Web Series

தொடர் 5: சூரியன்– அம்பை | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

Spread the love

தமிழகத்தின் எல்லைகடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட அம்பையின் கதைகளில் பெண்களில் உறவுச் சிக்கல்கள் பிரச்சனைகள் குழப்பங்கள் கோபதாபங்கள் சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

சூரியன்

அம்பை

வெகு சாதாரண இயந்திர உபகரணங்களால் நெய்யப்பட்ட கம்பளிக் கோட்டும், கால் சராயும் அவை.  இறந்த எவனிடமிருந்தோ பிடுங்கப்பட்ட குல்லாயும் ஸாக்ஸும்.  அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.  அம்மாவின் முகமும் அவன் பிடித்துக் கொண்டிருந்த கையும் தெரிந்தன அவனுக்கு.

பயிர்கள் எரிக்கப்பட்ட நிலத்தின் மேல் இருட்டில் துழாவிக் கொண்டு அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

அவன் காலில் தட்டுப்பட்ட நிலம் ரத்தமும் சதையும் கொண்ட ஒன்று போல் அவன் கையால் தைத்த பாதணிகளின் மேல் பட்டு நான்தான் மண் என்னை ஸ்பரிசித்துப் பார்  என்றது.  அவன் அம்மாவின் கையை ஒரு நொடிக்கு உதறி மண்ணைத் தொட்டான்.

“நேரமில்லை மகனே, நமக்கு இதற்கு நேரமில்லை”.

அவனுக்கோ ஆவல். “ அப்புறம் நான் எப்போ வெளியே வருவேனோ?” என்கிறான்.

பூமிக்கு அடியே உள்ள சிறு உலகில் வாழும் குடும்பங்களில் அவனுடையதும் ஒன்று.  பூமிக்கு அடியே பள்ளி, அங்கேயே போருக்கான உதவிப் பொருட்கள் தயாரிப்பு.  அங்கேயே சாவு, பிறப்பு அன்பு, ஏமாற்றங்கள் எல்லாமும்.

அம்மா சில சமயம் தாலாட்டு ஒன்று பாடுவாள்.

நீ இப்போது தூங்கி விட்டால்

விழித்ததும் தோட்டத்தில் ஓட விடுவேன்

பூக்களைப் பறிக்க விடுவேன்

நீ இப்போது தூங்கி விட்டால்

ஆனால் அம்மா தன் வார்த்தையை ஒரு நாளும் காப்பாற்றியதில்லை.

அம்மா எப்போதும் சொல்லும் ஒரு கதைக்கு அவனாகவே ஒரு சிறு தலைப்புச் சூட்டியிருந்தான். “நமக்கு நிலங்கள் இருந்த போது”.

Reading Ambai and running into oneself : Fiction never lies ...

அண்ணாவைப் புகை போல் அழுத்தமில்லாமல் நினைவிருந்தது.  அண்ணா ஒரு முறை வந்திருந்தான்.  போர் வீரனுடையது போல் ஓர் உடை.  ஒழுங்கான போர் வீரனின் உடை இல்லை.  அது இறந்து போன அமெரிக்கச் சிப்பாய்களிடமிருந்து உருவி எடுக்கப்படும் உடைகளைப் போல் பளபளக்கும் பித்தான்களோ பட்டைகளோ அணியைக் குறிக்கும் சின்னங்களோ அதில் இல்லை.  அவன் கையில் துப்பாக்கி இருந்தது.  அவன் முகத்தில் கோபமும் வீரமும் ஜொலித்தன.

போர் எப்போது முடியும் என்பதற்கு அண்ணன் சொல்கிறான்.  “அமெரிக்காவிலிருந்து போரை நிறுத்த  சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு நிபுணர் வருவார்.  விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் விர்விர்ரென்று.  வேறு ஒரு சப்தமும் இருக்காது. வெறும் பாழ்வெளியும் செத்த மரங்களும் எலும்புக் கூடுகளுமே. எழுதி அனுப்புவார் இனி போரை நிறுத்தலாம்.  இங்கே யாரும் இல்லையென்று  அவர் எழுதி அனுப்புவார்”.

அம்மாவும், கம்பளி அணிந்த சிறுவனும் வெளியே செல்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் அங்கும் இங்கும் நுழைந்து தேடினாள்.  அக்கா அங்கே படுத்துக் கொண்டிருந்தாள்.  அம்மாவின் அருகே அவன் கைகட்டி நின்றான். அம்மா சுருங்கிய விரல்களை அக்காவின் கேசத்தில் துளைத்தாள்.  முகத்தின் மீது வருடினாள்.  நெஞ்சின் மீது தட்டினாள்.  விலகி இருந்த உடைகளை இழுத்து மூடினாள்.

பின்பு நொடியில் எழுந்து நின்று “போகலாம்” என்றாள்.  மீண்டும் நடக்கும் போது அம்மா பேசவில்லை.  அவள் பிடி மாத்திரம் இறுகியிருந்தது.

நடக்கும் போது அவனுக்கு பழக்கம் இல்லா  ஒரு புது ஒளி மெல்லப் பரவத் தொடங்கியது.  அவன் கண்கள் கூசிக் கொண்டன.  தூரத்தே ஒளி நூல்களால் தொங்கவிட்ட மஞ்சள் பந்து  ஒன்று மிதந்து வந்தது,

அம்மாவைப் பார்த்து “அது என்னது அம்மா?” என்றான்

சில வினாடிகள் அதைப் பார்த்தவாறே மௌனம் சாதித்த  அம்மா திடீரென்று தரையில் அமர்ந்து  அவனை அணைத்துக் கொண்டு   அழுதாள்.

 

Leave a Response