Article

யாசிக்கும் கரங்கள் – ச.ரதிகா

ஈயென இரத்தல் இழிந்தன்று ;அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்று என் முப்பாட்டன் கூறிச்சென்ற வரிகளே எப்போதும் என்முன் யாசிக்கும் கரங்களை காணும் போது என் நினைவுக்கு வருகின்றது.ஆனால் இச்சமுதாயம் யாசிப்பவர்களை வேற்றுகிரவாசி போலவே காண்கின்றது. அவர்களும் நம்மைப் போன்றே ரத்தமும் சதையுமான சக மனிதனே என்று தோன்றுவதே இல்லை. நாம் அனைவரும் கடும் உழைப்பாளிகள் போலவும் அவர்கள் மட்டுமே சோம்பேறிகள் போலவும் நாம் நேர்மையின் சிகரம் போலவும் அவர்கள் மட்டுமே ஏமாற்றுபவர்கள் போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நம் வாழ்வில் எத்தனை பொய்கள்,ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகம், சுரண்டல்கள், வலிகள்,ஏக்கங்கள், கண்ணீர் என்று பல்வேறு உணர்வுகளால் ஆட்கொள்ளப் படுகிறோம். உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை தானே! இந்த உலகத்தில் யாசிக்காத மனிதர்களே இல்லை. இறைவன் முன்வைக்கும் வேண்டுதலும்,நெருக்கமானவர்களிடம் குழைந்து கெஞ்சுவதும்,குழந்தையின் ‘ப்ளீஸ்’ கூட யாசிப்புதான். ஆனால் இது எதுவும் நமக்குத் தவறாக தெரியவில்லை. அறிமுகமில்லாத ஒருவர் பசியினால் யாசிப்பது மட்டும் கடும் குற்றம். கை கால்கள் நல்லாத்தானே இருக்கு உழைக்க வேண்டியது தானே; பொய் சொல்லி ஏமாற்றுவதே வேலை; இவங்களோட ஒரே தொல்லை; கொடுக்காதீர்கள்; திருந்தவே மாட்டாங்க; தினமும் இவங்களுக்கு கொடுத்தால் என்னோட சம்பளம் மொத்தத்தையும் கொடுக்கனும் என ஏராளமான வசைச் சொற்கள்.

இதே சொற்களை ஏதோ ஒரு சூழ்நிலையில் நமது முகத்திற்கு முன்போ முதுகிற்கு பின்போ நம்மை நோக்கியும் வீசியிருப்பார்கள் என்பதை உணர்வதில்லை.யாசிப்பவர்கள் மான அவமானங்களை யோசிப்பதில்லை என்பதற்காக அவர்கள் மகிழ்ச்சியாக யாசிக்கிறார்கள் என்பது அன்று.இங்கு நான் யாசிப்பது சரி என்றோ அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்றோ கூறவில்லை. எந்நிலையில் இருந்தாலும் அவர்களும் மனிதர்களே.அவர்களுடைய உணர்வுகளைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் ஒதுக்க முடியாத நமக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க எந்த உரிமையுமில்லை. கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்கள்,நாள்தோறும் நம்மை ஏமாற்றும் நுகர்வோர்கள், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வணிக இடங்கள்; உணவகங்கள், கேள்வியை கேட்க விடாமல் நினைத்ததை வாங்கிக் கொள்ளும் கல்விக்கூடங்கள்; மருத்துவமனைகள் என்று இவர்களை விடவா யாசிப்பவர்கள் நமக்கு கொடூரமானவர்கள்? நம்மை ஏமாற்றி அவர்கள் பணத்தை சுவிஸ் வங்கியிலா போடப் போகிறார்கள்? இல்லை பினாமி பெயரில் நிலம் வீடா வாங்கப் போகிறார்கள்? எதற்கு அவர்களை கண்டால் மட்டும் கோபம், எரிச்சல், அவமதிப்பு? உலகை இயக்கிக் கொண்டிருக்கிற ஒற்றை மந்திரம் பசி.

யாசகம் செய்ய தடை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

பசியால் ஒருவன் நம்முன் யாசித்தால் வெட்கப்பட வேண்டியது அவர்கள் அல்ல நாம்தான். காக்கை கூட உணவை பகிர்ந்தளிக்கிறது. ஆனால் மனிதன்???தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இங்கு தனி ஒருவனுக்கு உணவும் இல்லை உணர்வுகளுக்கு மதிப்புமில்லை. யாசிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நிராகரிப்பிற்கு உள்ளானதே. நிராகரிப்புகள் பழகிப் பழகி பழுதாகி அவர்களே அவர்களை நிராகரித்து விடுகிறார்கள்.யாசிப்பவர்களின் பார்வையும் கூறியதையே கூறும் வார்த்தைகளும் நீட்டிய கரங்களின் பின்னே இருக்கும் ஆழமான வலியை நாம் என்றும் உணர முடியாது. யாசிப்பவர்களுக்கு நாம் உதவி செய்து கர்ணனின் வம்சாவளிகள் ஆகவேண்டாம்.

அவர்களை அருவருப்பாகவோ, கோபமாகவோ பார்க்காமல், கூரிய சொற்களால் காயப்படுத்தாமல் அவர்களும் நம்மைப் போலவே வாழத் தகுதியுள்ள முழுமனிதர்களே என்பதை உணர்ந்தாலே போதும். குழந்தைகளுக்கு அவர்களை பூச்சாண்டியாக காட்டாமல் மனிதனாக அடையாளம் காட்டினாலே போதும். அவர்களுக்கு உணவையோ பணத்தையோ தராவிட்டாலும் பரவாயில்லை மனிதன் என்ற ஒரு அங்கீகாரத்தை மட்டுமாவது பிச்சையிடுங்கள்!

Leave a Response