Article

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், வடகிழக்கு தில்லிக் கலவரங்களும் – சீமி பாஷா (தமிழில்: ச.வீரமணி)

Spread the love

தில்லிக் கலவர வழக்குகள் அனைத்தும் அநேகமாக, தில்லிக் காவல்துறையினரால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவிற்கு வருகைபுரிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வருகையுடன் ஒத்துப்போகிற விதத்தில், திட்டமிடப்பட்டன என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவர்களின் அனுமானத்தின்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள் விளம்பரத்திற்காக நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றும், டிரம்ப் வருகையின்போது ஏதேனும் ஒருவிதத்தில் வன்முறை நடந்தால் அது அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன் அவை ஊதிப்பெருக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றும் அது இந்திய அரசாங்கத்திற்குச் சங்கடத்தை உருவாக்கும் என்பதுமாகும்.

Trump India visit: Seven claims about India fact-checked - BBC News

இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே காவல்துறையினர் தில்லிக் கலவர வழக்குகள் அனைத்திலும் விசாரணை மேற்கொண்டு குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்திருக்கின்றனர்.

நரேந்திர மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிற ஒரு சட்டம், வெளிப்படையாகவே முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடியது என்பதும், அந்தச் சட்டத்துடன் தேசியக் குடிமக்கள் பதிவேடு அல்லது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இணையும்போது, அவை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கு வாக்குரிமையைப் பறித்திடும் என்பதும் உலகத்திற்குத் தெரியாது என்கிற ஊகத்தின் அடிப்படையிலேயே, காவல்துறையினரால் சுமத்தப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுகள் அனைத்துமே  அமைந்திருக்கின்றன.

காவல்துறையினரால், முதல் தகவல் அறிக்கைகளிலும், குற்ற அறிக்கைகளிலும், மிதக்க விடப்பட்டிருக்கிற சதிக் கோட்பாடுகள், மோடி அரசாங்கத்தின் பாகுபாடு காட்டப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திடவில்லை என்பது போலவும், கிளர்ச்சியாளர்கள் பெரிய அளவில் விளம்பரத்தேவைக்காக இவ்வாறு சதித்திட்டங்கள் புரிந்தனர் என்பது போலவும் கூறுகின்றன.

இவ்வாறு, தில்லிக் காவல்துறையினர் கர்காடூமா நீதிமன்றத்தில் தயால்பூர் காவல் நிலையக் குற்ற எண் 65/2020இல், உளவுத்துறை அதிகாரி அங்கிட் ஷர்மா கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மத்திய அரசாங்கத்தைச் சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகச் சதி செய்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள் என்று கூறுகிறது.

குற்ற அறிக்கையில் காணப்படும் வாசகங்கள் வருமாறு:

Delhi Riots: Police Books Umar Khalid, Meeran Haider, Safoora ...

புலன் விசாரணை சமயத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட தாஹிர் உசேன், காலித் சைஃபியுடன் தொடர்பிலிருந்தார் என்பதும், மேற்படி காலித் சைஃபி, ‘வெறுப்புக் குழுவிற்கு எதிராக ஒன்றுபடு’ (Unite Against Hate Group)-உடன் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. தாஹிர் உசேன், காலித் சைஃபி மூலமாக ஜேஎன்யு-வைச் சேர்ந்த உமர் காலித்துடனும் சம்பந்தப்பட்டவர். காலித் சைஃபி, தாஹிர், உமர் காலித்துடன் 08.01.2020 அன்று சந்திக்க ஷாஹீன் பாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்பின்போது, ஒரு மாபெரும் குண்டுவெடிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் மத்திய அரசாங்கத்தைக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு பிரச்சனையின்மீது அசைக்கப்பட முடியும் என்றும், அதன் மூலம் சர்வதேச அரங்கில் நாட்டிற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முடியும் என்றும்…முடிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரங்கள் 2020 பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப், வருகை சமயத்தில் அல்லது அதற்கு முன்பு நடத்திடத் திட்டமிடப்பட்டது.  

ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேனின் வழக்கை நடத்திவரும் வழக்குரைஞர் ஜாவேத் அலி, முதல் தகவல் அறிக்கை எண் 101இன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்ற அறிக்கையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பிப்ரவரி வருகையின்போது மதக் கலவரங்கள் நடத்தி சதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது என்று கூறினார். இரு தனித்தனி குற்ற அறிக்கைகள், முதல் தகவல் அறிக்கைகள் எண் 101 மற்றும் 65இல் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், ஒரு வழக்கில் உள்ள கொலைக் குற்றத்தைத்தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரிதான் வாசகங்கள் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இதே கூற்றை, தில்லிக் காவல்துறை, குற்ற எண் 59/2020 வழக்கிலும் பகிர்ந்திருக்கிறது. அது, குற்றப்பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு, இப்போது சிறப்புப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் இன்னமும் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஆனாலும் அந்த முதல் தகவல் அறிக்கையில், தகவல் அளிப்பவர் ஒருவரால் பிப்ரவரி 24க்கும் 26க்கும் இடையே தில்லியில் மதக் கலவரங்கள் நடக்கும் என்று ஒரு காவல் அதிகாரிக்குக் கூறப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில், ஜேஎன்யு மாணவர் உமர் காலித் ஆத்திரமூட்டும் உரைகள் இரண்டை அளித்ததாகவும், அவற்றில் அவர், அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வருகையின்போது தேசியத் தலைநகரில் சாலைகளை முற்றுகையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.

Safoora Zargar’s Detention Against International Law: American Bar …

முதல் தகவல் அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் பின்னேயுள்ள சிந்தனை, இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேச அளவில் ‘பிரச்சாரத்தை’ பரப்ப வேண்டும் என்பதாகும். தில்லிக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, மிகவும் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடைச் சட்டத்தின் பிரிவுகளை இதில் சேர்த்திருக்கிறது. இதனைப் பயன்படுத்தி காலித் சைஃபி, இஸ்ரத் ஜஹான், சஃபி உர் ரஹ்மான், ஜமியா மிலியா இஸ்லாமிய மாணவர்களான மீரான் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கார் (Safoora Zargar) மற்றும் ஜேஎன்யு மாணவர்களான நடேஷா நர்வால் மற்றும் தேவகனா கலிதா ஆகியோரையும் கைது செய்யப் பயன்படுத்தி இருக்கிறது.

காவல்துறையினரின் குற்ற அறிக்கையில் நன்கு தெரியக்கூடிய பிழை என்னவென்று ஏற்கனவே விரிவான அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. டிரம்ப் வருகையின்போது கலவரம் செய்வதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாகக் காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர் வருகை தொடர்பான செய்தி ஐந்து நாட்கள் கழித்துத்தான் மக்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த அடிப்படைப் பிழையை ஒதுக்கிவைத்தாலும்கூட, ஜனவரி 8 அன்றோ அல்லது அதற்குப்பின்போ “சதித் திட்டம்” தீட்டப்பட்டதாக அனுமானம் செய்துகொண்டாலும்கூட, சதித் திட்டத்திற்கான நோக்கம் குறித்து இரு முக்கியமான கூற்றுகள் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சமரசம் செய்துகொள்வது எவருக்கும் கஷ்டமாகும். அதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், விளம்பரப் பசி கொண்டிருந்தார்கள் என்றும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வருகையின்போது பிரச்சாரத்தை விசிறியடிக்க விரும்பினார்கள் என்றும் கூறியிருக்கிறது. மேலும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்காக அரசாங்கத்தைச் சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் கூறுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் விளம்பரப் பசியுடன் இருந்தார்களா? ஷாஹீன் பாக்கில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பெண்கள், “நாங்கள் எங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்,”  என்று கூறிய பெண்கள், உலக அளவில் தலைப்புச் செய்திகளாக வர வேண்டும் என்று விரும்பினார்களா? குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களால் உண்மையில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தனவா?

அந்த சமயத்தில் வெளிவந்த வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா, ரெய்டார் செய்தி நிறுவனம், ஏ.பி., ஏ.எப்.பி. ஆகிய செய்தி நிறுவனங்கள் எல்லாம் தில்லியில் ஷாஹீன்பாக்கில் நடைபெற்ற போராட்டத்தை விரிவான அளவில் கொண்டுசென்றன.

இவ்வாறு உலகம் முழுதும் உள்ள ஊடகங்கள் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாக விமர்சனம் செய்திருப்பதும், இடித்துரைத்திருப்பதும், நரேந்திர மோடி அரசாங்கத்திற்குச் சங்கடத்தை ஏற்படுத்த முடியாமல்தான், குடியுரிமைத் திருத்தச் சட்ட முன் வடிவிற்கு எதிராகப் போராடியவர்கள்  சதித்திட்டம் தீட்டித்தான் அரசாங்கத்தை “சங்கடத்திற்கு” உள்ளாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்று தில்லிக் காவல்துறையினர் குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்களா?

இதனால் பயனடைவது யார்?

மூன்றாவது கேள்வி, தில்லிக் காவல்துறையினரின் குற்ற அறிக்கை ஒரு முக்கியமான கேள்வியை முழுமையாக ஓரங்கட்டியிருக்கிறது. அதாவது, “இந்தக் கலவரங்களிலிருந்து பயனடைந்தவர்கள் யார்?” என்பதே அந்தக் கேள்வியாகும்.

Delhi riots: Possible links of Jamia Coordination Committee ...

கலவரங்கள் நடந்ததன் உடனடி விளைவு, வடகிழக்கு தில்லியில் நடைபெற்று வந்த குடியுரிமைத்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள் முடிவுக்கு வந்ததாகும். கலவரங்களில் கொல்லப்பட்ட 53 பேரில் மூன்றில் இரண்டு மடங்கு 35 பேர் முஸ்லீம்களாகும். ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் வீடுகள் இடத்துத்தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் இடங்கள் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. கலவரங்களின்போது தப்பிப்பிழைத்தவர்கள் கலவரங்கள் நடந்த சமயத்தில் காவல்துறையினர் வெறுமனே அமைதிப் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்றும், சில இடங்களில் கலவரங்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்ற இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. வன்முறையின் பாதிப்புகளை முஸ்லீம்கள்தான் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்கும்போது, ஏன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் இதனைச் செய்ய வேண்டும்? அவர்கள் அமைதியான முறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவந்த சமயத்திலேயே உலகத்தின் கவனத்தை அவர்கள் ஈர்த்திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபட வேண்டும்? அவ்வாறு வன்முறையில் ஈடுபட்டால் அது எதிர்விளைவுகளையே தங்கள் இயக்கத்திற்குத் தரும் என்று அவர்களுக்குத் தெரியாதா?  கலவரங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும்  பயன் அளித்திருக்கிறதா? அல்லது, இவ்வாறு செய்வதன்மூலம் இயக்கத்தை நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களா?  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையினர் பதிலளிக்காமல் ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

(நன்றி: The wire)

Leave a Response

Top Reviews

Video Widget

gallery