Story

சிறுகதை: வரம் – கம்பம். மு.ஜெய்கணேஷ்

177views
Spread the love

 

ப்ரக்னன்ஸி கார்டில் வட்ட வடிவ குழியில் ஒரு துளி சிறுநீர் விட்டதும், அருகில் இருந்த செவ்வக வடிவப் பரப்பில் இரண்டு செந்நிற கோடுகளைக் காண்பித்தது. பரபரப்பாய் பார்த்துக் கொண்டிருந்த கவிதாவுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

இந்த மாதம் 15 நாள் தள்ளிப் போனதிலிருந்து அவள் வயிற்றுக்குள் ஒரு மெல்லிய அசைவும், இனம் புரியாத உணர்வும் தான் கருவுற்றிருக்கிறோமோ? என்ற மெல்லிய சந்தேகம், இச்சிறு கருவி ஊர்ஜிதம் செய்த பின் மகிழ்ச்சியாக மாறியது.

இது இரண்டாவது கர்ப்பம். முதன்முதலாக இந்தக் கருவியில் இரண்டு கோடுகளைப் பார்த்த போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சியும், பரபரப்பும் கவிதாவுக்கு இப்போதும் இருந்தது.

முதல் குழந்தைக்காகக் காத்திருந்த போது, கவிதாவின் அத்தை சொன்னது அவள் காதில் இப்போது ஒலிப்பது போல இருந்தது. “கொழந்தன்றது ஆணும் பொண்ணும் சேந்துட்டா கெடய்க்கிறதில்ல… ஆண்டவெ மொகம் பாத்துக் குடுக்கிற வரம்… பயபக்தியா இருக்குறவங்களுக்கு அள்ளிக் குடுப்பயான்” 

தான் கருவுற்றிருப்பதை முதலில் தன் அத்தை அழகுதாயம்மாளிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணிக் கொண்டிருக்கையில், தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பத்து மாதக் குழந்தையின் உசும்பலும், அதைத் தொடர்ந்து எழுந்த அழுகைக்குரல் பாத்ரூமில் இருந்த கவிதாவிற்கு துல்லியமாக கேட்டது. அவசரம் அவசரமாக பாத்ரூமில் இருந்து வெளியேறினாள். 

“அழாதம்மா என் செல்லம், அம்மா வந்துட்டேன், செல்லத்துக்கு  பசிக்குதா” என்றவாறே தன் பெண் குழந்தையை தூக்கி, மார்பில் அணைத்து பசியமர்த்த துவங்கினாள்.

சுகப்பிரசவம் சுலபமே… | உன் அழகைப் போல் கவிதை இன்னும் பிறக்கவில்லை....!!!

கவிதாவின் பள்ளியிறுதி ஆண்டு முடிந்தவுடன் அப்பா மாரிமுத்துவின் அக்கா மகனான சிவாவுடன் திருமணம். சொந்த அத்தை மகன். சிறுவயது முதலே ஒன்றாக திரிந்து விளையாடியவர்கள் தான். இருவருக்கும் ஆறேழு வயது வித்தியாசம். பள்ளிசெல்லும் போதும் அவள் கைபிடித்து அவளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வான். சிவா இடையிலேயே படிப்பை நிறுத்தி விட்டு தன் மாமா மாரிமுத்துவின் கடையிலேயே வேலை பார்க்க துவங்கி, எல்லா வேலைகளையும் கற்றுத் தேர்ந்தவன், இன்று தனியாக ஒரு தேநீர் கடை வைத்திருக்கிறான்.

மெயின் ரோட்டிற்கு அருகில், சற்று பரபரப்பாய் வியாபாரம் நடக்கும் கடை  என்பதால் டீ மாஸ்டரும், சப்ளையரும் உண்டு, வடை, சுவீட் எல்லாம் போடுவதற்கு தனியாக மாஸ்டரும் உண்டு. இவனே எல்லாப் பலகாரங்கள் போடத் தெரிந்திருந்தாலும் மாஸ்டர் வராத நாட்களில் மட்டுமே செய்வான். எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக, சிரித்த முகத்துடன் இருப்பான்.  அம்மாவின் மீதும், தாய் மாமா மாரிமுத்துவின் மீதும் சிறுவயது முதலே பாசம் அதிகம். அம்மாவின் பேச்சைத் தட்டாத பிள்ளை.

அவனின் உழைப்பைக் கண்டே மாரிமுத்துவும், கவிதாவை அக்கா மகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். எந்த வேலையும் தெரியாத தன் தம்பி மகளான கவிதாவுக்கு அத்தை அழகுதாயம்மாள் பொறுமையாக ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்தார். அவர் காட்டிய பரிவினாலும், அக்கறையிலும் வெகு சீக்கிரத்தில் சமையல் உட்பட அனைத்து வேலைகளும் கற்றுத் தேர்ந்தாள்.

கவிதா முழுக்குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபின், அழகுத்தாயம்மாள் எந்த வேலையும் செய்வதில்லை, அவளே அத்தனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்… ஊடுமாடும் சிவாவும் வீட்டில் இருக்கும் நேரம் அவனாக சில வேலைகளில் ஒத்தாசை செய்வான். 

சிவாவின் அப்பா பரமன் மது, மாது, புகை, சூது என்று சகல பழக்கமும் கொண்டவர். லோடுமேன் வேலையில் கிடைக்கும் வருமானமும், போதவில்லை என்று ஊரைச் சுற்றி கடன் வாங்கியாவது குடித்தும், கூத்தடித்தும் விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வருவார். அழகுத்தாயம்மா எந்தப் பேச்செடுத்தாலும் சண்டையாக மாற்றி, அடித்து துன்புறுத்துவதே வாடிக்கையாகிப் போனது. அழுகை இல்லாமல் ஓரிரவும் கழிந்ததில்லை.

அதன் காரணமாகவே அழகுத்தாயம்மாள் அடைக்கலம் தேடிச் சென்றது பாண்டிமுனீஸ்வரரிடம். தன் வீட்டில் இருந்து சற்று தள்ளி வயல்களுக்கு அருகில், சுழித்தோடும் முல்லையாற்றின் கரையோரம் ரோட்டிலிருந்து பிரிந்து சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில், ஒற்றை ஆலமரம் குடைவிரித்தபடி நின்றிருக்க அம்மரத்தின் கீழ் ஒரு சிறுபீடம் தான் கோவில். அதில் நடப்பட்டிருக்கும் திரிசூலம் தான்… பாண்டி முனீஸ்வரர்.

ஆற்றை ஒட்டி வண்ணான் துறைக்கும், வயல்களுக்கும், வருபவர்கள் அருகில் சுடுகாடு இருப்பதால் பயமற்று இருப்பதற்காகவோ? துணைக்காகவோ? இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார்கள்.

சிவா குழந்தையாக இருந்த போது, அழகுதாயம்மாள் பெரும்பாலான நேரம் கோவிலிலேயே தங்கி இருந்துவிட்டு மதிய வேலைகளில் வீடு திரும்புவது வழக்கம். அதுபோன்ற நேரங்களில் அக்கோவிலைச் சுற்றியுள்ள குப்பைகளையும், உதிர்ந்த இலைகளையும் கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வதும், அருகிலுள்ள ஆற்றில் நீரெடுத்து வந்து தெளித்து கோலமிடுவதும், தான் பறித்து வரும் மலர்களை பாண்டி முனீஸ்வரருக்கு சூட்டி, மனமுருகி தன் குறைகளை முறையிட்டு வழிபடுவாள். வீட்டில் பிரச்சனைகள் அதிகமாகவுள்ள சமயங்களில் சன்னதம் வந்தது போல ஓங்காரக் குரலில் கத்தியழுவார். பின் படிப்படியாக தன்னிலை பெற்று, அமைதியடைந்து சிவாவுடன் வீட்டிற்குச் செல்வார்.

கோவிலுக்கு பூசாரி என்று யாரும் இல்லை. அவ்வப்போது வயல்களுக்கு வருபவர்கள், துவைக்க, குளிக்க என்று வருபவர்கள் அல்லது அந்த வழியாக பக்கத்து ஊர்களுக்குச் செல்பவர்கள் என ஒரு சிலர் மட்டும் சூடம், பத்தி கொளுத்திச் செல்வதும், எப்போதாவது ஏதேனும் நேர்ச்சை வைத்தவர்கள் ஆடு, சேவல் அறுத்து பொங்கல் இடுவதும் உண்டு.

அழகுதாயம்மாள் தினமும் கோவிலிலேயே இருப்பது கண்டு, அங்கு வருபவர்கள் அவரிடமே சூடம் பத்தி மற்றும் பூஜைப் பொருட்கள் கொடுத்து தங்கள் குறைகளைச் சொல்லுவர். அவரும் தேங்காய் உடைத்து, சூடம் பத்தி கொளுத்தி, தீபாராதனை செய்து தட்டை நீட்டுவார், தொட்டுக் கும்பிட்டதும் கண்மூடிப் பிரார்த்தித்து விட்டு நல்ல வார்த்தை சொல்லி விபூதியும் கொடுப்பார். ஒரு சிலர் காணிக்கையும் செலுத்துவர்.

அவரிடம் விபூதி பெற்றுச் சென்றவர்களில் ஒரு சிலருக்கு குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பிரச்சனைகள் தீரத் தொடங்கியது. தற்செயலோ? இல்லை வேறெதுவோ? அந்த ஒரு சிலர் சொல்லி, படிப்படியாக அவரது புகழ் பரவத் தொடங்க… சிறிதளவு காணிக்கை வருமானமும் கிடைக்கத் துவங்கியது. படிப்படியாக அறிவிக்கப்படாத பூசாரியாக மாறி வந்தார்.

ஆற்றை ஒட்டி செல்லும் ரோட்டில் தான் அவரது தம்பி மாரிமுத்து டீக்கடை நடத்தி வருகிறார். தன் அக்காவின் கஷ்டங்களைப் பார்த்து, அவள் குடும்பத்தையும் சேர்த்து அவரே தாங்கி வருகிறார். வீட்டு வாடகை, அரிசி, பருப்பென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களும், தன் கடையில் இருக்கும் இனிப்பு வகைகள், பலகாரங்கள், அவித்த பயிறு, கப்பைக் கிழங்கு, என்று ஏதேனும் தினமும் தன்அக்காவுக்கும், மருமகனுக்கும் கொடுப்பது வழக்கம். அவன் படிப்பிற்கும் அவர் தான் உதவி செய்து வருகிறார். எப்போதும் பள்ளிநேரம் போக கோவிலிலோ, அல்லது டீக்கடையிலோ வளைய வருவான், எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்வான்.

அழகுதாயம்மாள் தனக்கு எவ்வளவு கஷ்டம் என்றாலும், தன் தம்பிக்குத் தெரிவிப்பதில்லை. அவர் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்தவர் பாண்டிமுனி மட்டுமே. அவரும் யாருக்கும் சொல்வதில்லை. மொத்தத்தில் தண்ணீருக்குள் மீன் அழுத கண்ணீர் போன்றது தான் அவர் கண்ணீரும்.

சிவாவிற்கு பத்து வயதிருக்கும் போதே அவனது அப்பா ஊர் முழுக்க கடன் வாங்கி, அதற்கு பதில் சொல்லப் பயந்து, தன் குடும்பத்தை விட்டு விட்டு, எங்கோ சென்று விட்டார். எங்கிருக்கிறார் என்று எந்தத் தகவலுமில்லை. அழகுதாயம்மாளுக்கும் தேடத் தோன்றவில்லை. விட்டது சனியன் என்று அத்தோடு தலைமுழுகி விட்டார். அதன்பின் கஷ்டமோ… சந்தோசமோ… அவருக்குத் துணை பாண்டி முனீசுவரன் தான் என்றாகிப் போனது.

தினமும் அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு, மஞ்சள் நிறத்தில் நூல் சேலை அணிந்து தன் மகனின் TVS 50-யில் அமர்ந்து ஆறு மணிக்கு கோவிலுக்குச் சென்று விடுவார். அவரை இறக்கி விட்டு தன் தேநீர் கடையை திறக்கச் செல்வான் சிவா. மீண்டும் பதினோரு மணிக்கு காலை உணவுக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டவுடன்,  அப்படியே கோவிலில் கூட்டமாய் இருக்கும் நாட்களில் தன் அம்மாவிற்கான உணவை கோவிலில் கொடுத்து விட்டு வருவான்.

தமிழகத்தில் டீக்கடைகளைத் திறக்க அனுமதி; கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு- Dinamani

அழகுதாயம்மாள் கோவிலிலிருந்து செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் கூட்டத்தைப் பொறுத்து 10.00… 11.00 மணி வாக்கில் வீட்டிற்கு வருவார். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. முக்கியமாக பிள்ளையில்லாத தம்பதியினர் அங்கு அதிகம் வருவர். அந்த ஆலமர விழுதுகளில் நிறைய தொட்டில்கள் குழந்தை பொம்மையுடன் காற்றில் அசைந்தாடுவதை பார்க்க முடியும். 

காசு பறிக்கும் நோக்கம் இல்லாமல் எளிய பரிகாரங்கள் மட்டுமே சொல்லுவார். “ஒன்பது வெள்ளிக்கெழம காலைல தலைமுழுகி, மஞ்சள் வஸ்த்ரம் உடுத்தி, தவறாம வந்து பாண்டி முனி சன்னிதில 9 எலுமிச்சம் பழத்த ரெண்டா அறுத்து 18 நெய் தீபம் போட்டு மனமுருகி பிரார்த்தன பண்ணுங்க ஒங்களுக்கு கொழந்த பாக்கியங் கெடய்க்கும்” என்றோ… அல்லது கோவிலுக்கு உபயோகமாகிற அளவிற்கு சிறு சிறு பொருட்களை உங்கள் எண்ணம் நிறைவேறிய பின் வந்து செய்யுங்கள் என்று கூறுவார். தனக்கென்று எதுவும் கேட்க மாட்டார்.

தட்டில் விழும் காணிக்கைகளே போதுமென்றிருப்பார். தன் கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் வலுக்கட்டாயமாக தருவதைக் கூட சற்று சங்கடத்துடன் தான் பெற்றுக்கொள்வார். அவர் கூறும் பரிகாரங்களையோ, நேர்ச்சைகளையோ முழு நம்பிக்கையுடன் தம்பதிகள் மேற்கொள்வதாலோ, வேறு காரணங்களாலோ பத்துக்கு எட்டு பழுதில்லாமல் பெரும்பாலானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே செய்திருக்கிறது.

கவிதாவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் குழந்தையின்றி தாமதமாகியது. போவோர், வருவோர் என்று எங்கு தெரிந்தவர்கள் யார் பார்த்தாலும் “என்னம்மா… இந்த மாசமாவது.. எதுவும் விசேசமுண்டா..” என கேட்கத் துவங்கினர்.

ஒவ்வொரு மாதமும் தலைக்கு ஊற்றியதும், உண்டாகும் உடல் வேதனையை காட்டிலும், இவர்கள் கேள்வி கேட்டு உண்டாக்கும் மன வேதனை அதிகம், பலநேரங்கள் தானாக அழுது கொண்டிருப்பாள் கவிதா. அழகுதாயம்மாள் தான் ஆறுதல் சொல்லித் தேற்றுவார்.

“ஏம்மா புதுசா கல்யாண முடிச்சவக இன்னும் கொஞ்ச நாளய்க்கி சந்தோசமா இருங்க, கொழந்தன்றது ஆணும் பொண்ணும் சேந்துட்டா கெடய்க்கிறதில்ல… ஆண்டவெ மொகம் பாத்துக் குடுக்கிற வரம்… பயபக்தியா இருக்குறவங்களுக்கு அவனே அள்ளிக் கொடுப்பயான். நம்ம பாண்டிமுனிட்ட ஒங்கொறய ஒப்படச்சிட்டு… ஒங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்க… அதது வர வேண்டிய நேரத்துக்கு வரும்”

அதன்பின் அவள் தன்மனக்குறை மறைந்து இயல்பாக இருக்க ஆரம்பித்தாள். அடிக்கடி கோவிலுக்கும் சென்று மனமுருகி வேண்டிக் கொள்வாள். ஆனாலும், ஊருக்கே குழந்தை வரம் கொடுக்கும் பாண்டியய்யா தனக்கு இன்னும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் கவிதாவுக்கு இருக்கவே செய்தது.

ஒருமுறை சென்னையில் இருந்து ஒரு தம்பதியர் வந்திருந்தனர். எட்டு வருடங்களாக குழந்தையில்லாமல் தவித்து, எல்லா மருத்துவ மனைகளுக்கும், கோவில் குளங்களுக்கும் சென்று, கடைசியாக இந்த கோவிலைக் கேள்விப்பட்டு இங்கு வந்தனர். அழகுதாயம்மாள் அருள்வந்து விபூதி கொடுத்து அனுப்பினார். அதன்பிறகு ஆண்குழந்தை பெற்று தற்போது கோவிலுக்கு வந்திருந்தனர்.

அவர் கூறிய பரிகாரத்தின்படி கோவிலுக்கு ஒரு பெரிய வெண்கல மணி ஒன்றையும், அவர்களாக விருப்பப்பட்டு ஒரு தட்டில் பணம், பட்டுச்சேலை மற்றும் பழங்கள் வைத்து அழகுதாயம்மாளிடம் கொடுத்தனர்.

“ஏய்யா இவ்வளவ்வ கொண்டு வந்திருக்கீக… இதுல நானொன்னும் செய்யலயே..! எல்லாம் அவெ செஞ்சது. அதுக்கு உபகாரமா, இந்த வெங்கல மணிய மட்டும்  பாண்டியய்யாவுக்குச் செலுத்தினா போதாதா..? என்று சொல்ல..

“இத்தன வருசமா நாங்கப்பட்ட துன்பமெல்லாம், உங்ககிட்ட வந்த பின்ன தான் தீந்துச்சும்மா, அதனால இத மறுக்காம ஏத்துக்கங்க..”

“இந்தக் கெழவிக்கெதுக்கு பணமும், பட்டுச்சேலயும் பாண்டிய்யய்யா தயவுல ஒருகொறயும் இல்ல… வயித்துக்கு சோறு, உடுத்துறதுக்கு மஞ்சச் சேல, கைக்கடங்குன மவெ,  கண்ணெறஞ்ச மருமவ,  எனக்கெதுக்குப்பா இவ்வளவு”

“பரவால்லம்மா எங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியத்த கொடுத்திருக்கீங்க.. எட்டு வருசமா கொழந்தயில்லாம மருகி நின்னப்ப, ஒனக்கு கொழந்தயில்லன்னு ஆரு சொன்னா… ஓ வம்சம் தொலங்குற மாதிரி உங்க விருப்பத்துக்கேத்த மாதிரி புள்ள பொறக்குமுன்னு.. அருளு வந்து சொன்னீக… வார்த்த மாத்தமில்லா அப்படியே நடந்துச்சி… இதுவே கொறவா செய்ற மாதிரிதேன்னு… எங்களுக்கு வருத்தமாருக்கு… அதனால குத்தம் கொற ஏதுமிருந்தாலும் அம்மா மறுக்காம வாங்கிக்கங்க…”

குழந்தை வரம் வேண்டுவோர் அரச மரம், வேப்ப மரத்தை ஏன் சுற்ற வேண்டும் தெரியுமா? | Child Birth And Parikaram Temple - Tamil BoldSky

“சரிப்பா ஒங்க சந்தோசத்துக்காக ஏத்துக்கிறேன்..” தன் மருமகள் கவிதா பக்கம் திரும்பி, ” தாயி… அவுககிட்ட அந்த தட்ட வாங்கிக்கம்மா..” மிகவும் பெருமிதத்தோடு வாங்கிக் கொண்டாள் கவிதா. அவர்கள் கொடுத்துச் சென்றபின், மிகுந்த மகிழ்ச்சியுடன் “அத்த எனக்கு என்ன கொழந்த பொறக்கும்னு சொல்லுங்க” என்று கேட்டாள்.

கண்முடி சிறிது நேரம் அமைதியாக முணுமுணுத்தவாறே இருந்தவர்  “ஒனக்கு சீக்கிரமே புள்ள.. சொகப் பெரசவமா பொறக்கும்… பாண்டியய்யா பேரு துலங்குற மாதிரி ஒரு பேரு வய்யி ஒரு குறையும் இருக்காது”

மனது குளிர்ந்து போனது கவிதாவுக்கு… அந்த மாசமே நின்னதுதான் இந்த அழகுக்குட்டி செல்லம் சிவன்யா… சட்டென சிந்தனையிலிருந்து விடுபட்டு தன் பிள்ளையை பார்த்தாள். பாலருந்தி விட்டு எப்போதோ தூங்கிப் போயிருந்தது குழந்தை. சிறிய உதட்டினில் ஒட்டியிருந்த பால் துளியினை விரலால் துடைத்து விட்டு தொட்டிலில் போட்டாள். பாண்டியய்யாவின் தயவில் மீண்டும் குழந்தை வரம் கிடைத்திருப்பதை அத்தையிடம் சொல்வதற்காகக் காத்திருந்தாள் கவிதா. 

காலை பதினோரு மணிவாக்கில் சிவா வீட்டிற்கு வரவும், கோவிலில் கூட்டமில்லாததால் அழகுதாயம்மாள் வருவதற்கும் சரியாக இருந்தது.மையல் முடித்த கையோடு அத்தையைப் பார்த்தவுடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஓடோடி வந்தாள் கவிதா.

“ஏம்மா இவ்ளவ்வு வேகமா ஓடியார விழுந்திரப் போற” என்றாள் அழகுதாயம்மாள்.

“என்னாடி அவசரம்…  அப்டி ஓ அத்தய்க்கி ஸ்பெசலா… என்னா வச்சிருக்கிற..?” சிவாவும் கேட்டான்.

“அதுவா அத மொதல ஏ.. அத்தய்ட்டா தான் சொல்வேன்” என்றவள் அத்தை பக்கம் திரும்பி,

“அத்த ஒங்களுக்கு ஒரு சந்தோசமான விசயம்… நான் முழுகாம இருக்கேன். இன்னயோட பதினஞ்சு நாளாய்ச்சு… காலைல தான் மாமா வாங்கிக் குடுத்த ப்ரக்னஸி கார்டுல பார்த்தேன் பாசிட்டிவ்வுன்னு வந்துச்சு… அதான் மொத மொத ஒங்ககிட்டதான் சொல்லணும்னு… காலைலருந்து காத்திட்டுருந்தேன்த்த..” என்றாள் கவிதா. அவள் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது. 

“அப்படியா கேட்கவே சந்தோசமாய் இருக்கு” சிவாவும் அவள் மகிழ்ச்சியில் இணைந்தான்.

திடீரென உச்சஸ்தாயில் எழுந்தது அழகுதாயம்மாளின் குரல், “நீயெல்லாம் படிச்ச புள்ளதான..?. ஒனக்கெல்லாம் அறிவில்லயா..?  மொதபுள்ள பொறந்து முழுசா ஒரு வருசம் ஆகல, அதுக்குள்ள புள்ளய சுமந்துட்டுருக்கியே… அந்த புள்ள இனி எப்டி பாலக் குடிய்க்கும்… கட்டுப்பாலாயிருமே.. அதக் குடிச்சா வகுறு மந்தமாயி.. அது என்னத்துக்காகும்… சவலவாஞ்சிரும்… இப்புடி புத்திய கடங்கொடுத்துட்டு அறிவு கெட்டத்தனமா இருக்காம இதை ஒடனடியா கலச்சிரு…” என்று கடுமையாகக் கூறிவிட்டு, தன் மகன் பக்கம் திரும்பினார் அழகுத்தாயம்மாள்.

“அவளுக்குதேன் அறிவில்ல ஒனக்குமா… சூதானமா இருக்க வேணாமா..? நாளய்க்கே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயி எதாவது மருந்து மாத்திர வாங்கி கலய்க்கிறதுக்கு ஏற்பாடு பண்ணு..  வந்துட்டயான்... ரெம்ப சந்தோசமுன்னு... மடப்பய மவெ..!” கடும் கோபத்தில் முகம் சிவந்து அழகுதாயம்மாளை பார்க்கவே பயமாக இருந்தது. சிவாவின் தலை அவனையறியாமலேயே ஆகட்டும் என ஆடியது. 

அத்தையின் முகத்தில் இதுவரை பார்த்திராத உக்கிரத்தை திடீரென்ற கண்ட அதிர்ச்சியும், இந்தக் குழந்தையை பாண்டியய்யா கொடுக்கவில்லையா? என்ற கேள்வியும் ஒருசேர எழுந்ததும், கவிதாவின் கண்களில் கண்ணீர் திரண்டு, தேங்கி நின்றது. பாண்டிமுனீஸ்வரனின் பக்தையாகத் தோற்றமளித்த அத்தையின் பிம்பம் இப்போது மங்கலாகத் தெரிந்தது.

கவிதாவின் வயிற்றிலிருந்த இரண்டாவது வரம், தன் முடிவுக்காகக் காத்திருந்தது. 

28 Comments

 1. சிறுகதை அருமை தோழர். நமக்கு நடப்பது எல்லாம் வரத்தினால என்ற கேள்வி படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ஏழும். வாழ்த்துகள் தோழர்.

 2. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தங்களை கதை மிக சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்றீர்கள் இறுதியில் உங்களுடைய கதை வடிவம் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நிதானமாக செதுக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் தோழர்

 3. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தங்களது கதை மிக சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்றீர்கள் இறுதியில் உங்களுடைய கதை வடிவம் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நிதானமாக செதுக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் தோழர்

 4. கவிதாவின் வயிற்றுக்குள் மட்டுமல்ல இந்த கதையிலும் உயிர் இருக்கிறது. அது செழுமையாக வளரட்டும் வாழ்த்துகள்.

 5. எதார்த்தமான ஒரு கிராம கதை போல் ஆரம்பித்து….

  ” அப்படின்னா இந்தக் குழந்தையை பாண்டி ஐயா குடுக்கலையா..??”

  நச்சுனு இறக்கிட்டீங்க தோழர்….. வாழ்த்துக்கள்.

 6. கதையின் இறுதியில் எதிர்பாராத திருப்பத்தில் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும் சிறப்பான சிறுகதை ‌.

  நடை கவர்கிறது.

  1. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே போதிய இடைவெளி வேண்டும் என்று கிராமத்து சூழலில் நச்சென்று கூறியிருக்கிறீர்கள். தங்குதடையற்ற கதையின் ஓட்டம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.

  2. தெளிவான எளிமையான எழுத்து நடை. இனிமையான கதையில் திடீர் திருப்பம். குழந்தை பிறப்பு கடவுளின் அருள் என்று சொன்ன அதே அத்தை ஒரே நொடியில் மருந்து சாப்பிட்டு களை என்று கூறுவது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

   “எல்லாம் அவன் செயல்” என்று ஊருக்கே அருள்வாக்கு சொல்லும் ஒருவரின் தெய்வ நம்பிக்கை எந்த அளவு அவரின் வாழ்வில் முடிவெடுக்க உதவுகிறது என்ற கேள்வியுடன் கதையை முடித்தது சிறப்பு.

 7. சிறுகதை நன்றாக இருந்தது சார்.
  வரமே சாபமாவது நிறைய
  இடங்களின் நடைபெறுவது தான்
  அதை கதை வடிவமாக
  அளித்திருப்பது அருமை .

 8. அருமையான கதைநடை தோழர்… எதார்த்தமான நடையில்…கண்முன்விரிந்த காட்சிகளோடு… விறுவிறுப்பாய் நகர்ந்தது கதை…
  இறுதியில் திடுக்கிடும் முடிவோடு கதை நிறைவுற்றதும்..கூடவே ஒரு கேள்வியையும் கவிதாவின் மூலமாக வாசகர் மனதில் எழுப்பிவிட்டு முடிந்தது அருமை… வாழ்த்துகள் தோழர்.

 9. இயல்பான நடையில் ஆரம்பித்து கடைசியில் நச்சென்று முடித்துள்ளீர்கள்
  வாழ்த்துகள் தோழர்

 10. அருமையான கதை. நம்ப முடியாத திருப்பம். முடிவை இறுதி வரை ஊகிக்க முடியவில்லை.

 11. கதை நீரோட்டம் போல் அமைதியாக பயணிக்கிறது. இறுதியில் அழகுதாயம்மாளின் கோபம் நியாயமற்றதாக முடிச்சிருக்கிங்க. ஆனால், ஒரு வருடத்திற்குள் இன்னொரு குழந்தையிருந்தால், பால் குடிக்கும் குழந்தைக்கு தாய்பால் இல்லாமல் போகாதா? எனில் அழகு தாயம்மாளின் கோபம் சரி தானே?

 12. கதையின் கரு மிக அழுத்தமான ஆழ்ந்து சிந்திக்கும் திறனுடன் அமைக்கபட்டுள்ளது அருமை தோழர்.எங்குமே தேங்காத நல்ல எழுத்து நடை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது தோழர். நன்றி

 13. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே போதிய இடைவெளி வேண்டும் என்று கிராமத்து சூழலில் நச்சென்று கூறியிருக்கிறீர்கள். தங்குதடையற்ற கதையின் ஓட்டம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.

 14. அண்ணா நீங்க இப்பிடி கதை எழுதி நான் படிக்கிறது இதான் முதல் தடவை. எப்பேர்ப்பட்ட கருத்த இந்த சின்ன கதைக்குள் அடக்கி அற்புதமான வெளிப்பாடாக சொல்லி இருக்கீங்க அண்ணா. அருமை வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் கதைகள்.

 15. வாழ்த்துகள்💐நல்ல கதை தோழர்👌எழுத்து நடையும் அருமை..👍💐💐💐

 16. நல்லதொரு முயற்சி .. வாழ்த்துகள் தோழர்👏💐💐💐

 17. வணக்கம் தோழர்,

  உவமை தொகையையும் உள்ளடக்கி கதையின் அழகியலை மேலும் மெருகூட்டி இருப்பது மற்றுமொரு சிறப்பு.

  கதையின் ஆரம்ப கட்டத்தில் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை கதையின் முடிவில் தெளிவு படுத்தி விட்டீர்கள் அருமையான சிறுகதை தொடரட்டும்…வாழ்த்துக்கள்

 18. மிகமிக அற்புதமாக இருந்தது ணா.சிறுகதை, தங்களின் எழுத்து மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு…

 19. வரம்: கம்பம் மு.ஜெய்கணேஷ்

  கொழந்தன்றது ஆணும் பொண்ணும் சேந்துட்டா கெடய்க்கிறதில்ல… ஆண்டவெ மொகம் பாத்துக் குடுக்கிற வரம்… பயபக்தியா இருக்குறவங்களுக்கு அள்ளிக் குடுப்பயான்”…

  தண்ணீருக்குள் மீன் அழுத கண்ணீர் போன்றது தான் அவர் கண்ணீரும். சூப்பரான வர்ணனைகள்.

  கவிதா,சிவா,அழகுதாயம்மாள்,பாண்டிமுனி,மாரிமுத்து,பரமன்,டீக்கடை போன்ற கதாபாத்திரங்கள்.

  பொறுப்பில்லாத கணவனால் ஏற்பட்ட துன்பங்களை அழகுதாயம்மாள் பாண்டிமுனி சாமியிடம் சொல்லி ஆறுதல் தேடியதால் முனி சாமி மக்களின் குறைகளை தன்சார்பாக கேட்டு ஆறுதல் தர அழகுதாயம்மாளை அனுப்பியதுபோல.

  இரண்டாவது கரு உண்டாகியிருந்த கவிதா அதை கருவியின் உதவியுடன்
  தெரிந்து கொண்டதும் அடைந்த மகிழ்ச்சி அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அருமையான கதையோட்டம்,பரபரப்பாக செல்கிறது.கவிதா வயிற்றிலிருந்த இரண்டாவது வரம் தன் முடிவுக்காக காத்திருந்தது. முடிவு மனதை பிசைகிறது.
  எழுத்தாளர் உமர் சாரின் நண்பர் என்பதை ஆசிரியர் உணர்த்திவிட்டார்.

  பாராட்டுக்கள் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

  ப.இசக்கிராஜன்,சென்னை.
  9003052700.

 20. கதையின் நடை சிறப்பு…

  விசிறியின் கையில்…
  விசை !?
  எழுத்தாணி..

  வாழ்த்துக்கள் நண்பா..
  தொடரட்டும் எழுத்தாணி..

 21. கதையும் விறுவிறுப்பான நடையும் அருமை அண்ணா…ஊருக்கு தான் வரம் நமக்கென்னவோ சாபம் தான்..மனிதர்களின் முகங்களின் சாயல்களை வெளிச்சம் போட்டு காட்டுற மாதிரி இருக்கு கதை…

 22. வட்டார மொழியில் இயல்பான ஒரு கிராமத்துக் கதை. பாத்திரப் படைப்பு மிக அருமை. வாழ்த்துகள் தோழர்.

 23. ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்பார்ப்பை தூண்டுகிற கதையம்சம்!அருமை நண்பா!

 24. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்லுவாங்க சார். அதுனால பெரியவங்க முன்ன ஒன்னு பின்ன ஒன்னுன்னு பேசுரது மேல கேள்வியெல்லாம் எழுப்பக்கூடாது. தெய்வக்குத்தம் ஆய்டும்.

 25. இயல்பான எழுத்து நடை தோழர், பக்திக்கும் புத்திக்கும் இடையிலான முடிவு கதையின் வரம்.

 26. கதையின் ஓட்டம் எழுத்து நடை, கிராமத்து வழக்கு எல்லாம் மிக அருமை. கதையின் முடிவு சிறப்பு.

Leave a Response