் கதிர்கள் சூரியன் ில ிருந்து வருகிறதா? அப்படியில்லை. ஆனால், “சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது” என்பது கிரகண தினத்துக்கு மட்டும் விடப்படும் எச்சரிக்கை இல்லை. பொதுவாகவே சூரியனை வெகுநேரம் பார்க்கக்கூடாது. இது அனைத்து நாட்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பிரகாசமான வெளிப்புற நடைப்பயணத்திலிருந்து திடீரென ஓர் இருண்ட அறைக்குள் நுழையும்போது தற்காலிக பார்வை இழப்பை நாம் அனுபவிக்க முடியும்,  சாதாரண நாளில் சூரியனை வெகுநேரம் பார்த்தபடி  இருக்க நமக்கு எந்தக் காரணமும் இல்லை.

கிரகணம் அன்று அதன் அற்புதக் காட்சியைக் காண ஆவல் அதிகமாக இருக்கும். எனவே தான் குறிப்பாக கிரகணத்தன்று அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது. சந்திர கிரகணங்கள் ஏற்படும்போது ஏன் எச்சரிக்கை செய்வதில்லை? சந்திர கிரகணத்தின் போது, நாம் நிலவில்  பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளியைத் தான் காண்கிறோம். அதன் பிரகாசம் கூடுதல் அல்ல. எனவே தான் சந்திர கிரகணத்தின் போது எந்த எச்சரிக்கையும் செய்வதில்லை. நேரடியாகச் சூரியனைப் பார்க்கும்போது தான், அதன் அளவு கடந்த வெளிச்சம் நமது கண்களை உறுத்தும். சூரிய ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் சூரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். பிளாக் பாலிமர் (Black polymer) கொண்டு உருவாக்கப்படும் சூரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கண்ணாடியை வைத்து சில நொடிகள் பார்த்து விட்டு, சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சில  நொடிகள் பார்க்கலாம்.

Image

இப்படி, விட்டு விட்டுப் பார்ப்பது நல்லது. பிம்பத்தை நுண் துளை கேமரா  (பின் ஹோல் கேமரா) கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் நிழலை ஏற்படுத்திக் காண்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கிரகண காலத்தில் திறந்த வெளியில் தாராளமாக நாம் நடமாடலாம். கிரகணம் ஏற்படும் நாள் ஒரு சாதாரண நாள் தான். கிரகணத்தின் போது சூரியனின் கதிர்கள் எல்லா உணவையும் விஷமாக மாற்றி விடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது, இது தவறானது. மஹராஷ்டிராவைச் சார்ந்த, பாஸ்கராச்சாரியா ஆய்வு மையத்தின் உதவியோடு, மைக்ரோபயாலஜி  ஆய்வாளர்கள் நால்வர், காந்த் என்ற ஆய்வாளர்தலைமையில் 2010 ஜனவரி 15 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஆய்வுகளை மேற் கொண்டனர்.

அவர்களின் அந்த ஆய்வு முடிவுகள் 2012-ம் ஆண்டு வெளியான Journal of Ecobiotechnology என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது. அதில், சூரிய கிரகணத்தின் போது  சமைத்த உணவுகள் கெட்டுப்போய்விடுகின்றன. எனவே, அவற்றைப் பயன்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளன. கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்  போது வெளியே செல்வது ஆபத்தானதா? கருவில் உள்ள குழந்தை, வெளியில் செல்பவர்கள் யாராக இருந்தாலும் சூரிய, சந்திர கிரகணங்கள் எந்தவிதத் தீங்கையும் ஏற்படுத்தாது. கிரகணம் என்பது எப்படி ஏற்படுகிறது என்ற அறிவியலின் புரிதல் இல்லாத காலத்தில், அச்சம் காரணமாக ஏற்பட்ட தவறான கருத்து இன்னும் அப்படியே தொடர்கிறது.

இது தேவையற்றது. இந்த நிழல் விளையாட்டைப் பாதுகாப்பாய் கண்டு ரசிக்கலாமே தவிர அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்புவது தவறானது. வளையச் சூரிய கிரகணம் ஜூன் 21-ம் தேதி காலை 10.30-க்கு தொடங்கும். இந்த அழகிய நிழல் விளையாட்டை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் அவரவர்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பாய் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

நன்றி: அறிவியல் பலகை

Leave a Response

Top Reviews

Video Widget

gallery