Story

சிறுகதை: வாசுதேவ குடும்பம் – ச.சுப்பாராவ்

Spread the love

 

துவாரகை அரசன் கிருஷ்ணனை பிராமணர்கள் காண ஒரே வழி அவன் காலையில் செய்யும் கோதானத்தின் போது தானம் வாங்கும் கூட்டத்தில் போய் நிற்பதுதான் என்று ஊரில் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அதன்படியே குசேலன் சூரிய உதயத்திற்கு முன்பே அரண்மனையில் கோதானம் செய்யும் இடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு சென்று முதல் ஆளாக நின்று கொண்டான். அரண்மனை அப்போதே பரபரப்பாகத்தான் இருந்தது. வாயிற்காப்போன், “என்ன சாமி, பசு தானத்திற்கு முதல் ஆளா வந்து நின்னுட்டீங்க?“ என்றான். குசேலன் பதில் சொல்லாமல் புன்னகைத்தான். உன் அரசனை நான் வாடா, போடா என்று சொல்லுமளவு உரிமை உள்ளவன். ஒரு காலத்தில் உயிர் நண்பன் என்று அவனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. இன்றைய நிலை எப்படியோ? தேவையில்லாமல் எதையாவது சொல்லி, ஏளனத்திற்கு ஆளாக வேண்டாம். வாயிற்காப்போனிடம் “அரசர் எழுந்துவிட்டாரா?“ என்று கேட்டான். “எழுந்து விட்டாராவா? அவர் எழுந்து, கைகால் அலம்பி, ஆசமனம் செய்து, பிறகு, ஒரு நாழிகை தியானத்தில் அமர்ந்து எழுந்து, பின்னர் ஸ்நானம் செய்து, சந்தியாவந்தனம் செய்து. அக்னிஹோத்திரம் செய்து முடிக்கும் போதுதான் சூரியனே உதிப்பான். இப்போது சில மணித்துளிகளில் பிராமணர்களுக்கு கோதானம் செய்ய வந்துவிடுவார்,“ என்றான் காவலன். சுற்றிலும் பிராமணர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்த்து.

இடையர்கள் ஏராளமான பசுக்களை ஓட்டி வந்தார்கள். எல்லாமே தலையீற்றுப் பசுக்கள். அவற்றின் கொம்புகளில் தங்கப் பூண்கள். பால் கறக்கும் போது உதையாத சாதுவான குணம் கொண்டவையாம். முத்துமாலைகளால் அலங்கரித்திருந்தார்கள். முதுகில் பட்டுத் துணி போர்த்தியிருந்தார்கள். கால்களில் வெள்ளிக் கொலுசுகள் அணிந்த வள்ளல் பெரும் பசுக்கள். குசேலன் பசுக்களை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண்மனை வாசல் திறந்தது. பெரும் ஆரவாரத்தோடு அரசன் ஸ்ரீகிருஷ்ணன் கோதானத்திற்காக வந்தான். தங்கத் தட்டில் ஒரு பட்டு வேஷ்டி, ஒரு தொன்னையில் கையளவு எள் ஆகியவற்றை வைத்து, அதோடு ஒரு பசுவை ஒவ்வொரு பிராமணருக்கும் தானம் செய்தான். குசேலன் முறை வந்தது. தானம் அளிக்க கையை நீட்டியவன், “நீ என்னடா இங்கே?” என்றான் சந்தோஷமாக. குசேலன் இவ்வளவு அன்பான விசாரிப்பை எதிர்பார்க்கவில்லை. ”இப்படி ஓரமா நில். தானத்தை முடித்து விட்டு உள்ளே செல்வோம். இவருக்கு யாரேனும் சற்று பானகம் முதலானவற்றைத் தந்து உபசரியுங்கள்,“ என்றான் அருகில் இருந்தவரிடம். ஒரு சேவகன் பானகம் கொண்டுவர ஓடினான். தானம் முடிந்தது. பசுக்களைப் பிடித்தபடி வரிசையாக எல்லா பிராமணர்களையும் நிறுத்திவைத்து, கிருஷ்ணன் மண்ணில் விழுந்து நமஸ்கரித்தான். பிராமணர்கள் வாழ்த்தினார்கள். கிருஷ்ணன் உள்ளே சென்றான். பின்னாலேயே குசேலன். கிருஷ்ணன் வேஷ்டி மட்டும் கட்டி, துண்டை இடுப்பில் கட்டியிருந்தான். இந்த சடங்கிற்குப் பிறகு தான் ராஜ அலங்காரம் நடக்குமாம். கிருஷ்ணனுக்கு பட்டாடைகள், ஆபரணங்கள், மாலைகள், எல்லாம் அணிவித்து வேகமாக அலங்காரம் முடிந்தது. கவர்ச்சியான ஒரு பெண் கையில் பெரிய பாத்திரத்தில் நெய்யை எடுத்துக் கொண்டு வந்து கிருஷ்ணன் முகத்தருகே நீட்டினாள். நெய்யில் முகம் பார்க்க வேண்டுமாம். எதற்கு என்று தெரியவில்லை. நெய்யில் முகம் பார்த்த பிறகு கண்ணாடியில் முகம் பார்க்கும் சடங்கு. பிறகு ஒரு பசுவையும், எருதையும் கொண்டு வந்து அவன் முன் நிறுத்தி அவற்றைப் பார்க்கச் சொன்னார்கள். கடைசியாக ஒரு பிராமணரைப் பார்க்க வேண்டுமாம். “பக்கத்திலேயே இவன் இருக்கிறான். இவனைப் பார்த்துக் கொள்கிறேன்,“ என்ற கிருஷ்ணன் குசேலன் பக்கமாகத் திரும்பி, “இப்படி என் முன்னால் வந்து சற்று நில்லுங்கள் ஸ்வாமி,“ என்று போலிப் பணிவான குரலில் சொன்னான். குசேலன் நிற்க, அவனை சம்பிரதாயமான வணங்கினான். “இன்றைய காலையின் பெரிய வேலைகள் முடிந்தன.” என்றான் குசேலனிடம்.

ஆன்மிகம்

“இன்னும் சிறிது நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் அரண்மனையிலிருந்து வந்ததும் காலை உணவு சாப்பிடலாம். அதுவரை பேசிக் கொண்டிருப்போம்,“ என்றான் கிருஷ்ணன். குருகுல நண்பர்கள் மீண்டும் சந்தித்தால் பேசுவதற்கு விஷயம் இல்லாமலா போகும்? சாந்தீபனீ ரிஷியின் ஆசிரமம். அவரது அன்பான மனைவி. மனைவிக்கு உதவி செய்ய அவர்களது ஆசிரமத்திலேயே இருந்த அவரது தங்கை பெண். ‘இப்போது இருக்கும் துணிச்சல் அப்போது கிடையாது. இருந்திருந்தால், அவள்தான் துவாரகையின் பட்டமகிஷிகளில் ஒருத்தி‘. என்று கிருஷ்ணன் ஒரு மலரும் நினவுகள் சொன்னான். விறகு வெட்டப் போய் புயலில் மாட்டிக் கொண்டது. பதறிப் போன குருநாதர் தேடி வந்தது. அவரது மகன் காணாமல் போனது, அவனைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. குருகுலம் பற்றிய பேச்சுகள் பேசித் தீராதவை. கிருஷ்ணன் வாய் மூடாது பேசிக் கொண்டே இருந்தான். “அரசே, உணவுசாலைக்கு வாருங்கள், அரசகுடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர்,” என்றார் ஒரு பெரியவர் பணிவாக. இருவரும் உணவுசாலைக்குச் சென்றார்கள்.

“உன் மனைவி பெயர் என்ன?“ என்றான் கிருஷ்ணன்.

“சுசீலா”

“ஒன்றுதானா?“

”ஆமாம். அந்த ஒன்றிற்கு சாப்பாடு போடுவதே அவ்வளவு சிரமமாக இருக்கிறது. நீ என்னமோ, மிக எளிதாக ஒன்றுதானா என்கிறாய் !“ என்றான் குசேலன். ”ஆமாம், உன் பட்டமகிஷி?“ என்றான். “பட்டமகிஷிகள் என்று சொல்,“ என்றான் கிருஷ்“ணன் சிரித்தபடி. “வரிசையாக வருவார்கள் பார் இப்போது – எல்லா அளவுகளிலும்,” என்றான் கண்சிமிட்டி. உணவுக்கூடம் ஒரு பெரிய அரங்கம் போல் இருந்தது. வரிசையாக இலை போட்டு அமர்வதற்கு மணப்பலகை போட்டிருந்தார்கள். கிருஷ்ணன் குடும்பத்தார் ஒவ்வொரு குடும்பமாக வந்து அவனை வணங்கி, தத்தமக்கு உரிய பலகைகளுக்குச் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் வணங்கும் போது அவர்களை குசேலனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் கிருஷ்ணன்.

”இவள் ருக்மணி. பக்கத்து தேசத்து ருக்மியின் சகோதரி, அண்ணன்காரன் ஒத்துக் கொள்ளவில்லை. கடத்தி வந்துதான் திருமணம். இவளுக்குப் பிறந்தவன்தான் எனக்கு அடுத்து பட்டத்திற்கு வரப்போகும் பிரத்யும்னன். பிரத்யும்னா, இவர் என் நண்பர் குசேலர். அவரை வணங்கி ஆசி பெறு,” பிரத்யும்னன் வணங்கி ஆசி பெற்றான். அவனுக்குப் பின் வரிசையாக அவனது தம்பிகள் சாருதேஷ்னன், சுதேஷ்ணன், சாருதேவன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சருபத்திரன், விசா, சாரு என்று ஒன்பது பேர்.

அடுத்து சத்ராஜித் என்ற மன்னனின் மகளான சத்யபாமா வந்தாள். தொடை வரை நீண்ட சடை அசைய வந்து குசேலனை வணங்கினாள். பானு, ஸுபானு, ஸ்வர்ப்பானு, ப்ரபானு, பானுமான். சந்திரபானு, பிர்ஹத்பாநு, ரவிபானு, ஸ்ரீபானு, ப்ரதிபானு என்று அவள் மூலம் பிறந்த கிருஷ்ண புத்திரர்கள் வரிசையாய்.

Who was Krishna's best friend, Sudama or Arjun? - Quora

அடுத்து வந்தவளைப் பார்க்கவே குசேலனுக்கு பயமாக இருந்தது. அசாதாரண உயரமும், பருமனும், கறுத்த தேகமுமாக, ஆனால் படு கம்பீரமாய். குசேலனை நோக்கிக் குவிந்த கைகள் கரடியின் கைகள் போல் அத்தனை வலுவாக. “என்ன ஆள் கரடி போல் இருக்கிறாளே என்று பார்க்கிறாயா? அவள் கரடியினத் தலைவர் ஜாம்பவானின் புதல்வி ஜாம்பவதி. இவள் கம்பீரமான அழகில் மயங்கி அழைத்து வந்தேன்,“ என்றான். ஜாம்பவதியின் மூத்தமகன் ஸாம்பன் அப்படியே அச்சுஅசல் கிருஷ்ணன்தான். அவனும், அவன் தம்பிகள், ஸுமித்திரன், புருஜித், சதஜித், ஸஹஸ்ரஜித், விஜயன், சித்திரகேது, கீர்த்திமான், த்ரவணன், க்ரது ஆகியோரும் இருவரையும் வணங்கி தங்களுக்குரிய இடத்திற்குச் சென்றார்கள். கோஸல தேசத்து அரசனின் மகளான நக்னஜித் அடுத்து வந்தாள். அவளது தந்தையின் ஏழு எருதுகளை அடக்கி அவளை அடைந்தானாம் கிருஷ்ணன். பத்து வாலிபர்களின் தாய் போன்றே இல்லாமல், இப்போதுதான் திருமணமான கன்னி போல் அத்தனை கவர்ச்சியாக, இளமையாக இருந்தாள் நக்னஜித். பானு, சந்திரன், அசவசேனன், சித்திரகு, வேகவான், விருஷன், ஆமன், சங்கு, வஸு, கிருதி என்ற அந்த வாலிபர்கள் எல்லாம் அவளது புதல்வர்கள் என்பதை நம்பவே முடியாமல் திகைத்து நின்றான் குசேலன்.

வரிசை தொடர்ந்தது. சூரியனின் மகள் காளிந்தியும், அவளது புதல்வர்கள் ச்ருதன்கவி, விருஷன், ஸுபாஹு, புத்திரன், ஏகலன், சாந்தி, தர்சன், பூர்ணமாஸம், ஸோமகன் ஆகியோர்.

மத்ரதேசத்து அரசன் மகளும், சுயம்வரத்தின் மூலம் கிருஷ்ணன் வென்று மணந்தவளுமான லக்ஷ்மணா என்ற மற்றொரு அழகியும், அவளுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த ப்ரகோஷன், காத்திரவான், ஸிம்ஹன், பலன், ப்ரபலன், ஊர்த்துவகன், மஹாசக்தி, ஸஹன், தேஜஸ், அபராஜிதன் ஆகியோரும் வணங்கிச் சென்றனர்.

அவந்தி தேசத்து அரசன் விந்தனின் தங்கையான மித்ரவிந்தை என்ற மனைவியும், விருகன், அர்கன், அனிலன், கிருத்திரன், பஹ்வனன், நாதன். மஹாசன், பாவனன், வஹ்நி ஆகியோரும், பத்ரை என்ற மனைவியும் –‘எங்கள் அப்பாவின் சகோதரி ச்ருதகீர்த்தி அத்தையை உனக்கு நினைவிருக்கிறதா? அந்த அத்தையின் பெண்தான் இந்த பத்ரை. அத்தை சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்று எட்டாவது ஆளாக இவளை என் தலையில் கட்டி விட்டாள்‘ என்ற கிருஷ்ணனின் அறிமுகத்தோடு – அவள் வயிற்றில் உதித்த ஸ்ங்கிராமஜித், ப்ரஹத்ஸேனன், சூரன், ப்ரஹாணன், அரிஜித், யஜ்ஞன், ஸுபுத்திரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகியோரும் வந்து வணங்கிச் சென்றனர்.

“அவ்வளவுதானா கிருஷ்ணா? என்றான் குசேலன். “இவர்கள் எல்லோருக்கும் பெண்குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு திருமணம் ஆகி கணவர் வீடு சென்றுவிட்டார்கள். புதல்வர்கள் எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. அதிலும் இந்த பிரத்யும்னன், ஸாம்பன் போன்றோர் என்னை மாதிரி. பல மனைவிகள். நூற்றுக்கணக்கில் பேரன் பேத்திகள். என் பிறந்தநாள் போன்ற வைபவங்களில் அவர்களும் வருவார்கள்,“ என்றான் கிருஷ்ணன்.

How Krishna was transformed from a tribal deity to a supreme god ...

“வாசுதேவ குடும்பம் என்று உலகமே ஒரு குடும்பம் என்று நீ சொன்னதாகச் சொல்வார்கள். அது உண்மையில் உன் குடும்பத்தை மட்டும் குறிப்பது தான் போலும்,“ என்றான் குசேலன்.

“ஆமாம். இன்னும் பல பெயர் தெரியாத பெண்களுக்குப் பிறந்த பெயர் தெரியாத குழந்தைகளும் உண்டு. அவர்களையும் சேர்த்தால், உலகம் முழுவதுமே என் குடும்பம்தான்.” என்றான் கிருஷ்ணன். ஒரு கணம் இடைவெளி விட்டு, ” உன் போன்ற பிராமணர்கள் இந்த வாசுதேவ குடும்பத்திற்கும், என் லீலைகளுக்கும்  பெரிது பெரிதாக  தத்துவ விளக்கங்களைச் சொல்லி, எனது திருவிளையாடல்களை மூடி மறைத்து விடுவார்கள்,“ என்றான் பலமாகச் சிரித்தபடி.

“என்னை நல்லபடியாக கவனி. நானே அந்த வேலையைச் செய்கிறேன்,” என்றான் குசேலன். கிருஷ்ணன் அவனது முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்தான்.

2 Comments

  1. சுப்பாராவ் மறுவாசிப்புப் படைப்புகள் புதிதல்ல. இப்படியோர் கோணத்தில் அன்றைய சித்தரிப்புகளைப் பார்த்தால் என்ன என்கிற இலக்கிய முயற்சியைத் தாண்டிய விமர்சனக் கண்ணோட்டத்தில் சமூக அக்கறை முழுமையாக நிரம்பியிருக்கும். அரசியல் தெளிவுடன் துணிவும் சேர்ந்திருக்கும். வாசுதேவ குடும்பமும் அப்படியே.

    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery