Story

சிறுகதை: அக்கினிச்சுடர்..! – தேனிசீருடையான்.

Spread the love

பள்ளிமுடிந்து காம்பவுண்டுக்குள் நுழைந்தபோது ஜனக்கூட்டம்
நிறைந்துகிடந்தது. எட்டாப்புப் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டதை
அம்மாவிடம் சொல்லி மகிழவேண்டும் என்று நினைத்து வந்த எனக்கு அந்த உணர்வை
வெளிக்காட்டமுடியாமல் போனதுபற்றி வருத்தமாய் இருந்தது. அம்மா
பவுனாச்சியின் வீட்டுக்குள் சென்று நின்றிருந்தார். பையை வைத்துவிட்டு
நானும் பவுனாச்சி வீட்டுக்குள் முண்டிமோதி நுழைந்தேன். காலையில்
பள்ளிக்கூடம் போகும்போது குறுகி ஒருச்சாண் உயரத்தில் படுத்துக்கிடந்த
பவுனாச்சி இப்போது கால் நீட்டிக்கிடந்தார். கைகளும் பக்கவாட்டில்
தளர்ந்துகிடந்தன. கட்டிலில் இருந்து கீழே இறக்கப்பட்டு தென்வடக்காய்ப்
படுக்கவைக்கப்பட்டிருந்தார். கடந்தமூன்றுமாதமாய் எப்போதும் அனத்திக்
கொண்டே படுத்திருந்த பவுனாச்சியின் வாயிலிருந்து இப்போது எந்தச்சத்தமும்
வரவில்லை. தம்பி அம்மாவின் இடுப்பிலிருந்து இறங்கி பவுனாச்சியைத்
தொட்டுப்பார்த்தான். அவரின் நெற்றியில் கைவைத்துத் தடவிவிட்டான்.
“வலிக்கா ஆச்சி?” என்றான் தன் மழலைக்குரலில். வலிக்கிறதா என்று
அனுதாபத்தோடு கேட்டான். யாருக்குத் தந்தாலும் தராவிட்டாலும் பவுனாச்சித்
தம்பிக்குக் காசுசொடுத்தார். அப்பாவிடம் பணம் தந்துவிட்டு நெய்மிட்டாய்
வாங்கிவரச் சொல்லித் தம்பிக்குத் தந்தார். தம்பியென்றால்; அத்துணை பிரியம்.
எங்கள் குடும்பத்திலேயே அவன்தான் ஒரே ஆண்வாரிசு. பெரியம்மாவுக்கு
இரண்டுபெபண்குழந்தைகள். எங்கள்வீட்டில் நான்பிறந்து எட்டுவருடம் கழித்து
தம்பி பிறந்தான். என் அப்பாவும் பெரியப்பாவும்
அப்பாயிக்குப்பிறந்தவர்கள். என் பாட்டையாவின் தங்கை பவுனாச்சி. தம்பியின்
மழலை மொழியில் தன் நோயை மறந்திருந்தார். “என்னக்யோ செத்திருக்கவேண்டியவ:
பேரம் பேச்சுத்தான் நிக்யவச்சிருக்கு” என்பார்.
உள்ளே சென்று தம்பியை விலக்கிவிட்டு அம்மா அருகில் நின்றேன்.
தொண்டைக்குழி மட்டும் மேலே ஏறி இறங்கியபடி இருந்தது. பெரியம்மாவும்
அப்பாயியும் கண்ணீர் சிந்தினர். அப்பாயி பவுனாச்சியின் நெஞ்சுக்கூட்டைத்
தடவிவிட்டார். பக்கத்துவீட்டுப் பார்வதியாச்சி, “எல்லாரும் வெலகுங்க”
என்றபடி உள்ளே வந்தார். பவுனாச்சியின் குதிங்கால் பக்கத்திலிருக்கும்
நரம்புமண்டலத்தைத் தொட்டும் அமுக்கியும்  பார்த்துவிட்டு
“ஒரு மணி நேரந்தேன்” என்றார். “நல்லெண்ணைச் சீசாவப் பக்கத்துல
எடுத்துவச்சுக்கங்க.” தலைமேட்டில் இருந்த பச்சைநிற சீசாவைக்காட்டினார்
அப்பாயி. மீண்டும் பார்வதியாச்சி “காத்தோட்டமா இருக்கட்டும்: எல்லாரும்
வெலகுங்கம்மா” என்றார்.

எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. வெளியில்வந்து வாசப்படியில் அமர்ந்து
கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். காலையில் பள்ளிக்கூடம்
போகும்போதுகூட “போய்ட்டு வாரேன் ஆச்சி” என்றேன். எப்போதும் காசெடுத்துக்
கையில் திணித்துவிடுபவர் இன்று அதைச்செய்யவில்லை. “ம்!” என்றுமட்டும்
சொன்னார். கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் இருந்த்து அவர் குரல்.
‘பாவம் ஆச்சி’ என நினைத்த படி பள்ளிக்கூடம் போய்விட்டேன். “ஒரேநாள்ல
சுருட்டிருச்சே” என்று அம்மா பெரியம்மாவிடம் சொன்னதைக் கேட்டேன்.
“சுருட்டிருச்சு” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. பவுனாச்சியின்
தளர்ச்சிக்கும் இந்ந்தவார்த்தைக்கும் தொடர்பிருப்பதாக எனக்குத்தோன்றியது.
“மோனிக்கா” என்றபடி ஓடிவந்தான் தம்பி. என்பெயர் மோனிகா. மோனியக்கா
என்பதைத்தான் ‘மோனிக்கா’ என்றான் தம்பி. அவனைப் பிடித்து மடியில் வைத்துக்கொண்டு “என்னடா?” என்றேன்.
“பவுனாச்சி சாமியாகப் போறாங்க” என்றான் தன் மழலைமொழியில்.
“யாருடா சொன்னது?”
“அம்மா.”
எனக்கு அழுகை வந்தது. கைக்குட்டையைக் கண்ணில் வைத்துமூடி அழ
ஆரம்பித்தேன். தம்பிக் கையைப்பிடித்து இழுத்துக் கண்ணைத்
துடைத்து விட்டான். தம்பியைத்தூக்கிக் கொண்டு மாடிக்குச் சென்றேன்..
தெற்கிலிருந்து இதமானகாற்று வீசியது. முகமும் உடம்பும்
குளிர்ச்சியடைந்தன. பால்கனியில் நின்று வீதியை எட்டிப்பார்த்தபோது
ஏழாப்புப்படிக்கும் உமா அப்போதுதான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள்.
“உமா!” என்று அழைத்தேன். நின்று மேல்நோக்கிப்பார்த்தாள். “மொதல்லயே
வந்துட்டியா?” என்றாள் அவள்.
“எட்டாப்புக்கும் அஞ்சாப்புக்கும் எக்ஸாம் கேன்சல் ஆயிருச்சு: தெரியுமில்ல.”
“எங்க மேம் சொன்னாங்க: ஒனக்கு ஜாலிதான்.” சொல்லியபடி அவள்
தன்வீட்டைநோக்கி நடந்தாள். தம்பி அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடினான்.
பூந்தொட்டியில் வளரந்துகொண்டிருந்த கருகப்பிள்ளை இலையொன்றைப்
பறித்துவந்து என் நெற்றிய்யில் பொட்டுமாதிரி அப்பிவிட்டான். “போடா நாயே”
என்றபடி இலையை எடுத்துக் கீழேபோட்டேன்.
“அந்தா நாயி” என்று வீதியைக்காட்டினான் தம்பி. குட்டிநாயொன்று தன்
தாயிடம் பால்குடித்தது.

death | Living in the Embrace of Arunachala | Page 3

கீழே இறங்கிவந்து பவுனாச்சிவீட்டை எட்டிப்பார்த்தேன். “எடுங்கம்மா,
எடுங்கம்மா”. என்று சின்ன அப்பாயி கத்தினார். என் சின்னப் பாட்டையாவின்
மனைவி சின்ன அப்பாயி பெரிய அப்பாயி பச்சைநிற சீசாவைத் திறந்து உள்ளிருந்த
நல்லெண்ணையை பவுனாச்சியின் வாய்க்குள் ஊற்றினார். ஒருமடக்குக் காப்பித்
தண்ணியைக்கூட விழுங்கமுடியாமல் துப்பிவிடும் பவுனாச்சி 100 மில்லி எண்ணையை
முழுசாய்வாங்கிக் கொண்டார். குய்யோமுறையோ என எல்லாரும் அழ
ஆரம்பித்தார்கள். “பவுனூ…..” என்று கத்தியபடி பாட்டையா தரையில்ல்
விழுந்து அழுதார். தனது தள்ளாதவயசிலும் புரண்டு அழமுடிகிறதே என்று
ஆச்சர்யமாய் இருந்தது.
“எதுக்கும்மா, ஆச்சிவாயில எண்ண ஊத்துனாங்க?” என்றேன்.
“அவுக சொர்க்கம்போய்ட்டாங்கள்ல: அங்கபோயி தாளிச்சுச் சாப்பிட.”
அம்மாசொன்னது எனக்குப் புரியவில்லை. பிறகு பெரியம்மாவிடம் கேட்டபோது
சொன்னார். “எறந்தவுகளுக்கு எண்ண ஊத்துனா ஒடம்பு ஊதாம இருக்கும்.”
‘செத்துட்டாங்களா?” என்றேன். குமுறிக்கொண்டுவந்த அழுகையை என்னால் அடக்கமுடியவில்லை.
சத்தங்கேட்டு பார்வதியாச்சி ஓடிவந்து “அடங்கிருச்சா?” என்று கேட்டது.
பாட்டையாவின் அழுகையை அமத்திவிட்டு “பந்தலுக்குச் சொல்லிட்டுத் தொளசிமால
வாங்கியாங்க.” என்றார். கன்னிகழியாத பெண்கள் இறந்தால் துளசிமாலை
அணிவித்தால்தான் பகவான் ஏற்றுக்கெர்ளவார் என்று பார்வதியாச்சி காரணம்
சொன்னார். துளசிமாலை பூமாலையைவிட நாலைந்துமடங்கு விலையதிகம்.
“தொளசிமால ஒடனே கெடக்யுமா?” என்றார் சின்ன அப்பாயி.”
“செய்யச்சொல்லி அட்வான்ஸ் குடுத்துட்டுவந்தா ஒருமணி நேரங்கழிச்சு வாங்கிக்கிரலாம்.”
ரஞ்சித் சித்தப்பாவும் குமரேசன் மாமாவும் வந்து சேர்ந்தார்கள். ரஞ்சித்
சித்தப்பா சின்ன அப்பாயி மகன்: குமரேசன் மாமா திருப்பூரிலிருந்து எப்படி
வந்தார் என்று ஆச்சர்யமாய் இருந்தது.
தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு “எப்பமாமா வந்தீங்க?” என்று கேட்டேன்.
“வேறசோலியா வந்தேன். சீரியஸ்னு ஒங்கப்பா சொன்னான்: அப்படியே
வந்துட்டேன்.” தம்பியின் கன்னத்தைப் பிடித்து லேசாகக் கிள்ளினார்.
அவர்கையைத் தட்டிவிட்டு என் தோள்பட்டையில் பதுங்கிக்கொண்டான் தம்பி.
“என் அப்பா பந்தலுக்கும் பெரியப்பா துளசிமாலைக்கும்
அட்வான்ஸ் கொடுக்கப்போக, ரஞ்சித் சித்தப்பாவும் குமரேசன் மாமாவும்
வால்போஸ்ட் அடிக்கப்போனார்கள். எல்லாவற்றுக்கும் பாட்டையாதான்
காசுதந்துவிட்டார். வீட்டுக்குவெளியில் அகலபெஞ்சுபோட்டு பவுனாச்சியைப் படுக்கவைத்துக்
குளிப்பாட்டினார்கள். மூன்று பெண்கள் நூல் சேலையால் உடம்பைச்சுற்றி
மறைப்பாய் பிடித்துக்கொள்ள இரண்டு அப்பாயிமார்களும் தண்ணீர்
ஊற்றிக் கழுவினார்கள். மறைவிடங்களையெல்லாம் துண்டுத்துணியால்
துடைத்துவிட்டு சோப்புபோடாமல் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள். பெரிய
அப்பாயி பீரோவிலிருந்து புதுச்சேலை ஒன்றை எடுத்துக்கொடுக்க சின்ன அப்பாயி
அழகாகக் கட்டிவிட்டார். தேங்காண்ணை தேய்க்காமல் சீவிவிட்டு,
மல்லிகைச்சரங்கொண்டு ஜடைபோட்டார்கள். “ஆத்தத்தோ! புதுப்பொண்ணுகனக்கா
சோடிச்சுட்டீகளே” என்றார் பார்வதி ஆச்சி. “கல்யாணமாகாத பொம்பளைக்கி
இத்தனபேரு சவரட்டண பண்றீகளே: குடுத்துவச்ச மகாராசி.”
மூன்று மணிநேரம் கழித்துத் துளசிமாலையை பெரியப்பா வாங்கிவந்தார்.
பூமாலையைவிட கனமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. பவுனாச்சியின்
கழுத்தில் துளசிமாலையைப் போட்டபோது லட்சுமி படத்திலிருந்த சாமிபோல
காட்சியளித்தார். பார்வதி ஆச்சிதான் தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி,
பவுனாச்சியின் நெற்றியில் ஐந்துரூபா நாணயத்தைப் பொட்டுப்போல
வைத்துவிட்டார். அந்தநேரம் உமா ஓடிவந்து என் தோளைச் சீண்டினாள்.
“எறந்துட்டாங்களா?” தலையை மட்டும மேலும் கீழும் ஆட்டினேன்.
“அன்னை ஆம்புல்லன்ஸ்” கம்பனியிலிருந்து ஐஸ்பெட்டி வந்தது. கொண்டுவந்தவர்
உடம்பைப் பெட்டிக்குள் படுக்கவைத்து, வயரை சுவிச்சில் மாட்டிவிட்டார்.
‘விர்ர்ர்’ என்ற சத்தத்தோடு குளிர்ச்சி ஏறத் தொடங்கியது.
பவுனாச்சி கல்யாணம் ஆகாமலே கடைசிவரை வைராக்கியத்தோடு காலம் தள்ளினார்.
ஆசிரியர் வேலைபார்க்கும்போது அவர் இன்னோர் ஆசிரியரைக் காதலித்தாராம்:
பவுனாச்சியின் அப்பாவும் அம்மாவும் சம்மதிக்காததால் காதலன் நினைவுகளோடயே
வாழ்ந்துவிட்டார் என்று பாட்டையா ஒரு முறை சொல்லி வருத்தப்பட்டார். அவர்
சம்பாதித்ததையெல்லாம் தன் சகோதரர்களின் பிள்ளைகளுக்குச்  சலவழித்ததுபோக
சில லட்சம் சேமித்துவைத்திருந்தார்.

death | Living in the Embrace of Arunachala | Page 3

பவுனாச்சி வங்கியில் சில லட்சம் ரூபா வைப்புத் தொகையாகப்போட்டு, வரும்
வட்டியை அதே வங்கியில் சேமிப்பாகச் செலுத்தினார். அறுபது மாதங்கள்
சேமிப்பு முதிர்ந்தபோது கணிசமான தொகை கிடைத்தது. அதையும்
வைப்புத்தொகையாக்கி வேறு வங்கியில் போட அதில் வந்த வட்டியையும்
சேமிப்பாக்கினார். சின்னத்தொகையைச் செலவழித்துவிட்டுப் பெருந்தொகையைப்
பெருக்கிக்கொண்டே இருந்தார். பணி ஓய்வின்போது கிடைத்த தொகையையும்
வங்கியில் போட்டுவைத்தார். என்னோடும் தம்பியோடும் விளையாடும் போது மட்டுமே
அவர் முகத்தில் புன்னகை பூத்தது. மற்ற நேரமெல்லாம் சோர்ந்தே காணப்பட்டார்.
ஒரு சில இரவுகளில் “சிவா, சிவா” என்று அரற்றிய படியும் அழுதபடியும்
இருந்தார். அப்பாயியிடம் இது குறித்து ஒருநாள் அம்மா கேட்டபோது, பவுனாச்சி
காதலித்தவர் பெயர் சிவக்குமார் என்றும் தன் விருப்பம் நிறைவேறாத
காலத்திலிருந்து இப்படியே அரற்றிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். பாவம்
பவுனாச்சி.
பவுனாச்சிக்கு வயிற்றுவலி வந்தபோது மருத்துவமனைக்கு வர மறுத்தார்.
நாளும்பொழுதும் வலி கூடிக்கொண்டே இருந்தது. பெரிய அப்பாயி வற்புறுத்தி
அழைத்துப்போனபோது, டாக்டர் ரத்தசோதனைசெய்துவிட்டு, “கேன்சர் மாதிரி
தெரியிது” என்றார். “சதையெடுத்து டெஸ்ட் பண்ணணும்: ஹியூமோசெக்கப்
செய்யணும்.” என்றார்.
பவுனாச்சி ஒரேயடியாய் மறுத்து விட்டார். “நிறைவடையாத வாழ்க்கை குறையுடைய
வாழ்க்கையே: எல்லாநாளும் குறையுடைய நாளே. என் வாழ்வும்
குறைபட்டுப்போகட்டும்” என்று ஒருநோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்திருந்ததை
பெரியம்மா எடுத்து அம்மாவிடம் காட்டினார். பாட்டையாவும் அதைப்பார்த்துக்
கண்ணீர் விட்டார். “அப்ப நானும் அப்பா அம்மாவ எதுத்துக்கேக்கல: தங்கச்சி
விரும்புனவனக் கட்டிக்கிடமுடியாமப் போச்சு.”
பல லட்சம் கைவசம் இருந்தும் நோய் நீக்கவிரும்பாமல் அவதிப்பட்டே செத்துப்போனார்.
தெருவில் இருந்தவர்களும் தெருவுக்கப்பால் இருந்த பவுனாச்சியின்
சிநேகிதர்களும் மாலைபோட்டு மரியாதை செய்து சென்றனர். மாலைகள் கோபுரமாய்க்
குவிந்தன. பகைவர்களும் அனுதாபப்பட்டு துக்கம் விசாரித்தனர்.
கல்யாணமாகாதவர் என்பதால் யார் கொள்ளிவைப்பது என்ற பிரச்சணை எழுத்த்து.
பெரியபாட்டையாவும் சின்னப்பாட்டையாவும் போட்டிபோட்டனர்.
கொள்ளிவைப்பவருக்கு அவர் சொத்தில் சிறுபங்கு தனியே கிடைக்கும்.
சங்கத்தலைவர்கள் கலந்தாலேசித்தனர். கல்யாணமாகவில்லை: பிள்ளையுமில்லை:
எப்படி இதை நிவர்த்திப்பது? தலைவர் பெரிய பாட்டையாவை அழைத்து, “அவங்க
உயிலேதும் எழுதிவச்சிருக்காங்களா?” என்றார்.
“தெரியல.”
“பீரோவப்பாருங்களேன்.”
இரண்டு பாட்டையாமார்களோடு சங்கத் தலைவர்களும் சேர்ந்து மே மாடிக்குப்போய்
அவரின் சொந்த பீரோவைத் திறந்தனர். பீரோவின் ரகசிய அறையில்
கட்டுக்கட்டாய்ப் பணம் இருந்தது. அடியில் ஒரு நோட்டுப்புத்தகம் இருந்ததை
எடுத்துப் பார்த்தனர். “இந்தப் பெட்டியில் இருக்கும் அனைத்துப் பணமும்
கொள்ளிவைப்பவர்க்குச் சொந்தம்.” பெரியபாட்டையாவும் சின்னப்பாட்டையாவும்
‘நான்’ ‘நான்’ என்று நினைத்ததை அவர்களின் முகம் பளிச்சிட்டுக்காட்டின.
தலைவர் அடுத்தபக்கத்தைத் திருப்பியபோது வங்கிக் கணக்குகளும் டெபாசிட்
செய்யப்பட்ட பெருந்தொகையும் எழுதப்பட்டிருந்தது. “முழுப்பணத்தையும் அனாதை
மற்றும் முதியோர் இல்லங்களுக்குத் தந்துவிடவேண்டும். என் சகோதரர்
இருவரும் அந்தக்காரியத்தை நிறைவேற்றவேண்டும்.” அதற்கு அடுத்தபக்கம்
சங்கத்தலைவருக்கு முக்கியமானதாகப்பட்டது. “நான் புற்றுநோயாளி என்பதால்
புதைக்காமல் எரியூட்டிவிடுங்கள்: மூத்தபேத்தி மோனிகா கொள்ளிவைக்கட்டும்.”
பந்தலுக்குவந்த சங்கத்தலைவர் உறவுப்பெரியவர்களை அழைத்துப் பவுனாச்சியின்
கடிதத்தை வாசித்துக்காட்டினார்.
மற்றவர்கள் மனமுவந்து வரவேற்ற வேளையில் சின்ன அப்பாயி” என்னாது” என்றபடி
கொதித்தெழுந்தார். சின்னப்பாட்டையாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு
பந்தலைவிட்டு வெளியேறினார். “நீங்கள்லாம் அவுககூட பொறக்கலைல்ல:
தனிக்கட்டையா இருக்குதேன்னு வருசாவருசம் துணிமணி எடுத்துத்தந்து
நல்லது பொல்லதப்பாத்து எம்புட்டுச் செஞ்சிருக்கோம்: ஒங்களுக்குப்
பைசாக்கூட இல்லைன்னு எழுதிவச்சிருச்சே.”
பெரியபாட்டையா அமைதியாய் அமர்ந்திருந்தார். வீதி முக்கில்போய்த்
திரும்பிப்பார்த்த சின்ன அப்பாயி “பக்கத்துலயே இருந்து வேணுங்குற அளவு
அடிச்சுக்கிட்டீக: நாங்க அவத்தக்கூதிகளா ஆயிட்டோம்: நல்லாருங்க.”
என்று கத்தினார். தன்னைப் பாரத்துத்தான் அப்படித் திட்டினார் என்பதை பெரிய
பாட்டையா புரிந்துகொண்டார்.
சங்கத்தலைவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள். குடிமகன் சங்கூதி சாஸ்திரம்
சய்வதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்த்தினான். பாட்டையாமார் இருவரும்தான்
பிறந்த இடத்துக்கோடி  பாடவேண்டும். இருவரையும் காணாததால் சங்கத்தலைவர்
பிறருடன் கலந்துபேசி எந்த சாஸ்திரமும் செய்யவேண்டாம் என்றார்.
“சின்னப்பிள்ளமாதிரிதான?”
பவுனாச்சியின் உடம்பு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது என்னையும்
ஏறிக்கொள்ளச்சொன்னார்கள். அம்மாவும் பெரியம்மாவும் பெரிய அப்பாயும்
மட்டுமே மயானத்துக்கு வந்திருந்தார்கள். பவுனாச்சியை சவ நாற்காலியில்
படுக்கவைத்து எரி கிடங்குக்குள் தள்ளியபோது எனக்கு அழுகை வந்தது. எரியும்
சந்தனக்குச்சியை என்கையில் தந்து கொள்ளிவைக்கச் சொன்னார்கள்.
பவுனாச்சியின் தலைமுகப்பிலிருந்த சின்ன துவாரத்தில் குச்சியை செருகியபின்
அப்படியே தூக்கிக்கொண்டு வெளியே வந்தார் அம்மா.
இரவெல்லாம் கனவு பொங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் பவுனாச்சியின் உடம்பு
எரிந்தபடி இருந்த்து. அதன் அனல் எங்கள் வீட்டையும் வீட்டடிவாரத்தையும்
தாக்கி அழித்தது. அக்னிச்சுடர் ஒன்று பீரோவைநோக்கி முன்னேறி பணக்கட்டு
இருந்த ரகசிய அறையைத் துழாவியது. அப்படியே நான் மயங்கித் தூங்கிப்போனேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தேனிசீருடையான்.

1 Comment

Leave a Response

Top Reviews

Video Widget

gallery