Book Review

நூல் அறிமுகம்: தமிழவனின் “ஷம்பாலா ஒரு அரசியல் நாவல்” – கருப்பு அன்பரசன் 

Spread the love
ஷம்பாலா…
இரண்டு தளங்களில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தளமும்
வாசிப்பவருக்கு இன்றைய அரசியல் சூழலையும், அதற்கு காரணமான ஒரு அடையாளத்தையும் நம் கண்முன்னே
நிறுத்துகிறது. எதிர்பாராத பலதும் எப்படி
தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது,
அதற்கான வார்த்தைகள் எப்படி கட்டமைக்கப்பட்டதென்பது, திடீரென நிகழ்ந்த விபத்தல்ல என்பதை நமக்குள் விசிறிவிட்டுக் கொண்டே இருக்கிறது
ஷம்பாலா.
ஒரு காலத்தில் இந்த உலகையே தன் அதிகாரத்தின் கீழ் வசப்படுத்த நினைத்த ஒருவனின் பெயர்தான் தனக்கு இடப்பட்டிருக்கிறது என்பதையோ, அந்தப் பெயரைத்தான்தன் மகனுக்கு வைத்திருக்கிறோம் என்பதையோ ஏதுமறியாத கிராமத்துப் பெற்றோர்கள். அந்தப் பெயர் கொண்ட மாணவனை நமக்கு அவன் பள்ளியில் அறிமுகப்படுத்தும் போதிலேயே…
தன்னை நிறுத்திக் கொள்ள எதையும் செய்வான் அவன் என்பதை நமக்குச் சொல்லிடுவார் நாவலாசிரியர்
தமிழவன். நமக்கு அது அதிர்ச்சியாகவும்
சிரிப்பாகவும் இருக்கும்.
பள்ளியின்தலைமை ஆசிரியர் கையில் பிரம்போடு,” ஏன் காலதாமதமாக வந்தாய்”, என விசாரிக்க; அம்மாணவன் தன் தாய் இன்று காலைதான் இறந்து விட்டார். அதனால்தான் காலதாமதமாதிற்கான காரணம் என்று பதில் கூறியதும், மிரண்டு போய் ஓங்கியப் பிரம்பை அப்படியே கீழே போட்டுவிட்டு அவனை வகுப்பிற்கு அனுப்பிடுவார். பிறகு அவன் யார் என விசாரிக்கத் தொடங்கியதும், அவன் ஏழாம் வகுப்பு படிப்பதும், அந்த வகுப்பாசிரியர் பெயர் மாரியம்மாள் என்றும், அவனுடைய பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள்
என்பதையும் அறிவார். அவன் பெயரை மனதிற்குள் வாசித்திடும் பொழுதினில்
ஒருவித அமைதியின்மையை உணர்வார் தலைமையாசிரியர். ஆம் அந்த மாணவன் பெயர் ஹிட்லர்.
ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்...?
பிரம்படியிலிருந்து தான் தப்பிக்க
உயிரோடு இருந்த தனது தாயை செத்துப் போனதாக சொல்லிய அந்தப் பெயர் உச்சரித்த வார்த்தைகள்  ஒருவித சமநிலையை குலைக்கச் செய்தது தலைமையாசிரியர்க்குள். வகுப்பாசிரியர் ஒருவரை அவருக்கும் மட்டும் கேட்கும் வகையில் அவரின் “கரடி” என்கிற பட்டப் பெயரை உச்சரிப்பதில் இருக்கும் அமைதியான மிரட்டலை; யாரோ ஒருவரின் வீட்டை தன் அப்பாவிற்கு சொந்தமானதுதான் என்று மாரியம்மாள் டீச்சரிடம் பொய் சொல்லி, அது தன் அப்பாவிற்கு தெரிந்து, அவர் அவனை அடித்திட, அடிவாங்கிய வன்மத்தில் தன் அப்பாவை கல்லால் அடித்துக் கொல்லத் துடிக்கும் அவனின் மனவோட்டத்தை வாசித்திடும் பொழுதினில், உடனிருப்பவர் தன் எண்ணத்திற்கு எதிராக நிற்பார் என்றால் வஞ்சகமாக ஒழித்திடத்துடிக்கும் சூது, கள்ளம் நிரம்பிய ஒருவனோடே நாம் இந்த நாவல் முழுதும் பயணிக்கப் போகிறோம் என்கிற உணர்விற்குள் தள்ளப்பட்டுக் கிடப்போம்..
ஹிட்லர் பெயர் கொண்ட, அந்தப் பெயரின்
வரலாறு தெரியாத ஒருவன் தன் எடுபிடியின் உதவியோடு (ஓவியக்கல்லூரி)
முரடனாக உருவெடுத்தல், அந்த எடுபிடியோடே திடீர் அரசியல் பிரவேசம், தன்னை மட்டுமே நிலை நிறுத்திட
அரசியலுக்கு உதவிய, எதிர்த்த அனைவரையும் முகவரியில்லாமால்
காணாமல் போகச் செய்யும் தந்திரம், அவமானம் என்கிற உணர்வற்றவனாக நேர்கொண்ட எல்லாவிதச் சூழலையும் காற்றின் குணத்தைப் போன்று தன்வசப்படுத்தி, கூடவே உலக அதிகார மையத்தின் அடையாளமான ஷம்பால நோக்கி பயணம் மேற்கொள்ளும் சந்நியாசி ஒருவருடனான தொடர்பு; அந்த சந்நியாசி வாயில் உச்சரிக்கப்படும் அனைத்துமே எப்படி நிஜத்திற்கு எதிராக அழகான, மயக்கிடும் வார்த்தைகளுக்குள்
கட்டமைக்கப்படுகிற சாமியாரின் குயுக்தி..
அந்த குயுக்தி எப்படி ஹிட்லரின் அதிகார வேட்கையோடு இணையாக பயணிக்கிறது என்பதை கண்முன்னெ  நடைபெற்ற, இன்றும் நடைபெறுகிற நிகழ்கால,
அதிகார மையம் நோக்கிய அரசியலை
ஹிட்லர் என்கிற சொல்லின்   புனைவுகளினூடே வார்த்தைகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார் நாவலாசிரியர் தமிழவன்.
இன்னொரு தளமதில் நாவலின் அமர்நாத் என்கிற கதாப்பாத்திரம். எழுத்தாளர்,
பத்திரிக்கைகளில் எழுதக் கூடியவர்,
பலப் புத்தகங்களை எழுதியிருப்பவர்,
கருத்தியல் தளத்தில் செயல்படக்கூடிய ஆற்றல் மிக்கவர். ஒரு நாள் இவருடைய செல்பேசிக்கு “நீங்கள் எங்களிடையே உங்கள் மகள் அமரி காணவில்லை என புகார் தெரிவித்தீர்கள், அது குறித்து உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது, நாளை சரியாக 10 மணிக்கு
காவல் நிலையம் வாருங்கள்” என்ற ஒரு சேதி மகள் எதிரில் இருக்கும் போது வரும் !
செய்யாத ஒரு புகார்! மகள் கண் எதிரில்!
அவரின் மன நிலை என்னவாக இருக்கும்..?
ஷம்பாலா ஓர் அரசியல் நாவல்...?
மறுநாள் வீட்டில் தனியாக அமர்நாத் இருக்கும்போது அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்த இருவர், அவரை அவர் இருக்கையை விட்டு எழ விடாமல்,
உங்கள் மேசை மீது இருக்கும் அனைத்தும்
அப்படியே இருக்க வேண்டும். “எங்கள் அனுமதி இல்லாமல் எதையும் தொடக்கூடாது. இப்போது நீங்கள் சட்டை போட விருப்பப்பட்டால், எந்த சட்டை போடப் போகிறீர்கள்? எதற்காக அந்தக் கலர்ச் சட்டையை இப்போது அணிய நினைக்கிறீர்கள்? காரணத்தை உடனே எங்களிடம் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு என்னென்ன வார்த்தைகள் தெரியும்? அதில் எதையெல்லாம் உங்கள் எழுத்துக்களில் கொண்டு வந்திருக்கிறீர்கள் ? அவைகளைக் கொண்டுவர உங்களுக்குக் காரணமான எண்ணங்களைத் தெரிவிக்கனும் எங்களுக்கு. அந்தச் சொற்கள் இந்த அரசின்  சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதா.? இந்த அரசு வரையறுக்கப்பட்ட சொற்களுக்குள்தான் அவைகள் இருக்கா.? “இல்லை சட்ட விரோதமான சொற்களா என நாங்கள் சோதனையிட வேண்டி இருக்கும். நாங்கள் இப்படி உங்களைத் தேடி வந்திருக்கும் சூழலில் நீங்கள் மூத்திரம் அடிக்க விருப்பப்பட்டால் எங்களிடம் முதலில் அனுமதி வாங்கிடனும். கூட நாங்கள் யாராவது ஒருவர் உங்களோடு வருவோம், நீங்கள் மூத்திரம் வெளியேற்றும் வேகத்தை அளக்க எங்களிடம் கருவி இருக்கிறது.
அதைக் கொண்டு மூத்திரம் வெளியேறும் வேகத்தின் அளவெடுப்போம், மூத்திரம் அடித்த கையோடு நீங்கள் வெளியே வந்து விடவேண்டும். தண்ணீர் ஊற்றக் கூடது நீங்கள்.!  உங்கள் மூத்திரத்தில் இருக்கும் சர்க்கரை அளவு, உப்பின் அளவை நாங்கள் கணக்கிட வேண்டி இருக்கிறது! அதில் இருந்தும் உங்கள் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரியதா இல்லைய என்பதை முடிவெடுக்க வேண்டி இருக்கும் நாங்கள்.  முடிவுக்கு வந்தவுடன்
நாங்களே தண்ணீர் ஊற்றி சுத்தப் படுத்துவோம்”.  “நீங்கள் எங்களை யார்?”,என்று கேட்பீர்களாயானால், நாங்கள்தான் இந்த அரசாங்கத்தின்
“சிந்தனைப் போலீஸ்”.
அரசின் பாதுகாப்பிற்கு ஏற்ற வைகையில்
சிந்தனைகளை கட்டமைக்கும், மாறிய சிந்தனைகளை அழித்தொழிக்கும் போலீஸ்
நாங்கள். ஒரு மனிதன் யோசிக்கும்,
பேசயெத்தனிக்கும் வார்த்தைகளுக்கும், எண்ணங்களுக்கும் விலங்குப் பூட்டி சிறைவைத்திடும் இப்படி ஒரு சூழலில் நாவல் பயணமாகும்.
“மக்கள் எப்போதும் ஏதோ ஒன்றோ, பலதோ எதிர்பார்க்கிறார்கள். திருப்தி இருப்பதில்லை அவர்களுக்கு. சமூகமோ ஆட்சியோ பூர்த்திசெய்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றை பூர்த்தி செய்தால் அடுத்ததை ஏன் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கேட்பார்கள் மக்கள். இன்றைய ஆட்சியாளர்கள் மக்களின் இந்த இயல்பைப் புரிந்து அவர்களை ஓர் பயத்தில் எப்போதும் வைத்து, இருப்பது போதும் என்று ஆட்சியில் இருப்பவர்களை கேள்வி கேட்க்காத மனநிலையை உருவாக்க சிந்தனைப் போலீசைப் பயன்படுத்துகிறார்கள்”  இப்போதும் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். எதையுமே பூர்த்தி செய்யாயால் ஏதேனுமொன்றை இவ்வரசாங்கம் செய்யாதாவென மக்கள் காத்துக் கொண்டே கிடக்கிறார்கள்.. 20 லட்சம் கோடி எந்தப்பக்கமாவது வந்து எட்டிப்பார்க்காதா என எட்டுத் திக்கிலும்
நோக்கிக் கொண்டே பட்டினியால் தவிக்கிறாகள் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை. எதிரில் இருப்பவர்கள் எவரவது வாய் திறந்துக் கேட்டால் “நடந்து போகிறவர்களின் பெட்டிகளையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக் கொண்டுபோய் அவர்களுக்கு உதவலாமேவென” அகங்காரமாய் பேசி பிரச்சனையை இன்னொரு தளத்திற்கு மடை மாற்றிக் கொண்டுபோகிறார்கள். மேலும்
கேள்விகள் அறிவுசார்ந்த தளத்தில் இருந்து கிளம்பிடும் பொழுதுகளில் சிந்தனைப் போலீஸ் கொண்டு அச்சுறுத்துவது.. சிந்திப்பவரின் மனநிலையை சீர்குலைப்பது,  அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடைய மன உளச்சலை ஏற்படுத்துவது,  எதற்கும் அந்தச் சிந்தனை நிற்காதபோது சிந்திக்கும் திறனை துப்பாக்கி குண்டுகளாலும்  கொலையாயுதங்களாலும் நிறுத்தச் செய்வது. இவைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது மக்களை திசைத் திருப்பி வேறுவகையில் அதைவிட சவாலான அச்சுறுத்தும் இன்னொன்றை நடத்தி முடிக்க சிந்தனைக்குள் வார்த்தைகளை விதைப்பது.. இன்றளவும் இந்தியாவெங்கிலும் நடந்து கொண்டே விருக்கிறது.
அரசு அதிகாரம் எப்படி ஒரு சேதியை பரப்பி
அதை உண்மையாக்கிட நாடகமாடுமென்பதை; காலத்திற்கும் முகம் கொடுத்து பேசிக் கொள்ளாத, ஒருவரை ஒருவர் எதிரியாகவே பார்க, பழக்கிய சமூகத்தினர்கள் நேரெதிர்  இரண்டு ஊரில் வாழ்ந்திருக்க.  ஊர்களுக்கு இடையில் இருக்கும் பாழும் கிணற்றில்  ஒருவன் விழுந்து விட்டதாக ஒரு வதந்தியைப் பரப்பி.. இரண்டு ஊர் மக்களும் தங்கள் ஊர்களில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை கணக்கு பார்த்து நம் ஊரில் எல்லோருமே சரியாக இருக்கின்றனர்.. விழுந்தது அந்த ஊர்க்காரன் நமக்கென்ன என இருவரும் மாற்றி மாற்றி நினைத்திருக்க, இரண்டு நாள் கழித்து கிணற்றில் ஒருவன் பிணம் மிதக்க;  காவலர்களும் தீயணைப்பு துறையினரும் வந்து சேர.. பிணத்தை வெளியில் எடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுந்தவனா என்று சிலர் பேச.. காவல் துறை “யில்லையில்லை, 4மணி நேரத்திற்கு முன்னர் விழுந்திருக்கிறான் என்று சொல்ல, அப்போ இரண்டு நாட்களுக்கு முன் விழந்தவன் பிணம் எங்கே என்று சிலர் கேட்க.. இவன் ஒரு முஸ்லீம், இந்துக்கள் அடித்து தூக்கி வீசி இருக்கின்றனர் என்று வதந்தி கிளப்ப, இன்னொரு புறம் இறந்தவன் இந்து, முஸ்லீம்கள்தாம் அவன் இறப்பிற்கு காரணம் என்று பரப்பிட, அதை விசாரிக்கும் காவல் அதிகாரி ஒரு கிருஸ்துவர், அவர் அந்த சிறுவனை முஸ்லீம் என்றுதான் சொல்வார்.. இப்படியாக அந்த சிறுவனின் பிணம் ஆணவக்கொலையா..? சாதித் துவேஷமா..? இப்படி பலதும் பலவாறாக
சென்று கொண்டே இருக்க, நீதி மன்றமும் எதைச் சொல்லி தீர்ப்பாக்கிடும் என்பதை எவரும் அறியார்.
“ஒரு சட்டப் புத்தகம் இருவிதமான தீர்ப்புகளைக் கொடுக்க முடியும். சொற்களை எடுத்தும், வாக்கியங்களை எடுத்தும், பிற சட்டங்களோடு ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் எதிர் எதிர் தீர்ப்புகள் வருகின்றன அல்லவா.!
அதுதான் சிந்தனை போலீஸ் யாருக்கும் தெரியாமல் செய்கின்ற வேலை.  சட்டங்களுக்கு வியாக்கியானம் கொடுக்கும்போது சிந்தனையைத் திருப்பிவிட முடியும்.
முகநூலில் பொய்யை உண்மைப் போல் பரப்ப முடியும். உளவுத் துறையினரின் புதிய சிந்தனை இது பற்றி இப்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது.” என்பதையும், நாடு எரிமலையின் மீது நிற்கும் அபாயத்தை இன்றும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்
என்பதை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு புதினத்தை நகர்த்தி இருப்பார் நாவலாசிரியர்.
நாட்டில் இருக்கும் கல்வித்துறையும் கல்விக் கூடங்களும் எளிய மக்களின் வாரிசுகளை
எப்படி திட்டமிட்டு வெளியே அனுப்புகிறார்கள்.. அப்படி வெளியே அனுப்பப்பட்ட இளைஞர்களை வலதுசாரி தீவிரவாதிகள் எப்படி அணி திரட்டி வெறியேற்றி தங்களின் வெறியாட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அச்சகத்தின் உதவியாளர் வழியான அனுபவத்தில் இருந்து இந்தியாவில் பரவலாக நடந்தேறிவரும் நிஜத்தினை நாவலுக்கல் உரையாடல் வழியாக நிகழ்த்தி இருப்பார் ஆசிரியர் தமிழவன்.
பேஸ்புக் மாற்றத்தை உருவாக்கி ...
ஆசிரியர் தமிழவன்
“நாட்டைப் பகைவர்களிடமிருந்து மீட்டது போல் இந்த ஆட்சியினர் சிந்தனைகளில் பகைவர்களின் கருத்துக்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிப்பது ஒரு முறை. எமர்ஜென்சியில் நடு  இரவில் கைது செய்து சிறையிலடைத்தார்கள். இப்போது அப்படியல்ல,  வெகு நுட்பமாக நாட்டைக் கெட்ட சிந்தனைகளில் இருந்து காக்கும் வேலையை, யாருக்கும் புகமுடியாத மூளை, மொழி, எழுத்து, கவிதை போன்றவற்றில் புகுந்து கண்டு பிடிக்கிறார்கள்.” என்பதனையும், “முன்பு சிந்தனைத்துறை புரட்சியாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் உரியதாக இருந்தது. இப்போது அப்படியல்ல
அரசியல், உலக வரலாறு, சித்தாந்தங்கள் எனவும் நட்பு, தோழமை, அன்பு, அறிவு  என எல்லா இடங்களிலும் சிந்தனைபோலீஸ் செயல்படுகிறார்கள்.” என்பதினையும்
சொல்லி அறிவுசார் தளத்தில் வேலைபார்க்கக்கூடிய முற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் பலவற்றை எச்சரிக்கையோடு அணுக வேண்டி இருப்பதையும் பேசி இருப்பார் நாவலுக்குள்.
அமர்நாத்தின் கற்பனையில் பிறந்த  ஹிட்லர் என்கிற பெயர்  வாயிலாக இன்னுமொருதளத்தில் சென்ற நாவல்
எப்படி கடைசியில் ஒரே புள்ளியிடத்தில் பயணமாகி முடிகிறது என்ற சவாலான ஒன்றினை  சிறப்பாக இன்றைய இந்திய அரசியலில் பாசிசத்தின் அறிமுகத்தை
நேரடியாக சொல்லி இருப்பார் நாவலாசிரியர் தமிழவன்.
நாவலின் சொல்லாடல்கள், எழுத்துவடிவம் நவீனத்தை சார்ந்தது என்று சொல்லமுடியாதென்றாலும் அரசியல் சூழலை புரிந்தவர்கள் நாவலை வாசிக்கத் தொடங்கியதும் அதற்குள் தன்னை நிறுத்திக் கொண்டே பயணிப்பார்கள்..
பல இடங்களில் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது, மீண்டும் வாசித்தால்
புரிந்திட வாய்ப்பதிகம்.. ஹிட்லரின் குணத்தை வெளிக் கொணர பல இடங்களில் நாவலாசிரியர் மெனக்கெட்டிருக்கிறார்.. வாழ்த்துக்கள்.
தேவையானதொரு அரசியல் சூழலில்..
“ஷம்பலா ஒரு அரசியல் நாவல்” என்றே தலைப்பிட்டு கொண்டு வந்திருக்கும்
பாரதி புத்தகாலயத்திற்கு அன்பும்
வாழ்த்துக்களும். நாவலாசிரியர் தமிழவன் அவர்களுக்கும் பேரன்பு வாழ்த்துக்கள்.
கருப்பு அன்பரசன்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/shambala-ore-arasiyal-novel/
ஷம்பாலா ஒரு அரசியல் நாவல்
தமிழவன்
பாரதி புத்தகாலயம்.

2 Comments

  1. நிகழ்கால அரசியலை பகடி செய்கிற நாவல். மிகவும் அருமையாக உள்வாங்கி வாசித்து அதற்கான கருத்துரையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள் என்பது எனது எண்ணம். வாசித்தவைகளை தொடர்ச்சியாக எழுதுங்கள் தோழா.

    ஷம்பாலா அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

  2. மதிப்புரை அருமை.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery