Story

சிறுகதை: ஒத்த ரூபாய் – சத்யா சம்பத் குமார்

 

                   மாலை 4 மணி சிவ பிரசாதம் என்ற போர்டை தாங்கிய லேத் பட்டறையில் மும்மரமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது டெலிபோன் அலறியது, முதலாளி இந்த நேரத்தில் யார் என்று போனை எடுக்க பின்னால் திரும்பி சுப்பிரமணியை அழைத்து ஏய் உங்க அம்மாவுக்கு முடியலையாம் உன்னைத்தான் கூப்பிட்டுக் கொண்டே இருக்காம் போடா போயிட்டு எனக்கு போன் போட்டு சொல்லு செலவுக்கு வேணா பணம் வந்து தரேன் என்றார்.

                   கிராமத்தை அடுத்துள்ள சிறிய டவுனில் சுப்பிரமணி சிவ பிரசாதம் லேத் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தினமும் வேலைக்கு பத்து கிலோமீட்டர் சைக்கிளில் தான் சென்று வருவான், ஆள் பார்ப்பதற்கு சிவந்த நிறம், லேசான சுருள் முடி, அடர்ந்த கரு மீசை, என நடிகன் போல வாட்டசாட்டமாக இருப்பான், இவன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 இவன் ஏழாவது ஆள் இவனை தவிர ஒருவர் கூட எட்டாங்கிளாஸ் தாண்டவில்லை தங்களது குல தொழிலை தான் பார்த்து வந்தனர். குலத்தொழில் என்றாள்…. இவன் அப்பா பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளி, குடித்து குடித்து குடல் புண்ணாகி இவன் ஏழாம் கிளாஸ் படிக்கும் பொழுதே போய் சேர்ந்துவிட்டார். இவனது உடன் பிறந்த ஒருவருக்கு அப்பணி கிடைத்து சென்று கொண்டுள்ளார். இவனது தாய் 4 வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து வயல் வேலைக்கு சென்று என்று கஷ்டப்பட்டு இவர்களுக்கு ஒரு வேளை சோறாவது போட்டுக் கொண்டிருந்தாள் இவனுக்கு நல்ல சாப்பாடு என்றால் பள்ளியில் கிடைக்கும் சத்துணவு தான் அல்லது ஊரில் யார் வீட்டிலாவது இழவு அல்லது திருமணம் என்றால் எச்சில் இலை எடுக்க இவனது தாய் சென்றால் எனில் வடை பாயாசத்துடன் நல்ல சோறு கிடைக்கும். பள்ளிகளில் கொடுக்கும் சீருடைகளே இவனது உடைகள் அல்லது கிராமத்து பெரிய குடும்பத்து பிள்ளைகளின் பத்தாத உடைகள் தான் இவனது உடைகள் ஒன்றுகூட உடம்பிற்கு சரியாக பொருந்தி இருக்காது.

                       இவன் ஒன்றாம் வகுப்பிலேயே முதல் மாணவனாக இருந்தான் ,அதைப் பார்த்து ஆசிரியர் இவனது அம்மாவை அழைத்து உன் மகன் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான் நல்லா படிக்க வை இவன் மூலமாகத்தான் உன் பரம்பரைக்கு உன் குல தொழிலிலிருந்து விடிவுகாலம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார். இவன் அம்மாவிற்கு எப்படியாவது இவன் ஒருவனாவது நல்லா படித்து , நாலு பேர் மதிக்க வாழ வேண்டும் என்று ஆசை, இவன் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் படுசுட்டி ,இவன் ஆசிரியரும்  விளையாட்டின் மூலமும் படிப்பதற்கு உதவி தொகை கிடைக்கும் என்று கூற இவன் அம்மா வீட்டில் அனைவரும் வேலைக்கு செல்லும் பொழுது லீவு நாட்களில் கூட சுப்பிரமணியை விளையாட தான் அனுப்புவாள், இதனால் வீட்டில் சண்டையும் வரும் அதற்கு இவன் அம்மா இவன் உங்களைப் போல அல்ல ஒரு நாள் சாதிப்பான் என்று கூறுவாள்.

Unauthorized demonetisation: Uttar Pradesh shopkeepers refuse to accept new 1  rupee coin - Education Today News

                    சுப்பிரமணியை பள்ளிக்கு அனுப்புவது என்றால் சாதாரண விஷயம் அல்ல, தினமும் ஒத்த  ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் போகமாட்டான், அந்த ஒத்த ரூபாய்க்கு இவனது அம்மா ,கூட இரண்டு வீட்டில் வேலை பார்த்து அதனை பத்திரப்படுத்தி தினமும்  ஒத்த ரூபாய் கொடுப்பாள். இவனும் பள்ளி இடைவேளையில் மிட்டாய் வாங்கி தின்பான் இதற்காகவே பள்ளிக்கு சென்றான். ஐந்தாம் வகுப்பு முடித்த பின்தான் அம்மாவின் கஷ்டம் புரிந்து ஒத்த ரூபாய் வேண்டாம் என்றான் அன்று இவன் அம்மா பார்த்த பார்வையும் வடித்த கண்ணீரும் இன்றும் நினைவில் உள்ளது சுப்பிரமணிக்கு.

பள்ளியில் இவனுக்கு மூன்று வருடம் முன்பு படித்த மாணவன் பால்பாண்டி பக்கத்து தெருவில் வசித்து வந்தான், அவனுக்கும் இவனை போல சிறிய மாறுதலுடன் கூடிய கஷ்டப்படும் குடும்பப் பின்னணிதான். ஆனால் அவன் பொறியியல் படிக்க ஆசைப் பட்டான், அவனது மார்க்கிற்கும் உதவி தொகை கிடைத்தது ,ஆனால் விடுதி கட்டணம் போன்றவை மாதம் மாதம் கிடைக்காமல் ஆறு மாதம் எட்டு மாதம் கழித்தே கிடைத்தது விடுதியில் ஏற்பட்ட நெருக்கடியால் கடன் வாங்கி கட்டி அதனை அடைக்க முடியாமல் அவன் அப்பா படும் அவமானமும் கஷ்டமும் இவனை பத்தாம் வகுப்பு முடித்த உடனே ஐடிஐ படிக்க வைத்தது. இன்றைய கல்விக் கொள்கை 2020-யில் மேலோட்டமாக பார்த்தால் நிறைய சலுகைகள் இருப்பதாக தோன்றுவதாகவும் இவை பால்பாண்டி போல நிறைய மாணவர்களுக்கு சலுகை கிடைத்தும் கிடைக்காது போல நிறைய கண்துடைப்பு நிறைந்ததாகவும் தான் இருப்பதாக நிறைய படித்த அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் மனநல மருத்துவர்கள் என பலதரப்பு மக்களும் குரல் எழுப்புகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் ஒரே குரலாக எழுப்பும் போது தான் இளைஞர்களின் எதிர்காலம் வளம் பெறும். கண்துடைப்பு கொள்கைகளை இளைஞர்களின் கண்களில் ஒளியாக மாற்ற முடியும் .

                  ஐடிஐ யில் சிறந்த மாணவனாக தேர்வு பெற்ற சுப்பிரமணிக்கு உடனே வேலையும் கிடைத்தது. சுப்பிரமணிக்கு ஏழு வயது இருக்கும் பொழுது அவனது அத்தைக்கு பெண் குழந்தை பிறந்தது, பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று முட்டை கண்களுடன் முழிக்கும் பாப்பாவை பார்க்க அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று அனைவரும் அவளுக்கு குமுதா என்று பெயரிட்டனர். அவளது ஒவ்வொரு வளர்ச்சியையும் உடனிருந்து பார்த்து ரசித்தவன் சுப்பிரமணி.

                        சுப்பிரமணி என்றால் அவளுக்கு மிகவும் பிரியம் மாமா மாமா என்று சுற்றி சுற்றி வருவாள் அம்மா கொடுக்கும் தீனி அனைத்திலும் பாதியை பத்திரப்படுத்தி கொடுப்பாள். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சுப்பிரமணி எவ்வளவோ போராடியும் அவளால் ஐந்தாம் வகுப்பு தாண்டுவதே பெரும் போராட்டம் ஆகிவிட்டது .அதனால் அதற்கு மேல் குமுதா படிக்கச் செல்ல வில்லை, ஆனால் நன்றாக சமைப்பாள், வீட்டை சுத்தமாக வைத்திருப்பாள், இவன் படிக்கும் பொழுது டீ போட்டுக் கொடுப்பது என்று உதவியாக இருப்பாள். அனைவரின் குணம் அறிந்து பக்குவமாக நடந்து கொள்ளு வாள், இவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்த முதல் வருடம் குமுதாவின் அப்பா வழி உறவினர் பெண் கேட்டு வர சுப்பிரமணி அத்தையிடம் சண்டைக்கே சென்று விட்டான். அவன் மனதை அறிந்ததும் அத்தருணத்தில் தான். மாப்பிள்ளை வீட்டாரிடம் குமுதா எனக்கு தான் யாரும் பெண் கேட்டு வர வேண்டாம் என்று கூறிவிட்டான். சண்டைக்கு வந்த மாமாவிடம் மாமா நான் இப்பொழுதுதான் சம்பாதிக்க ஆரம்பித்து உள்ளேன் முதலில் இருப்பதற்கு ஒரு வீடு ஒன்று கட்டிய பிறகுதான் கல்யாணம்,குமுதாவும் சின்ன பெண் தானே ஒரு மூன்று நான்கு வருடம் போகட்டும் குமுதாவை நான் தான் திருமணம் முடிப்பேன் என்று கூறினான். அவன் கூறியபடியே ஐந்து வருடம் கழித்து வீடு கட்டி முடித்து அவனது விருப்பப்படியே குமுதாவை கை பிடித்தான் . இவர்களுக்கு அக்ஷ்யா, அருண் என்ற இரண்டு குழந்தைகள்.

Lathe Machine Operation - YouTube

                      இன்று இவன் ஐடிஐ முடித்து ஒரு லேத் பட்டறையில் வேலை ,மனைவி, இரண்டு குழந்தைகள், சொந்த வீடு ,சைக்கிள், மூன்று வேளை சோறு, உடுத்த நல்ல துணி, என்று வாழ்வதற்குக் காரணம் இவனது தாய் பூவாயி தான்.

                       தினமும் மத்தியான சோறு எடுத்துச் செல்பவன் ஒரு வாரமாக முதலாளியிடம் ஒரு மணி நேரம் கேட்டு வேகாத வெயிலில் சைக்கிளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றான். ஏனென்றால் இவனது அம்மா ஒரு வாரமாக கைகால் வராமல் நினைவு தப்பி கிடைக்கிறாள். சுப்பிரமணி வந்திருக்கிறேன் என்றால் தான் கண் திறப்பால், வாயையும் திறப்பாள் இவன் கையால் ஏதாவது கஞ்சி ஊத்துவான் இல்லை என்றால் பட்டினி தான், அதனாலேயே தினமும் வந்து கஞ்சி ஊற்றிவிட்டு  அரைகுறையாக சாப்பிட்டு விட்டு செல்வான்.

இன்றும் அப்படிதான் சென்றான் நன்றாகத்தான் இருந்தாள் என்ன ஆயிற்று என்று சைக்கிளை வேகவேகமாக மிதித்துக் கொண்டு சென்றான், வீடு நெருங்க நெருங்க வயிற்றை கலக்கி என்னமோ செய்தது வீட்டில் ஒரே கும்பல், சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டாண்ட் கூட போடாமல் விட்டு ஓடி சென்று பூவாயி பக்கம் அமர்ந்து அம்மா சுப்பிரமணி வந்திருக்கிறேன் என்று அழைத்தது தான் தாமதம் உடனே கண்ணை திறந்து சுப்பிரமணி என்று அழைத்தால் கை ஜாடையாக நீர் குடிக்க கேட்டால் சிறிது குடித்தபின் முந்தானையின் ஒரு ஓரத்தில் முடிச்சை காட்டினால் பிரித்தால் ஒத்த ரூபாய் அதனை சிரித்துக்கொண்டே கொடுத்தால் சிரித்த முகமாகவே கண்வழியாக உயிர் பிரிவதை சுப்பிரமணி உணர்ந்தான். 

அப்போது ஊரில் எங்கோ இருந்து பாட்டு சத்தம் கேட்டது ஒற்றை ரூபாய் நாணயம் பார்த்தேன் உந்தன் ஞாபகம் …..சுப்பிரமணி கதறி தீர்த்து விட்டான்.இனி ஒத்த ரூபாயை பார்க்கும் பொழுது எல்லாம்  தன் தாய் பூவாயி நினைவாகவே இருக்கும், அவள் எங்கும் செல்லவில்லை ஒத்த ரூபாயாக என்றும் தன்னுடன் தான் இருப்பாள் என்று நினைத்து கொண்டான்.

                       

                             எழுத்து,

                             சத்யா சம்பத் குமார்

                             2/94, கீழ ரத வீதி,

                             பெருவளநல்லுர்,

லால்குடி, திருச்சி-621712.

Leave a Response