Story

சிறுகதை: டிடி @ டிமாண்ட் டிராப்ட் – நிகில் ரூபன்

Spread the love

 

” டேய் எந்திரிடா, எவ்வளவு நேரம் தான் தூங்குவ?, உங்க அப்பா வந்தா என்ன நடக்கும்னு தெரியும்ல, காலைலயே அவர்கிட்ட வாங்கிக் கட்டிக்காத” என்றாள் பாலாமணி.

“அம்மா இன்னக்கி ஸ்கூல் லீவுதானமா, எப்ப எந்திரிச்சா என்ன?  ஸ்கூல் படிக்கிறப்பதான் உன் டார்ச்சர் தாங்க முடியாது, வேகமா எந்திரி, வேகமா எந்திரின்னு தொல்ல பண்ணுவ, இப்ப நான் வாத்தியார், இப்பவும் இதே டார்ச்சரா?”

“ ஆமா வாத்தியார்னு நீதான் மெச்சிக்கனும், அப்பிடியே ஆயிரம் ஆயிரமா வாங்கி வந்து என் கைல கொடுத்துட்ட, வெறும் 900 ஓவா சம்பாத்தியத்துக்கே இப்பிடியா?”

என்னதான் அம்மா இப்படி சொன்னாலும், தான் வாங்கும் இந்த குறைந்த சம்பளம் அவளுக்கு எவ்வளவு பெருமையான விசயமாக முதல் மாதத்தில் இருந்தது என்பது தெரியும் மதனுக்கு.

உள்ளூரிலேயே ஒரு தனியார் பள்ளியில்  ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் பயிற்சி முடித்த பின்பு வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக அப்பாவின் சிபாரிசில் கிடைத்த வேலை. அம்மாவைப் பொருத்தவரை வேலை என்றால் கை நிறய சம்பளம் இருக்க வேண்டும், இங்கு எனக்கு அப்படியல்ல என்பதே அவளின் வருத்தம். தனியார் பள்ளிகளின் ஊதிய அரசியலைப் பற்றி அறியாதவள் , அதுவும் எந்த ஒரு அனுபவமும் இல்லாத என் போன்றோருக்கு அவர்கள் தரும் ஊதியம் மிகவும் சொற்பமே. அதனால் தான் என் தொலைதூரக் கல்வியை அப்பாவின் தயவால் முடிக்க வேண்டியிருந்தது.

“ இந்தாடா குடி” என்று வேண்டாவெறுப்பாக அம்மா கொடுத்தக் காபி தேவாமிர்தம்தான்.

“ அம்மா”

“என்னடா”

”காலேஜ் எக்ஸாமுக்கு ஃபீஸ் கட்டனும்னு அப்பாகிட்ட 2500 ரூபாய் வாங்கி வைக்க சொன்னேனே, வாங்கி வச்சயா?”

“அய்யய்யோ மறந்துட்டன்டா, இப்ப உன் அப்பா வற்ர நேரம் தான் நீயே கேளு”

”ஏம்மா இதக்கூட வாங்கி வைக்காம என்ன பண்ணுன? போம்மா”

”டேய் நான் என்ன பண்றது? நேத்து அவர் வீட்டுக்கு வரும்போது நைட்டு பதினோரு மணி. வந்ததும் சாப்டு தூங்கிட்டார். காலைல அவர் எந்திரிச்சதும் வெளிய போய்ட்டார். இப்ப சாப்பிட வீட்டுக்கு வருவாரு கேட்டு வாங்கிக்க, அதுக்கு ஏன் இப்பிடி கத்துற?” என்று அம்மா வார்த்தையை முடிக்கவில்லை, வாசலில் அப்பாவின் செருப்பு சத்தம் கேட்டது. அந்த சத்தம் வீட்டின் மொத்த சூழலையும் மாற்றிவிட்டது.

“என்னடா இப்பதான் எந்திரிச்சியா”

”ஆமாங்பா”

“இந்த வயசுல நான் காலைல 5 மணிக்கே எந்திரிச்சு பொழப்ப பாக்க நாயா பேயா அலைய போறேன், நீ என்னன்னா பொச்சுல வெயில் அடிக்கிற வரைக்கும் தூங்கிட்டே இருக்க” என்றார்.

வழக்கம்போல் ஆரம்பித்துவிட்டார், எப்போதும் இவர் இப்படித்தான். இந்த சூழலில் அமைதியாக நிற்பதே என் வேலை, இப்போதும் அப்படியே நின்றேன்.

டெய்லி காலைல எந்திருச்சு வாக்கிங் போ, எக்சஸைஸ் பண்ணுன்னு உனக்கு எத்தன தடவ சொல்றது. செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி சிவனேன்னு கெடக்க. இந்த வயசுதான் உடம்ப பாத்துக்குற வயசு. இப்ப நீ அத சரியா கவனிக்கலன்னா, வயசானதுக்கு பிறகு அத மட்டுமே கவனிக்கிறதுதான் உன் வேலையா இருக்கும். இந்த வயசுல நான் உடம்புல எந்த பிரச்சனையும் இல்லம இருக்கேன்னா, சின்ன வயசுல நான் செஞ்ச வேலைதான் காரணம். அஞ்சாப்புக்கு மேல எங்கப்பா என்ன பள்ளிக்கோடம் போக வெணாம்னுட்டாரு. நானாத்தான் அடம்பிடிச்சு படிச்சேன். அதுவும் லீவுநாளுல வேலை பாத்துட்டே. இங்க இருந்து கேரளாவுக்கு அரிசி மூட்ட தூக்கிட்டு போவனு, இந்த மலை மேல ஏறி அந்தப்பக்கம் இறங்கி குடுத்தா ஒரு மூட்டைக்கு ஒரு ரூபா குடுப்பான். இப்பிடி கிடச்ச வேலையெல்லா பாத்துதான் படிச்சேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் எவன் கையையும் எதிர்பாக்காம நானா சேத்ததுதான் இவ்வளவும். உடம்புல மட்டும் இல்ல, சம்பாரிக்கிறதுலயும் சுறுசுறுப்பு வேணும், இல்லனா நீ இந்த சமுதாயத்துல செல்லாக்காசு தான்” என்றார்.

அவர் எப்போதும் இப்படித்தான், பழமை பேசி நடைமுறை வாழ்க்கையை எனக்கு விளக்க முயற்சித்துக்கொண்டே இருப்பார்.

” ஏங்க நீங்க பழம பேசுனது போதும், இன்னக்கி லீவுன்னுதான் இவ்வளவு நேரம் தூங்குனா, பள்ளிக்கூட நாளுல அவன் வெள்ளனாத்தான எந்திரிக்கிறான்” இது அம்மா.

“ நீதாண்டி அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்குற, கல்யாணம் பண்ற வயசு வந்திருச்சு இன்னும் பொறுப்பு வரல. இவனெல்லாம் எப்பிடி பொழைக்கப்போறானோ” இது அப்பா.

“ அவன் கல்யாணத்துக்குப் பிறகு பொழைக்கிறது இருக்கட்டும், பரிச்சைக்கு பணம் கட்டணுமாம், நாளிக்குதான் கடைசி தேதியாம், 2500 ரூபா கேட்டான் , நான் நேத்தே கேக்க மறந்துட்டேன். குடுங்க போய் கட்டிட்டு வரட்டும்” என்றாள்

மனதுக்குள் அவளுக்கு நன்றி கூறிக்கொண்டேன்.

“ தொர கடைசி நாளுலதான் கேப்பாராம்மா, இவ்வளவு நாளு என்னா பண்ணிட்டு இருந்தாரு?”

வழக்கம் போல் அமைதியாக நின்றிருந்தேன்.

”எவ்வளவு டா”

”ரெண்டாயிரத்து ஐநூருங்ப்பா”

”எப்பிடி கட்டுவ?”

”டி.டி. எடுக்கனும்ங்பா”

”பணம் கட்டின செல்லான கொண்டுவந்து காட்டனும். சரியா?”

”சரிங்ப்பா” ( செல்லானா அப்படியென்றால்? ஒன்றும் புரியவில்லை எனக்கு)

”ஒழுங்கா கட்டிடுவியா? இல்ல வழக்கம்போல ஏதாவது கோக்குமாக்கு பண்ணிடுவியா?”

”கட்டிடுவேன்ங்பா”

”எந்த பேங்க் டா?”

”கனரா பேங்க்ங்பா”

”கனரா பேங்கா, நான் மதியமா அங்கத்தான் போறேன். என்கூட வரியா? இல்ல இப்ப நீயா போய் எடுத்துக்குறியா?”

இல்லப்பா பிரசன்னா கூட வரான். அவனுக்கும் எடுக்கனும், ரெண்டு பேரும் போய்ட்டு வரோம்”

அவனா? சரித்தான். நீ தனியா போனாலே ஒரு வேலைய ஒழுங்கா முடிக்க மாட்ட. இதுல அவன வேற கூட்டு சேத்துக்கிட்டா இந்த வேலை வெலங்குன மாதிரித்தான். இங்க பாரு, இது காசு விசயம், அதுமட்டுமில்ல உங்க படிப்பு விசயம் உங்க கோமளிதனத்த விட்டுட்டு கொஞ்சம் கவனமா இந்த வேலைய முடிக்கப்பாருங்க, சரியா?”

” அதெல்லாம் சரியா போய்ட்டு வந்திடுவான், குடுத்து அனுப்புங்க” என்றாள் அம்மா.

”பிரசன்னா”, என் உயிர் நண்பன். ஒன்றாம் வகுப்பிலிருந்து நானும் அவனும் ஒன்றாகவே திரிகிறோம். என் எல்லா செயல்களும் அவனுடன் தான், அவனின் எல்லா செயல்களும் என்னுடன்தான். என் தவறுக்காய் அவனும், அவன் தவறுகளுக்கு நானும் அவரவர் வீட்டில் பொறுப்பேற்றுக்கொள்வோம். என்னைவிட அவன் தான் என் தந்தையால் மிகவும் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கிறான். அவனுடன் சுற்றுவதால்தான் நான் இப்படி பொறுப்பற்று இருக்கிறேன் என்பது என் தந்தையின் பிரதான எண்ணம். உண்மையில் சொல்ல வேணுமென்றால் ஆசிரியர் வேலை பார்த்தாலும் அந்த வயதுக்குறிய துறுதுறுப்பு, சேட்டைகள், எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத மனநிலையில்தான் இருவரும் இருந்தோம்.

“ பாக்கலாம்டா நீங்க எப்பிடித்தான் பொழைக்கப்போறீங்கன்னு:” என்பதுதான் என் தந்தையின் அதிக கண்டிப்பான வார்த்தைகளாய் இருக்கும். இந்த வர்த்தையை பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு செயலிலும் அதீத அக்கரை காடுவோம், அதுவே எங்களின் தவறுக்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம் என்பது எனது எண்ணம். இந்த டி.டி. விசயத்தில் அப்படி எதுவும் நடக்கக் கூடாது.

’ மச்சி போலாமாடா, கனரா பேங்க தான ? ஏன்னா அங்கதான் சர்வீஸ் சார்ஜ் இல்ல” என்றான் பிரசன்னா

”ம், ஆமான்டா” இது நான்

ஆனால் இருவரின் மனதிலும் ஒரே விசயம்தான் ஓடிக்கொண்டிருந்த்து. டி.டி. எப்படி எடுப்பது?. இருவரும் இதற்கு முன் டி.டி. எடுத்தது இல்லை. நேற்று இவன் கேட்டக் கேள்வி இன்னும் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.

”மச்சி நானாவது சயன்ஸ் குருப், நீ வொக்கேசனல் தானடா. உனக்கும் டிடி எப்பிடி எடுக்கனும்னு தெரியாதா? உனக்கு இதெல்லாம் பாடத்துலயே வந்திருக்கும்ல டா?” என்றான்.

சாதாரணமாகத்தான் அவன் கேள்வி கேட்டான். ஆனால் அந்தக் கேள்வி என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்பது அவனுக்குத் தெரியாது. இந்தக் கேள்வி எனக்கானது அல்ல. என்னைப்போல் ஏட்டுக்கல்வி மட்டும் கற்றுக்கொண்டு எல்லாவற்றையும் வார்த்தைகளால் மட்டுமே வரைந்துகொண்ட குருடர்களுக்கானது. இந்தக் கேள்வி எனக்கானது அல்ல. என்னைப்போன்ற குருடர்களுக்கு யானையை தடவிக் காண்பித்த ஆசிரியர்களுக்கு, அந்த ஆசிரியர்களுக்கு யானையைத்தடவ அதிகாரம் அளித்த இந்த கல்வி முறைக்கு,  இக்கல்வி முறையை வடிவமைத்த, அதனை அங்கீகரித்த அனைத்து ஆளுமைகளுக்கு என்பது அவனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது.

“ இல்ல மச்சி, வாய்லயே வடய சுட்டுட்டாய்ங்க, இதப்பத்தியெல்லாம் வார்த்தைகள்ல படிச்சதோட சரி, இன்னும் கேட்டா, படிச்சனான்னே எனக்கு ஞாபகம் இல்ல” என்றேன்.

”அதுவும் சரிதான், இப்ப என்ன பண்றது? ம்ம்ம்… மச்சி , நம்ம சரவணன் அண்ணன் கிட்ட கேப்போமா?, போஸ்ட் ஆபீஸ்ல வேலை பாக்குறதால அவருக்கு இதெல்லாம் தெரியும். எத்தன ரிஜிஸ்டர் போஸ்ட் அவரு அனுப்பிருப்பாரு, அதனால அவர்கிட்டயே கேப்போம்டா” என்றான் பிரசன்னா.

எனக்கும் அதுவே சரியெனப்பட இருவரும் தபால் நிலையத்திற்கு நடையை கட்டினோம்.

மிகவும் சுறுசுறுப்பாக தபால்களில் சீல் குத்திக்கொண்டிருந்தார் சரவணன். சுற்றி நடக்கும் எதையும் அவர் கவணத்தில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. இயந்திரத்தனமாக இருந்தது அவரின் செயல்.

“சரவணண்ணா” என்ற என் அழைப்பு, ஏதோ தவத்தில் இருந்த முனிவரை எழுப்பியது போன்ற ஒரு உணர்வை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். திடீரென திரும்பிய அவரின் பார்வையும், “உச்ச்” என்று அவர் உச்சரித்த வார்த்தையும் அவர் எவ்வளவு எரிச்சலுடன் திரும்பியிருக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. குரல் என்னுடையது என்பதால் அவர் கொஞ்சம் குளிர்ச்சியடைந்திருக்க வேண்டுமென்பது அவரின் முக பாவனையிலிருந்து தெரிந்துகொண்டேன்.

“ என்னடா இந்தப்பக்கம்? ஏதாவது தபால் அனுப்பனுமா?” என்றார் சரவணன்.

“ இல்ல அண்ணா, ஒரு சந்தேகம் கேக்கனும் அதான்” என்று இழுத்தான் பிரசன்னா.

“ என்னடா சந்தேகம்”

“ டி.டி. எடுத்துருக்கீங்களா எப்பயாவது?” என்றேன் நான்.

“ டி.டி. யா”

” இல்லணா நாங்க அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு எக்ஸாம் பீஸ் டி.டி. எடுத்து அனுப்பனும், இதுக்கு முன்னாடி டி.டி. எடுத்தது இல்ல. இதுதான் ஃபர்ஸ்ட் டைம், அதான் டி.டி எப்பிடி எடுக்குறதுன்னு உங்கள கேக்கலாம்னு வந்தோம்” என்றான் பிரசன்னா இரகசியமாக.

’ஓ…. அப்பிடியா. அது ஒன்னும் பெரிய விசயமில்லடா. டி.டி. பச்சை கலர்ல இருக்கும். பேங்க் போயி டி.டி.  எடுக்குற செல்லான ஃபில் பண்ணி பணத்த கட்டுனீங்கனா வேலை முடுஞ்சது. ஏதாவது சந்தேகம்னா அங்க ”மே ஐ ஹெல்ப் யூ” அப்பிடின்னு ஒரு போர்டு வச்சு ஒருத்தர் உக்காந்திருப்பாரு அவர்கிட்ட கேட்டா அவரே செல்லான் ஃபில் பண்ணி குடுத்துடுவாரு. நீங்க போய் கட்டுங்க ஒகே வா” என்றார் சரவணன்.

அர்ஜுன்னுக்கு போதித்த கண்ணன் போல் எங்கள் கண்களுக்கு தெரிந்தார் அவர். நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

வங்கியில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அதனால் எங்கள் வேலை எளிதில் முடிந்துவிடும் என்ற பெருமூச்சு இருவருக்குள்ளிருந்தும் வந்தது. முதன்முதலில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவன் தேர்வு அறைக்கு நுழைவது போல் வங்கிக்குள் நுழைந்தோம்.

சரவணன் அண்ணன் சொன்னது போல் ஆங்கிலத்தில் ”மே ஐ ஹெல்ப் யூ” என்ற ஒரு சிறிய பலகைக்கு முன் வழுக்கைத் தலையுடன் ஒரு நடுத்தர வயது ஆள் அமர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் இந்தப் பலகையைப் பார்த்ததும், ஆங்கிலம் தெரியாத நபர்கள் எப்படி இவரிடம் உதவி கேட்பார்கள் என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது. ஒரு வேளை அப்படி யாரும் தன்னிடம் சந்தேகம் கேட்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது என்ற பதிலும் உடனே என் மனதில் தோன்ற அவரிடம் சென்றோம். எங்கிருந்துதான் இவ்வளவு அடக்கம் என்னுள் வந்து ஒட்டிக்கொண்ட்தோ தெரியவில்லை. தலைமை ஆசிரியரிடம் பேசும் மாணவன் போல் “ அண்ணே டி.டி. எடுக்கனும்” என்று கூறியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பச்சை நிறத் தாளை எடுத்து நீட்டினார். நாங்கள் இப்படிக் கேட்டதும் அவரின் முகம் ஏன் இத்தனைக் கோணல்களை வெளிக்காட்டியது என்பது எனக்குப் புரியவில்லை.

 “ இந்த செல்லானை ஃபில் பண்ணி கேஸ் கவுண்டர்ல பணத்தக்கட்டுங்க” என்றார் அந்த ஆள்

     வங்கியில் எல்லோரின் கண்களும் எங்களைப் பார்ப்பதாக மட்டுமே எனக்குத் தோண்றியது. செல்லானை என்னிடம் கொடுத்துவிட்டு ”ஃபில் பண்ணு மச்சி” என்று தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நின்றுகொண்டான் பிரசன்னா. ஓ இதுதான் செல்லானா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

“ ஏன் நீங்க ஃபில் பண்ண மாட்டீங்களா? என்று நான் கேட்ட கெள்விக்கு, “ மச்சி நீதான வொக்கேஷனல் குரூப்பு, நான் சயின்ஸ் மச்சி, நீதாண்டா இதல்லாம் ஃபில் பண்ணனும், நான் ஏதாவது தப்பு பண்ணி, திரும்பவும் புதுசா இன்னொரு செல்லான் வாங்கி மறுபடியும் ஃபில் பண்ணுறதுக்கு நீயே இதெல்லாம் பண்ணிடலாம்ல” என்றான்.

இவனிடம் இந்தக் கேள்வியை கேக்காமலேயே இருந்திருக்கலாம் என்ற மனநிலையில் செல்லானை வாசித்து அதிலிருக்கும் சில அடிப்படை தகவல்களை மட்டும் எழுதிவிட்டேன். சில கட்டங்களில் என்ன எழுத வேண்டும் என்பது சுத்தமாக எனக்குத் தெரியவில்லை. யாரிடம் உதவி கேட்பது என்று இருவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். திரும்பவும் அந்த உதவியாளரிடம் கேட்கலாம் என்றால் அவர் செல்லானை கொடுக்கும்போது பார்த்த பார்வையே இனி என்னிடம் எதற்கும் வராதே என்பதாய்தான் இருந்தது. சரி வருவது வரட்டும் என்று நானே அந்த செல்லான் முழுவதும் உள்ள கட்டங்களில் தேவையான தகவல்களைப் பதிவு செய்துவிடலாம் என்ற முடிவோடு எழுதியும் முடித்துவிட்டேன்.

” மச்சி என்னடா, செல்லான் ல தமிழே இல்ல” என்றான் .

” அதுக்கு என்ன இப்போ”

இல்ல மச்சி, இங்கிலிஷ், ஹிந்தி இங்க வர்ற எல்லாருக்கும் தெரியும்னு சொல்ல முடியாதே. சில சமயம் படிப்பு வாசனையே இல்லாதவங்க , இல்ல தமிழ் மட்டும் தெரிஞ்சவங்க இங்க வந்தா, இதெல்லாம் எப்பிடி ஃபில் பண்ணுவாங்க?” என்றான்.

அதுக்குத்தான் அங்க நம்ம ” May I Help You”  இருக்காருல்ல” என்றேன்.

நீவேற, அந்தாளு நாம போய் கேட்டதுக்கே, கடிச்சு திங்க பாத்தான். அவன் கிட்டே போய் குடுத்தா , அவன் சரியா ஃபில் பன்றானா? இல்ல தப்பா ஃபில் பன்றானான்னு யாருக்குத் தெரியும்?” என்றான்.

என்ன தாண்டா சொல்ல வர்ற?

“டேய், அந்தந்த மாநிலத்தில பேசக்கூடிய மொழியிலேயே செல்லான் இருந்துச்சுன்னா இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் இது எவ்ளோ உதவியா இருக்கும், அடிசனலா வேற மொழி ஹிந்தியோ, இங்கிலிஷோ இருந்துட்டு போகட்டும். இத்தக்கூடவா யோசிக்க மாட்டாங்க?” என்று கூறிவிட்டி தலையில் அடித்துக்கொண்டான்.”

மச்சி நடக்குறத  பேசுடா… இதெல்லாம் யோசிச்சா அவைங்க நல்ல அரசியல்வாதியா மாறிட மாட்டாய்ங்களா?” என்றேன்.

” அதுவும் சரிதான் வா, நம்ம வேலைய பாப்போம்” இது அவன்.

” டி.டி.“ என்ற வார்த்தையைக் கூறி கேஸ் கவுண்டரில் இரண்டு செல்லானையும் கொடுத்தாயிற்று, நேர்முகத்தேர்வுக்கு அதிகாரிகள் முன்னால் அமர்ந்திருக்கும் நபரைப்போல் அடுத்து என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில் கேசியரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னையும் , செல்லானையும் மாறி மாறிப் பார்த்தவர், ”போய் அசிஸ்டன்ட் மேனேஜரைப் பாருங்க” என்று அருகில் இருக்கும் நபரிடம் அனுப்பி வைத்தார்.

     அவரும் அதேபோல் செல்லானையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தவர், ”மதன் குமார் யாரு?” என்றார்.

“ நான் தான் சார்” என்றேன்.

“ என்ன பண்ற” என்றார்

அவர் ஒருமையில் என்னைக் கேட்ட கேள்வி என்னை ஏதோ செய்தது.

”சார்?” என்றேன் புரியாத கோணத்தில்

“ எதுக்கு டி.டி. எடுக்குற?” என்றார்

”அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்டறதுக்கு சார்” என்றேன்.

”நீ அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு எடுக்கனுமா? இல்ல அண்ணாமலை யுனிவர்சிட்டி உனக்கு டி.டி. எடுக்கனுமா? “ என்றார்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் கேட்ட விதமும் அவர் என்மீது வைத்திருந்த அந்த பார்வையும் என்னை அருவருப்புக்குள்ளாக்கியது.

“ நான் தான் சார் அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு டி.டி. எடுக்கனும்” என்றேன்.

படிச்சிருக்கல, அறிவு வேணாம், ஒரு டி.டி எப்பிடி ஃபில் பண்றதுன்னு தெரியலையே நீயெல்லாம் என்ன சாதிக்கிறதுக்கு படிக்கிற” என்றார்.

தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தனியாக நின்றிருந்தான் பிரசன்னா. இவர் கேள்வி கேட்க கேட்க எனக்கும் அவனுக்கும் உள்ள தொலைவு கூடிக்கொண்டே இருந்ததை என்னால் உணர முடிந்தது.

என் அப்பா அடிக்கடி என்னைப் பார்த்து கேட்கும் கேள்வியாய் இருந்தது. தலையை வழக்கம் போல் கீழே தாழ்த்திக்கொண்டேன்.

”பிள்ஸ் டூ படிச்சுட்டுதான் டிகிரி படிக்கிறியா, இல்ல எட்டாவது முடுச்சுட்டு ஏதோ பேருக்கு பின்னால போடனும்றதுக்காக படிக்கிறியா” என்றார்.

“பிள்ஸ் டூ படிச்சுட்டுதான் டிகிரி படிக்கிறேன் சார்” என்றேன்.

“ நீயெல்லம் படிச்சு என்ன புடுங்கப்போறியோ” என்று முனுமுனுத்தார்.

நல்ல வேளை இவர் நான் பார்க்கும் வேலையைப் பற்றி கேட்கவில்லை. நான் ஒரு பள்ளி ஆசிரியன் என்று இவருக்குத் தெரிந்தால் என்னை கை நீட்டி அடிக்கவும் தயங்கமாட்டார், இன்னும் மனதிற்கு தோன்றும் குட்ட வார்த்தைகளிலும் திட்டத் தயங்கமாட்டார், என நினைத்துக்கொண்டேன்.

செல்லானை என்னை நோக்கி நீட்டியவர், “ இங்கப் பாரு. இந்த காலம்ல உன் பேரு போட்டுருக்கல அங்க யுனிவர்சிட்டி அட்ரசும், யுனிவர்சிட்டி அட்ரஸ் எழுதிருக்கல, அங்க உன் டீட்டெல்ஸும் போடனும், புரியுதா? என்றார்.

அப்போதுதான் நான் செய்திருக்கும் தவறு எனக்குப் புரிந்த்து. இன் தி ஃபெவர் ஆஃப் என்ற காலமில் நான் என் பெயரையும் மற்ற விவரங்களையும் எழுதியிருந்தேன், ஆனால் அங்கு அண்ணாமலை யுனிவர்சிட்டியின் எக்ஸாம் கண்ட்ரோலர் அட்ரஸ் எழுத வேண்டும். இரண்டு விவரங்கள் மாறிப்போனதால் நான் யுனிவர்சிட்டிக்கு டி.டி. எடுப்பதற்கு பதிலாக , யுனிவர்சிட்டி எனக்கு டி.டி. எடுக்கும் பரிதாபநிலைக்கு ஆளானது.

விவரங்களை மாற்றி புதிய செல்லானில் பதிவு செய்தாகிவிட்டது. மொத்த வங்கியும் இன்று இப்படி ஒரு முட்டாள்களை சந்தித்திருக்காது, என்றான் பிரசன்னா.

“ விடு மச்சி இதுவும் ஒரு பாடம் தான் இனி இதுல தப்பு விடமாட்டோம்ல” என்று நான் சொன்ன வார்த்தையில் பிரசன்னா சமாதானம் ஆனானோ இல்லையோ நான் என்னை சமாதானம் செய்துகொண்டேன்.

கேஸ் கவுண்டரில் பணம் கட்டியாகிவிட்ட்து. பச்சை கலர் செல்லானில் ஒரு பகுதியை கேஸியர் எடுத்துக்கொண்டு மீதம் ஒரு பகுதியை கிழித்து எங்களிடம் கொடுத்தார்.

“அவ்வளவுதானா சார்?” என்றேன்.

“அவ்வளவுதான் நீங்க போகலாம்” என்றார்

நாங்கள் இருவரும் வந்த வேலை முடிந்தது என்ற திருப்தியோடு வங்கியை விட்டு வெளியே வந்தோம். அப்போது அந்த அசிஸ்டண்ட் மேனேஜரை நான் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால் அவரின் பார்வை என்னை கேவலமாக துளைத்து எடுத்தது. வெளியில் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு மனதைபோட்டு பிசைந்தது. தலையை தாழ்த்திக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.

‘இவ்வளவுதானா மச்சி, நாம எதுவும் மிஸ் பண்ணிடலயா?” என்றான் பிரசன்னா

“ நான் தான் கேட்டேனே மச்சி, கேசியர் தான் போகலாம்னு சொல்லிட்டாரே, அது மட்டும் இல்லாம சரவணன் அண்ணன் என்ன சொன்னாரு டி.டி. பச்சை கலர்ல இருக்கும்னு சொன்னாருல, இந்தா, இது பச்சை கலர் தான’ என்றேன்.

”இது செல்லான்னு சொன்னாங்கள, நாம டி.டி. தான எடுக்கனும்” என்றான்

”ஆமா மச்சி, ஆனா பணம் கட்டிட்டோம்ல , இப்ப நம்ம கைல இருக்குற இந்த சிலிப் தான் டி.டி. போல” என்றேன். இருவருக்கும் மீண்டும் வங்கிக்குள் சென்று அங்கிருப்பவர்களிடன் சந்தேகம் கேட்கும் திராணி இல்லை. இப்போது பிரசன்னா சமாதானம் ஆனான்.

“அடுத்து என்ன மச்சி” என்றவனிடம், “ நேரா போஸ்ட் ஆஃபீஸ் போறோம் இத யுனிவர்சிட்டிக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பி வச்சுட்டு வீட்டுக்கு போவோம் என்று கூறினேன்.

தபால் நிலையத்தில் சரவணன் அண்ணன் இல்லை. அங்கிருந்தவரிடம் ஆபீஸ் கவர் வாங்கி, நாங்கள் கொண்டுவந்திருந்த பச்சை நிற காகிதத்தை( அதாவது டி.டி. எடுத்த செல்லானில் பாதி, கேசியரிடன் இருந்து பெற்றது) உள்ளே வைத்து , ரிஜிஸ்டர் தபாலில் அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு அனுப்பி வைத்து விட்டு சாவகாசமாக நடந்தோம்.

ஏதோ பெரிதாக சாதித்த திருப்தி இருவர் மனதிலும் இருந்தது. அரட்டை அடித்துக் கொண்டே அங்கே,இங்கே என்று சுற்றிவிட்டு, மதிய உணவிற்கு அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றோம்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஏதோ ஒருவித பேரமைதி வீட்டைச்சுற்றி படர்ந்திருப்பதை உணர்ந்தேன். டைனிங் டேபிலில் அமர்ந்து அப்பா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

“ என்னடா டி.டி. எடுத்திட்டியா?” என்றார்.

“ எடுத்துட்டேன்ங்பா”

“ ம், எங்க காட்டு பாப்போம்” என்றார்.

“ ரிஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பி வச்சுட்டேங்பா” என்றேன்.

“ ம், பரவாலையே, அப்படினா டி.டி. எடுத்ததுக்கு பேங்க்ல ஒரு இரசீது ( செல்லானின் ஒரு பகுதி) குடுப்பாங்கல அதக் காட்டு” என்றார்.

எனக்குத் தலை சுற்றியது. அப்ப நான எடுத்தது டி.டி. இல்லையா? என்ற நினைப்புடன்,

சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”எந்த இரசீதுங்பா” என்றேன்.

“ ம், நீ அதி புத்திசாலித்தனமா அண்ணாமலை யுனிவர்சிட்டிக்கு ரிஜிஸ்தர் போஸ்ட்ல அனுப்பி வச்சையே அந்த இரசீது: என்றார்.

     அந்த வார்த்தைகளைக் கேட்ட்தும் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. அப்போ நான் அனுப்பி வைத்தது டி.டி. இல்லையா, மிகவும் குழம்பிப் போயிருந்தேன். அப்பாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.

”அடியே இந்த ஊருலயே அதிபுத்திசாலி நமக்கு பொறந்ததாத்தான் இருக்கும். இன்னொன்னு இவனோட ஃபிரண்டு, ரெண்டும் சேர்ந்தா எந்த வேலையும் வெலங்காதுன்னு சொன்னேன்ல, கேட்டியா, இப்பப்பாரு, இவனுங்கனால பேங்க்ல நான் அசிங்கப்பட்டு கூனிக்குருகிப்போயி நின்னேன். நல்ல வேளை நான் இன்னக்கி பேங்க்க்குக்கு போனேன், இல்லனா இவனுக்கு குடுத்தனுப்பின காசு 2500 ஓவா கோவிந்தா தான். இந்தா இதுக்குப் பேரு தான் டி.டி.” என்று ஒரு  பச்சை நிற சதுர வடிவ  தாளை என்னிடம் நீட்டினார்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் நான் முதன்முறையாக டி.டி. யை பார்க்கிறேன். இது தான் டி.டி. யா. அப்ப நாம் அனுப்பி வச்சது செல்லானா? என்ற நினைப்பு வந்தவுடன், என் உடலில் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியை அடக்க முடியவில்லை. நானும் கூனிக்குருகிப்போனேன்.

“ நேத்து வரைக்கும் எனக்கு அந்த பேங்க்ல ஒரு மரியாதை இருந்துச்சு, இன்னக்கி உள்ள போனதும், இவனுங்க ரெண்டு பேரோட பெயரையும் கூவி கூவி வித்துட்டு இருந்தாங்க, நான் சும்மா இருக்க மாட்டாம , அசிஸ்டண்ட் மேனேஜர் கிட்ட போய் என்ன சார் என் பசங்க பேர கூப்டுட்டு இருக்கீங்கனு சொன்னதும் அவன் சிரிச்சாம்பாரு ஒரு சிரிப்பு, அங்கயே தொங்கிடலாம் போல இருந்துச்சு” என்ற என் அப்பாவின் வார்த்தைகள் என் கண்களை ஈரமாக்கியது.

‘ இவனுங்க டி.டி. எடுத்தது சாதனை இல்ல. அந்த செல்லான டி.டி.னு நெனச்சு ரிஜிஸ்டர் போஸ்ட்ல யுனிவர்சிட்டிக்கு அனுப்பி வச்சாய்ங்க பாரு அதுதான் சாதனை. நெனச்சுப்பாரு அந்த ரிஜிஸ்டர் போஸ்ட் யுனிவர்சிட்டிக்கு போய் அங்க இருக்குறவனுங்க அத தெறந்து பாத்து, அது டி.டி க்கு பதில் செல்லான அனுப்பி வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சு இவனுங்கள நெனச்சு சிரிப்பானுங்க பாரு ஒரு சிரிப்பு, அந்த நிமிசம் தான் இவன 12 வருசம் படிக்க வச்சதுக்கு இவன் எனக்கு செஞ்ச கைமாறு. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” ன்ற குறலுக்கு அர்த்தமே அப்பத்தான் கிடைக்கும் என்றார்.

“ உலகின் மொத்த அவமானமும் என் மீது விழுந்ததாய் உணர்ந்தேன் நான். இது என் தப்பாகத்தான் எல்லார் கண்ணிலும் படுகிறதே தவிர ,இது என்னதல்ல, எனக்கு போதித்த ஆசிரியர், நான் கற்ற செயல்பாடுகள் அற்ற ஏட்டுக் கல்வி, வார்த்தைகளால் மட்டுமே என்னை வார்த்தெடுத்த வகுப்பறைகளின் தப்பாக ஏன் எவராலும் பார்க்கப்படுவதில்லை என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

” டேய் அறிவாளி, நீ கைல வச்சுருக்குறதுதான் டி.டி., நீ அனுப்பி வச்சது செல்லான், புரியுதா?” என்ற என் அப்பா, சோற்றுக்கையில் அவர் நெத்தியில் அடித்துக்கொண்டார். அதோடு நில்லாமல் ”உன்னப்பெத்ததுக்கு நான் சும்மாவே இருந்திருக்கலாம்” என்று உச்சரித்த வார்த்தை என் அம்மாவின் கண்ணை ஈரமாக்கியது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் எவரையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியத்தை என்னிடமிருந்து பரித்துக்கொண்டது.

நான் தலையை ஆட்டினேன்.

“ போ , போயி இத ரிஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பி வை. கரெக்டா யுனிவர்சிட்டிக்கு அனுப்பி வை, வேற எங்கயாவது அனுப்பி வச்சுட்டு மறுபடியும் என்கிட்ட வந்து நிக்காத, போ இந்த வேலையாவது ஒழுங்கா முடி” என்றார் . இந்த விசயம் பிரசன்னாவின் குடும்பத்தார்களுக்கு தெரியக்கூடாது என்ற நினைப்பு மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கையில் டி.டி.யுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தேன்.

*****************************

1 Comment

  1. அருமையான கதை….ஹாஸ்ய நடை தன்னியல்பாக வருகிறது….நிறைய எழுதுங்கள் நிகில் ரூபன்.

    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691

Leave a Response

Top Reviews

Video Widget

gallery