Story

சிறுகதை: ஜெயக்கொடி -ஸ்ரீதர் பாரதி

Spread the love

 

தைபிறந்துவிட்டது.

தைபிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ கீழக்குடிக்கு வலி பிறந்துவிடும். போன வருசம் ஒஞ்சு கெடுத்த மழை பேஞ்சு கொடுத்துட்டுப் போயிருச்சு இந்த வருசம்.

கம்மா நெறைஞ்சு காடுகரையெல்லாம் பச்சப்பசேல்ன்னு சொலிச்சுகெடக்கு. காளி அம்மனுக்கு காப்புகட்டி, சல்லிக்கட்டு நடத்தனும். ஊர்மந்தையில சனம் கூடி நின்னது. போன வருசமெல்லாம் காஞ்சி கெடந்துச்சு ஊரு. காளி ஆத்தா கண்ணத் தொறந்துட்டா. முனியாண்டி மனசுவைச்சுட்டான். கெழங்கட்டைக பேசிக்கிடந்துதுக. போனவருசம் காஞ்சிக் கெடந்ததால சல்லிக்கட்டு நடக்கல.

இந்த வருசம் நடத்திப் புடலாம்ண்ணு பார்த்தா கோர்ட்டுல கேஸ் நடக்குது. காளைகள் வதை பண்றதா பிராது. தீர்ப்பு வராம சல்லிக்கட்டு நடத்த முடியாது அப்படின்னு புதுப்பிரச்சனை.

இன்னிக்கித்தான் தீர்ப்பு. ஊரே அதுக்குத்தான் சோறு தண்ணியில்லாம மந்தையில சேர்ந்து நிக்குது. முனியாண்டி கோயில் முன்னுக்க திட்டிவாசல் வெறிச்சோடிக்கிடந்தது. எப்படியாப்பட்ட வீரங்களைக் கண்டது இந்தக்களம்?

எப்படியாப்பட்ட காளைகளைக் கண்டது இந்தத் திட்டி வாசல்?

காளியாத்தா கோயில் மந்தைக்கல்லில் ஒருக்களிச்சுப் படுத்திருந்தார் ஜெயக்கொடி பெரியாம்பளை.

அறுபது வயசு கடந்தாலும் உருகாத உடம்பு. கொல்லம் பட்டறையில அடிச்சி எடுத்த அருவா மாதிரி. தும்பப் பூவா நரை. அய்யனார் கணக்கா மீசை. சொட்டை விழுகாத சுருட்டை முடி, வெள்ளை வேட்டி, மேலுக்கு சட்டையில்லை துண்டு போர்த்துன மானைக்கு ஒரு கைய தலைக்கு வச்சி படுத்திருந்தார். வலப்பக்க விலாவில் ஒரு பெரிய தழும்பு கூடப்பழகுன கூட்டாளியில ஒவ்வொரு ஆளா டிக்கெட் வாங்கிட்டாய்ங்க. மந்தையே மாட்டுத்தாவணி சந்தையா இருந்தது சல்லிக்கட்டு இந்த வருசம் நடக்குமா? நடக்காதா? சலசலத்துக் கிடந்தது ஊர்.

வேப்பமரத்து உச்சிக் கிளையை வெறித்துக் கிடந்தப் பெரியாம்பளை வலப்பக்கத் தழும்பைத் தடவிப்பார்த்தார். பழைய நெனைப்பெல்லாம் வைகை நதியாய்ப் பெருகி வந்தது. கீழக்குடி சல்லிக்கட்டுன்னா மதுரை ஜில்லாவுல இருக்குற காளைக்காரய்ங்களுக்கும், மாடுபுடி வீரய்ங்களுக்கும் தனி குஷி. காளியம்மனுக்கு காப்புக் கட்டி திர்ழா சாட்டி புட்டாலே எல்லாம் எப்ப எப்பன்னு இருப்பாங்க. ஊர்ல பெரியமனுசங்க சேர்ந்து சுத்துப்பட்டுல இருக்குற காளைக்காரங்களுக்கும், மாடுபுடி வீரங்களுக்கும் பாக்குவச்சி அழைப்பாக, கம்மாக்கரை, தென்னந்தோப்பு, வயக்காடு எல்லா இடத்துலயும் காளைக பயிற்சி நடக்கும் காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி காளைகள் புள்ளைக மாதிரி போஷாக்கா வளர்த்து சல்லிக்கட்டே பொழப்பாத் திரிவாக சனங்க. பெரிய மனுசங்களுக்கு காளை வளர்க்குறது இருக்குறதுலேயே பெரிய கௌரவம். சல்லிக்கட்டுக்குள்ள காளையை எறக்குறப்ப கெடைக்குற மருவாதி இருக்கே அது மாதிரி மருவாதி ஜென்மத்துல எங்கயும் கெடைக்காது. மேற்படியார் காளை வருதுன்னு திட்டிவாசல்ல சாட்டும் போது காளைக்கார் பெரிய மனுசங்களுக்கு கிரீடத்தத் தலையில கவுத்த மாதிரி கின்னுன்னு இருக்கும். ஒரு கெத்து.

Meru Nilaya: An ancient combat

அதுலயும் எறக்கும் காளை பிடிபடாம வந்துட்டா அந்த வருசம்பூரா அதைச் சொல்லியே பீத்துப் பீத்துன்னு பீத்திருவாங்க பெரிய மனுசனுங்க. முனியாண்டி கோயில் முன்னாடி தான் திட்டி வாசல். முனியாண்டி முன்னுக்க சல்லிக்கட்டு நடந்தா கெட்டது நடக்காது அப்படின்னு ஒரு நம்பிக்கை.

கீழக்குடி சல்லிக்கட்டுக்கு சுத்துப்பட்டுல இருக்குற மேலக்குடி, சாக்கிலிபட்டி, கரடிக்கல், தனக்கன்குளம், விளாச்சேரி, ஓணாக்கல், திருப்பரங்குன்றம், தோப்பூர், அவனியாபுரம், செக்கானூரணி, நாகமலை புதுக்கோட்டை எல்லா ஊர்லருந்தும் காளைகளும், பிடிகாரங்களும் வந்து குவிஞ்சுடுவாங்க. அவங்களைவிடவும் சல்லிக்கட்டை பார்க்கறதுக்கு விடிய முன்னமே ஆளுக வந்து மொச்சுடும். சாப்பாட்டுக்கடையிலர்ந்து சாராயக்கடை வரைக்கும் யாவாரம் களைகட்டும். சாராயம்ன்னா சாராயம் தேன் கணக்கா. வாழைப்பழம், பேட்டரியெல்லாம் போட்டு கீழக்குடிக்கு முன்ன இருக்கும் மொட்டமலையிலயே அடுப்பு மூட்டி காய்ச்சி வடிகட்டி சீசாவுல அடைச்சி சிறப்பா வந்து சேரும் சரக்கு. காய்ச்சுர வேலையும், கிளாசுல ஊத்துற வேலையும் தான் ஆம்பிளைகளுக்கு, காசக்கணக்குப் பாத்து வாங்குற வேலை பொம்பளைகளுக்கு மொச்சப்பயிறு, பன்னிக்கறி, கோழிக்கறி, ஊறுகாய் சாராயத்துக்குத்தோதா காரம் சாரமா சாக்னாக்கடையும் களைகட்டும் காய்ச்சிரது மொட்டமலையில் விக்கிறது ஆளரவமில்லாத ஒத்தவீட்டு பொட்டலுக்குள்ள.. ஆளுக அதிகம் வந்து போகாத ஒத்த வீட்டுக்குப் போகிற ஆளைப் பார்த்தாலே கண்டுக்கிறலாம் குடிகார மட்டைன்னு. சாராயத்துல பாதி போதைன்னா, சாக்னாக் கடை பொம்பளைக கண்ணுல மீதி போதை.அதுக்குனே வரும் ஒரு கூட்டம். மாடுபுடிக்கிற ஆளுக மட்டுந்தான் குடிக்கமாட்டாய்ங்க. அதுலயும் ஒண்ணு ரெண்டு குடிக்கிற ஆளு உண்டு. மத்தபடி மாடு கொண்டு வர ஆளுகளோட கூடவர ஆளுக, வேடிக்கை பார்க்க வர ஆளுக. எல்லாம் நெறை போதை தான்.

அவுக அவுக ஊர்லருந்து காளையோட புறப்படும் போது காளைக்கு மாலை போட்டு சோடிச்சி. . கொட்டடிச்சி வர்றத பார்க்கவே ரெண்டு கண்ணு போதாது. காளையப் புடிக்கற மனுசங்களுக்கு பேரு இருக்கிற மாதிரி காளைகளுக்கும் பேருண்டு. காளையப் புடிக்கிறவனுக்கு கையிலத் தெம்புன்னா….. காளைகளுக்கு கொம்புலத் தெம்பு. சல்லிக்கட்டுன்னு தேதி முடிவாயிருச்சுன்னா, காளைகாரங்களும், மாடுபுடிகாரகளும் சுத்தபத்தமா இருப்பாக. வளக்குற காளையோட சேர்ந்து காளைவளக்குற . குடும்பங்குளுக்கு ரெண்டு குலசாமி. குலசாமிக்கு ஒரு குறையும் வரக்கூடாதுன்னு கவனமா இருப்பாக. தூசிபட்டாலும் துடிச்சிப் போவாக. காளைகளை வளர்த்து களத்துக்கு கொண்டு வர்றது பெரிய மனுசங்களுக்கு கவுரதின்னா

களத்துக்கு வர்ற காளைகளை அணைஞ்சி பரிசக் கைப்பத்தறது இளந்தாரிகளுக்கு கவுரவதி.

சல்லிக்கட்டு எங்கன நடக்குது. எந்த எந்த ஊருக்காளைக எறங்குது. எறங்குற காளை எப்படியாப்பட்ட காளை எல்லாம் அத்துப்படியா வச்சிருப்பாய்ங்க எளவட்டப்பயலுக.

சல்லிக்கட்டு அசலூர்ல நடந்தா ஆளாப் பறப்பாய்ங்க. அதுவே ஊள்ளூர்ல நடந்தா காத்தாப் பறப்பாய்ங்க. காளைகளை அணையுற சாக்குல கன்னிகளையும் மடக்கிப் புடுவாய்ங்க. மாட்டை அணைஞ்சிட்டு வா உன்னைய கட்டிக்கிறேன்னு சொன்ன பொண்ணுகளும் உண்டு. சல்லிக்கட்டுல மாட்டை அணைஞ்சிட்டுவா பொண்ணத்தர்றேன்னு சொன்ன ஆம்பளைகளும் உண்டு.. சல்லிக்கட்டுங்கிறது வெறும் விளையாட்டு மட்டுமே இல்லை.

History of JalliKattu in Tamil Nadu – Behind History

அது வீரம், அது வெற்றி, அது மகிழ்ச்சி, அது வைராக்கியம், அது வாழ்க்கை.

ஜெயக்கொடி, பரமன், கோட்டைக்காளை, வயக்காட்டுச் சாமி எல்லாம் ஒரு கூட்டாளிக. சல்லிக்கட்டு சுத்துப்பட்டுல எங்கன நடந்தாலும் மொத ஆளா நிப்பாய்ங்க. போற எடமெல்லாம் காளைகள் அணைஞ்சி பரிசுகளையும் தட்டிக்கிட்டு வந்துருவாய்ங்க.

போனவட்டம் அப்படித்தான் மேலக்குடி சல்லிக்கட்டுல பிரசிரண்டு காளைய அணைஞ்சி மரியாதைய வாங்கிட்டு வெளியேறி வர்றப்ப ஊர்க்காரங்களோடப் பஞ்சாயத்து ஆயிப் போச்சு நாலுபேரும் சேர்ந்து பிரசிரண்டு ஆளுகளோட மல்லுக்கட்டிட்டு ஓடியாந்துட்டாய்ங்க. அவிங்க அரை போதையில் இருந்ததால உட்டுட்டாய்ங்க இல்லைன்னா ஏழ்ரைதான் எழவுதான். மேலக்குடி பிரசிரண்டு ஒரு மாதிரியான ஆளு எம்ஜிஆர் படத்துல வர்ற நம்பியார்கணக்கா. காளை லேசுல பிடிபடாது. அப்படிப் பிடிபட்டுப் போனா ஒண்ணு காளைய காலி பண்ணிருவாரு. இல்லை காளைய அணைஞ்வசன காலி பண்ணிருவாரு.

பரம்பரை பரம்பரையா நல்ல செல்வாக்கு. பங்களா மாதிரி வீடு. உள்ளூர்ல மட்டுமில்லாம உசிலம்பட்டி சோழவந்தான் எல்லா ஊர்லயும் தோப்பு, துரவு. போற எடமெல்லாம் கூத்தியா. சல்லிக்கட்டு காளை வளக்குறது. குதிரை வளக்குறது சீட்டாடறது. கட்டப்பஞ்சாயத்துப் பண்றது இது தான் அன்றாடப் பொழப்பு. கூடவே பத்து அடியாளுக எந்நேரமும் இருப்பாய்ங்க, தனத்துக்கோ தாட்டியத்துக்கோ பஞ்சமில்லை. போனவட்டம் மேலக்குடி ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட களங்கத்தை இந்த வட்டம் கீழக்குடி ஜல்லிக்கட்டில் துடைக்க நினைத்தார். மேலக்குடி பிரசிரண்டு. அதுக்கான வேலைகள் ஜரூரா நடந்தது. கீழக்குடி ஜல்லிக்கட்டில் களமிறங்கப் போகும் தனது புதிய காளை காங்கேயம் கருப்பனை அணைகிற வீரனுக்கு தங்கக்காசு பட்டுவேட்டி சட்டை ரூவா ரெண்டாயிரம் பரிசுன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுனாங்க உயிருக்குப் பயந்தவர்கள் ஓடிப்போங்க, காளையைத் தொடத்துணிந்த வர்கள் வீட்டில் சொல்லிட்டு வாங்க என்று விளம்பரம் வேறு.

வாடிப்பட்டிக் கொட்டுச்சத்தத்தோட வந்து இறங்கியது காங்கேயம் கருப்பன். முனியாண்டிக்கு தீபாராதனை காட்டி காளையோட வந்தவுகளுக்கு மரியாதை பண்ணி வேட்டி துண்டு போர்த்தி, காளை அணையிற வீரங்களுக்கு மரியாதை செஞ்சி ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சிருச்சி, திருமங்கலம் மொக்கமாயன்தான் மைக்செட். நேத்து சாயங்காலத்திலேர்ந்து ஒரே பாட்டா இருந்துச்சு.

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க? யாராச்சம் ரோசமிருந்தா மாட்டுப்பக்கம் போங்க, சுத்துப்பட்டுல எங்க ஜல்லிக்கட்டு நடந்தாலும் தும்மக்குண்டு துரைச்சாமி தான் வர்ணனை. ஏத்த எறக்கமா நகைச்சுவையா வீராவேசமா கலந்துகட்டி பேசுறதுல மன்னன்.

அஞ்சு நாடும் பதினெட்டுப்பட்டியும் மெச்சுகிற கீழக்குடி சல்லிக்கட்டுக்கு வருகை தந்துள்ள பெரியவர்களே நாட்டாண்மைக்காரர்களே காளையோடு வந்திருக்கிற மிராசுகளே காளைகளை அணையக் காத்திருக்கும் சிங்கங்களே உங்கள் அனைவரையும் கீழக்குடி சல்லிக்கட்டு விழாக்கமிட்டி கார்பாக வருக வருக வென வரவேற்கிறோம்.

மொத மாடு முனியாண்டி கோயில்காளை வருது……. அடுத்து ஊர்ப் பெரிய தலைக்கட்டு அம்பலகாரர் காளை, அடுத்து மணியக்காரர் ராமசாமி நாயக்கர் காளை அடுத்தாப்ல மணிக்கோனார் காளை நாலு. காளைகளும் சாமி மாடு ……. தொட்டுக் கும்புட்டு விட்ரணும்……. யாரும் புடிக்கக் கூடாது!

சாமி மாடுகள் வந்த வேகத்தில் ஓடின. அடுத்து களமிறங்குற மாடு தனக்கன்குளம் விருமாண்டித் தேவர் மாடு …… புடிக்கிற ஆளுக்கு சைக்கிளு …… புடிக்கிற ஆளு புடிச்சிக்கோ.

Petition · PRESIDENT: SAY NO TO JALLIKATTU BAN · Change.org

கோட்டைக்காளையும் வயக்காட்டுச் சாமியும் நெறை போதை. களத்துல எறங்கல. ஓரமா நிண்டுகிட்டாய்ங்க ஜெயக்கொடியும், பராமனும் களத்துக்குள்ள் வேட்டிய வரிஞ்சிக்கட்டி மேலுக்கு முண்டா பனியனோடமாடணையத் தே தாநின்னாங்க ஜெயக் கொடிக் கண்ணெல்லாம் மேலக்குடி பிரசிரண்டு காளைய நோங்கியே இருந்தது. தனக்கன்குளம் விருமாண்டித் தேவர் காளை போக்குக்காட்டிட்டு ஓடிப் போச்சு.

அடுத்த காளை…

விளாச்சேரி வேல்ச்சாமி சேர்வை வளக்குற வெள்ளைக்காளை … புடிச்சா ஐநூறுரூவா. வெள்ளி விளக்கு …….. போனவாட்டி சாக்கிலிபட்டி சல்லிக்கட்டுல ஒரு ஆள் கொடல் உருவி மாலைபோட்ட காளை ……. பார்த்து சூதானமாப் புடிங்கப்பா. பரமன் காளையின் போக்கிலேயேப் போய் கொம்புல் ஒரு கையி …… திமிலுல ஒரு கையி… தரதரன்னு இழுத்துக்கிட்டு போயி ஒரு எக்கு எக்கி தூக்கி எறிஞ்சது. ஓடுற மாதிரி ஓடி திருப்பிக்கிட்டு வந்து முட்டுது …… பரமன் அப்டியே படுத்துக்கிட்டான். காளை நின்னு விளையாடுற காளை போயிப் போயி சுத்தி வருது புடிடா …… தொட்டுப் பார்றா ….. என்னை …. மனுசன் மாதிரியே மல்லுக்கு நிக்குது. மறுபடியும் திமிலுல ஒருகை… கொம்புல் ஒருகை இந்த முறையும் ஒரு எக்கு… இந்த வட்டம் புடி நழுவிப் போச்சு குத்துனா குத்து கொட்டைத் தெறிச்சிப் போற மாதிரி ஒரு குத்து.

சுருண்டுட்டான் பரமன் …….

நாலு ஆளுக உள்ள வந்து அப்டியே தூக்கிக்கிட்டு வெளிய போனாங்க.

ஏப்பா… மாடு அணையற எளந்தாரிக சூதானமா இருங்க பின்னாடிக்குத்துபுட்டா பரவால்ல.. முன்னாடிபட்டாக்கா அப்புறம் சாமியாரா போகவேண்டியது தான்.

அடுத்து எறங்கப் போற காளை …… மேலக்குடி பிரசிரண்டு வளக்குற காங்கேயம் கருப்பன் .. புடிக்கிற ஆளுக்கு தங்கக் காசு. பட்டுவேட்டி சட்டை, ரூவா ரெண்டாயிரம் மேலக்குடி பிரசிரண்டு பெரியமனுசங்களோட நாற்காலிபோட்டு உட்கார்ந்திருந்தார். கால் மேல கால் போட்டு தெனாவட்டா எவன் புடிக்கிறான்னு பார்ப்போம்.

வேடிக்கைப் பார்க்குற கூட்டம் ஜே ஜேன்னு நிக்குது. ஒரு கெழங்கட்டை கூட இல்ல. எல்லாம் எளந்தாரிப் பயலுக.

சீட்டிச்சத்தம்.

விடாதப்புடி …… விடாதப் புடி…..

அப்படித்தான் …. அப்படித்தான்

இழுத்துப் புடி …. விட்றாத …… ஒரே கூப்பாடு திட்டிவாசல்லர்ந்து துள்ளிக் கிட்டு வருது கருப்பன்.

கொம்புலப் பூவச்சுத்திக்கிட்டு நெத்தியில தங்கக் காசோட

புது மாப்பிளை கணக்கா லட்சணம். இந்த சல்லிக்கட்டுக்குண்ணே தயார் பண்ண காளை.

போன வட்டம் மேலக்குடி சல்லிக்கட்டுல புடிபட்ட மயிலைய மக்கா நாளே சோலிய முடிச்சிபுட்டாரு பிரசிரண்டு. மீனுக்கு காத்திருந்த கொக்கு கணக்கா பிரசிரண்டு காளைக்காகவே காத்திருந்த ஜெயக்கொடி கையில மண்ணள்ளி தேய்ச்சிக்கிட்டு நிக்கிறான். மேலக்குடி பிரசிரண்டு கழுகுப் பார்வை கருப்பன் மேலயே இருந்தது. திட்டிவாசல் பனந்துண்டத்துக்கு மேலயே எவ்விவருது கருப்பன். கொம்புல கிடந்த ரோசாப் பூவெல்லாம் காத்துல செதறுது.

வாலக்கொண்டி அடிச்சாலே வலி தாளமுடியாது. திமிலு சும்மா மகுடம் மாதிரி. கொம்பு ரெண்டும் குத்திக் கிழிக்கவே தயாரிச்ச ஆயுதம். எவன்டா வர்றது …… வாங்கடா…. ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பமா?

வாயில்லா சீவன் பேசாமப் பேசுது. கூட்டம் உற்சாகமா சீட்டியடிக்குது. கோட்டைக்காளைக்கும், வயக்காட்டுச்சாமிக்கும் என்ன நடக்குது ஏது நடக்குதுண்ணு ஒண்ணும் புரியல. மனசு பூரா சந்தோசம். கால் தரையில பாவல: மிதக்குறாய்ங்க. கோட்டைக்காளை சிரிச்சிக்கிட்டே இருக்கான். வயக்காட்டுச் சாமி வேட்டிய அவுத்து தலையில உருமா கட்டிக்கிட்டு சீட்டியடிச்சிக்கிட்டு நிக்கிறான்.

Jallikattu by Vignesh on Dribbble

பரமன் வாங்குன குத்துல இன்னும் சூதானமாயிட்டான் ஜெயக் கொடி. கருப்பன் வாசலில் மறித்த ஒருவனை வீசிவிட்டு வந்தது களத்தில் நின்று சுற்றிப் பார்த்தது. ஒரு சுத்து சுத்தி வந்தது. ஏப்பா . பாக்கத்தான் பம்மிநிக்குது. சுத்தியடிச்சா …… சூறாவளி …

அந்தத் தங்கக்காசும், பட்டுவேட்டியும் ரூவா ரெண்டாயிரமும் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?

பம்மி நின்ன கருப்பனோட திமிலப் பாய்ஞ்சுப் புடிச்சான் ஜெயக்கொடி. அம்புட்டுத் தான். அருள் வந்த ஆள் மாதிரி தன்னால ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்குது. விட்டம்ண்ணாப் போச்சு… வலு கொண்ட மட்டும் ரெண்டுகையையும் திமிலுல குடுத்து உடும்பாட்டம் புடிச்சி அணைஞ்சிக்கிட்டான் ஜெயக்கொடி. கூட்டத்துல விசில் பறக்குது. கருப்பனா? ஜெயக் கொடியா? திமிலப் புடிச்சவனைத் தூக்கிக்கிட்டு துள்ளுது காளை. உதறது. ஓடுது. பிடிய விடல ஜெயக்கொடி. காளைக்கு கொம்புல் தெம்பு காளைய அணையறவனுக்கு கையில தெம்பு சுத்துது ……. சுழலுது …..

ஆகா …… ஆகா …… அருமையா …….

அருமைய்யா ……. ஆட்டம் போடுற

காளையும் வீரம் ……

அணையுற காளையும் வீரம்

……. யாருய்யா …. அந்தப்பய …..

கீழக்குடி …… செயக்கொடி …..

கூட்டத்திலர்ந்து பதில் வருது.

மேலக்குடி பிரசிரண்டு மூஞ்சியெல்லாம் கரியப் பூசுனாப்புல ஆயிப்போச்சு.

செயக்கொடி …….

செயக்கொடி …….

அந்தப் பேரு மட்டும் காதுக்குள்ள குர்ருன்னு கேட்டுக் கே இருக்கு. செத்த நேரந்தான் …. கருப்பன் ஜெயக்கொடி கைக்குள்ள அடங்கிருச்சு ……

அஞ்சாறு பேரு ஜெயக்கொடிய தோள் மேலத் தூக்கி வச்சுக்கிட்டு குதிக்கிறாய்ங்க. அந்தத் தங்கக் காசும் ரூவா ரெண்டாயிரமும் …… பட்டுவேட்டி சட்டையும் கீழக்குடிக்காரனுக்குத் தான்யா… எளவட்டமெல்லாம் தன்னால பம்பரமா குதியாளம் போட்றாய்ங்க…

பிரசிரண்டு ஆளுக ரெண்டு பேரு கருப்பனுக்கு கயிறுபோட்டு பிடிச்சிக்கிட்டு போறாய்ங்க. தங்கக் காசு, ரெண்டாயிரம் ரூவாப்பணம் பட்டுவேட்டி சட்டையோட துள்ளிக்கிட்டு வெளியேறினான் ஜெயக்கொடி. அடுத்து வாரது ……

நம்ம சேடபட்டி சிங்கக்குட்டி எஸ்.எஸ்.ஆர் காளை முத்தழகு வருதப்பா, தும்மக்குண்டு துரைச்சாமி வர்ணிக்கும் போதே உள்ள விசில் பறக்குது வெளிய அலறல் கேக்குது. ஜெயக்கொடி வலப்பக்க விலாவுல சொருகிநிக்குது சூரிக்கத்தி. யப்பே யாத்தேன்னு ஆளுக் தூக்கிட்டு ஓடுறாக

……………….

பள்ளிக்கூடம் விடுற நேரமிருக்கும் பைய்ய எந்திரிச்சு உட்கார்ந்தார் ஜெயக்கொடி பெரியாம்பளை,

பக்கத்துல ஒரு குரல் ”ஜல்லிக்கட்டு நடத்தலாம்ண்டு தீர்ப்பாயிப் போச்சப்பா” கீழக்குடி விலக்கில் பட்டாசு வெடிக்குற சத்தம் பலமாய்க் கேட்டது. பெரியாம்பளை முகத்தில் மாமாங்கத்திற்குப்பிறகு அப்படியொரு மலர்ச்சி

Leave a Response

Top Reviews

Video Widget

gallery