Story

சிறுகதை: அவரவர் மனசு – வசந்ததீபன்

” ஏங்க… சீக்கிரம்…ஓடி வாங்க… ” என்ற என் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு… கவிதை எழுதிக் கொண்டிருந்த பேனாவையும் ,  பேப்பரையும் அப்படியே போட்டு விட்டு ஓடினேன்.
சாம்பல் அப்பிய கையுடன் அருகிலிருந்த தென்னை மரத்தைச் சுட்டிக் காட்டியபடி…” நம்ம குல்பிய.. அந்த சனியன் தூக்கிட்டுப் போயிருச்சுங்க… ” என்றாள்.
எனக்கு விசுக்கென்றது. மேலே பார்த்தேன். காக்கா ஒன்று நாங்கள் வளர்த்த கலர் கோழிக்குஞ்சை..அதாவது குல்பிய.. தென்னை மட்டை மேல்..இரணியன் உடலை மடிமீது கிடத்தியிருந்த நரசிம்மன் போல வைத்தபடி உட்கார்ந்திருந்தது.
காகம் தான் சாப்பிடுகிறது. ஒரு ...
எனக்கு ஆங்காரம் வந்து கற்களைப் பொறுக்கி அதை நோக்கி எறிய ஆரம்பித்தேன். அந்த காக்கை அங்குமிங்கும் மரங்களில் மாறி மாறி அமர்ந்தது.
என் மனைவி அதை வைதபடி கண்ணீர் வழிய என் பின்னாலேயே வந்தாள்.
காக்கா அருகிலிருந்த தேங்காய் குடவுன் தகரத்திற்குப் போய் அமர்ந்தது. நான் கல் ஒன்றை எறி விட்டதும்..சர்ரென்று பறந்து மேற்கு மூலையில் இருந்த முருங்கை மரத்திற்கு பறந்தது. கோழிக்குஞ்சு கீச்..கீச்சென்று கேவிக்கொண்டே அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் சில காக்கைகள் இரையைத் தட்டிப் பறிக்கும் போட்டியில்.. ஆக்ரோசமாக அந்த காக்கையுடன் மோதத் தொடங்கிய போதில் எதிர்பாராது புலியின் பிடியில் தப்பிய ஆட்டுக்குட்டியாய் எங்கள் குல்பி கீழே விழுந்தது.
பக்கத்து வீட்டுப் பையன் பாண்டியன் ஓடிப் போய் அதை அள்ளிக் கொண்டு வந்தான்.
நான் அவனிடமிருந்து அதை வாங்கினேன். அது அசைவில்லாமல் இருந்தது. தூக்கி நிறுத்தினேன். அதன் தலை தொங்கிவிட்டது.
என் மனைவி துக்கம் தாளாமல் இதயம் வெடித்தது போல் கோவென்று பெருங்குரலில் அழுதாள். எனக்கு துக்கத்தின் சுமை நீரில் அழுத்தி திணற வைப்பது போலிருந்தது.
எங்களது களேபரத்தில் பக்கத்திலிருந்தவர்கள் என்னமோ..ஏதோ வென்று பதட்டமாய் குழுமிவிட்டார்கள். விஷயம் அறிந்ததும்… கேலியும் , கிண்டலுமாய் சிரித்தார்கள். எங்கள் நிலை தேவதத்தன் முன்பாக சித்தார்த்தன் நிலை.
அதற்கு உயிர் இருக்கிறதா என்பதை அறிய எவ்வளவோ முயற்சித்தோம்… அதன் வாயில் நீர் விட்டு..கால்களை சூடு பறக்கத் தேய்த்து..வெயிலில் வைத்து…ம்..ம்ஹூம்… ஒரு பிரயோசனமும் இல்லை.
அதை கருவேப்பிலைச் செடியின் அருகில் புதைத்து பத்திக் குச்சி பொருத்தி வைத்தோம்.
அன்று முழுவதும் இந்த மரணத்தின் நிழல் படிந்து.. வேதனை ஊற.. வலித்துக் கொண்டிருந்தது.
மாலையில் பள்ளிக்குச் சென்ற பெண்ணும் , பையனும் வந்தார்கள். அவர்களும் அழுதார்கள் குல்பிக்காக.
எப்போது தூங்கினோமென்று தெரியவில்லை.. திடீரென்று கசமுசாவென்று ஆட்களின் சத்தம் இரைச்சலாகப் பெருகியது.
வெளியே வந்தோம். பக்கத்து வீட்டில் பலர் கூடி எதைப்பற்றியோ தீவிரமாக பேசியபடி இருந்தார்கள்.
என் மனைவியிடம் என்னவென்றேன். அவள் எதுவும் மறு மொழி கூறாமல் அந்த வீட்டிற்குள் போனாள்.
வானம் அடர் இருட்டாயிருந்தது. சில்லென்று காற்று விசிறியது. செடிகளின் பச்சை வாசனை மூக்கில் நமநமத்தது.
நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வராததால் குழந்தைகள் இருவரும் அங்கே பார்ப்பதற்காகப் போனார்கள்.
எங்கோ வெறித்தபடி வாசற்படியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ… தெரியவில்லை ? தென்னை மட்டை ஒன்று விழுந்த  ” டமார் ” சத்தம் கேட்டு திடுக்கிட்டு இயல்பானேன்.
என் மனைவியும் , குழந்தைகளும் திரும்பி வந்தார்கள். பக்கத்து வீட்டு அமளிக்கு காரணம்..அங்கு பேறுகாலம் நடந்து கொண்டிருந்தது தானாம்…
            ” என்னாவாச்சு..”_ நான்
              ” புள்ள பொறந்துருச்சு ” _ என் மனைவி
              ” என்ன புள்ள ” _ நான்
              “பொம்பள புள்ள ” _ என் மனைவி
                “நல்லாருக்காங்களா ” _ நான்
                  ” ம்ம்…” அலுப்பாய் சொன்னாள் என் மனைவி.
எனக்கு கண்களைச் சுழற்றி ஊறி வந்தது தூக்கம். காற்று ஓய்ந்த மரம் மாதிரி ஆராவாரமெல்லாம் வெளியில் அடங்கிப் போனது.
வீட்டில் பிரசவம் பார்ப்பது ஏன் ...
மறுநாள் காலை கடைக்கு அரசில சாமான்கள் வாங்கப் போன என் மனைவி அரக்க பரக்க ஓடிவந்தாள்.
எனக்கு பகீரென்றது.
வீட்டுக்குள் நுழைந்தவளிடம் .. ” ஏன் ?.. இப்படி வர்ற…என்னாச்சு…? “
” கொஞ்சம் வீட்டுக்குள்ள வாங்க சொல்றேன்…”
அவள் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.
எனக்கு உடலெல்லாம் வேர்த்து பதட்டமாய் திகைப்பாய் நின்றிருந்தேன். என் உடலெல்லாம் கடிகாரங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
குடத்தில் தண்ணீரை மொண்டு குடித்துவிட்டு  , ” அந்தக் குழந்தையை கொன்னுட்டாங்களாம்.. ” என்றாள் என் மனைவி.
“என்னாது…எந்தக் குழந்தைய…”
“அதேன் ராத்திரி மகமாயி மகளுக்குப் பொறந்துச்சுல்ல..அத தான்… “
அடப் பாவிகளா.. நல்லாத்தான.. பொறந்துச்சு…”
” விறுக்…விறுக்குன்னு முழிச்சிக்கிட்டு ரெம்ப அழகா இருந்துச்சுப்பா…” என் மகள் எங்கள் பேச்சினூடே வந்து சேர்ந்தாள்.
” நம்ம கூட வாங்கி வளர்த்திருக்கலாம்… ப்பா…” என் மகன் ஏக்கத்தோடு சொன்னான்.
” அந்தக் குடும்பமே.. புள்ளயக் கொல்றதுல்ல.. ஒத்துமையா இருந்துருக்காங்க… கொலகாரப் பாவிக…” என் மனைவிக்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை.
அந்தக் குழந்தையைப் பெற்ற பெண்ணை நினைத்துப் பார்த்தேன். காட்சிகள் கிளி எடுத்துப் போடும் சீட்டாய் ஒன்றின் மீது ஒன்றாய் மனதுள் வந்து விழுந்து கொண்டிருந்ததன.
அந்தப் பெண்ணோட அப்பாவுக்கு கணக்குக்கு ஐந்து பொண்டாட்டிக. ஆனா கணக்கில்லாம…எத்தனையோ பேர். யாரும் முறைப்படி அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்து கல்யாணம் கட்டியவர்களல்ல.
எனக்குள் அருவருப்பு கலந்த எரிச்சல் ஊறியது.
அவர் பல வேலைகள் பார்த்தவர். முறுக்கு வியாபாரம் , வைக்கோல் வியாபாரம் , ஏலக்காய் வியாபாரம் , இலவம் பஞ்சு வியாபாரம் இப்படி பல…
அங்கங்க போற இடங்கள்ல்ல இந்தப் பெண்களக் கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தினாரு.
பின் அமைப்பியல்ன்னு… ஏதோ சொல்றாங்களே..ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒழுங்கு , கட்டுப்பாடு , நீதி , நியாயம் , தர்மம் இன்னும் லொட்டு லொசுக்குகளை உடைத்து உருக்குலைப்பது என்று.. அந்த விஷயங்களில் இவர் ஒரு செயற்பாட்டாளர்.
இவருடைய பாலியல் வெறித்தனமும் , ஆணாதிக்க முறைகேடுகளும் முதல் மனைவியை தூக்குப் போட்டு சாக வைத்தது…இரண்டு பிள்ளைகளைத் தவிக்க விட்டு விட்டு.
அந்த ரெண்டு புள்ளைகள்ல்ல பையனுக்கு காக்கா வலிப்பு , பொண்ணோ மனம் போனபடி திரிந்து.. எப்படியோ…மலையாளிய காதல் பண்ணிக் கல்யாணம் கட்டிப் போய்.. இதய நோயுள்ள ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு..கான்சர் வந்து செத்துப் போனாள். நல்லவேளை அந்தக் குழந்தை நல்லபடியாக அவளுடைய புருஷன் வீட்டிலே வளர்ந்து வருகிறது.
ரெண்டாவது மனைவி அறுத்துக் கட்டிட்டும் , மூன்றாவதவளோ.. யாரையோ கூட்டிட்டுப் போய் சேர்ந்தார்கள். அவர்களுக்கு புள்ளைகள் எதுவுமில்லை.
இப்ப குழந்த பெத்து கொன்னவ.. மகமாயின்னு..நாலாவது பொண்டாட்டிக்குப் பொறந்த.. ஒரே பொண்ணு. மகமாயி தன்னோட ஒரே மகள.. அவளோட அப்பங்கிட்ட விட்டுட்டு.. இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா.
அஞ்சாவதா வந்தவளுக்கு ரெண்டு புள்ளைக.. பொம்பளப் புள்ளைக… அவ மட்டும் தன்னோட இரண்டு புள்ளைகளோட  இப்பவும் அவரோடு இருக்குறா.
அவ கதையக் கேட்டமுன்னா.. கீழ்த் தெருவுல ஒரு அப்பாவிக்குக் கட்டி வச்சு.. புருசங்கிட்ட இருந்த சொத்து பத்தெல்லாம் புடுங்கிக்கிட்டு.. பாவம் அவன கிறுக்குப் பயலாத் திரிய விட்டு..கடைசியில் அவன் செத்தும் போய்ட்டான்.. இவ..குஷ்டத்தயும் சம்பாரிச்சுக்கிட்டு இங்க வந்து சேர்ந்துட்டா.
கிழக்கில் சூரியன் மெல்ல மெல்ல தலையை நீட்டிக் கொண்டிருந்தது. மனசும் , கண்களும் காந்தின. என்ன செய்வது..? அன்றாடம் காய்ச்சிக்கு ..தினசரி வாழ்க்கை கால்களைக் கவ்வி இழுக்கையில் கண்ணீர் மல்க கரைந்துருகி உறைய ஏலுமா ? பரபரப்புடன் வேலைக்குப் புறப்பட ஆயத்தமானேன். யாவும் மறந்து போனது.
சாயந்திரம் அலுத்து சலித்து வீட்டுக்குத் திரும்புகையில் பக்கத்து வீடு ஒரே கும்மாளமும் , கொண்டாட்டமாய் இருந்தது.
விசாரிக்கையில்… செத்த குழந்தைக்காக முறமக்காரங்க கறிச் சோறாக்கிப் போடுறாங்களாம் எனத் தெரிய வந்தது.
கோழிக்கறி மூலம் கரோனா வைரஸ் ...
நான் வந்ததை அறிந்து ஆளாளுக்கு சாப்பிடக் கூப்பிட்டார்கள். நான் மட்டும் போனேன். பக்கத்து வீட்டுக்காரங்க கோவிச்சுக்குவாங்கண்ணு…
வரிசை வரிசையாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எனக்கும் இலையைப் போட்டு சோறு பரிமாறினார்கள். குழம்பு ஊற்றுகையில் பிஞ்சு விரல்கள்..காது..மூக்கு..என சிறு குழந்தையின் உறுப்புகளாய் இலையில் வந்து விழுந்தன. குமட்டல் தாங்காமல் சோற்றில் கை வைக்காமலே இலையை மூடி வைத்து விட்டு வெளியேறினேன்.
கோழிக்கறின்னு சொன்னாங்களே… எப்படி.. மாறிப்போச்சு….??
வசந்ததீபன்

Leave a Response