Book Review

நூல் அறிமுகம்: பெண்கதை எனும் பெருங்கதை – திவாகர். ஜெ

Spread the love

 

பெண்களின் உலகமே தனியானது. தனித்துவமானதும் கூட. ஆண்களால் ஒருபோதும் அதனை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களின் உலகில் அவர்கள் தான் மகாராணி. அவர்களுக்கென்று தனி சட்டதிட்டங்கள். யோசித்துப் பாருங்களேன். மிகப் பெரும் தீங்கிழைக்கும் ஆண்களுக்குக் கூட அவர்களின் நீதிமன்றத்தில் மன்னிப்புண்டு. அவர்கள் தங்களின் அன்பான எதிரிகளின் மீது பிரயோகிக்கும் அதிகப்படியான வலுமிக்க ஆயுதம் மெளனம் மட்டுமே.

மனித இனம் தோன்றிய நாள் முதலாய் பெண்ணே இனக்குழுவின் தலைவியாய் இருந்தாள். காலப்போக்கில் உடல்வலுவின் காரணமாய் பெண்ணை ஆண் அடக்கியாளத் தொடங்கினான். ஆயினும் இன்றைக்கு வரை மனவலிமையைப் பொறுத்தவரை பெண்தான் முதலிடம் பெறுகிறாள்.

இரண்டு பெண்கள் பேசிக்கொள்வதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. வானில் மேகமாய் உருக்கொண்ட நீர்த்திவலைகள் விண்ணிலிருந்து மண்ணிற்கிறங்கி மலைமீதிருந்து அருவியாய் விழுந்து காடு, கரையெல்லாம் வளமாக்கி வற்றாத ஜீவநதியாய் மண் குளிர்வித்து இறுதியில் பேரலை கொண்ட சமுத்திரத்தில் கலப்பது போல, இந்நூலும் இரு பெண்கள் தங்களுக்குள் அவர்களிருவருக்குள் மட்டுமே புரியும்படியான சைகையோடு கலந்த ஏதோவொரு சங்கேத மொழியில் பேசிக் கொள்வதில் தொடங்கி, பெரிய வீடுகளில் கோழியடிக்கும் வைபவத்தைக் கடந்து, பாட்டிமார்களின் பேச்சில் லயித்து, வைத்திய பலன்களைக் கூறி, கூனிப்பாட்டியின் கூன் விழுந்த வரலாற்றைச் சுவைபட எடுத்துரைத்து, மாடுபிடி விளையாட்டு தோன்றிய வரலாற்றைக் கடந்து கரை காணா கடல் நோக்கி பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கிறது கி.ரா.வின் எழுத்தென்னும் பேரருவி.

பெண் கதை எனும் பெருங்கதை | பெண் கதை ...

வேலைப்பளு யாருக்கதிகம் ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்றால் அழகாய் உரைக்கிறார் நூலில்: *”ஒரு பிள்ளைப் பேறுக்காணுமா இவனுகளோட நொண்டி வேலை. வெறும் துதிப் பாடல்களாலும் கோவில் சிலைகளாலும் கும்பிட்டுவிட்டால் தீர்ந்ததா இவன்களோட கடன்சுமை*

கதையில் வரும் கூனிப்பாட்டிக்கு, இளவயதில் திருமணமாகி ஊருக்கு வரும்போது அவளுக்கு கூன் இல்லை. நூறு பவுன்கள் கொண்ட காசுமாலையோடு பெயர் சொல்லத் தெரியாத எத்தனையோ நகைகள் சுமக்க முடியாமல் அவள் கழுத்தில் போட்டுவந்த நகைகளின் கனம் தாளாமல் கூன் விழுந்துவிட்டதாய் ஊரில் கூறுவார்கள். அத்தனை வசதியான வீட்டிலிருந்து வந்தவள். புகுந்தவீட்டிலிருந்த 5 பெண்களையும் கரையேற்றிவிட்டவள். தலையாரியை ஒரேயடியில் தரையில் வீழ்த்தியவள், கமலை இறைப்பாள், குழந்தைகளுக்கு கதை சொல்லுவாள் இதுபோன்ற அவளைப் பற்றிய விவரணைகள் நூலில் ஆங்காங்கே கேட்கையில் நமக்குள்ளும் நம் பாட்டியோ அல்லது ஊரிலிருந்த யாரோ ஒரு பாட்டியோ நினைவிலாடுகிறார்கள்.

“செவ்வாய்க்கிழமை விரதம்” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாசிக்கையில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். “தொடுமுனை” என்றொரு கதை. வாசித்து முடித்தவுடன் அப்படியொரு சிரிப்பு எனக்குள். நீங்களும் படிக்கையில் உங்களாலும் நிச்சயம் சிரிப்பையடக்க முடியாது தான்.

நம் முகம் கண்டே, நாடித்துடிப்பு கண்டே இன்ன வியாதியென்று அறிந்து பச்சிலை மருந்து தருவார்கள் நம் பாட்டிமார்கள். ஆனால், *”புதிய காலத்து டாக்டர்மார் இப்படியெல்லாம் செய்வதில்லை. எல்லாம் நம்மிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வார்கள்.”* உண்மை.

*”பாட்டி வைத்தியம் என்று தான் உண்டு. தாத்தா வைத்தியம் என்று கிடையாது. பெண்ணிலிருந்து வளர்ந்ததுதான் எல்லாம்”* என்கிறார்.

“குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?” சொல்ல மாட்டேன். நூலைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக, நூலினை இவ்வாறு முடிக்கிறார்.
“புதுமைகளை வரவேற்கும் அதேகாலத்தில் பழமைகளை மறந்தார்கள்.
ஊருக்குப் போனால் நமது பாட்டிமார்களாவது கண்ணுக்குத் தட்டுப்படுவார்களா?
பாட்டி என்று இருந்தால்
முருகனும் வருவான்
என்னபழம் வேணும் என்று கேட்க.
பாட்டி இல்லை
முருகனும் வருவதில்லை.”

கிராமத்து வாசனையோடு, மறந்த நம் பாரம்பரியத்தை நினைவூட்டி, மறைந்த நம் பாட்டிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் கரிசல் மண்ணின் மகா சக்ரவர்த்தி கி.ரா.

வாசிப்பும், பகிர்வும்

*~ திவாகர். ஜெ ~*
கணித ஆசிரியர்
காஞ்சிபுரம்.

நூல் : பெண்கதை எனும் பெருங்கதை
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் பதிப்பகம்
பக்கங்கள் : 93
விலை : ₹ 90

Leave a Response