Book Review

நூல் அறிமுகம் : ஒரு குழந்தையால் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு நூல் – பூமியின் ரகசியங்கள்..

Spread the love

பூமியின் ரகசியங்கள்

சமீபத்தில் நமக்கெல்லாம் கிரட்டா துன்பர்க் என்கிற ஸ்வீடன் நாட்டுச் சிறுமி குறித்து தெரிந்திருக்கும்.. சுற்றுச் சூழல் தொடர்பாக தன் நாட்டு நாடாளுமன்றத்தின் முன் வெள்ளிக்கிழமை தோறும் போராடத் தொடங்கியது முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பேசி உலகத் தலைவர்களையெல்லாம் உலுக்கியெடுத்தது வரையிலும் நாம் அறிவோம்அமைதிக்கான நோபல் பரிசு வரையிலும் அவரது பெயர் பரிசீலனை செய்யப்பட்டது என்பது வரை அறிந்திருப்போம்..

இவரைப் போலவேஇன்னொரு குழந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.. இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆயிகா சுபோட்டாஆறாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த மாணவிஅவர் பூமியின் ரகசியங்கள் என்கிற ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார்.

அந்நூலில் ரூமி, ஆய்ச்சி எனும் இரு குழந்தைகள்.. ரூமி புத்தகங்கள் வாசிப்பதில் பேரார்வம் உள்ள குழந்தை. அப்படி ஒருநாள் நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் எடுக்கிறாள். நமக்குத் தெரிந்த அலாவூதினும் அற்புத விளக்கும் போன்ற கதைகளில் ஒரு பூதம் வருமே அது போல  ரூமி எடுத்த புத்தகத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது. ரூமி அதன் பெயரைக் கேட்கிறாள்.. தன்னைப் பூமி என்று அந்த உருவம் அறிமுகப்படுத்திக் கொண்டு  இரு குழந்தைகளிடமும் பூமியின் ரகசியங்களைக் கூறுவதாக எழுதியுள்ளாள் ஆயிகா சுபோட்டா.

படக்கதையாக அவர் எழுதியுள்ள அந்தச் சிறுநூலில் பூமியின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம் அதாவது ஒரு செல் உயிரியில் இருந்து படிப்படியாக தாவரங்கள், விலங்குகள், மனிதக்குரங்கு, மனிதன் தோன்றியது பற்றியும் மிக அழகாக கூறியுள்ளார்.

நீரின் சுழற்சி, காற்றின் சுழற்சி, கார்பன் சுழற்சி பற்றிய அறிமுகம் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. தாவரங்கள் இல்லை என்றால் உலகில் வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதையும் சூரிய ஒளி இல்லையென்றால் அந்த தாவரங்களும் இல்லை என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.

SECRETS OF THE EARTH AIKA TSUBOTA Born on November 26, 1979 in ...

கடல் நீர் மாசுபாடு, காடுகள் அழிப்பு, நிலவளம் பாதிப்பு, அமில மழை, வளி மண்டலத்தில் ஓசோன் படலம் ஓட்டையாவதையும் குறித்து அந்தச் சிறுவயதில் விளக்கியுள்ள தன்மையானது உண்மையில் வியந்து போற்றத்தக்கது ஆகும். அதனினும் ஒரு படி மேலே போய் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்து கூறுவது வியப்பின் உச்சம்..

நாட்டின் எல்லைகளைக் கடந்து பறந்து செல்லும் பறவைகளின் பாதுகாப்பு பற்றிய உடன்படிக்கை ஒன்று ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையே போடப்பட்டுள்ளது.. ஜப்பானில் பிரதி மாதம் இருபதாம் தேதி பொதுமக்கள் யாரும் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை. அன்றைய தினம் அனைவருமே பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள்  என்பன போன்ற ஆச்சரியமூட்டும் தகவல்களோடு இறுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு தனிநபரும் எந்த வகைகளில் எல்லாம் பங்களிப்பு செய்யமுடியும் என்கிற முன்மொழிவுகளோடு புத்தகம் நிறைவடைகிறது. இந்தப் புத்தகம் எழுதி முடித்த மறுநாளே அந்தக் குழந்தையின் வாழ்வும் நிறைவடைந்து விட்டது எனும் செய்தி தான் அதிர்ச்சியளிக்கிறது.

ஆம் நண்பர்களே, 1979ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி  ஜப்பானின் ஹிராட்டா நகரில் ஆயிகா சுபோட்டா பிறந்தாள். இந்நூலை எழுதி முடித்த மறுநாள் அதாவது 1991ஆம் ஆண்டு டிசம்பர், 26ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட காரணமாக ரத்தக்கசிவு காரணமாக பாதிக்கப்படுகிறாள்.. அடுத்த நாள், டிசம்பர்,27ஆம் தேதி அவளது உயிர் பிறந்தது என்கிற தகவல் நிச்சயம் நம்மை உலுக்குவதாகவே உள்ளது.

Secrets of the Earth by Michel Mosca - issuu

உயிரினங்கள் தோன்றியது என்னவோ சமுத்திரத்தில் தான். ஆனால், இன்று உலகின் சமுத்திரங்கள் அனைத்தும் அபாயகரமான அளவிற்கு மாசுபட்டுள்ளன என்கிற வரிகள் பன்னிரண்டே வயதான ஒரு பள்ளிச் சிறுமியின் படக்கதை நூலில் உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆறாம் வகுப்பே படித்து வந்த அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கிய இந்நூல் உண்மையாகவே சிறுவர் சிறுமியரால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு அவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை வளர்த்தது என்று முன்னுரை கூறுவது ஆயிகா சுபோட்டாவின் மீது நமக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது..

உண்மையில் இந்த நூல் குழந்தைகளுக்காக ஒரு குழந்தையால் எழுதப்பட்டது என்றாலும் பெரியவர்களாகிய  நாமும் நிறைய கற்றுக் கொள்வதற்கும் சுற்றுச்சூழல் குறித்து நடைமுறையில் செயல்படுவதற்குமான நிறைய சிந்தனைகளைக் கிளறி விடுகிறது..

இந்நூலை காந்திகிராமம் டிரஸ்ட் செயலாளராக இருந்த எம்.ஆர்.ராஜகோபாலன் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் என்றும் பயன்படக்கூடிய அற்புதமான நூல்.. அனைவருக்குமான நூல்..

ஆயிகா சுபோட்டா இறந்து முப்பது ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. ஆனால் இன்றும் உலக வல்லரசுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட நாடுகளும் வளரும் நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் நம்முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது..

எனவே இன்று எதிர்காலத் தலைமுறையின் பிரதிநிதியாக,  சுற்றுச்சூழலுக்கான போராளியாக உருவெடுத்துள்ள கிரட்டா துன்பர்க் உலக நாடுகள் அனைத்தையும் பார்த்து உரகக்க் கேட்கிறார்.. பேசிக் கொண்டே இருப்பதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறீர்கள்..??

-தேனி சுந்தர்

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery