பழைய நினைவுகளின் பரண்மேல் ஏறுகிறோம். ஒரு நடைவண்டி தட்டுப் படுகிறது. அதை மெல்ல தடவிப் பார்க்கிறோம். நம்மையறியாமல் சர சரவென கீழே இறங்குகிறோம். “டேய் பாபு வாடா பட்டணம் போலாம்.” டுர்….டுர்…. நடை வண்டி பறக்கிறது. வழியிலேயே சீட்டு கொடுக்கிறோம். சிலரை ஏற்றுகிறோம். சிலரை இறக்குகிறோம். மறுபடியும் டுர்…. டுர்… சத்தம் கொடுத்து வண்டியை வேகமாக ஓட்டுகிறோம்….. இப்படி திடீரென நம்மை நினைவுகளில் மூழ்த்திவிட்டது சின்ன வயதில் நாம் பயன்படுத்திய நடைவண்டியைப் பரண்மேல் பார்த்த அந்த ஒரு கணம்.
சிலருக்குப் பரண், சிலருக்கு அலமாரி, சிலருக்கு நண்பனின் ஒரு வார்த்தை, மானா பாஸ்கருக்கு ஒரு கவிதை…. போதும் சின்ன வயதுக்கு மீண்டும் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம்.
“தென்னையின் நிழல் முத்தமிடும்
கொல்லைப்புறத்தில்தான்
எங்கள் விளையாட்டு.”
நிழல் முத்தமிட்டு முத்தமிட்டுத்தான் கொல்லைப்புறம் பூக்களைப் பூக்கிறதோ?
சிறியவர்களுக்கு விளையாட்டு. பெரியவர்களுக்குத் தொந்தரவு. வாண்டுகளுக்கு சாகசம். வயதானவர்களுக்கு சத்தம். இளையவர்களுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். முதியவர்களுக்கு எரிச்சல், தொல்லை, ஏச்சு பேச்சு. அங்கும் பையன்களைச் சபிக்கிற அத்தை இருக்கிறாள். அவரவரை வைய ஓர் ஆள். அம்சவேணியாக இருக்கலாம். மாலதியாக இருக்கலாம். மானா பாஸ்கரனுக்கு புஷ்பவள்ளி அத்தை. நுணா மரம் காதலர்களுக்கு மடி கொடுத்ததோ இல்லையோ சிறுவர்களுக்கு தெருவே தேய்ந்து போகிற அளவுக்குத் தேர்கள் கொடுத்திருக்கிறது. உப்புப் போட்ட கிளுவை இலை பற்றிய நினைவுகளை அசைபோடுகையில் முதிய வயதிலும் பசியாறிவிடுகிறது. அந்தக் காலத்து மண் சமையலை மறக்க முடியுமா?
அன்று கொல்லைப் புறத்தில் வயதுக்கு வந்த கிருஷ்ணவேணி அக்கா இன்று எத்தனைப் பிள்ளைகளுக்குத் தாயாகி இருப்பாளோ?
“அம்மா அத்தை அக்காவென
வீட்டுப்பெண்களுக்கு
கொல்லையின் கட்டடக்கடேசியிலிருந்த
குப்பைமோடுதான் கழிப்பறை”
ஒரு கிராமத்தின் உறுத்துகிற உண்மை நம் முகத்தில் காரி உமிழ்கிறது. கவிதை தனது ரௌத்ரத்தைப் பதிவு செய்கிற இடம் இது. ஆனால் மெல்லிய ரௌத்ரம். யார் மீதும் நெருப்பை வாரி இறைக்காத ரௌத்ரம். வாசிக்கிற வாசகனைச் சட்டென்று ஒரு கணம் யோசிக்க வைக்கிற ரௌத்ரம். இது மனதுக்குள் புழுங்குகிற மௌனமான ரௌத்ரம்.
காட்டாமணி இலையில் செய்த நெத்திச் சுட்டியை சூட்டிய சரஸ்வதி எங்கு போய் இல்லறத்தைப் படிக்கிறாளோ? இது மானா பாஸ்கருக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனால் நெத்திச் சுட்டியின் வடு சரஸ்வதியின் நெற்றியில் நிச்சயம் இருக்கக் கூடும். சின்ன வயது நெத்திச் சுட்டிக்கு அடகுக் கடையில் வைக்கும் ஆபத்து இல்லையல்லவா? நாரத்தங்குருவிச் சத்தம் கேட்ட அந்த கொல்லைப் புறம் இன்று எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கலாம். கட்டடங்கள் முளைத்திருக்கலாம். காணாமல் போயிருக்கலாம். கார்ப்பரேட் விழுங்கியிருக்கலாம். ஆனால் மானா பாஸ்கரனின் நினைவுகளில் வாழும் கொல்லைப் புறம் நித்தியமானதல்லவா?
தென்னையின் நிழல் முத்தமிடும்
கொல்லைப்புறத்தில்தான்
எங்கள் விளையாட்டு
‘ஏந்தான் நாயித்துகெழமை வருதோ…’
தெருப்பையங்களை
சபிப்பாள் புஷ்பவள்ளி அத்தை.
நுணாக்காயில்
ஈர்க்குச்சி தேர் கட்டி
நானும் அவர்களும் இழுப்போம்.
உப்புப்போட்ட கிளுவை இலை
எங்களுக்கு தீனியாகும்.
அடை சுட்டுத் திங்க
கல்யாண முருங்கையிலை
பறிக்க வந்த கிருஷ்ணவேணியக்கா
வயசுக்கு வந்ததும்
கொல்லைபுறத்தில்தான்.
அம்மா அத்தை அக்காவென
வீட்டுப்பெண்களுக்கு
கொல்லையின் கட்டக்கடேசியிலிருந்த
குப்பைமோடுதான் கழிப்பறை.
சாய்வாக வளர்ந்திருந்த
தென்னை மரத்துக்கு
கோண தென்னமரமென்று
பெயர் வைத்திருந்தார் அப்பா.
காட்டாமணி இலையில்
நெத்திச்சுட்டி செய்து
நான் சரசுவதிக்கு மாட்டிவிட்டதும்
அங்குதான்.
இன்று என் ஞாபகங்களில் மட்டுமே
வாழ்கிறது
நாரத்தங்குருவி சத்தம் கேட்கும்
கொல்லைபுறம்.
– மானா பாஸ்கரன்
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.co.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க