Article

நாற்றத்திற்குள் துருப்பிடித்த வாழ்வு( காயலான் கடைகளும்.. உதிரி மனிதர்களும்…) – வசந்ததீபன்

காயலான் கடை என்றும் பழைய இரும்புக்கடை என்றும் அழைக்கப்படும் உலகத்தில்… நாகரீக, கலாச்சார.. வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் அப்பாற்பட்டு வாழும் மனித இயந்திரங்களின் துருப்பிடித்த வாழ்க்கையை நம்மில் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இருக்கலாம்.
மனித சமூக பேரமைப்பில் பொருந்தாத எத்தனையோ மனிதக் கூட்ட பிரதிகளின் ஒன்றாக தினந்தோறும் நம்முன் எதிர்பட்டாலும் நமது கவன ஈர்ப்பின் பால் உட்படாத ஒரு வித சமூக வகைமையின் சிறு அலகாய் வெளிப்படும் கைத்துப் போனவர்களின் பிரதி தான் குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கை.
பொருளாதார சுழற்சியில் கிராமங்களும், சிறு நகரங்களும் வீசியெறிந்த மனிதர்கள் தஞ்சமடைய பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். அப்படி வருபவர்களை ஒரு போதும் கரங்கள் நீட்டி அந்நகரங்கள் வரவேற்பதில்லை அல்லது ஒதுக்கித் தள்ளுவதில்லை. பிழைப்பின் எதிர் நோக்குதலோடு செல்பவர்களின் முன் இருளான, வெறுமையான அவர்தம் கனவுகளை நிர்மூலமாக்கிடும் பெரும் அபாயகரமான சூழல் எதிர் கொள்கிறபோது விரக்தியின் விளிம்புகளில் துரத்தப்படும் நிலை உருவாகின்றது.
அவர்கள் குற்றவாளிகளாகவோ, பொறுக்கிகளாகவோ, மனப்பிறழ்வு கொண்டவர்களாகவோ, உதிரிகளாகவோ வடிவமைக்கப்படுகின்றனர். ஜாதி, மத அடையாளங்கள் நீர்த்து, நிறம் மாறி முற்றிலும் அழிந்து போன நிலையில் அருவருப்பான தொழில்களான சாக்கடை தூர் வாருதல், பிணம் எரித்தல், ஹோட்டல்களில் எச்சில் இலைகளை அள்ளுதல், மதுக்கடைகளின் பார்களில் எடுபிடியாக வேலை பார்ப்பது, மருத்துவமனைக் கழிவுகள் குறிப்பாக பிறக்கும் சிசுக்களின் கழிவுகளான நீர்க்குடம், தொப்புள் கொடி போன்றவைகளை அப்புறப்படுத்துவது, சாராயம்.. கஞ்சா விற்பது, விபச்சாரத் தொழில்களில்.. தோல் பதனிடும் தொழில்களில்..சாயப் பட்டறைகளில்.. பிளிச்சிங் பட்டறைகளில் ஈடுபடுவது, கூலிக் கொலைகாரர்களாக செயல்படுவது எனவும், அரசியல் கட்சிகளின் எடுபிடிகளாகவும், கடத்தல் தொழில்களில் ஈடுபடுவதுமாக பலர் அலைக்கழிக்கப்பட்டு வயிறு நிரப்பித் திரிகிறார்கள்.
இவற்றிற்க்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்காமலோ அல்லது விருப்பம் கொள்ளாதவர்களோ பிச்சை எடுப்பதிலும், எச்சில் இலைகளை பொறுக்குவதிலும் அமிழ்ந்து விடுகிறார்கள்.
மேற்க்கண்டவைகளிலிருந்து விலகி நிற்கும் பலர் தங்களுக்கான சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் குப்பைகளைத் தேடி அலைகிறார்கள். பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், பழைய இரும்பு.. தகரம்.. காகிதங்கள்.. மனித.. மிருக எலும்புகள் எனத் தேடித் திரட்டுகிறார்கள்.
பெரு நகரங்களில் உருவான இந்த குப்பை பொறுக்கும் வர்க்கம் மெல்லமெல்ல சிறு நகரங்கள்.. கிராமங்கள் வரை நீடித்து விட்டது. இவர்களின் வாழ்வு முறைகளில் பெருத்த வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருப்பதில்லை.
டெங்கு கொசுக்கள் கண்டுபிடிப்பு ...
பழைய நைந்த உரச்சாக்குகளைக் கொண்டும், பழைய கேரி பேக்குகளையும் கொண்டும் குப்பை பொறுக்கும் இவர்களில் வயது வித்தியாசங்களும்.. பால் வேறுபாடுகளும் உண்டு. எல்லோரும் எதையாவது சாக்கடைகளில்..சாலையோர குப்பைகளில்.. வீடுகளுக்கருகில்.. பொது நிறுவன, கடைகளின், மருத்துவமனைகளின் அருகே மற்றும் நகராட்சி, மாநகராட்சி குப்பைக் கிடங்குகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை கிண்டி, கிண்டி ஏதாவது அகப்படுமா என்பதிலே குறியாகக் கொண்டு அலைகிறார்கள்.
சாலைகளில், வழிப்பாதைகளில் நடந்து செல்கையில் இவர்களின் விழிகள் தேடலோடு கீழ் நோக்கி தரை தேடித் திரிகின்றன. தமக்கு முன்னே.. பின்னே வரும், போகும் எவரையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை.
குப்பை பொறுக்கும் இவர்கள் சில நேரங்களில் பிச்சை எடுக்கிறார்கள். சில நேரங்களில் பாலியல் தொழிலிலும் ஈடுபடுவது உண்டு.
இவர்கள் பொறுக்கும் குப்பைகளை வாங்கி மொத்தத்தில் விற்பவர்கள் மிக சொற்பமாக அவைகளை வாங்கி பலமடங்கு அதிகமாக விற்கிறார்கள். தங்களுக்கான பொருள் வைப்பறைகளென ஏதுமற்ற இவர்கள் கிடைத்தவைகளை தக்க வைக்க முடியாமல் உடனுக்குடன் விற்றுத் தீர்க்கிறார்கள்.
இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் குடியிருப்புகளென சுடுகாடு, ஊருக்கு வெளிப்புற பகுதிகளென இருக்கின்றன. மற்றபடி அதிகபட்சமாக இவர்கள் கிடைக்கும் இடங்களில் தூங்கி.. கடைகளில் வாங்கித் தின்று வாழ்கிறார்கள். இரவுகளில் ஆண்களும், பெண்களும் மது குடிக்காமல் இருப்பதில்லை. இவர்களுக்கும் குழந்தைகளும் இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் குளிப்பதே இல்லை. பழைய துணிகள் விற்கும் கடைகளிலிருந்து தங்களுக்கான ஆடைகளை வாங்கி அணிகிறார்கள்.
குப்பை பொறுக்குபவர்கள் மத்தியில் போட்டியும், பொறாமையும் எழுந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய சம்பவங்களும் நடக்கின்றன. இவர்களின் வாழ்வு முழுவதும் அதிகபட்சம் குப்பை மேடுகளின் அருகிலே காக்கிறது. ஒரு போதும் அருவருப்போ, அசூசையோ இவர்கள்அடைவதில்லை. ஒரு முறை குப்பை பொறுக்கும் ஒரு பெண்ணின் சிறு குழந்தை (2வயதுஇருக்கலாம்) ரத்தக் கறை படிந்த நாப்கின்னை எடுத்து வாயில் வைத்திருக்கும் புகைப்படக்காட்சி.. வலைத்தளங்களில் காட்சிபடுத்தப் பட்டதிலிருந்து இவர்களின் வாழ்வு நிலைகளை எளிதில் யூகித்து அறிந்து கொள்ளலாம்.
இவர்கள் கொண்டு வரும் குப்பைகளை வாங்கி மொத்தத்தில் விற்கும் காயலான் கடைக்காரர்கள் வீடு மேல வீடு கட்டுறதும், மோட்டார் வண்டி.. வேன்.. லாரி என்று வாங்குறதும், வட்டிக்கு கடன் கொடுத்து வாங்குவதும், உடம்பெல்லாம் நகைகளாக அலங்கரிப்பதுமாக சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் பாவம்.. இந்த குப்பை பொறுக்குபவர்கள் அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பரிதாப நிலையில் நசிந்து நசிந்து செத்துப் போகிறார்கள்.
காயலான் கடைக்காரர்கள் குப்பை பொறுக்குபவர்களுக்கு முன் பணம் என்று கொடுத்து அவர்களின் உழைப்பை ..குறைந்த விலையில்.. பேரமின்றி உறிஞ்சுகிறார்கள். ஒருவரை விட்டு வேறொருவருக்கு பொருட்களை விற்று விடாமல் கண்காணிக்கப்படுகிறார்கள். அப்படித் தவறி விற்பவர்களை கடுமையாகத் தண்டிப்பதும் உண்டு.
தினம் தினம் வெயிலிலும்,மழையிலும் அலைந்து திரிந்து கழிவுகளுக்குள் உளைந்து வாழ்வைத் தேடும் இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வு.. இருள் வெளிக்குள்ளிருந்து.. நாற்றக் குப்பைகளிலிருந்து  வெளிவரும் நாள் எப்போது…..?
வசந்ததீபன்

Leave a Response