Web Series

தொடர் 24: கிழிசல் – அல்லி உதயன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

Spread the loveகற்பனையில்கூட பொருந்தாத மாந்தர்களே இவரின் கதை மாந்தர்கள். அவர்களின் அப்பழுக்கற்ற நேச உணர்வை இவரது படைப்புகள் காட்சிப் படுத்துகிறது.

கிழிசல்

அல்லி உதயன்

பஸ்ஸை விட்டு இறங்கி நாற்புறமும் பார்த்துவிட்டு அருகில் கடந்த ஒருவரிடன் மணி கேட்டான்.  ஒரு மைல் நடைக்குள் திருமணம் முடிந்து விடாது.  சற்று விரைவாக நடந்தால் நண்பனை மணமேடையிலேயே வைத்து பார்த்துவிடலாம்.

கல்யாணத்திற்கு வருகிற பரபரப்பில் கிழிந்த சட்டையைப் போட்டு வந்தாகிவிட்டது.  உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும் என்பது போல வலது தோள் இடுக்கில் கிழிந்திருந்தது.  கூட்டம் நிறைந்த பஸ்ஸில் ஏறி, மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபோதுதான் தெரிந்தது.  நெரிசலில் சிக்கி சிக்கி மேல் கம்பியை மாறி மாறி பற்றி இப்போது பார்க்கையில் துல்லியமான கிழிசலாகிவிட்டது.

திருமண வீட்டில் புதிது புதிதான ஆடை அணிகலன்களுடன் வந்திருப்பார்கள்.  பட்டுப்புடவைகள்  சரசரக்க பெண்கள் நிறைந்திருப்பார்கள்.  தன் நண்பனுக்கு தான் விகல்பமாய் தோன்றாவிட்டாலும் ஏனையோர் என்ன நினைப்பார்கள்?

சாலையில் போகிற வருகிற எல்லோரும் தன்னையே பார்ப்பதைப் போலிருந்தது.  வலது கையை ஓடுக்கிக் கொண்டு நடக்க முயற்சித்தான்.  சாலையோரத்தில் சில தையல் மெஷின்கள் தெரிந்தன.  தைக்கின்ற துணிகளைப் போல் கிழித்தும், சில இடங்களில் ஒட்டுப் போட்டதுமான குடைகளை மெஷின்களுக்கு மேலாக நீண்ட கம்புகளில் கட்டி ஓரு நபருக்கான நிழல்கள் ஆங்காங்கே சிறைப் பிடிக்கப்பட்டிருந்தன.

சட்டையைக் கழற்றி  தைத்துப் போட்டுக் கொண்டு போனால் என்ன?  வெளியூர்தானே யார் பார்க்கப் போகிறார்கள்? ஆனாலும் சிறிது கூச்சமாக இருந்தது.  கல்லூரியில் படிக்கும் மாணவிகளைப் போல் சிலரும் சேர்ந்து சேர்ந்து போய்க் கொண்டிருந்தனர்.  இவர்கள் தான் செல்லும் கல்யாணத்திகே செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது?  உன்னிப்பாக பார்த்துவிடுகின்ற ஏதாவது ஒரு முகம் ஏளனப் புன்னகை புரியாதா!

வழியில் பார்த்த நான்கு மெஷின்களும் உலகின் முதல் தயாரிப்புகளாய்த் துருவேறியிருந்தன.  இதில் தன் சட்டையைப் பதித்து  தைப்பதென்னவோ கிழிசல் போனாலும், அழுக்கைச் சேர்த்து வரும் போலிருந்தது.  பனியனுடன் நிற்பதும் சரியானதில்லை.  எல்லோரும் உற்றுப் பார்ப்பார்கள்.  சிறிது அழுக்காகி விட்டாலும் இது சற்று மறைவாகவும் இருக்கிறது.  இங்கேயே தைப்பது நல்லது என்று முடிவெடுத்தனாய் ஒரு மெஷினை நோக்கி நடந்தான்.

அதற்குள் வேறு பல எண்ணங்களும் அவனை மொய்க்கத் துவங்கி விட்டன.  இருந்திருந்து கிழிசலைத் தைக்கப் போகிறோம்.  அதை இந்தப் பயல்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.  ஆள் வாட்டசாட்டமாக இருக்கிறான், ஆன மட்டும் கறக்கலாம் என்று நினைக்கலாம்.  ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.  

தைப்பதற்கு முன் எவ்வளவு என்று கேட்பதா?  அல்லது தைத்த பின் கொடுப்பதா என்று யோசித்தான்.  எது எப்படியெனினும் அவன் தன்னை நன்றாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறான் பார்!  தையற்காரனின் குடைக்குள் நுழைந்து வெளிப்பார்வைக்கு தன்னை மறைத்துக் கொண்டு நின்றான்.  

லேசாக கூன் வளைந்த தையற்காரனின் கண்கள் குழி விழுந்து போயிருந்தன.  கண்கள் ஒட்டி எலும்பு மேடிட்டிருந்தது.  காக்கிச் சட்டையும் மலிவான சேலையைக் கிழத்துக் கட்டியது  போன்ற கைலியுடனும் நரைத்துப் பரவிய தலையுமாய், பாதி உடைந்து போன ஒரு மரஸ்டூலிலிருந்து இவனை அண்ணாந்து பார்த்தான்.

“ஒரு விசேத்துக்கு போயிக்கிட்டிருக்கேன்.  பொறப்பட்டு வர்ற அவசரத்துல இந்தச் சட்டைய மாட்டியாந்திட்டே.  இங்க வரவுந்தே கம்புக்கூட்டுல கிழிஞ்சிருக்கிறது தெரிஞ்சது”.

“அதுக்கென்ன சார் இருக்கோ இல்லியோ கிழிசலத் தைக்குறதுல தப்பு ஒண்ணுமில்லியே!”

காலுக்கடியில் பிதுங்கிய மரப் பெட்டியிலிருந்து ஒரு வெட்டப்பட்ட புதிய துணியாக எடுத்துத் துடைக்கவாரம்பித்தான்.  துடைத்த கையோடு மெஷினுக்கு எண்ணெய் விட்டான்.  முடிந்ததும் மீண்டும் மெஷினை ஒரு தடவை அழுந்தத் துடைத்தான்.

Thadam Vikatan - 01 June 2017 - எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன் |  Interview - Beyond Words - Neelakandan - Vikatan Thadam

ம் ஆரம்பிச்சிட்டான்.  கடைசிலே அத இதப் பண்ணி துட்டுப்பிடிக்கற வேலதே இது.  இவனுகளை நம்பவே முடியாது.  பார்ட்டிக வந்த நிக்குற நேரத்திலே பம்மாத்துப் பண்ணி ஒண்ணுக்கு ரெண்டா கூலி கேக்குறது

நூல் மாட்டி தைக்கவும் துவங்கி விட்டான்.  இந்தக் கிழிசலுக்கு ஐம்பது பைசா கொடுக்கலாம்.  அதற்கு மேல் சண்டித்தனம் செய்தால் ஒரு ரூபாய் கொடுத்து விடலாம்.  ஆனால் இசகு பிசகாய் மிரட்டினால் என்ன செய்வது?  தைத்ததற்கு கூலியை மறுக்கிறான் என்று கூறி நாலு பேரைப் பஞ்சாயத்துக்கு அழைத்தால் கொடுத்துவிட்டுத்தானே போகவேண்டும்.  இவனிடம் கூலியைப் பேசியிருக்க வேண்டும்.  மனதிற்குள் பலவாறான எண்ணங்கள் சுழித்துக் கொண்டிருந்தன.  கல்யாணத்திற்கு நேரமாகிறது என்ற எண்ணம்கூட சிறிது மறைந்து அந்தத் தையற்காரனை எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் இருந்தது.  

தையல் மிஷின் சிறுபிள்ளைகளின் மூன்று சக்கர வண்டியைப் போல் தடக்தடக்கென்று ஓடிக் கொண்டிருந்தது.

வலது தோள் இடுக்குத் தையலை சுளுவாகத் தைத்து முடித்த தையற்காரன், இடதுதோள் இடுக்கையும் உடனே பார்த்தான்.  அதிலும் லேசாக பிடிப்பு விட்டுக் கொண்டிருந்தது.  மெனக்கிட்டு அதையும் தைத்து முடித்துவிட்டு கண்களைக் கூர்ந்து ஓடவிட்டு காலரில் தென்பட்ட நகக்கீறல் போன்ற கிழிசலையும் கண்டுபிடித்து தைத்தான்.  முன்புறம் புரட்டிப் பார்க்கும் பொழுது பாக்கெட்டின் மேல்புறம் நூல் பிரிவதைப் போலிருந்தது.  மறந்துவிடும் என்று கருதியோ என்னவோ அதையும் படக்கென்று தைத்தான்.  மறுபடியும் சட்டையை இப்படியும் அப்படியுமாய் புரட்டிப் புரட்டிப் பார்ததான்.  முழுக்கைச் சட்டையின் வலதுபுறக் கப்பிலும் நூல் பிரிந்திருந்தது.  அதையும் தைத்துவிட்டு முதுகுப் புறம் பார்த்தான்.  ஓரிடத்தில் லேசாக நைந்திருந்தது.  பதனமாகத் தைத்துவிட்டு மேலும் சில நிமிஷங்கள் சட்டையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.  தனது சட்டையில் இத்தனை கிழிசல்களா?

இதற்கு எவ்வளவு கூலியாக கொடுப்பது?   இந்த உழைப்பு பொய்யானதில்லை.  தன் கண் முன்னால் தனக்கே தெரியாத பல கிழிசல்களைக் கண்டுபிடித்து பொறுப்புணர்வுடன் தைத்திருக்கிறான்.  எவ்வளவு கொடுப்பது?  சட்டென்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடினான்.

“ஒரு எட்டணா கொடுங்க சார்” என்று சாதாரணமாகக் கேட்டு விட்டு மரப் பெட்டியிலிருந்து வேறொரு பழைய துணியை எடுத்து தைக்க ஆரம்பித்தான்.

இவன் விதிர் விதிர்த்துப் போய் நின்றான்.  இத்தனை உழைப்பிற்கு வெறும் ஐம்பது பைசாதானா?  தான் இத்தனை தூரம் அவனைப் பற்றிக் கற்பித்துக் கொண்டு நின்றதே கேவலமாகத் தோன்றியது.  ஒரு நொடியில் உள்ளம் குறுகிப் போய்  வெற்று மேலுடன் நிற்பதைப்போல் வெட்கினான்.  

ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு குடைக்கு வெளியே தலையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது தையற்காரன் பாக்கி ஐம்பது பைசாவை தன் சட்டைப் பாக்கெட்டில் துருவி எடுத்துக் கொடுத்தான்.

“சாரி நீங்களே வச்சுக்கங்க. . .”  இவன் குரல் வெகுவாக உடைந்து போயிருந்தது.

திருமண மண்டபத்தை நெருங்கினான்.  இப்போது சட்டையில் கிழிசல்கள் இல்லை.  மனதில்தான் இருந்தது.  யாரை எப்படிப் பார்ப்பது என்ற தன் நிலைபாட்டில் உள்ள கிழிசல்களையும் தைக்க வேண்டும் என்று கருதியவனாய் மண்டபத்திற்குள் நுழைந்தான்.

@செம்மலர் 19861 Comment

Leave a Response