Book Review

நூல் அறிமுகம்: ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் “சிலேட்டுக்குச்சி” – பா.அசோக்குமார்

Spread the loveபுத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி
ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/
முகநூலிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூல் அறிமுகம் குறித்த ஜூம் செயலி சந்திப்பில் இருந்தே இந்நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. அதிலும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய தோழர்.ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறப்புரை ஆதீத தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை.
கொரோனா காலகட்டமாக இருந்ததால் நூலினை வாங்குவதில் சிறு முடக்கம் ஏற்பட்ட நிலையில் தற்சமயமே கைவரப்பெற்றது இந்த இனிய நூல். தொடர்ந்து முகநூலில் பதிவிடப்பட்ட இந்நூல் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் உண்மை என்பது கண்கூடாக கண்ட தருணங்கள் ரம்மியமானவை.
இந்நூலில் 17 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி முத்திரைகளைப் பதிப்பன. தனது மாணவப் பருவம் தொடங்கி ஆசிரியப் பணிக்காலத்தில் தான் கண்டுணரும் மாணவப் பருவத்தின் அழகிய வாழ்வியலை புடம் போட்டுக் காட்டி அசை போட வைத்துள்ளார் எழுத்தாளர் முத்துக்கண்ணன் அவர்கள்.
இதில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கலாம்… நாமும் பார்த்து கடந்திருக்கலாம்… ஆனால் அவற்றை அருமையாக கோர்த்து எழுதிய விதத்திலேயே மிளிர்கிறார் முத்துக்கண்ணன் அவர்கள். சிறுவயதில் தான் கவனித்த தகவல்களை நிகழ்காலத்தில் நிகழும் நிகழ்வுகளுடன் முடிச்சு போட்டு இணைக்கும் யுக்தி சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக உள்ளது.
விளையாட்டுப் போக்கில் கடந்து செல்லக்கூடிய கட்டுரைகள் அல்ல இவை. காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் தகுதிகள் பெற்றவையே இவை. முத்துக்கண்ணன் அவர்களுக்கு கிடைத்த இளமைப்பருவம் மீது சிறு பொறாமை வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. அற்புதமான ஆசிரியர்கள், நண்பர்கள் கிடைத்திருப்பதே அதற்குக் காரணம்.
பன்னீர் சார் போல் ஒரு ஆசிரியர் கிட்டியது நிச்சயம் வரமென்றி வேறேது. கித்தாருடன் வந்த காட்சி என்மீது பன்னீர் பூக்கள் முகிழ்ந்த தருணமாகவே உணர்ந்தேன்.
“டேய்..இந்த மூணாங்கேள்வி காப்பரிச்சைக்கு வருது…அப்படி வராட்டியும் நீ எழுது..! மார்க் போடுறேன்” – மாதவன் அய்யா…
இப்படியொரு ஆசிரியராக ஒவ்வொருவரும் ஒளிரும் காலம் இருந்தால் மாணவர்கள் வாழ்வே பொற்காலம் தானே…
பாலபருவத்தில் பிரபஞ்சனை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் கிடைக்கப்பெற்ற முத்துக்கண்ணன் கொடுத்து வைத்தவரன்றி வேறேது. அவருடன் படித்த எல்லோருக்கே இந்த வாய்ப்பு கிட்டிய போதிலும் அவற்றைக் கெட்டியாக பற்றிக் கொண்டதாலேயே சக.முத்துக்கண்ணன் தனித்துவம் பெற்றுள்ளார் போல….
கதைகளின் ராணியாக இருக்கும் சந்தியக்காவும் எழுத்தாளரின் மனதில் கதைகளைத் தூவியதில் பெரும்பங்கு அற்றியுள்ளார். நூலகர் ராமு போல் எல்லோர்க்கும் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியானது. புத்தகம் எடுக்க வரும் மாணவ வாசகனுக்கு பிரபஞ்சன் கதையைக் கூறி புத்தகம் வழங்கி படிக்கும் வைத்த தருணங்கள் நெகிழ்வானவையே….
இந்நூலில் இடம்பெற்றுள்ள, “ரசிப்பதாக கற்றல் நிகழ்வது எத்தனை அழகானது” என்ற வரியைப் போலவே வாழ்வை அணுஅணுவாக ரசித்து வாழ்பவராலேயே இப்படியொரு உயிர்ப்பான நூலைப் படைக்க முயன்றாக உணர்கிறேன்.
ராமய்யா ஆசிரியர் போல் (எல்லாஞ் சாப்டிங்களா?) ஒருவருடன் உடன் பணியாற்றும் ஆவல் வந்து கொண்டே இருக்கிறது. பதவி உயர்வை புறக்கணித்துவிட்டு சின்னஞ்சிறு மழலைகளுடன் “பூஸ்டு” விளையாட்டு விளையாடும் மனோபாவம் எல்லாம் எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன??? ராமய்யா சாருக்கும் முருகன் சாருக்கான உறவு ஒருவிதமென்றால் “ரசத்தோடு அத்தனை பேர் அன்பையும் சேர்த்து சிந்தாமல் ஊற்றிப் பிணைந்து கொண்டிருந்தாள் ஜனனி” என்ற வரிக்குச் சொந்தக்காரியான ஜனனிக்கும் முருகன் சாருக்குமான உறவோ புனிதமானதன்றி வேறேது.
Image
மாணவர்களிடம் ஏமாறும் ஆசிரியர், பட்டப்பெயர் (தொக்குச்சிய்யம்) கிடைக்கும் பெரும்பாக்கியம் பெற்ற ஆசிரியர் (படட்டப்பெயர் பெறாத ஆசிரியர் மாணவர்களிடம் இணக்கம் பெறாதவர் : ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரை), மாணவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் ‘அற்புத மேரி’ டீச்சர், அம்மாவாக மாறும் ஆண் ஆசிரியர்கள், சமோசா விற்கும் சிறுவன் அதனை மறைத்து ‘வணக்கம்’ வைக்கும் மரியாதைக்குரிய ‘பழனியப்பன் சார்’ என நாம் பார்த்த, பார்க்கத் தவறவிட்ட பல ஆசிரியர்கள் இந்நூலில் வாழ்ந்து வழிகாட்டியுள்ளனர்.
“டீச்சர்.. ஒண்ணுக்கு…” கட்டுரை கண்களில் கண்ணீரை மட்டுமா வர வைக்கிறது. நம் மீதான சவுக்கடியாகவே விழுகிறது. “அந்த வகுப்பிலிருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரமென்பது தேச அவமானத்தின் நீளம்”.
திங்கட்கிழமை வீட்டுப்பாடமும் கோடைக்கால விடுமுறைக் கட்டுரையும் ஒவ்வொரு ஆசிரியரும் கவனத்தில் கொள்ள வேண்டியவையவே… மதுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவித்து மாணவர்களைக் கண்டறியும் முயற்சியும் அர்ப்பணிப்பானவை.
“மூளைக்குள் திணிக்கும் ஏற்பாட்டை முடிந்தவரை எதிர்ப்பதே ஒரு முன்னாள் மாணவனுக்கு அழகு”
“இயல்பைக் கொணர்தலும், அதற்கான சுதந்திரமும்தான் வகுப்பறை நியாயம்”
“குழந்தைகளின் அலைவரிசையைக் கற்பதும் அதனோடு பயணித்துலும் அவ்வளவு எளிதானதல்ல”
போன்ற பல வாக்கியங்கள் உள்ளக்கவரக் கூடியவை.
இந்நூலில் பல எழுத்தாளர்களின் (தோழர். மாடசாமி ஐயா, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி (எங்கள் டீச்சர்), யஷ்பால்) மேற்கோள்களும் சிறுகதைச் சுருக்கமும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை ஒவ்வொன்றும் ரத்தினமானவை; காத்திரமானவை.
“எல்லா ஆசிரியர்களும் இப்படி நல்ல தீவிரமான வாசகர்களாக மாறிவிட்டால் எத்தனை எத்தனை அனுபவங்கள் பத்தகங்கள் நம் கைவந்து சேர்ந்திருக்கும் என்கிற ஏக்கம் பிறக்கிறது.
வாசிப்பும் எழுத்துப்பயிற்சியும் இல்லாத ஒரே காரணத்தால் நமக்குக் கிடைக்காமல் போன வகுப்பறை அனுபவங்களாக மனம் வருந்துகிறது” -தோழர் ச.தமிழ்ச்செல்வன்.
நல்லதோர் படைப்பு. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
முத்து முத்தான எழுத்துக்களால் தனது முதல் நூலிலேயே முத்திரை பதித்த எமது தேனி மாவட்ட எழுத்தாளரான திரு.சக. முத்துக்கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இளம் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி நல்வாய்ப்பினை நல்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் நன்றி.
நன்றி.
புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி
ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.Leave a Response