Book Review

நூல் அறிமுகம்: அதிகம் அறியப்படாத காந்திய ஆளுமைகள் – சித்தார்த்தன் சுந்தரம்

 உலக அளவில் காந்தியைப் போல விமர்சனத்துக்கு ஆளான தலைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அவரது 151 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் `சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்’. இதை எழுதியிருப்பவர் சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன். 

இவர் இந்நூலில் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிராக அவர் முன்னெடுத்த பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, அதிகம் அறியப்படாத 14 ஆளுமைகள் குறித்த ஓர் அறிமுகத்தை வாசகர்களுக்கு அளித்திருக்கிறார். 

பிரபல தொழிலதிபரான டி.வி.எஸ். ஐயங்காரின் எட்டுக் குழந்தைகளில் ஒருவரான (மருத்துவர்) செளந்தரத்தை தேசப்பணிக்காக வழங்குகிறேன் என்று அவரது மனைவி லெட்சுமி அம்மையார் 1921 ஆம் ஆண்டு காந்தியடிகளின் மதுரை விஜயத்தின் போது சொல்ல அது போலவே செளந்தரமும் தன் இறுதி மூச்சு வரை அண்ணலின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். செய்யூர் தொழுநோய் சிகிச்சைக்கென மருத்துவமனை ஒன்றையும், காந்திகிராமத்தில் கல்லூரியையும் (பின்னாளில் பல்கலைக்கழகமாக மாறியது) தொடங்கினார். இவருடைய வாழ்க்கை வரலாறு `அறம் வளர்த்த அம்மா’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது என்பது செய்தி. இதை எழுதியிருப்பவர் பி.எஸ். சந்திரபிரபு.  

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆளுமைகள்: சர்தார் வேதரத்தினம் பிள்ளை, இலங்கை ராஜகோபால், ராஜாஜி, கே. சுவாமிநாதன், தி.சே.செள. ராஜன், தி.சு. அவினாசிலிங்கம், என் எம் ஆர் சுப்பராமன், சீனிவாச அய்யங்கார் (மகள் அம்புஜம்மாள்), கோதைநாயகி அம்மாள், வைத்தியநாத ஐயர், ஜே.சி. குமரப்பா, தக்கர் பாபா, டங்கன் போன்றவர்கள். 

காந்தியவழியைப் பின்பற்றி அவரோடு தோளுக்குத்தோள் நின்றவர்களில் அனைத்து மதத்தினரும், சாதியினரும், செல்வந்தர்களும், ஏழைகளும் எந்தவொரு வித்தியாசமும் கருதாமல் மக்களுக்கான சேவையிலும், விடுதலைக்கான வேள்வியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.  

பாவண்ணன்: இரு நிலங்கள், ஒரே மொழி | பாவண்ணன்: இரு நிலங்கள், ஒரே மொழி -  hindutamil.in

ஒவ்வொருவரைப் பற்றி வாசிக்கும்போது இறுக்கமான ஒரு நெகிழ்ச்சி ஏற்படுவதோடு இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்களே என்கிற ஆச்சரியமும் ஏற்படுகிறது. 

பேரா. கே. சுவாமிநாதனின் 24/25 ஆண்டுகால கடும் உழைப்பில் உருவானதுதான் காந்தி பற்றிய 100 தொகுதிகள் அடங்கிய பொக்கிஷம். ஆனால் ஒரு தொகுப்பாசிரியராக எந்தத் தொகுதியிலும் அவர் தன் பெயரைக் குறிப்பிட்டதே இல்லை. `செயலே முக்கியம், செய்பவனல்ல’ என்பது அவரது கொள்கை. 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் வைத்தியநாத ஐயர், 

காந்தி மதுரைக்கு விஜயம் செய்த போது பேசிய கூட்டமொன்றில் கலந்து கொண்டு காந்தியத்தின் ஜோதியில் ஐக்கியமான இன்னொருவர் நாட்டாண்மை மல்லி ராயலு சுப்பராமன் (என் எம் ஆர் சுப்பராமன்). தொழிற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல இருந்தவர் அதைப் புறந்தள்ளிவிட்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1935 ஆம் ஆண்டு நடந்த மதுரை நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மதுரை நகர மேம்பாட்டுக்கும் மக்களுக்கும் அரும்பணியாற்றினார். இதில் குறிப்பிடத்தக்கது நகராட்சியில் வேலை பார்த்த துப்புரவு பணியாளர்களுக்காக நகராட்சி செலவில் வீடு கட்டிக் கொடுத்ததாகும். 1951 ஆம் ஆண்டு வினோபா பாவேயின் பூதான இயக்கத்துக்கு தனக்குச் சொந்தமான அறுபது ஏக்கர் நஞ்சை நிலத்தைத் தானமாக அளித்தார். இது மாதிரி அவர் செய்த பணிகளையும், தான தர்மங்களையும் நூலாசிரியர் பட்டியலிட்டிருக்கிறார். 

திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1946 முதல் 1949 வரை மதராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வியை முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர். தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்றவற்றில் பங்கெடுத்து சிறை கண்டவர். 

இப்படி ஒவ்வொரு ஆளுமைகள் குறித்தும் ஆச்சரியப்பட வைக்கும், மனதை நெகிழச் செய்யும் சம்பவங்களைத் தொகுத்து சத்தியத்தின் ஆட்சியாகக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். இது காந்தியத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையையும், சாதி மதப் பிரச்சனைகளில் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இளைய தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் காந்தியத்தின் அவசியத்தையும், அவருக்கு உறுதுணையாக நின்று தியாகம் செய்த பல ஆளுமைகளின் செயல்பாடுகளையும் எடுத்துச் செல்லும் முயற்சியாக இதைச் செய்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. இதில் ஆசிரியரின் தேடலும், கடின உழைப்பும் கண்கூடு. 

அண்ணல் பற்றி வாசிக்க வாசிக்க அவர் மீதான மரியாதையும், மதிப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. ஐன்ஸ்டீன் சொன்னது போல `வரவிருக்கும் தலைமுறையினர் இரத்தம் மற்றும் சதையால் இது போன்ற ஒருவர் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதை நம்பப் போவதில்லை’. இனி வரும் தலைமுறையினர் மட்டுமல்லாமல் இப்போதிருக்கும் தலைமுறைக்கே அவர் ஒரு ஆச்சரியம் என்று சொன்னால் மிகையில்லை. 

`எங்கே சத்தியத்தின் ஆட்சி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கும்’ என்றார் காந்தியடிகள். அந்த சத்தியத்தின் வழி நின்ற காந்திய ஆளுமைகள் குறித்த இந்நூல் தவறாமல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும். 

*************************** 

சத்தியத்தின் ஆட்சி புத்தகம்

ஆசிரியர்: பாவண்ணன். 

சந்தியா பதிப்பகம்

விலை ரூ 175Leave a Response