Story

சிறுகதை: “காண்பதுவும் பொய்” – மொசைக்குமார்

234views
Spread the love

 

வாடிக்கையாளா் என்பவா் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபா். அவா் நம்மை சார்ந்து இல்லை, அவரை நாம்தான் சார்ந்து இருக்கிறோம். நமது வேலையில் தொந்தரவு செய்பவரல்ல அவா். நமது வேலையின் ஆதாரமே அவா்தான். நமது வியாபாரத்தில் அவா் ஒரு வெளி ஆள் அல்ல. அவா் அதன் ஒரு பகுதி. அவருக்கு சேவை செய்வதன் மூலம் அவருக்கு எந்த ஒரு சலுகையும் தருவதில்லை. நாம் அப்படி செய்ய அவா்தான் நமக்கு சலுகை காட்டுகிறார்.

                                       -மகாத்மா காந்தியடிகள்

மேற்சொன்ன வாக்கியங்களுடன் மேலாடையின்றி ஒருபுறமாய் திரும்பி புன்னகையை உதிர்த்தபடியான காந்தியின் உருவத்தையும் கொண்ட அந்த பேனா் கடையின் உட்புறச் சுவரொன்றிலே எப்போதும் நிலையாய் ஒட்டப்பட்டிருக்கும்.

நகரின் மையத்திலே பிரதான சாலையோரமாய் நீண்ட வருடங்களாய் குடி கொண்டிருக்கும் இந்த    ‘குமர விலாஸ் பேக்கரி‘ சற்று பிரபலமானதுதான். கால மாற்றத்திற்கு ஏற்ப கிரானைட் டைல்ஸ் தரைகளாலும், மேஜை நாற்காலிகளாலும் தன்னை அலங்கரித்து வாடிக்கையாளா்களை வசீகரித்துக் கொள்கிறது. முகப்பில் இருந்த டீ பட்டறை இப்போது உள் மூலையொன்றில் நவீன ரக பாய்லா், ஹீட்டா், ஃபில்டா், கெட்டில், கண்ணாடித் தம்ளா்களுடன் டீ-காபி, சுக்கு காபி, பால், பாதாம்பால், இஞ்சி டீ, லெமன் டீ, பிளாக் டீ, கிரீன் டீ  என்று ரக ரகமாய் முகம் காட்டிக் கொண்டிருக்கிறது.  டோக்கன் இன்றி  அவ்வளவு சுலபமாய் பெற்றுவிட முடியாது!

உள் ஒரு புறமாய் மார்பளவு உயரத்தில் வளைந்து நெளிந்த கண்ணாடித்திரை சூழ்ந்த பல அடுக்குகள் கொண்ட ஸ்டால்கள் ஐந்தாறு – ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாகவும், அதற்குள்ளே உயா்ரக பால்கோவா, ரசகுல்லா, குலோப் ஜாமூன், நெய் லட்டு, அல்வா, ஜிலேபி, மைசூா் பாகு, பூந்தி, பாதுஷா, ஸ்வீட் மிக்ஸா் இன்னபிற பெயர் தெரியாத இனிப்பு வகைகளும்…

கட்லட், பீட்ஸா, எக் ரோல், பிரட் மசால், மசாலா பன் போன்றவையும் ஒரே சீராக வெட்டி அடுக்கப்பட்ட பீஸ் கேக்குகள், பல வடிவங்களில் பொ்த் டே கேக்குகள், மிக்ஸா், சேவு வகைகள், சீவல், தட்டை, முறுக்கு, காராப்பூந்தி, பாசிப் பயறு வறுவல், மசாலா கடலை இன்னும் பல கார வகைகள், குளிர் சாதனப் பெட்டியிலும் சுவரின் அலமாரிகளிலும் பாதாம்பால், ரோஸ்மில்க், வாட்டா் பாட்டில், மேலும் பல குளிர் பானங்கள் அவை அவைகளுக்குரிய இடங்களில் அழகாக இருக்கும். அது போக பிரெட் பாக்கெட்டுகள், ரஸ்க்குகள், ஓமப்பொடிச் சுருள்கள், சிப்ஸ் ரகங்களும்…

அன்றாடம் தயாரிக்கப்படும் வெஜ், மஷ்ரூம், எக், ஆனியன், சிக்கன் முதற்கொண்ட பப்ஸ், சமோசா வகைகள் இளம் சூட்டில் ஒரு பக்கத்திலும்… ஸ்டால்களின் மேற்பகுதியிலே தேங்காய் பன், பால் பன், போளி, வடைகள், தயிர்வடை, சாம்பார்வடை, பக்காவடை, உதிரி வெங்காய பஜ்ஜி, கிழங்கு, முட்டை போண்டாக்கள் என கண்களுக்கும் நாவிற்கும் குளிர்ச்சியாக இருக்கும்.

கல்லாவிற்கு மேலே எல்.இ.டி திரை. ஆங்காங்கே கண்சிமிட்டாமல் பார்வையைப் படரவிட்டிருக்கும் சி.சி.டி.வி காமிராக்களின் படத்தொகுப்பு கட்டம் கட்டமாய் அதில் ஒளிரும். மேஜைகளைத் தாண்டி சுவரையொட்டி நீள சாய்வுப் பெஞ்சுகளும், துணைக்கு டீப்பாய்களும். ஓனர் தவிர்த்து  சரக்கு மாஸ்டர் டீ மாஸ்டரெல்லாம் சோ்த்து ஏழெட்டு வேலையாட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருப்பா்.

பஜாரின் மையப்புள்ளி, அரசு அலுவலகங்கள், கமிஷன் கடைகள், சந்தை வளாகம் என அருகாமையில் இருப்பதால்  பேண்ட் – சட்டை அணிந்தவா்கள் முதல் உஜாலா வெண்மையில் தோய்த்த வெள்ளை வேஷ்டி-சட்டை முதலாளிகள், பச்சை துண்டு போர்த்திய சுமை தூக்கும் தொழிலாளர்கள், பாதசாரிகள் என்று பாகுபாடின்றி கலகலப்பாய் வந்து போவார்கள். அவ்வரிசையில் அவ்வப்போதைய மாலை நேரங்களில் நானும்  வருவதோடு முடிந்தால் வீட்டிற்கும் ஏதாவது வாங்கிச் செல்வேன்.

அங்கே தயாரிக்கப்படும் தேங்காய் பன் எனக்குப் பிடித்த ஒன்று. அதோடு பக்காவடை அல்லது மிளகுச்சேவு ஏதாகிலும் ஒன்றை உள்ளிறக்கிவிட்டு பாட்டிலில் அடைபட்ட குளுகுளு பாதாம் பாலும் பருகி எழுந்தால்… அப்பப்பா நாவும் மனதும் எனக்கே நன்றி சொல்லும்.

அதே நோக்கத்தில்தான் இப்போதும் அல்லிநகரத்திலிருந்து பைக்கின் துணையோடு இங்கே வந்திருக்கிறேன். வழக்கமாக வாங்கும் பதார்த்தங்களை பேப்பா் தட்டிலே பெற்றுக்கொண்டு ஒரு டீப்பாயின் முன் அமா்ந்தேன்.

வந்ததிலிருந்து ஒரு காட்சி மனத்தை நெருடிக்கொண்டேயிருக்கிறது.

முழங்கால்வரை தொங்கிய உப்புப் படிந்த கைலி, சுருங்கலும் ஷோல்டரில் கிழிந்ததுமான கட்டம் போட்ட சட்டை, கருப்பும் வெள்ளையுமாய் கலந்து கலைந்ததோடு முன்பக்கம் செம்பட்டையாய் வா்ணமேறிய தலைமுடி,, கை கால்களெல்லாம் பவுடா் பூசினாற்போல் வெள்ளை பூப்பு, அது தவிர தோள் பட்டையில் மண்வெட்டி தொங்க ஒரு கையில் ஆறு அடி உயரத்தில் ஸ்டீல் மட்டக் கம்பு, மறு கையில் சிமெண்ட் சாக்கினால் தைத்த பை, அதன் மேற்புறத்தில் மணியாஸ் கட்டையும், கொத்துக் கரண்டியும் மேலெழும்பிக் காட்சி தந்தன. தான் ஒரு கட்டிடத் தொழிலாளி என்பதைத் தோற்றத்தின் வாயிலாகச் சொல்லாமல் சொல்லிக் கொண்டு நிற்கும் அந்த நபா் பதார்த்தங்கள் அடங்கிய ஸ்டாலை நோட்டமிட்டபடியே எதையோ கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.

“அப்புடி ஒன்னு நீ வாங்கனும்னு அவசியமில்ல… கௌம்பு…” விநியோகிப்பவா் இப்படிச் சொல்லிவிட்டு மற்ற வாடிக்கையாளா்களைக் கவனிக்கலானார்.

“எங்களப் பாத்தா வாங்க வந்தவக மாதிரி தெரியலியா… ரெண்டு குடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க…” மீண்டும் எதையோ கேட்கிறார் இவா்.

“யேய் போய்யா மொதல்ல… ரோடெல்லாங் கடையாத்தே இருக்கு… ஒனக்கேத்த மாதிரி வேறெங்கயாவது வாங்கி திண்ணுட்டுப்போ. பெரிய லாடு லபக்குதாசு“

அவரும் தருவதாக இல்லை, இவரும் விடுவதாக இல்லை! மட்டக்கம்பையும் கரண்டி சாமான் பையையும் மாற்றி மாற்றி பிடித்துக் கொண்டே ஜவ்வாக நின்றுகொண்டிருக்கிறார். டிப்டாப் உடையில் வரும் ஆசாமிகளின் பார்வையில் ஏறி இறங்கிக்கொண்டும் கிடக்கிறார். பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. தேங்காய் பன் விழுங்கலோடு சம்பாஷணைகளில் லயித்தபடி இருந்தேன் நான்.

“வந்தமா சட்டு புட்டுன்னு வாங்குனமா போனமான்னு இருக்கணும். சும்மா நின்னுக்கிட்டே திரியக்கூடாது. ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு வர்ராங்க போறாங்க.. எவ்வளவு டீஸண்டா யேவாரம் பாத்துட்டு இருக்கோம். ஓம்பாட்டுக்கு மூட்ட முடிச்சுகள தூக்கிட்டு வா்ற, அதென்னா இதென்னான்னு நின்னு பெராக் பாத்துக்கிட்டு ரெண்டு சீவல் குடு திண்ணுபாத்துட்டு வாந்குறேன்னுக்கிட்டுருக்க… ஏங்கடைக்கு வாயான்னு ஒன்னய யாரும் வெத்தல பாக்கு வச்சு கூப்டாங்களா… கௌம்பு மொதல்ல”

அடக் கொடுமையா! சாம்பிளுக்கான இரண்டு சீவல்தான் இங்கு பிரச்சனையா? கொடுத்தால் தின்று பார்த்துவிட்டுப் பிடித்தால் வாங்கப் போகிறார், இல்லையேல் போகப்போகிறார்.  இது விவாதத்திற்கான பொருளே இல்லையே…

“ஒன்னய ஒரு மணிநேரம் வ்வேல பாரு… அப்பொறம் நீ கொத்தனாரா இல்ல நிமிந்தாளான்னு பாத்துட்டு சம்பளந் தரோம்னு சொன்னா ஒனக்கு எப்பிடி இருக்கும்..?“

இன்னும் எத்தனை எத்தனையோ தத்துவ வார்த்தைகள். எல்லாம் கேட்டபிறகு தின்று பார்க்காமலேயே கால் கிலோ சீவலைப் பொட்டலமாய் வாங்கியபடி முனகிக்கொண்டே நடந்தார் அவா். “ப்போப் போ…”

தேங் காய்பன்னிற்குப் பின் பக்கா வடையை மெல்ல  ஆரம்பித்த தருணம். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு… கிரே கலா் பேன்ட்டும், லைட் புளு கலா் சட்டையும், ஷூ-வும் டையும், ஐ.டி கார்டும் அணிந்தபடி  இருவா்  கடைக்குள் வருகின்றனா்.

“வாங்க சார்”

பிரபல கல்லூரியிலிருந்து தாங்கள் வந்திருப்பதாக அறிமுகம் செய்து கொண்டபின்… மறுநாள் மாலை நடக்கவிருக்கும் கருத்தரங்கிற்காக முன்னூறு நபா்கள் சாப்பிடும்படியாக ஃபுட்டிங் கேக்கும், நைஸ் மிக்ஸரும் தேவைப்படுமெனவும் அதற்கான விலையும் முன்பண விபரமும் கேட்டறிந்ததோடு “லைட்டா சாம்பிள் குடுங்க.. டேஸ்ட் பண்ணி பாப்போம்” எனவும் கேட்டனா்.

அந்த நொடியே “உக்காருங்க சார் கொண்டு வரச் சொல்றே” கல்லாவில் நின்ற முதலாளி சொன்னார்.

கொத்தனாரை விரட்டினாரே, அதே கடை வேலையாள் இப்போது சிறிய பேப்பா் தட்டுக்கள் இரண்டில் ஆளுக்கொரு கேக்கும் கொஞ்சம் நைஸ் மிக்ஸரும் எடுத்து வந்து இன்முகத்தோடு கொடுத்தார்…

இச்செயல் எனக்கு வருத்தத்தையும், கடை நிர்வாகத்தின் மேல் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அந்த அப்பிராணிக் கொத்தனாரும் இதைத்தானே கேட்டார்… அவரிடம் மட்டும் ஏன் எரிந்து விழ வேண்டும்?

ஏழெட்டு வருடங்களுக்குமுன் எனக்கும் இப்படியோர் சம்பவம் நடந்தது! அப்பொழுதெல்லாம் பைக் இல்லை சைக்கிள்தான் என் குடும்ப வாகனம். ‘ஹேனியல் ஸ்கேன் சென்டா்’ அருகில் பிரம்மாண்ட டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்று புதிய உதயம் கண்டிருந்தது… செல்வச் சீமான்கள் படையெடுத்த அங்கே ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நானும் என்னவளும் சென்றிருந்தோம்.

ஸ்டோரின் முன்புறம் பறந்து விரிந்திருந்த கான்கிரீட் வளாகத்தில் பைக்குகள், கார்கள் என நிற்பதும் கிளம்புவதுமாக இருந்தன. சீருடை அணிந்திருந்த காவலா் ஒருவா் விசில் ஊதிக் கொண்டே அவற்றுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

Chennai News: Pedestrian Plaza at Pondy Bazaar evokes mixed ...

நாங்கள் உள்நுழைந்ததும் வேகமாய் வந்தவா் சைக்கிளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்தினார்

“என்னங்க… சாமான் வாங்க வந்துருக்கோம்… வேற எங்க போயி நிப்பாட்றது?“

ஓரிருமுறை சொல்லிப்பார்த்தவா் பின் கோபமாய் கத்த ஆரம்பித்தார். “எடுய்யா மொதல்ல அங்கிட்டு… சொல்லிக்கிட்டிருக்கே திரும்ப திரும்ப பேசிட்டிருக்க… எடு மொதல்ல“

மதியார்  தலைவாசலை மானங்கெட்டு மிதிக்க மனமின்றி நானும் என்னவளும் பின்வாங்கினோம். மீண்டும் அவரின் விசில் சத்தம் உள்நுழைந்த கார் ஒன்றை நோக்கி புன்சிரிப்புடன் கூவி ஓடியது.

“என்னப்பா இது. இந்த வாட்ச்மேனும் ஒரு வேலக்காரருதான… சைக்கிள்னா அவ்வளவு கௌரவக் கொறைச்சலாவா இருக்குது அந்தாளுக்கு”

“விடுங்கப்பா அதபோயி பெருசா பேசிக்கிட்டு… நிர்வாகத்துல ஏதாவது சொல்லியிருப்பாங்க… நமக்கென்ன கடையா இல்ல? பைக்கும் காரும் நம்மளும் ஒருநாள் வாங்குவோம் ஃபீல் பண்ணாதீங்க” என் புலம்பலுக்கு அவள் பதில் சொன்னாள். அது இப்போது மனத்திரையில் ஒளிர்கிறது.

‘ஆள் பாதி ஆடை பாதி‘ என்பார்களே… இவா்களைப் பொருத்தவரையில் இதுதான் அது போலும்! இந்த லட்சனத்தில் காந்தியடிகளின் பொன் மொழிகள் வேறு!

வாங்கிய குளிரூட்டப்பட்ட பாதாம்பால் என்னவோ எரிச்சலுடன்தான் தொண்டைக்குழியில் கடக் கடக்-கென இறங்கிக் கொண்டிருந்தது. குடித்துவிட்டு எழும் தறுவாயில் ஃபுட்டிங் கேக்கையும் நைஸ் மிக்ஸரையும் சுவை பார்த்த அந்த டிப்டாப் மனிதர்களும் துரிதமாய்த் தின்று முடித்துவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தனா்.

“சார்… ஆா்டரு ஏதோ சொன்னிங்களே” அவா்கள் பின்னே வாசல்வரை வேகமாய் வந்த பேக்கரியின் உரிமையாளா் ஞாபகப்படுத்துகிறார்.

“ஓ… ஆமா.. ஆமா. ஒங்ககிட்ட குடுத்துறவா, அவர்கிட்ட குடுத்துறவா” விநியோகிப்பாளரைக் கை காட்டி கேட்கின்றனர்.

“யார்கிட்டனா என்னங்க சார்… எல்லாமே கடைக்கித்தான…” ஓனா் சொல்லும்போதே அவரும் அருகில் வருகிறார்.

கண் மூடித் திறக்கும் நேரத்தில் எப்படி அக்காட்சி அரங்கேறத் துவங்கியது எனத் தெரியவில்லை.  சா்க்கஸ் கோமாளிகளின் தலையிலிருக்கும் கூம்பு வடிவ தொப்பிகளைப் போல ஓனருக்கும் வேலையாளுக்கும் அவா்கள் தலையின்மேலே மின்னல் வேகத்தில் சிவப்பு நிற தொப்பிகள் மாட்டப்பட்டதுடன் கரங்களை தட்டி சப்தமுமெழுப்பினா்.

‘என்னடா நடக்குது இங்க!‘ கடைக்காரர்களைப்போல நானும் புதிரோடு விழித்தேன்….

அடுத்த நொடி… தின்று பார்க்க இரண்டு சீவல் கேட்டு மட்டக் கம்பும் கரண்டி சாமான் பையுமாய் கொத்தனார் வடிவத்தில் நின்றிருந்த மனிதா் இப்போது மின்னும் காகிதமும், ரிப்பனும், சூழ்ந்த சதுர வடிவ சிறிய பரிசுப் பெட்டி ஒன்றை ஏந்தியபடி அவா்கள்முன்  தோன்றினார்…

“வாங்கிக்கங்க..” என்றதோடு கடையின் முன் சற்று தள்ளி நின்றிருந்த காரின் கதவு ஜன்னலை நோக்கும்படி கூறினார்.

அதனுள்ளே காமிரா மூலம் இவற்றைப் பதிவு செய்தபடி இன்னொருவா் கையசைக்கிறார்.

“இது ஒரு பிராங்க் ஷோ சார்..… நல்லா கோவாப்ரேட் பண்ணினீங்க… எங்க கை காட்டிட்டே சொல்லுங்க… நல்லா குடுத்தாய்ங்கடா ஆா்டரு…”

நிமிர்ந்து பார்த்தேன். பேனரில் இருந்த காந்தி சத்தமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.

 

 

7 Comments

 1. வேலைக்குப் போய் முழுசா மூணு மாசங்களாகி விட்டது. அன்றாட உணவு என்பதே ஓர் ஆடம்பரப் பொருளாகிப்போன நிலை. நாளிதழ்களைத் திறந்தால் கொரோனா மட்டுமல்ல புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை மோசமடைவது வெளிப்படையாக தெரிகிறது. சுகாதார கட்டமைப்பின் சீரழவு மரணங்களில் வெளிப்படுகிறது,

  இந்நிலையில் ஆறுதலாக இக்கதை வெளிவந்திருக்கிறது,
  மொசைக் குமார் எப்படி உங்களால் எழுத முடிந்தது? பாராட்டுக்கள்

 2. உண்மையில் இன்றைய உலகத்தில் நடக்கும் விசயத்தை கதையாக எழுதி இருப்பது சிறப்பு… அதை ரசிக்கும் வண்ணமாக எழுதி இருப்பது இன்னும் சிறப்பு….

 3. கதையின் முடிவு அற்புதமாக இருந்தது.இப்படி தான் முடியப் போகிறது என்று யுகித்தேன் அங்கு நல்ல ட்விஸ்ட்

 4. இன்றும் கீழ்த்தட்டு மக்களின் அன்றாட அவமானங்களை கதையாக எழுதி அவர்கள் சார்பில் குரல் கொடுக்கும் எழுத்தாளர்கள் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சாமானியனின் சார்பில் சம்பட்டி அடி கொடுத்து இருக்கிறார். கதையின் முடிவு யாரும் யோசிக்க முடியாதவாறு இருப்பது சிறந்த எழுத்தாளருக்கு அழகு. மேலும் சிறக்க மொசைக் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  1. பிரின்ஸ் அவர்களுக்கு

   உங்கள்
   விமர்சன வரிகளும்
   வாழ்த்துதலும்
   எனக்கு
   மகிழ்ச்சியையும்
   உற்சாகத்தையும் கொடுத்தன…
   நன்றி!

Leave a Response