Article

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட ராமர் கோவில் – சுமன் குப்தா, ஜன் மோர்ச்சா மூத்த பத்திரிகையாளர் | சித்ரா பத்மநாபன் (ஹிந்தி மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்) | தமிழில்:தா.சந்திரகுரு

1980களில் ராமஜன்மபூமி இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே ராமரின் பிறப்புடன் தொடர்புடையதாக 300 ஆண்டுகள் பழமைமிக்கதாக இருந்து வந்த ஜன்மஸ்தான், முஸ்லீம் ஜமீன்தார் கொடுத்த நிலத்திலே கட்டப்பட்டிருந்தது. அது ராமரின் அயோத்தி கொண்டிருந்த இணக்கவாழ்வை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

ராமரின் ‘ஜன்மபூமி’யில் (பிறந்த நிலம்) சங் பரிவாரால் அவருக்காக முன்மொழியப்பட்ட புதிய கோவிலுக்கு வழியேற்படுத்தி தருவதற்காக, அந்த தெய்வத்தின் ‘ஜன்மஸ்தான்’ (பிறந்த இடம்) உடன் தொடர்புடைய 300 ஆண்டு பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில் 2020 ஆகஸ்ட் 27 அன்று தரைமட்டமாக்கப்பட்டது. இதுபோன்ற வேறு ஏதாவதொரு முரண்பாட்டைக் காண முடியுமா?

விரிவான புதிய ராமர் கோவிலுக்கு இடமளிக்கும் என்று கூறப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஜன்மாஸ்தான் இடிப்பு வேலைகள், ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுமானக் குழுவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள கோட் ராமச்சந்திர பகுதியே, இந்த இரண்டு கோவில்களின் இருப்பிடமாக அமைந்திருக்கிறது.

குடர் ராமச்சந்திர சன்னியாசிகளின் மிக முக்கியமான கோவிலான இந்த ஜன்மஸ்தான், முஸ்லீம் ஜமீன்தார் ஒருவர் நன்கொடையளித்த நிலத்தில் 319 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்டது. அயோத்தியைக் குறிப்பதாக இருக்கின்ற இன நல்லிணக்கத்தின் அடையாளமாக ஜன்மஸ்தான் அறியப்பட்டிருக்கிறது.

பூசாரியாக மாறுகின்ற எந்தவொரு நபரும் தன்னை அங்கே பதிவுசெய்துகொள்வார், அவர் பெற்றுக் கொள்ளும் ரசீது, புதிதாக அவர் பெற்ற அந்தஸ்துக்குச் சான்றாக இருக்கும் என்பதிலிருந்தே கோவிலின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம். பூசாரியை அவரது சகாக்கள் ஒப்புக் கொள்வதற்கு கோவிலில் பதிவு செய்யும் இந்த செயல்முறை முக்கியமானது என்று கூறலாம்.

ஜன்மஸ்தான் இருந்த இடம், பாபர் மசூதிக்கு அருகே இருந்தது. ஹனுமன்கர்ஹியை டோராஹி குவானுடன் இணைக்கின்ற சாலை அவை இரண்டையும் பிரித்து வைத்திருக்கிறது. ஜன்மஸ்தான் கட்டப்பட்ட காலத்தில், பாபர் மசூதியில் ராமரின் சிலை இருக்கவில்லை. 1949 டிசம்பர் 22, 23க்கு இடைப்பட்ட இரவிலேயே ராமர் சிலை மசூதிக்குள் வைக்கப்பட்டது.

ஜன்மஸ்தான் – அயோத்தியில் உள்ள பெருமைமிக்க இடம்

1870ஆம் ஆண்டில், ‘ஃபைசாபாத் தாலுகா, ஃபைசாபாத் மாவட்டத்தின் வரலாற்றோவியம்’ என்ற தலைப்பில் அவுத் அரசாங்க அச்சகம் அயோத்தி-பைசாபாத் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அப்போதைய அதிகாரப்பூர்வ கமிஷனரும், அப்பகுதியின் குடியேற்ற அதிகாரியுமான பி.கார்னகி அதை எழுதியிருந்தார். மற்ற விவரங்களுடன், அயோத்தியில் இருந்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பட்டியலிட்டு, ஜன்மஸ்தானுக்கு உரிய இடத்தின் பெருமையை அந்த அறிக்கை அளித்திருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Historical Sketch.jpg

‘அந்தக் கோவில் 166 ஆண்டுகள் பழமையானது; பூசாரி ராம்தாஸால் கட்டப்பட்டது; ஒரு ஏக்கருக்கு மேலாக அந்தக் கோவில் இருக்கின்ற நிலம், மீர் மசூம் அலி என்ற ஜமீன்தாரால் வழங்கப்பட்டது’ என்று 1867-68இல் கார்னகி எழுதிய அந்த அறிக்கையில் இந்தக் கோவிலைப் பற்றிய பல விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகத்தில் 22 சாதுக்கள் வசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், ராம்கோட் பகுதியில் (காலனித்துவ நிர்வாகத்தால் கோட் ராமச்சந்திரா என்று குறிப்பிடப்பட்ட பகுதி) உள்ள மிகவும் வளமான கோவில்களில் அதுவும் ஒன்றாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பக்தர்கள் அந்தக் கோவிலை ராமரின் பிறப்புடன் தொடர்புபடுத்திக் கொண்டிருந்ததால், 1984 வரையிலும், ஜன்மஸ்தானின் வரலாற்று முக்கியத்துவம் குறையாமலேயே இருந்து வந்தது, ஹனுமன்கர்ஹியில் தொடங்கி, கனக் பவன், தஷ்ரத் மஹால், ராம் கசானா, ரத்தன் சிங்காசன் மற்றும் ரங் மஹால் என்று வழியிலுள்ள கோவில்களுக்குச் செல்லுகின்ற பக்தர்கள், இறுதியாக ஜன்மஸ்தான் மற்றும் ராம் சபுத்ராவை (ஜன்மபூமி என அழைக்கப்படுகிறது) சென்றடைவார்கள். இந்த கோவில்கள் அனைத்தும் அயோத்தியின் மிகச் சிறந்த இடங்களாகக் கருதப்பட்டு வந்த கோட் ராமச்சந்திர பகுதியிலே அமைந்திருந்தன.

C:\Users\Chandraguru\Pictures\Hanuman karhi.jpg

ஹிந்துத்துவா அரசியல் ஏற்றம் கண்ட வேளையில், வீழ்ந்து போன ஜன்மஸ்தானும், பிற கோவில்களும்

1984 முதல் அயோத்தி குறித்த சர்ச்சையின் வேகம் அதிகரித்திருந்த போது, ​​ஹிந்துத்துவா முன்வைத்த கதைகளால், கோட் ராமச்சந்திர பகுதி சர்ச்சைக்குரிய அரசியல் மண்டலமானதன் விளைவாக, அயோத்தி உள்ளூர் என்ற நிலைமையிலிருந்து தேசிய சூழலுக்கு மாறியிருந்தது. பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்தன் விளைவாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்த பழைய கோவில்களுக்குச் செல்வது பொதுவான பக்தர்களுக்கு கடினமான காரியமாகிப் போனது.

1984ஆம் ஆண்டில், அந்தக் கோவிலின் தரை தளத்தில் இருந்த குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு பகுதி தபால் நிலையமாக்கப்பட்டது. அங்கிருந்து பாபர் மசூதியில் நடப்பவற்றைக் கண்காணிக்கும் வகையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறையாக 1991 முதல் ஜன்மஸ்தானின் மேல் பகுதி மாற்றப்பட்டது. அந்தக் கட்டுப்பாட்டு அறை 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று, உத்தரபிரதேசத்தின் மூத்த காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளால் நிரம்பியிருந்தது, கரசேவகர்கள் மசூதியை இடித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மத்தியில் நரசிம்ம ராவ் அரசாங்கம் ஒரு காலத்தில் பாபர் மசூதி நின்றிருந்த  இடம் மற்றும் அதைச் சுற்றியும் இருந்த 67.703 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய 1993ஆம் ஆண்டு வரையிலும், ​பக்தர்கள் மற்றும் மத பிரமுகர்கள் அடிக்கடி வந்து சென்ற இடமாகவே ஜன்மஸ்தான் இருந்து வந்தது. தரிசனத்திற்காக வருகின்ற அவர்கள் அங்கேயே தங்கி, தங்கள் பூஜைகளைச் செய்வார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Babri masjid Old.png

அந்த  67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்திய நடவடிக்கை, அந்த பகுதிக்குள் அமைந்திருந்த பத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்கித் தந்தது. எடுத்துக்காட்டாக, தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அன்றாட பூஜை மற்றும் பிரசாதங்களுக்கான செலவுகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும் ஜமீன்தார் மீர் மசூம் அலியால் வழங்கப்பட்ட அந்த நிலத்தை, அதற்குப் பிறகு ஜன்மஸ்தானால் பெற முடியாமல் போனது.

மேலும், இந்தக் கோவில்களுக்குச் செல்லும் பாதைகள் சுற்றி வளைக்கப்பட்டதால், அவற்றின் மற்ற முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருந்த பொதுமக்கள் வழங்குகின்ற நிதி போன்றவை கிடைக்காமல் போயின. இந்த கோவில்கள் தங்கள் அன்றாட பூஜை மற்றும் பிரசாதங்களைத் தொடர்வது கடினமாகிப் போனது மட்டுமல்லாது, அவை பிழைத்திருப்பதே கேள்விக்குறியாகிப் போனது.

அந்தக் கோவில்களுக்காக உருவாக்கப்பட்ட வளைந்து நெளிந்து செல்கின்ற பாதை வழியாக, துப்பாக்கி நிழலின் கீழ் பக்தர்கள் காணக்கூடிய ஒரே இடமாக, மசூதி இடிக்கப்பட்டவுடன் எழுப்பப்பட்ட ராம் லல்லாவின் தற்காலிகக் கோவில் மட்டுமே இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த பழைய கோவில்கள் அனைத்தும் உண்மையில் பக்திக்காக பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. அவை தங்களிடமிருந்த கவர்ச்சியை முழுவதுமாக இழந்து நின்றன.

C:\Users\Chandraguru\Pictures\After demolition.jpg

பாபர் மசூதியையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராம் சபுத்ராவையும் 1992 டிசம்பர் 6 அன்று  கரசேவகர்கள் இடித்தனர் 

அயோத்தி சர்ச்சையின் போக்கு, ஜன்மஸ்தானின் அழிவை மட்டும் கொண்டு வரவில்லை; 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று, பாபர் மசூதியை இடித்த ‘ராம பக்த’ கரசேவகர்கள், மசூதியின் வெளிமுற்றத்தில் அமைந்திருந்த ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் போன்றவற்றையும் இடித்தார்கள் என்பது இதுவரை எங்குமே குறிப்பிடப்படவில்லை!

அயோத்தியின் புனிதமான நிலப்பகுதியின் ஒருங்கிணைந்த பகுதியாக நம்பிக்கை கொண்டவர்களிடம்  இருந்து வந்த அடையாளங்களாக அவை இருந்தன. 1885க்கு முன்பே நிர்மோஹி அகாரா பூஜை செய்து வந்த ராம் சபுத்ரா, 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, ஜன்மஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஜன்மபூமி என்பதாக அழைக்கப்பட்டது.

1885ஆம் ஆண்டில், ராம் சபுத்ராவில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு பூசாரியான ரகுபர் தாஸ் அனுமதி கோரினார். அவரது வழக்கை ஃபைசாபாத்தின் துணை நீதிபதியும், மேல்முறையீட்டில் மாவட்ட நீதிபதியும் தள்ளுபடி செய்தனர்.

C:\Users\Chandraguru\Pictures\Janmasthan map 01.jpg

ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் ஆகியவை எல் வடிவத்தில் ஒன்றுக்கொன்று சரியான கோணங்களில் அமைந்திருந்தன. அந்த இரண்டும் பாபர் மசூதியின் இரண்டு முக்கிய வாயில்களுக்கு அருகில் இருந்தன. 1859ஆம் ஆண்டில், இரு சமூகத்தினரும் தங்கள் பகுதிகளில் பிரார்த்தனை செய்து கொள்வதற்காக, காலனித்துவ நிர்வாகம் மசூதிக்கும், அந்த இரண்டு கட்டமைப்புகளுக்கும் இடையே இரும்பு தண்டவாளத்திலான எல்லைக் கோட்டை உருவாக்கியது.

பாபர் மசூதிக்கான வழக்கில், மசூதியும், அதன் முற்றமும் சேர்த்து உள்முற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் ஆகியவை இருந்த இடம் வெளிமுற்றம் என்று விவரிக்கப்பட்டிருந்தது.

ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் ஆகியவை நிர்மோஹி அகாராவின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, பாபர் மசூதி நில உரிமை வழக்கு தொடர்பாக 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மூன்று தரப்பினருக்கும் தலா மூன்றில் ஒரு பகுதியை பிரித்துத் தர முடிவு செய்யப்பட்டது. 1992 டிசம்பர் 6 வரையிலும் ராம் சபுத்ரா, சீதா ரசோய் ஆகியவை இருந்த பகுதிகளை நிர்மோஹி அகாராவிற்கு வழங்குவது என்று தீர்ப்பில் இருந்தது (மற்ற இரண்டு தரப்பினர் மத்திய சுன்னி வக்ஃப் வாரியம், ராம் லல்லா விராஜ்மான் ஆகும்).

புதிய பிரமாண்ட ராமர் கோவிலுக்காக வரலாற்று முக்கியம் வாய்ந்த பழைய ராமர் கோவில்களை அழித்தல்

2019 நவம்பர் 9 அன்று வழங்கப்பட்ட இறுதி உச்சநீதிமன்ற தீர்ப்பு, புதிய ராமர் கோவிலை நிர்மாணிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததால், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை மோடி அரசு உருவாக்கியது. 1993இல் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அந்த அறக்கட்டளைக்கு மாற்றி, கோவில் கட்டும் உத்தரவை அரசாங்கம் வழங்கியது.

C:\Users\Chandraguru\Pictures\Ram Mandir Modi.jpg

360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக அதிக அளவிலான நினைவுச்சின்னங்களைக் கொண்டிருக்க  வசதியாக, விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தயாரித்திருந்த ராமர் கோவிலுக்கான பழைய மாடல் திருத்தப்பட்டது.

அறக்கட்டளையின் தலைவர் நிருத்யகோபால் தாஸ் (அயோத்தியில் மணி ராம் சாவ்னியின் பூசாரி), பொதுச் செயலாளர் சம்பத் ராய் (வி.எச்.பி) என்று இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். (அந்த விசாரணையை 2020 செப்டம்பர் 30க்குள் சிறப்பு நீதிமன்றம் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது).

ஆகஸ்ட் 27 அன்று ஜன்மஸ்தான் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குள் அமைந்திருந்த பெரும்பாலும் ராமருடன் தொடர்புடையதாக இருந்த பல பழைய கோவில்கள், சிதைந்து போனவை என்று சொல்லப்பட்டு பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலைமையை எதிர்கொண்டிருக்கின்றன.

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாக, 1991ஆம் ஆண்டில், கல்யாண் சிங் தலைமையிலான அப்போதைய பாஜக மாநில அரசு, பொதுமக்களுக்கான வசதிகளை உருவாக்கும் நோக்கத்துடன் பாபர் மசூதி அருகே 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. நிலத்தைச் சமன் செய்யும் பெயரால், அந்த பகுதிக்குள் இருந்த பல பெரிய மற்றும் சிறிய கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. சுமித்ரா பவன், சங்கத்மோகன் மற்றும் ராம் ஜானகி கோவில்கள் அவ்வாறு இடிக்கப்பட்ட முக்கியமான கோவில்களாகும் (சாக்சி கோபால் கோவில் ஓரளவு அழிக்கப்பட்டது). இன்றுவரையிலும் அந்தப் பகுதி திறந்தவெளி நிலமாகவே கிடக்கிறது.

நம்பிக்கை மற்றும் வகுப்புவாத நல்லிணக்கம் கொண்ட பழைய அயோத்தியிலிருந்து 1991இல் இடிக்கப்பட்ட கோவில்கள், 1992 டிசம்பர் 6 அன்று கரசேவகர்கள் இடித்த ராம் சபுத்ரா, சீதா ரசோய், 2020 ஆகஸ்டில் இடிக்கப்பட்ட ஜன்மஸ்தான் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் ராமரின் பிறப்பிடத்துடன் தொடர்புடைய தளங்கள் இடித்து அழிக்கப்பட்டு விட்டன.

இணக்கவாழ்வைக் குறித்த அயோத்தி

தான் கொண்டிருந்த கங்கா-யமுனை கலாச்சாரம், ஒத்திசைவான நெறிமுறைகள் ஆகியவற்றிற்கு அயோத்தி பெயர் பெற்றது. கடந்த காலங்களில் முஸ்லீம் ஆட்சியாளர்களும், ஜமீன்தார்களும் ஜன்மஸ்தானை மட்டுமல்லாது, அயோத்தியிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பல கோவில்களை நிர்மாணிப்பதற்கும், பராமரிப்பதற்கும் நில மானியங்களை வழங்கினர் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உண்மையாக உள்ளது. அவற்றில் முக்கியமானவையாக ஹனுமன்கர்ஹி, ஆச்சாரி, ரணோபாலி நானக்சாஹி, ராம் குலேலா கோவில்களும், காக்கி அகாரா ஆகியவை அடங்கும்.

முன்னர் குறிப்பிட்ட கார்னஜியின் அறிக்கையில் (1870) இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை முஸ்லீம் புரவலர்களின் தாராள மனப்பான்மையால் பெறப்பட்ட நில மானியங்கள் மூலமாக பூசாரிகள் பயனடைந்த பழைய கோவில்கள் மற்றும் அகாராக்களின் பட்டியலை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, ஹனுமன்கர்ஹியை மீட்டெடுப்பதற்காக நவாப் மன்சூர் அலிகான் 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1767ஆம் ஆண்டில் அரச கருவூலத்தில் இருந்து பணம் கொடுத்ததாக அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (அந்த அறிக்கை 1867-68இல் தயாரிக்கப்பட்டது).

ஜன்மஸ்தானும், ஜன்மபூமியும்

தொடர்ந்து பல ஆண்டுகளாக இடங்களுக்குப் பெயரிடுவது மாற்றத்திற்கு உட்பட்டு வந்திருக்கின்றது. பாபர் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் இருந்த சீதா ரசோய் ஒரு கட்டத்தில், ‘சத்தி பூஜன் ஸ்தலம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.  மிக முக்கியமாக, ஜன்மஸ்தானுக்கு வெளியே 1901ஆம் ஆண்டில் பொருத்தப்பட்ட தகடு ஒன்றில், ஜன்மஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் 1984க்குப் பிறகு அது மாற்றத்திற்கு உள்ளானது. ராமஜன்மபூமி பிரச்சினை சூடாகத் தொடங்கியதும், சீதா ரசோய் என்பது அந்த தகடில் சேர்க்கப்பட்டு, அது ஜன்மஸ்தான் சீதா ரசோய் என்றாகிப் போனது.

அவ்வாறு மாற்றப்பட்டதற்கு காரணம் இருந்தது. பாபர் மசூதிக்கு அருகில் ஒரு ஜன்மஸ்தான் (கோவில்), மற்றொன்று ராம் சபுத்ராவில் இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் அயோத்திக்கு வருகை தரும் மக்கள் சற்றே குழப்பமடைவார்கள். ராம் ஜன்மஸ்தான் இரண்டு இடங்களில் இருக்கிறதா என்று அவர்கள் கேட்பார்கள். ஒன்று ஜன்மஸ்தான், மற்றொன்று ஜன்மபூமி என்று அவர்களிடம் கூறப்பட்டது.

ஜன்மபூமி என்ற சொல்லுக்கான வரலாறு, நம்மை 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. 1898ஆம் ஆண்டில், இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் (1901ஆம் ஆண்டில் ஏழாவது எட்வர்ட்  மன்னராக அரியணையில் அமர்ந்த விக்டோரியா மகாராணியின் மூத்த மகன்) பிறந்த நாளில், எட்வர்ட் தீர்த் ரக்ஷினி விவேச்சினி சபா என்ற அமைப்பு படாஸ்தான் (தஷ்ரத் மஹால்) பூசாரியான மனோகர் பிரசாத்தால் அயோத்தியில் உருவாக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் மூலமாக ரூ.1000 வசூலித்து, கோவில்கள் மற்றும் மற்றும் குளங்களின் பெயர்களைக் கண்டறிந்து காட்சிப்படுத்துகின்ற பணியை அந்த சபா தொடர்ந்து செய்தது.

அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் மைல்கற்கள் போன்ற இளஞ்சிவப்பு கற்கள்  அமைக்கப்பட்டன. அவற்றில் கோவில் அல்லது குளத்தின் பெயர் பொறிக்கப்பட்டன. மொத்தத்தில், அவ்வாறான 103 இடங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டன.

C:\Users\Chandraguru\Pictures\janma bhoomi plaque.jpg

எண் ஒன்று என்று இடப்பட்டிருக்கும் அத்தகைய கல்லில், ஜன்மபூமி என்று பொறிக்கப்பட்டு, ராம் சபுத்ரா முன்பாக, பாபர் மசூதியிலிருந்து அதனைப் பிரிக்கும் பகிர்வுக்கு அருகே அமைக்கப்பட்டது. முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து, அந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

1903ஆம் ஆண்டில், மசூதி நுழைவாயிலுக்கு முன்னால் வைக்காமல், ராம் சபுத்ராவுக்கு முன்னால் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாது, அந்த கல்லை யாராவது வெளியே எடுக்க முயன்றால், ரூ.3000 அபராதம் செலுத்துவதுடன், மூன்று ஆண்டு சிறைத்தண்டனையையும் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் மசூதிக்குள் (பிரதான குவிமாடத்திற்கு கீழே) ராமர் சிலை இருக்கவில்லை என்பதோடு அங்கு எந்த பூஜையும் நடத்தப்படவில்லை என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்துவது முக்கியம். 1949 டிசம்பர் 22, 23க்கு இடைப்பட்ட இரவு வரையிலும், அங்கே வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. கரசேவர்களால் இடிக்கப்பட்ட ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் ஆகிய இடங்களில் 1992 டிசம்பர் 6 வரையிலும் பூஜை தொடர்ந்து வந்தது.

நூற்றாண்டு கடந்த நிலையில், ராம் சபுத்ராவின் நினைவு மழுங்கிப் போனது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்த அதே கரசேவர்களால் இடிக்கப்பட்டு முடிவிற்கு வந்த ராம் சபுத்ராவின் முடிவை சிலர் மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் மற்றும் அப்பகுதியின் ஜமீன்தார்கள் கொடுத்த நிலத்தாலும், பணத்தாலுமே, 300 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க ஜன்மஸ்தான், அயோத்தியில் உள்ள பல கோவில்கள் கட்டப்பட்டவை என்பது கூடுதலாக சிலருக்கு நினைவில் இருக்கிறது. பழைய இணக்கவாழ்வுக் கலாச்சாரத்தை நினைவூட்டுகின்ற இந்த அடையாளச் சின்னங்களை இடித்துத் தள்ளியிருப்பது, அயோத்தியின் வரலாற்றில் இருந்து முழு அத்தியாயத்தை அழித்து விட்டதையே குறிக்கிறது.

புதிய ராமர் கோவிலுக்கு அயோத்தி தயாராகின்ற நிலையில், ​​ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது கங்கா-யமுனை கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்த அயோத்தியை, ஹிந்துத்துவா அரசியலானது ராமரின் பெயரால் நாடு முழுவதும் இருக்கின்ற பிளவுபட்ட அரசியலின் அதிர்வு மையமாக மாற்றியிருப்பது நன்கு தெரிகிறது.

https://thewire.in/communalism/ayodhya-ram-mandir-trust-janmasthan-temple-demolished

நன்றி: தி வயர் இணைய இதழ், 2020 செப்டம்பர் 06 

தமிழில்:தா.சந்திரகுரு

Leave a Response