Story

சிறுகதை: கல்லில் கசிந்த ஈரம் – சண்முகப்பிரியா

 

சோறு பொங்கட்டும் போ…

போடா! …சோறு இன்னும் பொங்கல…

டேய்!!!போடா!…சோறு பொங்கட்டும்!

என்ற அதட்டும் தொனியில் பேசி கொண்டிருந்தார் ராஜன்.

நீங்க இப்படி செல்லம் கொடுத்து தான் அட்டகாசம் அதிகமாயிடுச்சி.வயசான காலத்துல ஆறுதலா இருக்கட்டும்னு விட்டா நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இல்ல போகுது.

பிள்ள இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாண்ட கதையால்ல இருக்கு.. பேரப்பசங்க இல்லாத வீட்டில் இவைக பண்ற அட்டகாசமும் இந்த மனுஷன் பண்ற கொஞ்சலும் என்று புலம்பியவாறே சோற்று தவளையை கரித்துணியால் பிடித்து பக்குவமாய் வடித்து விட்டு கும்பிடும் சமிக்ஞையுடன் அடுத்த வேலையில் ஆயுத்தமானாள் ராஜனின் மனைவி உமா.

ராஜன் மிக கண்டிப்பான மனிதர்.சிரிப்பதை பார்ப்பது அரிதிலும் அரிது.சிக்கன பேர்வழி.தேவை இல்லாமல் செலவு செய்வது பிடிக்காது சொற்களை கூட.அதிகாரமும் அதட்டும் தொனியுடனுமான குரல்.67 வயது தான் என்றாலும் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட பாதிப்புகளால் 80 வயது தோற்றமும் நடையில் தொய்வும்.வாழ்க்கையில் கடந்து வரும் கசப்பான அனுபவங்கள் சிலரை பக்குவப்படுத்தும் சிலரை இறுக்கி விடும்.இவர் இரண்டாம் வகை.எதனுடனும் ஒட்டாமல் தான் நினைப்பதும் செய்வதுமே சரி என்ற பாணியில் தன் வாழ்க்கையில் தன்னை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பவர். உமாவும் ராஜன் போடும் மியூஸிக்கு  ஏற்றவாறு டான்ஸ் ஆட ஆரம்பித்தில் இருந்தே பழகி விட்டாள்.மிளகாய் பாஷையில் பேசுவதால் தெரிந்த நபர் கூட அவருடன் பேச தயங்குவார்.ஆறுதலாக இருந்த ஒரு மகளும் கல்யாணமாகி வேற ஊரில் செட்டிலாகி விட்டாள்.

உமா மிகவும் பக்குவமானவள்.கோவில்,பூஜை,விரதம் என்று ஆச்சாரமா இருப்பாள்.ராஜனின் செல்லங்கள் சுதந்திரமாக வீட்டிற்குள் வலம் வருவதும் எல்லா இடத்துலயும் படுப்பதும் வாயை வைப்பதும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை இருந்தாலும் வறண்டு போன அவர் மனதில் ஈரம் கசிய ஆரம்பித்ததால் வயசான காலத்துல மனுசனுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று ராஜனுக்காக சகித்து கொள்வாள்.அப்படி இருந்தும் சில நேரங்களில் கோபப்பட்டு அடித்து விடுவாள்.அந்த மாதிரி அடிப்பதை ராஜன் பார்த்து விட்டால் போதும் அன்று முழுவதும் உமாவிடம் கோபத்துடனே பேசுவார்.

ராஜனின் செல்லங்களான சிவப்பியும்,கறுப்பியும் மீண்டும் ‘மி..யா..வ் மி..யா..வ் என்று அவர் காலை சுற்றி சுற்றி வர அவைகளின் பசியை பொறுக்காத ராஜன் உமாவை கடிந்து கொண்டார் 

காலயில எந்திரிச்ச உடனே அரிகாப்படி சோறு உலையில வைக்க சொல்லி இருக்கேன் அத விட உனக்கு என்ன பெரிய வேல… என்று.

பதில் சொன்னால் கோபம் அதிகமாகி கத்துவார் என்றறிந்த உமா பதில் ஏதும் சொல்லாமல் மனுஷங்க மூஞ்சிய கூட சரியா பாத்து பேசாத இவரோட மனசுக்குள்ள வாழ்க்கைக்குள்ள இந்த பூனைக எப்படி வந்தது என்று பழைய நினைவுகளுக்குள் சென்றாள்.

நிறமாசமா இருந்ததனாலயா இல்ல நான் சொன்னதுனாலயானு தெரில வந்தத விரட்டி விடாம விட்டுட்டாரு.அலமாரிக்கடியில் அடைக்கலமாச்சு அந்த வெள்ள கலரு பூனை. வந்த ரெண்டு நாள்ல பிரசவமாகி மூணு குட்டிகள் ரெண்டு சிவப்பு ஒரு கருப்புனு. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் இந்த மனுஷனுக்கு சிரிப்பு கூட வருமானு அன்னக்கி தான பாத்தேன். அதுக்கு அப்புறம் வீட்டோட இருந்து வளர ஆரம்பிச்சதுங்க.ஒரு நாள் சிவப்பு குட்டி ஒண்ணு காணாம போவ பதச்சி போயிட்டாரு மனுஷன்.அடுத்த ரெண்டு குட்டிகள பொத்தி பொத்தி வளத்தாறு நான் வச்ச சிவப்பி கறுப்பி பேரோட…

நாயி வ..ரு..ரு.ரு..ம் குரங்கு வ..ரு..ரு.ரு..ம் வெளிய எங்கயும் போ..வா..வா..வா…த னு இழுத்து இழுத்து ராகத்துடன் பேசுவாரு.இதுகளும் புரிஞ்ச மாதிரி மி..யா..வ் மி..யா..வ்..னு பதில சொல்லும்.அவர் வெளிய போய்ட்டா எங்க தான் போகுதுங்கனு தெரியாது அடிச்சிடுவனு பயம் என் மேல…வண்டி ஹார்ன் சத்தத்த எப்படி தான் கரெக்டா அவரோடதுனு கண்டுபிடிக்குதுகனு தெரியல.. ஒடனே ஓடி வந்து அவர் கால சுத்தி சுத்தி வருங்க… வெளியே போனாருனா காராசேவ்,பிஸ்கட் இல்லாமல் வரமாட்டாரு…முதல்ல அதுகள கவனிச்சிட்டு தான் அடுத்த வேலைய பாப்பாரு. அப்பப்போ வந்துட்டு போய்ட்டிருந்த இந்த வெள்ளச்சிக்கு என்னாச்சுன்னு தெரில  ஆள் அட்ரஸே இல்லாம போச்சு… வருஷம் ஆகிடுச்சு…

ஆச்சி என்னாச்சு காலையிலே யோசனை ரொம்ப பலமா இருக்கு என்று அவள் நினைவை கலைத்தாள் மாட்டிற்கு தண்ணி எடுக்க வந்த ரெங்கம்மா.

அத ஏன் கேட்குற ரெங்கம்மா 

யாரால கெட்டுதுனா நோரால கெட்டுதும்பாங்க அது போல ஆகி போச்சு என் நிலமை. வீட்டில பேரன் பேத்திக இல்லையே நிறமாசமா வந்துருக்கேனு நினச்சி   கொஞ்ச நாள் இருந்துட்டு போட்டும்னு இவரு கிட்ட சொன்னது தப்பா போச்சு.இப்ப இதுகளாலே ரெண்டு பேருக்கும் பிரச்சனை ஆகுது.இந்த மனுஷன் இதுகள வச்சிட்டு பண்ற பாடும் கூத்தும். அவரை நிம்மதியா தூங்க கூட விட மாட்டுதுங்க. கூடவே படுத்து தூங்குதுங்க. காலங்காத்தால நாலு மணிக்கே வெளிய போகணும்னு எழுப்பி விட்ருதுங்க. வெளிய போயிட்டு காடை, எலினு ஏத்தியாச்சும் புடிச்சி கொண்டாந்து அவர் படுத்துகிற ஈச்சர் கீழ போட்டுருதுங்க.நேத்திக்கு அப்படி தான் என்னமோ பண்ணி வச்சிருக்குதுங்க மனுஷன் நான் எந்திகரத்துக்கு முன்னாலே வெளிய வராண்டவ கழுவிட்டு இருக்கறார்.

salem tamil nadu | Tumblr

இப்படி தான் ஒரு நாள் என்னாச்சு… இந்த சிவப்பி சுவரல இருக்க பல்லிய வெறிச்சு பாத்துட்டு இருந்திருக்கு.. அத பாத்தவரு, இந்தா.. இங்க பாரேன்… வெறும் பாலும் தயிறுமா தான போடறோம்… இதுக பல்லிக்காக ஏங்குதுங்க நான் பிடிச்சி போட்டுமானு கேட்கறாரு… இதுக மேல இருக்கற பாசத்துல உசுர கொன்னு சாப்பிடறது பாவம்னு வளந்த வளப்பு கூட மறந்து போச்சு. ஒத்தயா வந்தது…குடும்பம் பெருகிட்டே போகுது.. இப்போ பாரு இந்த சிவப்பி செனயா இருக்கு என்று பல நாள் கதைகளை புலம்பி தள்ளி விட்டாள் உமா பேச ஆள் கிடைத்தவுடன்.

அடுத்த நாள் காலையில,எட்டு மணிக்கு இருக்கும்.சிவப்பி ராஜனையே மியாவ் மியாவ் என்று சுற்றி சுற்றி வந்து அவரை எந்த வேலையும் செய்ய விடவில்லை. ராஜனுக்கு புரிந்து விட்டது பிரசவ வலி வந்து விட்டது என்று. அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. ரொம்ப நேரம் ஆகியும் குட்டி போடாமல் சுற்றி சுற்றி வந்து கத்துவதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவிக்கிறார் ராஜன்.

ஏங்க… குளிக்கல,சாப்பிடல..மணி ஆகுது.. என்றாள் உமா

என்ன ஆச்சுனு தெரியலயே…இவ்ளோ நேரம் ஆகியும் இன்னும் குட்டி போடலயே…என்று கவலை தோய்ந்த குரலில் சொல்லிவிட்டு செய்வதறியாது தலையில் கைவைத்து கொண்டார் ராஜன்.

இதுலாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா நான் பிரசவ வலியில் இருக்கும் போது கூட இப்படி பதச்சிகிட்டு பாக்க வரல. பிள்ளை பொறந்ததுக்கு அப்புறம் தான் வந்தீங்க இப்ப என்னடானா இந்த பூனைகளுக்கு இவ்ளோ உருகறீங்களே என்று அங்கலாய்த்த உமாவை எப்போதும் போல அதட்டி அனுப்பி விட்டார். 

பன்னிரண்டு மணி ஆகியும் குட்டி போடல. அதற்கு மேல் ராஜனால் பசி பொறுக்க முடியவில்லை. குளிக்க சென்று விட்டார்.

தினமும் ஏதாவது காரணத்துடன் வெளியே செல்பவர் அன்று போகாமல் அப்பப்போ வந்து பார்த்து கொண்டார்.

நான்கு மணி வாக்கில் போய் பார்த்த போது மூன்று குட்டிகளுடன் சிவப்பி மி..யா..வ் மி…யா..வ் என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தியது ராஜனிடம்.

முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய பெரு மகிழ்ச்சியுடன், இந்தா… இங்க வா.. இங்க பாரு… என்று உமாவை அழைத்தார்.

தனக்கு புள்ள பிறந்ததுக்கு கூட இந்த மனுஷன் முகத்துல இப்படி ஒரு சந்தோஷத்தை பாக்கலயே என்ற பொறாமை கலந்த பாசத்துடன் ராஜனின் சந்தோஷத்தில் கலந்து கொண்டாள் உமா.

சிவப்பி குட்டிகளுடன் உடன் கொஞ்சுவது, பேசுவது, பால் வைப்பது, சாப்பாடு வைப்பது அவைகளின் துள்ளல்களை ரசிப்பதுமாக நாட்கள் கடந்து அவரின் இறுக்கம் தளர்ந்தது.

ஒரு நாள் ராஜனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் மூச்சு விடவே சிரமமா ஆகி ஆஸ்பிடல்ல சேர்க்கும் நிலை ஆகி விட்டது. ஏற்கனவே ஆஸ்த்மா இருப்பதால் பூனைகளுடன் பழகாமல் கொஞ்ச நாள் தள்ளி இருக்க சொன்னார் மருத்துவர்.ராஜன் வீட்டிற்கு வந்தால் பூனைகளை விரட்ட இயலாது என்று உணர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போதே ஆளை வைத்து பிடித்து கொண்டு போய் வேறு ஊரில் விட்டுவிட்டாள் உமா.

வீட்டிற்கு வந்த ராஜனின் கண்கள் சிவப்பியையும் குட்டிகளையும் தேடி ஏமாற்றத்தில் என்ன நடந்திருக்கும் என்று புரிந்தவாறு கட்டிலில் அமைதியாக படுத்து விட்டார். ஒரு வாரம் ஆகியும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை சரியா சாப்பிடாம தூங்காம எதையோ இழந்த மாதிரி சுவரை வெறித்து கொண்டிருந்தார். ராஜனின் மனநிலையை புரிந்து கொண்ட உமா.அவருக்கு மிகவும் பிடித்த சிவப்பியை குட்டிகளோடு தேடி கண்டுபிடித்து வரவைத்தாள்.

மி..யா..வ் மி…யா..வ் என்று படுக்கையில் இருந்த ராஜனை சுற்றி சுற்றி வந்தது சிவப்பி கூட குட்டிகளும் கோரஸாக மியாவ் மியாவ் என்று அன்பை வெளிப்படுத்தின. பல நாட்களுக்கு பிறகு லேசான புன்னகை பரவியது ராஜனின் முகத்தில்.

ஏன் ஆச்சி மறுபடியும் பூனைகளை கூட்டிட்டு வந்துட்ட.. ஐயாக்கு இப்போ தான உடம்பு தேறிட்டு வருது என்றாள் தண்ணி எடுக்க வந்த ரெங்கம்மா.

உடம்பு மட்டும் தேறி என்ன பிரயோஜனம் ரெங்கம்மா.மனசு இறுகி கல்லா கிடக்குறார் மனுஷன்.

இந்த குட்டிக இல்லாம எனக்கே வெறிச்சோடி இருக்கு. பாவம் அதுகளோட இருந்தவருக்கு எப்டி இருக்கும். இருக்கறவரைக்கும் அந்த மனுஷன் சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும் ரெங்கம்மா. உசுரு போகணும்னு இருந்தா நம்மால தடுக்க முடியுமா என்றாள் உமா

அடுத்த ரெண்டு வாரங்களில் நன்றாகவே தேறி விட

சோறு பொங்கட்டும் போங்க டா என்ற அதட்டும் தொனியிலான குரல் மீண்டும் காலையில்….

 

Leave a Response