கவிதை – அம்மா
இரா.பூபாலன்
நிலா நிலா ஓடிவா என்பது வெறும் குழந்தைப் பாடல் அல்ல. அதைக் கேட்கிறபோதெல்லாம் வளர்ந்த மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை மீண்டும் குதிபோட ஆரம்பிக்கிறது. அம்மாவை டபாய்த்து வீட்டுக்குள்ளேயே ஓடி ஒளிந்து சாப்பிடமாட்டேன் என்று மனம் அடம்பிடிக்கிறது. அம்மா சோறூட்ட வலது கை தூக்கியபடிக் கெஞ்சிக் கொண்டே நம் பின்னால் ஓடி வரவைக்கிறது. முன்னால் ஒரு நடைவண்டி உருள்கிறது. வாழ்க்கையின் நெரிசலில் மறந்துபோன அம்மாவை மீண்டும் நம் மனதுக்குள் அழைத்துவந்து பாட்டு பாட வைக்கிறது: “நிலா நிலா ஓடிவா”. நிலாவுடன் நாமும் நினைவுகளுடன் அம்மாவும் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பிக்கிறோம். அம்மா என்றாலே ஆயிரம் வரலாறுகள். ஆனால் அவளது அத்தனை வரலாறுகளிலும் தன் பிள்ளை மட்டுமே கதாநாயகன்.
கவிஞன் பூபாலனின் பிரச்சினையும் அதுதான். யாராவது சாப்பிட்டாயா எனக் கேட்டால் பதற்றமாகி விடுகிறான்; அம்மாவின் நினைவுச் சுழலுக்குள் அமிழ்ந்துவிடுகிறான். நினைவுகளில் சோறூட்ட வந்த அம்மா சோறாக்க ஆரம்பித்துவிடுகிறாள். கரியேறிய அடுப்பில் தனது கைகளையே விறகாகத் திணித்துக் கொள்கிறாள். அறை முழுவதும் புகை மண்டலமாகிவிடுகிறது. புகைமண்டலத்துப் பொம்மையாய் ஊதாங்கோலுடன் அடுப்புக்கு முன்னாடி அம்மா. அவள் கண்களில் நீர் வருகிறது. அது அவளது கண்களில் கசிகிற திரவப் புகை! அது ஒருவேளை புதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ கதையின் கமலத்தின் கண்களிலிருந்து வழிந்தாலும் வழியலாம். பூபாலனைப் பொறுத்த அளவில் இது அம்மாவின் கன்னங்களில் வழிகிற புண்ணிய தீர்த்தம்!
“அண்ணாச்சி கடையில்
மாதக் கடன் கணக்குப் புத்தகத்தில்
பற்று வைத்து விட்டு
அரைக் கிலோ புழுங்கலரிசியும்
அரைக் கீற்று தேங்காயும்
வாங்கி வருகிறான் ஒரு சிறுவன்”
அண்ணாச்சி கடன் தருகிறாரோ இல்லையோ என்கிற நொந்து போன மனதின் தடித்த நூலிழைதான் அந்தக் கண்ணீர்.
அவள் கையில் ஊதாங்ககோல். ஆனால் நெஞ்சில் துயர ஸ்வரம். சுடச் சுடக் கஞ்சியை வட்டிலில் ஊற்றுகிறாள். தூவிவிட்டத் தேங்காய்ப்பூ! வயிற்றுக்குத் தெரியும் பசியின் மணம். மகன் நாலு வாய் குடித்த பின்புதான் தாய் அந்த இடத்தைவிட்டு நகர்வாள். அவசர அவசரமாக மழை ஜம்பு (கொங்காடை) எடுத்துக் கொண்டு கையில் களைக் கொத்தியுடன் (கொத்து) வயலுக்கு ஓட்டமும் நடையுமாக ஓடுகிறாள். கவிஞன் அழுகிறான்….
“அவளிடம் பலநாட்கள்
கேட்கவே கேட்காத
சாப்பிட்டயா அம்மா
என்கிற கேள்விக்குள்
சுழற்றிக் கொண்டு போய் விடுகிறது
அந்தக் கேள்வி
சாப்பிட்டயா”
அதனால்தான் இன்றும் யாராவது அவனைச் சாப்பிட்டாயா எனக் கேட்டால் பதற்றமாகி விடுகிறான். இனி, யாரேனும் சாப்பிட்டாயா என்று கேட்டால் கவிஞன் மட்டுமல்ல இந்தக் கவிதையைப் படித்த நாமும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகப் போகிறோம்.
இனி முழுக் கவிதையையும் படியுங்கள் :
யாராவது சாப்பிட்டாயா எனக் கேட்டால் பதற்றமாகி விடுகிறேன்.
அந்தக் கேள்வியின் சுழலுக்குள் சிக்கி
அம்மாவின் நினைவுக்குள்
போய் விடுகிறேன்
கரியேறிய அடுப்பில்
புகைமண்டலத்துக்கு நடுவில்
ஊது குழலால்
சதா ஊதிக் கொண்டிருக்கிறாள் அவள்
அண்ணாச்சி கடையில்
மாதக் கடன் கணக்குப் புத்தகத்தில்
பற்று வைத்து விட்டு
அரைக் கிலோ புழுங்கலரிசியும்
அரைக் கீற்று தேங்காயும்
வாங்கி வருகிறான் ஒரு சிறுவன்
சுடச்சுடக் கஞ்சி காய்ச்சி
வட்டிலில் வார்த்து
தேங்காய்ப் பூவைத் தூவி விட்டு
ஒரு வட்ட ஓவியமாக
அதை அவன் முன் தள்ளி
உண் என்கிறாள்
நாலாவது வாய் உள்ளே போய்விட்ட
நம்பிக்கையில்
கொங்காடையையும், கொத்தையும்
தூக்கிக் கொண்டு
வயலுக்கு விரையும்
அவளிடம் பலநாட்கள்
கேட்கவே கேட்காத
சாப்பிட்டயா அம்மா
என்கிற கேள்விக்குள்
சுழற்றிக் கொண்டு போய் விடுகிறது
அந்தக் கேள்வி
சாப்பிட்டயா
– இரா.பூபாலன்
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.co.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தோழரே
இவற்றையெல்லாம் தாண்டி உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்,