Poetry

பெருமாள் ஆச்சி கவிதைகள்

Spread the love
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று ...
சடசடவெனப் பெய்யத் தொடங்கும்
மழையால் சேலைத் தலைப்பால் தலையை மூடுகிறாள்
அலுவலகத்திலிருந்து திரும்பும்
பெண்ணொருத்தி
சாலையோரக் கடையில்
சற்று நேரம் அடைக்கலமாகின்றான்
இருசக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தவன்..
நனையும் உடலைப்பற்றிய கவலையின்றி
வெகு விரைவாக
எங்கு செல்கின்றானோ அவ்வழிப் போக்கன்..
கண்ணாடி அடைக்கப்பட்ட காரில்
பயணிக்கும் மனிதர்களை
ஏக்கமாகப் பார்க்கின்றது
நடைபாதையோரக் குழந்தை..
நெகிழிச் சாக்குகளாலான
தன் இருப்பிடத்திலிருந்து
வேடிக்கை பார்க்கும்
மனிதனின் கண்களிலிருந்து
வழிவது போன்றிருக்கின்றது
இம்மழை..
சாலையோர வீட்டின் சாளரத்திலிருந்து
கைகளை நீட்டி
மழைநீரைப் பிடிக்கும் குழந்தையிடம்
என்ன செய்கிறாய் என்று
உள்ளிருந்து அதட்டுகின்றது ஒரு குரல்.
மழையைப் பிடிக்கிறேன் என்கின்றது  குழந்தை
இப்பொழுது மழை
முன்னைவிடவும் அழகாகத் தெரிகின்றது.
நினைவலைகள் | கார்த்திக்கின் ...
மனக்கடலில் நினைவலைகள்
உருவாவதும் மடிவதுமாக
மீண்டும் மீண்டும் இதயக்கரைகளை முட்டுவதுண்டு..
சில அலைகள் மிகவும் அமைதியானவை
சில அலைகள் மிகவும் மெதுவானவை
சில அலைகள் ஆர்ப்பரித்துப் பின் அமைதியாகும் தன்மையுடையவை..
ஆக்ரோச அலைகளின் மோதலில்
அதிக சேதாரத்தை எதிர்கொள்கின்றன இதயக்கரைகள்..
உறங்கும் பொழுதுகளில் மன அலைகளின் மோதல் மிகக் குறைவே..
கனவுச் சூறாவளிகள் சில நேரங்களில்
கொந்தளிப்பைக் கொட்டுவதுண்டு.
இளமையில் அலைகளை இரசிக்கும் மனநிலையே வாய்க்கின்றது.
வயோதிகம் காரணமாக
அலைகளின் வேகம் இதயக்கரைகளை பலகீனமாக்குவதுண்டு..
சில அலைகள் மனக்குப்பைகளை
இதயக் கரைகளில் கொட்டிவிட்டுச் செல்வதுண்டு..
சில அலைகளிலிருந்து மீள
நம்பிக்கைத் துடுப்புகள் போடப்படுவதுண்டு..
நினைவுகளை ஆழ்மனத்தில் புதைத்த பின்பு
அமைதியானது மன அலைகள்..
நினைவலைகளற்ற கடல் அமைதியா?
ஆபத்தா?
ஆழிப்பேரலைகள் உருவாகாத வரை
பெருஞ்சேதமில்லை..
மரண சிந்தனைகள் – குர் ஆன் கல்வி
ஒரு அகால மரணத்தைக்
கண்முன்னே காணும் நொடிகள்
நரக வாசல் திறக்கும் தருணங்கள்
வழியனுப்பியவர்களுக்கும்
வருகையை எதிர் நோக்கிக் காத்திருப்பவர்களுக்கும்
சற்றுத் தாமதமாகத்தான் கிடைத்திருக்கும்
அம்மரணச் செய்தி..
பெருநகரமொன்றிலிருந்து
ஊர் திரும்புதலின் பொருட்டு
புறப்பட்ட அவனின் பயணத்தை
இடையில் நிறுத்தியது காலனா? காலமா?
வசதியாகப் பயணித்தலின் பொருட்டுக்
குளிர் சாதனப் பேருந்திலிருந்த அவன் உடல்
சில மணி நேரங்களில்
குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்படுதல் விதியா?
இயற்கை உந்துதலுக்காக
நெடுஞ்சாலையோரம்
ஒதுங்கித் திரும்பிய அவ்விளைஞனின்  மேல்
அவன் பயணித்த பேருந்தே இடித்து
இன்னுயிரைப் பறிப்பது கொடுமையின் உச்சம்.
உயிரற்ற உடலைக்கண்டதும்
‘உச்’ கொட்டிய சக பயணிகள்
தங்கள் உயிரையும், உடைமையும் பாதுகாத்து
அவ்விடம் விட்டு நகரவே விரைந்தனர்..
அவனின் இறுதிப்பயணத்தின் இடையில் இறங்கிய
பயணிகளின் உடைமைகளைத் திருடிச் சென்றனர்
சில இழிபிறவிகள்..
என்றே மரித்துப்போன அவனின் இறப்பை
அவனைச் சார்ந்தோருடன்
நானும் அவ்வப்பொழுது நினைக்கிறேன்..
மரண பயங்கள் மனத்தினுள் வந்து செல்கின்றது..
பெருமாள் ஆச்சி,
சென்னை

Leave a Response