Story

சிறுகதை: ஆன முதலில்… – திருமதி. ஆர்த்தி. வி

 

மிகவும் ஆழ்ந்து யோசித்தாகிவிட்டது. இதற்கு மேல் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை கண்டிப்பாக இரண்டு நாளாவது வீட்டைவிட்டு போய் எங்காவது இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வீட்டுல இருக்கறவங்களுக்கு என் அருமை புரியும்.

ச்சே இந்த பெண்களே இப்படி தான், பையன் பெருசாயி ட்டா புருஷன மதிக்கறதில்ல. பென்ஷன் வரும் போதே நம்ம நிலைமை இப்படி இருக்கு ஒன்னும் இல்லாம இருந்தா அவ்வளவு தான் போலிருக்கு என்று பலவாறு யோசித்த படியே தன் அறையை விட்டு துளிகூட நகராமல் தன் நிலையை பற்றி மட்டுமே யோசித்தபடி இருந்த பாலு “அப்பா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்து “என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினார்.

“அப்பா… பணம் இருக்காப்பா?” என்று செந்தில் கேட்டான்.

“எதுக்கு”

“பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதான்”

“அதுக்கு தான் சொன்னே நமக்கே இங்க கஷ்டமா இருக்கு முதல்ல பிள்ளைங்கள அவுங்க பெத்தவங்ககிட்ட விட சொன்னே, யாரு கேக்கிறா”

“வீட்டுலேயே எதாவது கை வைத்தியம் பாக்க வேண்டியது தானே?”

“இல்லப்பா நேத்தே பீவர் இருந்தது. சரியாகிடுன்னு இருந்துட்டோம் ஆனா இன்னைக்கு அதிகமா ஆகிடுச்சு அதான் அம்மா பாப்பாவ டாக்டர்கிட்ட கூட்டிடுட்டு போக சொன்னாங்க”.

“சரி இரு கார்டு தரேன் போய் பணத்தை எடுத்துகிட்டு டாக்டர பார்த்துட்டு வா” என்று வேண்டா வெறுப்பாக பாலு கார்டை எடுத்து தந்தார்.

நேத்து நாம நினைச்சது மாதிரி வீட்ட விட்டு போயிருந்தா இவுங்க நிலைமை என்ன ஆகியிருக்கும் அப்ப கூட நம்ம அருமை இதுகளுக்கு தெரிகிறதா என்று எண்ணிகொண்டார் பாலு.

செந்தில் எம்பிஏ முடித்து 8 ஆண்டுகளாக சரியாக எந்த வேலைக்கும் போகாமல் பிஸினெஸ் செய்கிறேன் என்று எதோ செய்து கொண்டிருந்தான்.  இப்போது அதை தொடரமுடியாமல் கை மாற்றிவிட்டு வெளிநாடு போக ஏற்பாடு செய்துகொண்டிருந்தான் அவன் போதாத நேரம் கொரோனா வந்து மண்ணை அள்ளி போட்டுவிட்டது. செலவழித்த பணமும் வீணாய் போனது.

இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை பாலுவிற்கு. இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தாகிவிட்டது. முதல் பெண் சரியாக படிக்காத காரணத்தால் பத்தாவது பெயில் ஆனதும் இரண்டு வருடம் வீட்டில் வைத்திருந்துவிட்டு சொந்தக்கார பையனுக்கு சொத்து இருக்கு வீடு இருக்கு என்ற காரணத்துக்காகவே திருமணம் முடித்துவைத்தார். இன்று அந்த பொண்ணுக்கு மூன்று பெண் குழந்தைகள். அதில் ஒன்றுக்குத்தான் ஜுரம். இரண்டாவது பொண்ணு இங்கிலீஷ் மீடியத்துல படிச்சா அந்த அளவுக்கு மாப்பிள்ளை தேடவேண்டும் என்று ஐந்தாவதுக்கு பிறகு தமிழ் மீடியத்தில் படிக்க வைத்து எம் எஸ் ஸி  படிச்சிட்டு ஸ்கூல்ல வேலை பார்த்தவள சொத்திருக்குன்னு சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்துவைத்தார். இப்போது பையனை எப்படியாவது கரை ஏற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார் பாலு.

வங்கியில் வேலை செய்யும் போது அவர் செய்யாத பிஸினெஸ் கிடையாது. ரியல் எஸ்டேட், ஹோட்டல், ஆம்வே, ஹோல் சேல் துணி என்று பல பல. பெட்டி பெட்டியாய் பணம் வைத்திருந்தவர் தான்.

பையனை நிறைய படிக்க வைக்க வேண்டும் என்று பி இ படித்தவனை லண்டனுக்கு அனுப்பி எம் பி ஏ படிக்க வங்கியில் லோன் வாங்கி அனுப்பி வைத்தார்.

அவன் பையன் படிச்சிட்டு இரண்டு கார் வாங்கிட்டான். இவன் பையன் வீடு வாங்கிட்டான், என்று எப்போதும் அடுத்தவர்கள் புராணம் தான். தன் பையனும் ஆடி கார் வாங்கணும் பங்களா கட்டணும் என்று எல்லாம் கற்பனையில் ஆழ்ந்து போவார். ஆனால் நிகழ்ந்ததோ வேறு. பிசினஸ்ல வந்த எல்லா லாபங்களையும், விருப்ப ஓய்வு பெற்று வந்த பணம் எல்லாம் சேர்த்து எப்படியும் எண்பது லட்சம் இருக்கும்.  அதெல்லாம் எப்படியும்  திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டிகொண்டிருக்கிறார் பாலு.

திரும்ப வந்துவிடுமா அப்படின்னா என்ன என்று தானே யோசிக்கிறீர்கள் புரிகிறது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் சொல்றேன்.

வங்கில வேலை செஞ்சப்ப பழக்கமான சில கஸ்டமர்ங்க இவர மொதல்ல பிசினஸ்ல இழுத்துவிட்டாங்க. சார் இடம் வாங்கி போடுங்க டபுள் ஆகிடும் இத பண்ணுங்க அத பண்ணுங்க என்று சொல்லி ஒரு வங்கி காசாளரை பிசினஸ் மேனாக மாற்றிவிட்டார்கள். எல்லாம் நல்லபடியாக தான் போனது.

Arts & Crafts for Kids: Projects & Ideas | Parents

ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு மாற்றல் ஆகும் வரை தான் எல்லாம். இவருக்கு பணம் போட தான் தெரியும் வேலை தெரியாது என்று தெரிந்துகொண்ட இரண்டு பேர், நன்கு பழக்கமாகிய பிறகுதான், சார் ஒரு நல்ல ஆபர் வந்திருக்கு இங்க பாருங்க என்று ஒரு மெயிலை காண்பித்தார்கள். அதில் வெளிநாட்டு ஆள் ஒருவர் தனக்கு யாரும் இல்லை என்றும் தன் சொத்துக்களை இந்தியாவில் வாழும் ஏழைக்குழந்தைகளுக்கு தரவேண்டும் எனவும் அதற்கு சான்று பெற்ற ஒரு டிரஸ்ட் வேண்டும் எனவும் அதற்கு தன் பணத்தை அனுப்புவதாகவும் சொல்லப்பட்டு இருந்தது.

“சரி சார் அவரு பணத்த டிரஸ்ட்டுக்கு  அனுப்புவாரு அதுல நமக்கு என்ன சார் லாபம்?” என்று பாலு கேட்டார்.

“லாபம் இல்லாத வேலைய நான் ஏன் செய்ய போறேன் சார்.”

வெளிநாட்டுலேர்ந்து இந்தியாக்குள்ள பண வர்ரது அவ்வளவு சுலபமில்ல சார்.அதுக்கு கொஞ்சம் பணம் செலவு பண்ணனும், பண்ணா நமக்கு தெரிஞ்ச அநாதை இல்லம் இருக்கு அவங்களுக்கு கொடுத்தோம்னா நமக்கு லம்பா சில கோடிகள் தேறும் சார் என்று கூறினார்.

ஏற்கனவே பல பிசினஸ் செய்து நல்லா பணம் பார்த்ததால் இதுலயும் போட்டு எடுத்துரவேண்டியது தான் என்று மனதில் கணக்கு போட்டு கேட்கும் போதெல்லாம் சில சில லட்சங்களாக கொடுத்துவந்தார் பாலு.

இரண்டு வருடம் ஓடிவிட்டது. பையனும் லண்டனிலிருந்து திரும்பிவந்தான். இதுதான் கடைசி சார் இப்போ ஒரு பத்துலட்சம் கொடுத்தீங்கனா முடிஞ்சிடும் சார் என்றார் நண்பர்.

என்ன செய்வது இதற்கு மேல் எதுவும் பணம் இல்லை. நிலம் விற்றாகிவிட்டது, பிசினஸ் எல்லாம் மூடியாச்சு இந்த வீடும் வங்கி வேலையும் தான் உள்ளது என்று எண்ணியவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. வேலையை ராஜினாமா செய்தால் எப்படியும் பத்துலட்சம் தேறும். நமக்கும் இன்னும் ஐந்து வருடம் தான் சர்வீஸ் இருக்கு இப்போ பணம் கொடுத்துவிட்டால் போட்ட பணம் பல மடங்காக கிடைக்கும் என்று வேலையை ராஜினாமா செய்தார். அவசர அடிப்படையில் ஒன்றரை மாதத்திலேயே ராஜினாமா ஏற்கப்பட்டது. வங்கி என்பதால் பணமும் செக்காக உடனே கிடைத்துவிட்டது.

இதற்கு பிறகு அவர்களும் இப்போ வந்துவிடும் சார். டிமாநிடைசெஷன் சார் அதான் பணம் லாக் ஆகிடுச்சு வந்துடும் சார் என்று கூறி அதற்கு ஒரு மெயில் காண்பித்தார்கள். அது என்ன மெயிலோ அவர்களுக்கு தான் வெளிச்சம். அதன் பிறகு தேர்தல் சார் என்றார்கள். இதற்குள் ஹார்ட் அட்டாக் ஆகி பெங்களுருவில் சிகிச்சை எடுத்து ஊரெல்லாம் கடனாகி வீட்டை விற்று வாடகை இல்லாமல் சொந்தக்காரி வீட்டுல இப்போ அறையை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் பாலு.

நல்லா சம்பாதிச்ச போது நல்லவனா தெரிஞ்சேன். நான் கஷ்டப்பட்டு கட்டின வீட்ட வித்தா இவர்களுக்கு என்ன என்று பாலு எண்ணுவதும் எங்கேயோ போய்நல்லா ஏமாந்துட்டு வந்து நிக்குறார் என்று குடும்பத்தினர் இவர் மீது வெறுப்பு கொள்வதுமாக நாட்கள் நகர்கின்றன.

எவ்வளவோ சொல்லியாகிவிட்டது அதெல்லாம் பணம் திரும்ப வராது என்று.  ஆனாலும், பணம் வருவதாகவும், வந்த பணத்தைஎப்படி செலவு செய்வது என்றும், அந்த பணத்தை கொண்டு என்னென்ன வாங்க வேண்டும் என்றும் கற்பனை செய்து பார்க்க சொல்லியுள்ள அந்த  “ரகசிய” புத்தகத்தை வழக்கம்போல் புரட்டிக்கொண்டிருக்கிறார் பாலு.

Leave a Response