Cinema

சகுந்தலா தேவி – இந்தி திரைப்பட விமர்சனம் | இரா.இரமணன்.

Spread the love

 

               ‘மனிதக் கணினி’ என்றழைக்கப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அவரது மகள் பார்வையில் சொல்லும் திரைப்படம். இந்த ஆண்டு (2020) ஜூலை 30ஆம் தேதி ஓடிடி என்ற முறையில் அமேசான் பிரைம் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. அனுமேனன் இயக்கி வித்யா பாலன் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார்.

           பெங்களூரில் பிறந்த சகுந்தலாதேவிக்கு அபூர்வமான கணித திறமை இருப்பதை அறிந்த அவரது தந்தை அவளை பள்ளிக்கு அனுப்பாமல் அவரது திறமையை காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்கிறார். இதற்கு தாயும் மறுப்பு எதுவும் சொல்வதில்லை. சகுந்தலாவின் சகோதரி மாற்றுத் திறனாளி. அவளை சகுந்தலா மிகவும் நேசிக்கிறாள். அவள் உடல்நலம் இல்லாதபோது அவளை மருத்துவமனையில் சேர்க்காமல் இறந்துவிடுகிறாள். இதனால்  தன் பெற்றோர்களை மிகவும் வெறுக்கிறாள். பதின்பருவத்தில் லண்டனுக்கு சென்று தன் கணிதத் திறமையை வெளிக்காட்டுகிறாள். அவளுக்கு ஆவியர்(javiyar) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர் உதவுகிறார். பல நாடுகளுக்கு சென்று பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கிறாள். இரண்டு 13 இழக்க எண்களின் பெருக்கல் பலனை 28நொடிகளில் சொல்லி கின்னஸ் சாதனை படைக்கிறார். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் மட்டும் கேட்கும் பெற்றோர்கள் மீது மேலும் வெறுப்புக் கொள்கிறாள். தான் ஒருபோதும் தன் தாய் போல் அமைதியாக இருக்க மாட்டேன் என்று உறுதி ஏற்கிறாள்.

                 இந்தியா திரும்பிய சகுந்தலா, பரித்தோஷ் என்ற வங்காளியை மணம் செய்துகொள்கிறார். ஐஏஎஸ் அதிகாரியான அவர் விவாகரத்து ஆனவர். அவர்களுக்கு அனு என்ற பெண் குழந்தை பிறக்கிறது. கணிதத்தின் மீதான ஆர்வத்தை விடமுடியாமல் குழந்தையை பரித்தோஷிடம் விட்டுவிட்டு சகுந்தலா மீண்டும் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்கிறாள். 201 இலக்கமுள்ள எண்ணின் 23வது வர்க்க மூலத்தை கணினியைவிடக் குறைந்த நேரத்தில் விடை சொல்கிறாள். அவளுடைய திறமைக்கு என்ன காரணம் என்று அமெரிக்க பல்கலைகழகத்தில் ஆய்வு செய்கிறார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. குழந்தை இல்லாமல் தனியாக இருக்க முடியாமல் அவளை தன்னுடன் வளர்க்க முடிவு செய்கிறாள். அதில் ஏற்படும் பிணக்கில் கணவனைப் பிரிகிறாள்.  

Shakuntala Devi (2020) - IMDb

                  மகள் அனு அப்பாவின் நினைவாகவே இருக்கிறாள். அம்மாவின் கணித நிகழ்வுகள், எப்போதும் ஊர்விட்டு ஊர் செல்வது, ஓட்டல்களில் தங்குவது ஆகியவை அவளுக்கு பிடிக்கவில்லை. தந்தையிடமிருந்து வரும் கடிதங்களை மகளிடம் சகுந்தலா தருவதில்லை. இந்தியா வரும் சகுந்தலாவிடம் மகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பரித்தோஷ் கூறுகிறார். அவரின் கண்டிப்பால் மகளை உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறாள். சில காலம் கழித்து பதின்பருவ மகளுடன் மீண்டும் லண்டன் சென்று அங்கு சொந்த வீடு வாங்குகிறாள். அனுவிற்கு வீடுகளை மறுசீரமைப்பு செய்து விற்கும் தொழிலின் மீது ஆர்வம் உள்ளது. அஜய் என்ற வாலிபனைக் காதலிக்கிறாள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசிக்க திட்டமிட்டுள்ளனர். இதிலும் சகுந்தலாவிற்கு பிணக்கு வருகிறது. அனு தன்னுடனே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதற்கிடையில் சகுந்தலா ஓரின சேர்க்கை குறித்த புத்தகத்தை எழுதுகிறார். அது குறித்த பேட்டியில்  தன் கணவன் ஓரின சேர்க்கையாளன் என்று உண்மைக்குப் புறம்பாக சொல்கிறாள். இதனாலெல்லாம் வெறுப்புற்ற அனு தாயிடமிருந்து விலகி அஜயை திருமணம் செய்துகொண்டு அவனுடன் வசிக்கிறாள். தாயின் மீதுள்ள வெறுப்பினால் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கணவனிடம் சொல்லிவிடுகிறாள். ஆனாலும் எதிர்பாராதவிதமாக கருவுற்று குழந்தை பிறக்கிறது.

                    இப்போது  சகுந்தலா தேவியின் கணிதத் திறமை சில நிகழ்ச்சிகளில் தடுமாறுகிறது. தன் சொந்த ஊருக்கு சென்று தன் வீட்டைப் பார்க்கிறாள். அவள் மனதில் தாய் குறித்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனு தனக்கு அளித்திருந்த பவர் ஆப் அட்டர்னியைப் பயன்படுத்தி லண்டனிலுள்ள அவளது சொத்துக்களை சகுந்தலா விற்று விடுகிறாள். அதனால் ஏற்படும் வரித் தொகையையும் அனுவே கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாயின்மீதே மகள் வழக்கு போடுகிறாள். முடிவை திரையில் பாருங்கள். 

Vidya Balan's First Look From Shakuntala Devi is Totally Stylish ...

                 கணித மேதை என்று அறியப்பட்ட ஒரு பெண்ணின் புற மற்றும் அக வாழ்க்கையை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு மேதைக்குரிய கர்வத்தையும் அதே சமயம் கூர்மையாகப் பேசுவது, காதல், தாய்மை, கோபம் ஆகிய பல குணங்களை வித்யா பாலன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘ஒரு பெண் மனம் விட்டு சிரிப்பதைவிட ஆண்களைக் கலவரப்படுத்துவது எதுவுமில்லை’ ‘ஒரு ஆண் மேதையின் பின்னால் அவன் மனைவி மூட்டை முடிச்சுகளுடன் போகலாம் என்றால் ஏன் ஒரு பெண் மேதையின் பின்னால் அவள் கணவன் போகக்கூடாது?’ போன்ற வசனங்கள் ஆண்களின் மனோபாவத்தை உலுக்குகின்றன. இதில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் தங்கள் மனைவியைப் புரிந்துகொண்டவர்களாக அவர்களுக்காக விட்டுக் கொடுப்பவர்களாக ஆனால் அதே சமயம் வாழ்வின்  எதார்த்தங்களை அவர்களுக்கு சுட்டிக் காட்டுபவர்களாக உள்ளனர்.  

              இரண்டு மூன்று பாடல்கள் எல்லாமே சகுந்தலா தேவி மகிழ்ச்சியாக இருக்கும்போது வருகின்றன. மேதைகளின் அதிலும் பெண் மேதைகளின்  குடும்ப வாழ்க்கை சிக்கல்கள், குழந்தைகளின்பால் பெற்றோர்களின் அணுகுமுறைகள், குழந்தைகள் தாயை ஏன் ஒரு பெண்ணாகப் பார்ப்பதில்லை, ஒரு மேதை நார்மலாக இருக்க முடியுமா  போன்ற பல கேள்விகளை இந்தப் படம் முன்வைக்கின்றது.  

  

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery