Story

சிறுகதை: வேடிக்கையான கிழவன் – டாக்டர். இடங்கர் பாவலன்

Spread the love

 

என் கால்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற கண்காணாத தேசத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிற எனக்கு எந்த எதிர்பார்ப்புகளுமில்லை. தடித்த தோல்களான காலணிகளும் தேய்ந்தபடி நிலத்திற்கும் பாதங்களுக்கும் எப்படியேனும் தொடர்புபடுத்திவிட வேண்டுமென்று தன்னைத்தானே உருக்கிக் கொண்டிருக்கிற காலணிகளுக்கு நான் நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டவனுமில்லை. என் பாதச் சுவடுகள்கூட இங்கு பதிந்திராதவாறு கட்டாந்தரையில் நடப்பவன் நான். எவரேனும் பூதக் கண்ணாடியோடு வந்து அதன் ரேகைகளை கண்காணித்தபடிகூட என் குறைந்தபட்ச சுதந்திரத்தையும் குலைத்துவிட்டால் என்னால் என்ன செய்துவிட முடியும் என்பதே பெரும் கவலையாய் இருக்கிறது. இப்படியான பயம் கொள்வதிலும்கூட ஏதேனும் அர்த்தமிருக்குமா என்பதைப் பற்றியும் எனக்கு இப்போது அக்கறையில்லாமல் போய்விட்டது.

பல்லாயிரமாண்டுகளாக அடிபட்டு மிதிபட்டு தடித்துப்போன தோள்களைப்போலவே இந்த கால்களும்கூட இன்னும் தடித்துப் போயிருக்கக்கூடாதா? பாதங்கள் வெடித்துப்போய் ஈரமற்று வெய்யிலில் காய்கிற பொழுது இந்த பாழாய்போன தார்ச் சாலைகள் எரிகின்ற புண்களுக்கு எண்ணெய் வார்கின்றன. பாதங்களுக்கு இதமாக வழிய வேண்டிய பிசுபிசுப்பான இரத்தம்கூட அற்றுப்போய் கால்களும் உடலுமே வற்றிப்போய் இருக்கிறது. இன்னும் எவ்வளவு தூரம் என்று மனம் கேள்விக் கொக்கிகளை இடுகிற போதெல்லாம் இல்லையில்லை எவ்வளவு காலம் நடக்க வேண்டும் என்பதே சரியான கேள்வியென்று பதில் புதிர் கேள்வி போடுகிறது.

பாலைவன மணலாய் திட்டுதிட்டாக படிந்துபோன தோல்களில் எண்ணெய் பிசுபிசுப்பு ஏதுமில்லை. உச்சி வெயில் படுகிற சமயங்களில் மினுமினுக்கிற தோல்களைத்தவிர இந்த உடலுக்கு உணவாலும் தண்ணீராலும் ஏதேனும் மினிமினுப்பு கூடியிருக்குமா என்று எனக்குத் தெரியாது. தோல்களை முடிந்தவரை மூடிக்கொள்ள வேண்டுமென்றாலும்கூட நைந்துபோய் தைத்துக் கொண்ட கந்தல் துணிகளின் துவாரங்கள்கூட எனக்கு துரோகம் இழைப்பதாயிருக்கிறது. நீண்ட நாட்களாக அழுக்குத் தேய்த்து குளிக்க இடமின்றி துவைத்துப் போட உடைகளின்றி இந்த உடல் ஏன் இந்த பூமிக்குப் பாரமாயிருக்கிறதோ என்ற எண்ணமே என்னை வதைப்பதாயிருக்கிறது.

நாளை மறுநாள் மக்கி மண்ணின் உரமாகிவிடக்கூடும் என்றளவிலான பழுத்த இலையின் சருகைப்போல வெளுத்த பழுப்பு நிறத்திலான கைலியையும் தேசம் கீறல்களால் துண்டாடப்பட்ட எல்லைக்கோட்டைப்போல கட்டங்களாக தைக்கப்பட்ட முழுக்கைச் சட்டையும் பின் பொதியாய் முதுகுத்தண்டின் பக்கமாய் தொங்கவிடப்பட்ட கோணிப்பையில் போர்த்திக் கொள்ள துண்டுகளோடு ஏனோ சொல்லிக் கொள்ளும்படியான மாற்றுக் கைலி மட்டும் உடன் துணைக்கு இருந்தது என்னவோ கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. இந்த முழுக்கைச் சட்டை என்றவுடனே ஞாபகம் வந்துவிடுகிறது, அது என் சட்டை பாணியில் தைக்கப்பட்ட ஒரு முழு நீளப் போர்வை என்பது.

என் முதுகு வளைந்து கொண்டே இருக்கிறது முன்னோக்கி. அதைக் கூன் விழுந்துவிட்டது என்றும் கௌரவமாக சொல்லிக்கொள்ள மனம் ஒப்பினாலும் கிழிந்த சட்டையின் முதுகுப் பகுதியின் வழியே தெரிகிற அடிமைக் காயங்கள்தான் இப்படி கூனை உருவாக்கியிருக்கின்றன என்று பின்னால் வருபவர்களுக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? ஆம், இன்னும்கூட நான் சொல்ல மறந்த கதைகளைப்போல என் பின்னாலும் முன்னாலுமாக, ஆண்களும் பெண்களுமாக, கர்ப்பிணி வயிற்றில் கருவாயிருக்கும் குழந்தை முதல் என்னைப்போல எப்போதேனும் உயிர்விட நேருகிற பெரியவர்கள்வரை தளர்ந்தபடி போய்க் கொண்டிருக்கிறவர்களின் கதைகளும் நிறைய உண்டு.

என்ன கதை? அப்படி, என்ன கதையோ பொல்லாத கதை? என்று சலித்துக் கொண்டாலும் கட்டாயம் நீங்கள் கேட்க வேண்டுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. பல நூறு மைல்களைக் கடந்து நடந்து போய் கொண்டிருக்கிற எனது வாழ்வைக் கதையாகக் கூட கேட்க முடியவில்லையென்றால் இந்த நிஜத்தை எப்படி கண்கொண்டு நீங்கள் பார்த்துவிடப் போகிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது.

காலெடுத்து வைத்த பூஜ்ஜியத்தின் புள்ளியிலிருந்து நான் கிளம்பும்போது யாரேனும் கட்டாயம் நம்மை காப்பாற்றிக் கரை சேர்த்துவிடுவார்கள் என்று துவங்கி, இன்று.. நாளை.. மறுநாளென்று எதிர்பாத்து ஏங்கிப்போய் ஒருவேளை வரமாட்டார்களோ என்று சந்தேகம் வந்து பின்பு மனதை நிலைப்படுத்திக் கொண்டு, உடலும் மனமும் திராணியிழந்து தளர்ந்து போகையில் அவர்கள் வரமாட்டார்கள் நமக்காக நாம்தான் நடக்க வேண்டும் என்ற இடத்திற்கு வரும்வரையில் நான் புலம்பிய வார்த்தைகளை நீங்கள் கேட்டு புலகாங்கிதம் அடைந்துவிடுவீர்கள் என்றா நான் பேசினேன். ஓங்கில் மீனோடும், கடற் பறவையோடும், கடலோடும் தனிமையை அறுத்துப் பேச வேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்துவிடுகிற அந்த எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனைப் போலானவன் அல்லவா நான். உங்களுக்குப் புலம்பல். எனக்கு மனதை ஆற்றிக் கொள்வதற்கான குறுக்கு வழி.

கதை சொல்கிறேன் என்று சொன்னேனே, அது கதையா என்ன? கதை என்பவை எல்லாமே கட்டுக் கதைகளாகிவிடுமா? பணக்கார சாமிகளுக்கு இதிகாசப் புராணக்கதைகளைப்போல பணக்கார ஆசாமிகளின் பகட்டுக் கதைகளைப்போல அப்படியொரு கதையென்றா நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது கதையல்ல நிஜம். நிஜத்திற்கும் கதையுண்டு. பொய்மைக்கு சுவாரஸியம் இருந்தால் போதும். ஆனால் பாருங்கள், நிஜத்திற்கு சாட்சியம் வேண்டும். அந்த சாட்சியமாக நிஜத்தை கதையாகச் சொல்லிச் சொல்லியே ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிற பாழ்பட்ட ஜனக்கூட்டமல்லவா இது!

எனக்கு கதைசொல்லத் தெரியாது. எழுதவும் தெரியாது. நான் காற்றடிக்கும் திசையைப்போல பொழுதிற்கும் புலம்புவன். திசைக்கும் கதைகள் செல்லும். அதனால் அதை கதையென்ற முடிவுக்கு வருவது சிரம்மாயிருப்பினும் புலம்பல் மொழிக்குள்ளும் கதையுண்டு என்பதை பிரித்தறிகிற உங்களைப்போல அறிவி ஜீவிகளை நம்பிவேண்டுமானால் நான் சொல்லிக் கொள்ளலாம். இந்தக் கதை சொந்தக் கதைதான். அது சோகக் கதைதான். பொய்யை நம்ப வைப்பதற்குத் தேவைப்படுகிற பல சுவாரஸ்யங்களுமுல்ல கதையும்தான். இங்கு கால் கடுக்க நெடுஞ்சாலைகளை கடக்க எத்தணிக்கிற அத்தனை பேரின் கதைகளும்தான்.

கேட்டீர்களா இந்த கருமத்தை! அடடா, இப்படியெல்லாம் கருமம் கிருமெல்லாம் சொல்லிக் கொள்ளக்கூடாது. ஏனென்றல் இந்த நாய்கறியை தின்று பசியாறுகிற நிலைமை பின்பொரு நாளில் எனக்கு நேருகிற சமயத்தில் இந்தக் கதையை அடிக்கோடிட்டு நீயா இப்படியொரு கருமத்தை செய்பவன் என்று கேலி செய்யக்கூடும். அவன் அப்படி நரமாமிசம் சாப்பிடுபவனல்ல என்றாலும்கூட பசியென்று வந்துவிட்டால் என்ன செய்யச் சொல்கிறீர்கள். அதோ கடவுளே முனிவராய் வந்து சிறுத்தொண்டர் பெற்ற பிள்ளையை சமைத்துத் தரக்கேட்டு ருசித்துவிட்டு கிளம்பிச் செல்லவில்லையா. பிறகென்ன கருமம்?

அவனொன்றும் அந்த நாயை கொன்றுச் சாப்பிடவில்லை. எப்போதேனும் பத்திரமாக எடுத்துச் செல்லப்படுகிற அரிசி பருப்பு உணவுக்கானவற்றை ஏற்றிக் கொண்டு வண்டிகள்  செல்லுகையில் அதன் குறுக்கே அடிபட்டு மாண்டுபோகிற நாய்களைத்தான் அவன் சாப்பிட்டான். அதுவும்கூட பாருங்கள், அப்படி இறந்த நாயினது உறவுக்காரர்கள்கூட எவரும் வந்து சொந்தம் கொண்டாடாத போதுதான் அவன் சாப்பிட்டான். அப்படி யாரேனும் நாயை வளர்த்தவர்கள் வந்து “இந்த நாயும் இந்த இறைச்சியும் எங்களுக்குச் சொந்தமானது. இந்த இறைச்சியின் ஒவ்வொரு தசைநார்களிலும் எங்கள் வீட்டின் மிஞ்சிய சோறு மீதமிருக்கிறது” என்று கேட்டால்கூட அவன் எப்படியும் கண்ணியமாகவே விலகியிருப்பான். ஒருவேளை தங்களுக்கே உணவில்லாத சாபக்கேட்டில் தங்கள் வளர்ப்பு நாயை பாரமென்று கருதி துரத்திவிட்ட துயரத்தில்கூட வண்டியில் அடிபட்டு இந்த நாய் இறந்திருக்கலாம் அல்லவா! அப்படி எண்ணித்தான் அவனும் சமாதானம் சொல்லிக் கொண்டு சாப்பிடத் துவங்கினான்.

அந்த வெதுவெதுப்பான கால்களே பொசுங்கிப் போய்விடுபடியான சாலையில் ஒரு அழகிய தைல வண்ண ஓவியாய் நைந்து போயிருந்த அந்த நாயின் உறுப்புகளை அவன் அந்த நிமிடம்கூட வலிக்காதவாறு மெல்ல மெல்ல பிய்த்துத்தான் சாப்பிட்டான். ஆனால் பாருங்கள், பல்லாயிரம் கால்கள் கூடிக் கடந்து போய்க் கொண்டிருக்கிற அந்த சாலையில் வேறு எவரேனும் எனக்கும் பசிக்கிறதே என்று பவ்வியமாய் வந்து அந்த நாய் இறைச்சியின் அருகில் அமர்ந்து கெஞ்சாமல் கேட்டால்கூட அவன் மறுத்திருக்க மாட்டான். அவர்களுக்கு மாட்டிறைச்சியைப் பற்றித்தான் கவலையென்ற போதிலும் அவன் யாரிடமுமே இந்த ஊன் வேண்டுமா என்றுகூட காருண்யதோடு கேட்கவில்லைதான். அதற்காகப்போய் கடவுள் தயவுதாட்சண்யமில்லாமல் அவனது உயிரை அதே வண்டியில் அதே சாலையில் அடித்துப் போட்டால்கூட அவன் கவலைப்படுவபவனுமில்லை. அவனது உடலை வலிக்காமல் பசியால் பிய்த்துத் தின்பதற்கும் இன்னும்கூட பின்னால் ஏதோவொரு மனிதக்கூட்டம் வரக்கூடும் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

ஆமாம், மனிதனென்ன மனிதக்கறி சாப்பிடாதவானா? நரமாமிசம் சாப்பிடுகிற அகோரிகளையே வழிபடுகிறார்களே, பின்னென்ன குறைச்சலாம். ஒருவேளை அவனது சதைப்பற்றற்ற இந்த பிண்டம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு விலகிச் சென்றால் அதுவும்கூட நியாயமானதுதான். ஒருவேளை அவன் பசியாறிய நாயின் ஊனைப்போல அவனது நைந்துபேன சதைப்பற்றையும் உண்டு பசிதீர்த்துக் கொள்வதற்கு யாரோ ஒருவரின் வளர்ப்பு நாய் வரத்தான் செய்யும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

Image

ஓவியம்: ஸ்ரீரசா 

அட, இது போதுமா! நீங்கள் வேறு சும்மாயிருங்கள். இன்னும் திக்கற்று நடந்து போய்க் கொண்டிருக்கிற எனக்கு கதை சொல்லவில்லையென்றால் அதாவது ஏதேனும் புலம்பாவிட்டால் ஒருவேளை நான் தற்கொலை எண்ணம் வந்து இறந்துபோய்விடுவேனோ என்கிற அச்சம் வந்துவிடுகிறது. வீடு, வாசல், பொருளென்று ஏதுமற்ற நான் வாழ்வதில் என்ன அர்த்தமிருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னும் பத்தடி எட்டு வைத்தால் அடுத்து என்ன வாழ்வு காத்திருக்கிறதோ என்கிற வாழ்வின் மீதான பற்று இருக்கிறதே. அதை நான் எப்படி கலைத்துப் போட்டுவிட விடுயும். சரி.. சரி.. கதை சொல்கிறேன் என்று சொன்னது என் கதையல்ல, தண்டவாளத்தில் கடந்தவர்களின் கதையை.

தண்டவாளங்கள் என்றவுடன் இரயில் பயணம் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடம். இணைந்த இரு தண்டவாளக் கம்பியின் மீதேறி மிதந்துவருகிற கூட்ஸ் வண்டிகள், நிலக்கறி வண்டிகள், பயணிகள் வண்டிகள் நியாபகத்திற்கு வரும். ஆனால் இது அப்படியல்ல. தண்டவாளங்களில் பால்ய பிராந்தியத்தில் கீழே விழாதவாறு அங்கப்பிரஸ்தனம் போல விளையாடிக் கொண்டே நடந்து வருவார்களே! மேலே இரு கம்பங்களுக்கிடையே கயிற்றைக் கட்டி நீள கம்பைப் பிடித்தபடி வாழ்விற்காக கூத்து நடத்துகிறவர்களைப்போல நடப்பார்களே! அதைப்போல இதுவும் ஒரு வாழ்க்கைக்கான நடைதான். வாழ்வதற்கான விளையாட்டுதான், சரிதானே. சாலையில் பொசுக்கிப்போடுகிற தரைகளிலிருந்து கொஞ்சம் ஆசுவாசத்தைத் தேடியும், தண்டவாளங்களில் சென்றால் வழிதவறாது எதாவது ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்ற நட்பாசையின் விளைவாகவும் நடந்த பயணம் அது என்று மட்டும் ஏனோ எனக்குத் தெரியும்.

போகிற திக்கற்ற பயணம். திசையற்ற வாழ்வு, அடுத்த வேளைக்கு உத்திரவாதமில்லா உயிர், பட்டிணி, தாகம், சோர்வு, மரணம் இத்தனையிலும்கூட சுவாரஸ்யம் உங்களுக்குக் கேட்கிறதா என்று நினைக்கக்கூடும். இறக்கத்தான் போகிறோம் என்றுகூட எவரும் நிர்வாணமாக தற்கொலை செய்துகொள்வதில்லையே. இறந்தாலும் அதன் பின் தன் உடல் கௌரவமாக பார்க்கப்பட வேண்டும், நடத்தப்பட வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவர்களுக்கு வந்திருக்குமா என்பதைப் பற்றி என்னால் தெளிவாக சொல்ல முடியாவிட்டாலும், அதை உண்மை என்று நம்புவதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அதனால் இறப்பிற்குப் பின்னேயான உடலை, உலகத்தைப் பற்றி கவலைப்படுகிற ஒருசாராரைக் காட்டிலும் எங்கோ ஏதோ நடைவழி திருப்பத்தில் தன் வாழ்வில் ஒரு திருப்பம் வந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு நகர்ந்து செல்கிற இவர்களுக்கு ஏன் சுவாரஸ்யம் இருக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது என்னவோ உண்மைதான்.

ஆனால் பாருங்கள், குழந்தையிடம் பொம்மையைக் கொடுத்தால் தலை வேறு, கை கால் வேறு என்று பிரித்துப் போடுமே! அந்த பொம்மைக்குள் குடலும், இருதயமும், நுரையீரலும்கூட வைத்திருந்து குழந்தைகள் விளையாடி அதைப் பிய்த்துப் போட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இரத்தும் சதையுமாய் பல தலைகள், கைகால்கள், அதைத் தாங்கிய காலணிகள் என்று அங்குமிங்குமாய் சிதறி சின்னாப்பின்னமாய் கிடந்ததைத் பார்த்தால் ஒருவேளை நீங்கள் நினைத்துக் கொண்டதைப்போல் வாழத்தோன்றாது சுவாரஸ்யம் குறைந்திருக்கும்தான்.

ஆனால் துண்டாடப்பட்ட பிண்டத்தை சுமந்து எரிப்பவன் அதைவைத்து சம்பாதித்து வாழ்வை ஓட்டவில்லையா. இதுவெல்லாம் அவர்களை துளியும் அசைத்துவிடவில்லை. இப்படி காட்டுக்குள் வந்து தண்டவாளத்தில் படுத்து இறந்ததினால் நாய்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக நரியோ புலியோகூட சாப்பிடக்கூடும். ஆனால் அவை வேட்டையாடி உண்பவை. இந்த மனிதர்களை அவை வேட்டையாடியதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்களை வேட்டையாடுவதும் அதிலும் ஏழைகளை பணக்காரர்கள் வேட்டையாடுவதும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் நான் கேள்விப்பட்டதன் உண்மை நிலவரத்தை பின்பு நீங்கள்தான் எனக்கு விளக்கியாக வேண்டும்.

அந்த இரயில் வண்டிக்காரர் சாசுவதமாக ஓட்டிக் கொண்டு வந்திருக்கையில் தண்டவாளத்தில் சாகவாசகமாக படுத்துறங்கிக் கொண்டிருக்கிற மனிதர்களை ஒருவேளை கவனிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது என் பாதையில் எவ்வளவு தைரியமிருந்தால் குறுக்கிடலாம், வழிப்போக்காய் செல்பவனுக்கு சொகுசாய் தலைவைத்து உறங்க தண்டவாளம் கேட்கிறதோ என்றெல்லாம் அவர் எண்ணியிருப்பாரா என்பதை நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் பாருங்கள், இதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் இவர்களெல்லாம் எதற்காகவோ எந்தக் காரணத்திற்காகவோ வேட்டையாடப்பட்டவர்கள். என்னது, இவர்களை அடக்கம் செய்யவில்லையா என்று கேட்கிறீர்களா? நன்றாய் சொன்னீர்கள் போங்கள்.

எந்தத் தலையும் ஆதார் கார்டின் எந்த முகத்தையுடையது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிக் கண்டுபிடித்த தலையை எந்த உடலில் பொருத்திப் பார்ப்பதென்றும் விளங்கவில்லை. ஆதாரில் முகம் மட்டும்தானே தெரிகிறது. ஒருவேளை கைரேகை வைத்து கைகளை இணைத்துவிடலாம் என்றாலும் அப்படி செய்து பார்ப்பதில் என்ன சுவாரஸ்யமிருக்கிறது என்றுகூட ஒரு சமயத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அப்படியே உறவுக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்து இரயில் காவல்காரர்களிடம் வந்து அகப்பட யாரேனும் விரும்புவார்களா, சொல்லுங்கள்.

இருந்தாலும், நாங்கள் எல்லோரும் துண்டாக்கப்பட்ட ஒவ்வொரு உடலிலிருந்தும் ஏதேனும் ஒன்றை தனதாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தோம். சிலர் நெஞ்சுக்கூட்டுப் பகுதியின் சட்டையில் கைநுழைத்து பணமேதுமிருக்கிறதா என்று பரிசோதித்தார்கள். சிலர் தொடைப்பகுதியின் கால்சட்டையில். ஒருசிலர் கைகடிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள். எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்பதை கடிகாரம் கொண்டு கணித்துவிடலாமென்கிற நினைப்பு அவர்களுக்கு. இறந்த சிறுமியின் காலணிகளை தன் பிள்ளைக்கு ஒருவள் எடுத்துக் கொண்டாள். நான் எப்போதாவது உபயோகப்படுமென்று இரத்ததில் ஊரிப்போன பால்பாய்ண்ட் பேனாவை எடுத்துக் கொண்டேன். இன்று நல்ல வேட்டை தான். நாங்கள் சத்தியமாகவே மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டோம். உங்களால் இந்த மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறதா? சரி, அது போகட்டும்.

என்ன, கதைகளில் இரத்த வாடை அடிக்கிறதா? சரி சரி அப்படியானால் பிணவாடை அடிக்கிற கதைதான் வேண்டுமா உங்களுக்கு! ஹா ஹா பாருங்களேன், எனக்கு சிரிப்புகூட வருகிறது. நீங்களே போகிற போக்கில் இதையெல்லாம் கதையென்று சொல்லிவிட்டீர்கள். அந்த பிணவாடை பற்றித்தான் எல்லோரும் உணர்ச்சிப் பொங்க இப்போதெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். நரம்பு புடைக்க ஆத்திரம் கொள்கிறார்கள். அதனால் சல்லிக்காசிற்குப் பிரயோசனம் ஆகுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.

Old man painting | Old men, Old man face, Old things

அது ஒன்றும் பிரமாதமான கதையொன்றுமில்லை பாருங்கள். வாநீர் வடித்துக் கொண்டிருந்த பிள்ளைக்கு வாக்கரிசியைப் பற்றி என்ன தெரியும்? இது தண்டவாளக் கதையல்ல பிளாட்பாரக் கதை. பேருந்து நிலையும், இரயில் நிலையமென்று எந்தப் பிளாட்பாரக் கதைகளென்றாலும் ஒன்றுதானே. போத்திப் படுத்த தாய் இறந்த சேதியறியாமல் போர்வையை இழுத்துப்பிடித்து விளையாடுகிற அல்லது அம்மாவை எழுப்புகிற அந்த பிஞ்சுக் குழந்தையைப் பற்றிய கதைதான். அவள் நீண்ட நாட்களாகவே பட்டிணியாயிருந்திருக்க வேண்டும். அவள் மஞ்சள் தேய்த்துக் குளித்ததைப் போல முழுவதுமே மஞ்சள் பூத்திருந்தாள். மஞ்சள் பெண்ணுக்கு உகந்ததுதானே. அதுவும் நல்லதுதான், மங்கலகரமானது ஆயிற்றே. சாமி கும்பிடப் போனவன் கோவில் சன்னதியிலேயே மாண்டுவிட்டால் நல்ல சாவு என்று சொல்லுவார்களே அப்படித்தான் இதுவும். சொல்வது புரிகிறதா?

அவள் மார்பில் பால் கணத்திருந்தால்கூட பிணத்திலும் பசியாற்றிக் கொள்வதற்கு அந்த பிள்ளையையும் தள்ளிவிட்டு பசியைத் தீர்த்துக் கொள்கிற கூட்டம் அங்கு இருந்தது என்னவோ உண்மைதான். அது பிணமென்றாலும் தாய்ப்பிணம் அல்லவா! அதற்கு மரியாதையென்று இருக்கிறதல்லவா! அப்படித்தான் அவளை அவர்கள் மதித்தார்கள். அவள் இறந்துவிட்டாலும் அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை. துன்புறுத்தவில்லை. அவளை எல்லோருமாக சேர்ந்து நிம்மதியாக தூங்கும்படியான தருணத்தை வழங்கியிருந்தார்கள். அதனால்தானே அவள் நிம்மதியாக தூங்குகிறாள். தன் பிள்ளையை அனாதையாக விட்டு மாய்ந்து போய்விட்டமே என்றெல்லாம் அவளது முகத்தில் எந்த பதபதைப்புமில்லை, கவனித்தீர்களா? இறந்து மயானம் வரைகூட போகவில்லையே என்கிற ஏக்கம்கூட அவளிடமில்லை. இந்த நினைப்புக்கூட என்னிடமிருந்துதான் வருகிறதே ஒழிய அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதை தூங்கும்முன் கதை சொல்லிக் கொண்டே மார்பில் பசியாற்றிக் கொண்டிருந்த அந்த பிள்ளைக்குத் தான் இன்னும்கூட அதிகமாகத் தெரியும்.

அடடே, இப்போது கதை உங்களுக்கு சுவாரஸ்யமாயிருக்கிறதல்லவா! பின்ன, ஆனால் முழுக்கதையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பிஞ்சுக் குழந்தையிடம் போய் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுக் கொடுங்கள், போங்கள். அந்தக் குழந்தையிடம் அவள் அம்மா என்னவெல்லாம் கதை சொல்லியிருக்கிறாள் என்கிற சுவாரஸ்யமான கதை எத்தனையோ உங்களுக்குக் கிடைக்கக் கூடும். அப்படியொரு கதை கிடைத்துவிட்டால் உங்களைவிட அதிர்ஸ்டசாலிகள் வேறு யாரு இருப்பார்கள், சொல்லுங்கள். என்னது, குழந்தை பேசுவது புரியாதா? என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். நான் புலம்புவதையே கேட்டுவிட்டீர்கள், அந்த குழந்தையும் ஒரு வகையில் புலம்பத்தான் செய்யும். அது அனாதையின் மொழியல்லவா அது அப்படித்தான் இருக்கும். நான்தான் சொன்னேனே நீங்கள் அதிஸ்டக்காரர்கள் என்று போங்கள், போய் ஜமாயுங்கள்.

1 Comment

  1. தேசத்தின் வேதனையை மனதுக்குள் இறக்குகிற எழுத்தாக்கம். இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு சிறுகதை இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். படைத்தவருடன் என் உணர்வுபூர்வ ஒருமைப்பாடு.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery