Web Series

தொடர் 18: ஞானப்பால் – ந.பிச்சமூர்த்தி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

81views
Spread the loveமாயமும் வண்ணமும் நிறைந்த புதுக்கவிதையை தமிழ் உலகிற்கு அளித்த  பெருங்கொடையாளி ந.பிச்சமூர்த்தி.  “உணர்வே என் குதிரையாகி விட்டபடியால், நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன் தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறுங்கட்டாந்தரையில் ரபால்டில் செல்வேன்” என்கிறார். “எழுத்தின் மூலமாக வாழ்க்கையை போட்டோ பிடிப்பது முடியாத காரியம் என்றாலும், எழுத்தாளன் மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாகி மாறிவிடும்” என்றும்   அவர் கூறுகிறார்,

ஞானப்பால்

ந.பிச்சமூர்த்தி

முதலியாரின் சத்திரத்தில் பதினைந்து ரூபாய் சம்பளத்தோடு,  தினம் ஆறு பேருக்கு சாப்பாடு போட்டு சமாளிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பது தனது அதிருஷ்டம் என்றே  ஒண்டிக் கட்டையான தவசிப் பிள்ளையின் நினைப்பு இருந்து வருகிறது.  சத்திரத்துக்கு தவசிப் பிள்ளைதான் சர்வாதிகாரி.  அவன் முதலில் யோக்யனாகத்தான் இருந்தான்.  இருந்தாலும் கைக்கு உறையைப் போட்டுக் கொண்டு தேன் எடுக்க முடியுமா?

ஒரு நாள் எங்கிருந்தோ வந்து தலையைத் தடவிக் கொண்டு நின்றானே ஒழிய  அவன் எதுவும் பேசவில்லை.   மழுக்கிய தலை, கழுத்திலே வெள்ளிப் பெட்டி மூடிய லிங்கம், இடுப்பில் பழுப்பேறிய வேட்டி  நாலு முழ நீளம் இருபத்தி நாலு அங்குல அகலம். 

“சமையல் ஆன பிறகு சாப்பிடலாம்,  இப்போது எங்கே இருந்து எங்கே போறீங்க?”

“பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது?  சோறு கண்டால் சொர்க்கம்.  ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இதுதான் போக்கிடம்”.தவசிப் பிள்ளைக்கு ஒரு யோசனை.  பாத்திரம் விளக்குகிற காத்தானோடு தினமும் போராட முடியவில்லை,  ஒழித்து விட்டால் சுமைதாங்கிதான் வந்திருக்கிறான்.  ஒரு கவளம் சோறு செலவு.  ஐந்து ரூபாய் மிச்சம்.  மறுநாள் காத்தான் சீட்டு முன்னறிவிப்பின்றிக் கிழிக்கப்பட்டது. 

வந்த புதிதில் எல்லாமே நன்றாக இருந்தன.  ஒரு கவளம் கேட்ட ஆளுக்கு இரண்டு வேளையும்  மூன்று நான்கு கவளமும் கிடைத்து விட்டால் மனம் துள்ளாதா? அவனால் கரி போகத் தேய்க்கப்பெற்ற பாத்திரங்களும்  பளபளப்பாக இருந்தன.  அத்தோடு இல்லை சத்திரத்திற்கு வருவோர் போவோரும் லிங்கங் கட்டியின் அன்றாட குளியல், திருநீறிடுவது, சூரிய பூசை ஆகியவற்றை பாராட்டாமல் போவதில்லை.

லிங்கங்கட்டி வெள்ளை வேட்டிப் பண்டாரமானபோது, சமய அறிவு ஒன்றையும் சம்பாதித்துக் கொள்ளவில்லை.  தன் கிரியைகளையும் மனத்தையும் பிணைக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதில்லை.  இரண்டும் ஒன்றிய செயல்நெறி காணவேண்டும் என்று துடித்ததில்லை. 

சத்திரத்துக்கு வந்து போகிறவர்களில் யாராவது இரண்டணா நாலணா கொடுத்தால் லிங்கங்கட்டி அதை மறுப்பதில்லை,  மறுக்க வேண்டும் என்றும் தோன்றியதில்லை.  வந்த எட்டு  ஒன்பது மாதங்களுக்குள் புது விளக்குமாறு தேய ஆரம்பித்து விட்டது.   லிங்கங்கட்டியின் உணவில் ஒரு கவளம் இரண்டு கவளம் குறைய ஆரம்பித்தது.   பசி அதிகரித்து தாங்கமுடியாத நிலையில் சத்திரத்து சாப்பாட்டுக்குப்  பிறகு கருமாதி, கல்யாணம், மகேசுவர பூஜை என்று கேள்விப்பட்டால் அங்கு போய் வாசனையாவது பார்த்துவிட்டு வந்தான்.  கூடவே காசும் கிடைத்தது.  

ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி – சிறுகதை வாசிப்பனுபவம் | திண்ணை

அடகு பிடித்து வந்த கிழவியிடம் லிங்கங்கட்டி பணத்தைக் கொடுத்து வைத்திருந்தான்,  அதை எப்படியாவது கரைத்துவிடமென்ற விஷ எண்ணம் தவசிப் பிள்ளைக்கு வந்தது.  ஒரு நாள் பணம் பற்றி தவசி  விசாரித்தான்.  இருக்கிற பணத்திலே பவுனைக் கிவுணை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோர்க்கும் யோசனையை வெளியிட்டான்.  லிங்கங் கட்டி மனதிலே தென்னம் கீற்று மெதுவாக முளைக்க ஆரம்பித்தது.  கிழவியிடம் பணத்தை கொடுத்து வைத்திருப்பது பற்றி மாற்று யோசனையும் வரத் துவங்கியது.  

ஒரு நாள் ஆசாரியிடம் செயின் செய்வது பற்றி கேட்டான்.  பவுன் வாங்கிக் கொடுத்து ஏதோ கொஞ்சம் கூலியும் கொடுத்தான் லிங்கங் கட்டி.

பதினைந்து நாள் கழித்துத் திருக்குளத்தில் நீராடி திருநீறணிந்து, தங்கச் செயினும் லிங்கமும் துலங்க சத்திரத்துக்கு திரும்பி வந்தான்.  தவசிப் பிள்ளைக்கு புதுமையாக இருந்தது.  செயின் போட்டதற்காக அவன் ஒன்றும் மாறிவிட வில்லை.  சத்திரத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான்.  கழிவிரக்கம் காட்டிய தவசிப் பிள்ளையும் மாறவில்லை.  பண்டாரத்துக்கு கொடுக்கிற கவளத்தில் ஏற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.  

நாலு மாதத்துக்குப் பிறகு லிங்கங்கட்டிக்கு திருமுலைப்பால் உச்சவத்துக்கு போகணுங்கற நெனப்பு வந்தது. தவசிப் பிள்ளையிடம் சொல்லிவிட்டு மறுநாள் சீர்காழிக்கு புறப்பட்டு விட்டான்.  லிங்கங்கட்டியில்லாமல் பொழுதை ஓட்ட வேண்டுமே என்ற கவலை தவசிப் பிள்ளைக்கு.

நான்காம் நாள் லிங்கங்கட்டி எதிரோ வந்து நின்றான்.  

அதுக்குள்ளே வந்தூட்டியே மேலும் கீழும் பார்த்தான்,  கைம்பெண் கழுத்துப் போலிருந்தது.  “என்ன பண்டாரம் லிங்கம் சங்கிலி ஒண்ணையும் காணோமே?”

“ஏமாந்து போயிட்டேன்!”

“விளக்கமா சொல்லு”.

லிங்கங்கட்டி விவரமாக சொன்னான். திருவிழா பார்த்துவிட்டு திண்ணையில்  மாங்காய்ப் பாலுண்டு மலைமே லிருப்போக்குத் தேங்காய்ப் பால் எதுக்கடீ குதம்பாய் என்று பாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அனைவரும் கண் அயர்ந்து தூங்கிவிட்டதாகவும் காலையில் பார்க்கையில் யாரோ களவாடிச் சென்றதை அறிந்ததாகவும் லிங்கங் கட்டி சொன்னான்.

ந.பிச்சமூர்த்தி | அழியாச் சுடர்கள்

திண்ணையில் இருந்தவர்கள் விசாரித்திருக்கிறார்கள். சாமி எடுத்துகிட்டுப் போயிருக்கும்  ஞானப்பால் குடுக்க வேணாம் என்றவுடன் சுறுக்கென்றது லிங்கங்கட்டிக்கு.

லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சது பைத்தியக்காரத்தனம் என்று  நினைத்து திரும்பி வந்ததை சொன்னான்,

“சம்பளங் கொடுத்து  பாத்திரம் தேய்க்க வேறு ஆள் பார்த்துக்கோங்க நான் போறேன்”.

“அடப்பாவி  நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?”

லிங்கங் கட்டி பதில் சொல்லவில்லை.  மழுக்கிய தலையைத் தடவிக் கொண்டே தெருவில் இறங்கி விட்டான்.

 

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  Leave a Response