Article

பேரிடரும் பெரும் குழப்பமும் – அனாமேதயம்

Spread the love

 

அவருடைய வாழ்க்கையில் நாவெல் கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை மனிஷ் திரிபாதி பாவம் அறிந்திருக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அதற்கான அடையாளங்கள் மெல்லத் தலைகாட்டத் தொடங்கின… முதலில் சிறிய அளவில் தோன்றிய அவை, இறுதியில் பைத்தியக்காரத்தனம், குழப்பம், பெரும் குழப்பம், வடிகட்டிய முட்டாள்தனம், கையாலாகாத்தனம், திறமைப் பஞ்சம்… என்று சென்று முடிந்திருந்தன. 

மார்ச் மாத தொடக்கத்தில், மனிஷ் பணிபுரிந்து வந்த அந்த மருத்துவமனை நிர்வாகம் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை நிறுத்தி வைத்தது. அந்தக் கருவிகளின் மேல் பெரிய அறிவிப்புகள் ஒட்டி வைக்கப்பட்டன. கோவிட்-19 நோய் தொற்றுகின்ற ஆபத்து இருப்பதால், இனிமேல் புதியதொரு முகஅடையாளத் தொழில்நுட்பத்தின் மூலம், கைகளைப் பயன்படுத்தாமல் வருகைப்பதிவு உறுதி செய்யப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பின் உள்ளடக்கம்.  

எதிர்காலத் தொழில்நுட்பம் கண்டு பிரமித்துப் போன மனிஷ், அதற்குப் பிறகுதான் மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு ஹால், கழிப்பறை கதவுகள் அனைத்தையும் கைகளைக் கொண்டே திறக்க வேண்டியிருப்பதைக் கவனித்தார். புதிய முயற்சியின் நோக்கத்தையே அவை சிதறடிப்பதை எண்ணி அதிர்ந்து போனார். சரி, சரி.. இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று தனது நினைப்பைக் கடந்து புதிய தொழில்நுட்பத்திற்குத் தயாரானார். 

அடுத்த நாள், அங்கே வந்திருந்த ஐ.டி. இளைஞர்கள் சிலர் அவருடைய முகத்தின் பல்வேறு கோணங்களைக் காமெராவில் பிடிப்பதற்காக, அவரை விதவிதமாகப் போஸ் கொடுக்க வைத்தனர். பிளீஸ் சார்..புரொஃபைல் போட்டோ சார்..கொஞ்சம் சிரிங்க சார்.. ஆங்..ஓகே சார்.. தேங்க் யூ சார்.. காமெராவை அப்படி மொறைக்காதீங்க சார்..நெற்றியைக் கொஞ்சம் காமிங்க சார்.. என அவரை 90-களின் அமெச்சூர் மாடலாகவே ஆக்கி வைத்து அழகு பார்த்தனர். 

அடுத்த நாள் புதிய தொழில்நுட்பம் தயாராகி பொருத்தப்பட்டிருந்து. அவர் அந்த புதிய மெஷின் முன் நின்று முகத்தை மேலும் கீழுமாக ஆட்டியும் பலவிதமாக அழகு காட்டியும் பார்த்தார். ஆனால் மெஷினில் எந்த அசைவும் தெரியவில்லை. எப்படி தனது வருகையைப் பதிவு செய்வது என்று மலைத்து நின்றார். அந்த மருத்துவர் படுகின்ற பாட்டைக் கவனித்த மருத்துவமனையின் செக்யூரிட்டி உதவிக்கு வந்தார். 

“சார்..மெஷின் உங்களைப் படம் பிடிக்கணும்னா, அதோட திரையைத் தொட்டு ஆன் பண்ணுங்க சார்..அதோ அந்த பட்டனை…”

“ஓ, தாங்க்ஸ் மேன்.. அதாவது எந்த இடத்தையும் யாரும் தொடாம தடுக்கப்போற நாம, கைகளால் தொடாமல் இருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் இந்த மெஷின ஆன் பண்ணணும்னா முதல்லே அதைத் தொடணும்.. சரியா?”

“யெஸ் சார்.. திரையை முதல்லே தொடுங்க.. அதுக்கப்பறம் காமெராவுக்கு முன்னாலே போஸ் கொடுங்க..”

Pandemic and Pandemonium: 7 Days in Birmingham | The Birmingham Times

சரியாப் போச்சே என்றவாறு மனிஷ் செக்யூரிட்டி சொன்னதைச் செய்தார். இதுவரை வாழ்நாள் முழுதும் அவர் அழுத்தமாக நம்பிக்கை வைத்த ஒன்று உண்டு.. அது… இந்த உலகம் கிறுக்குத்தனமானது.. இந்தியாவும் அப்படித்தான்.. வாழ்க்கையில் பிழைத்துப் போக வேண்டுமானால், உலகத்தோடு ஒட்ட ஒழுகவேண்டும். அதாவது, கிறுக்குகளோடு உற்சாகமாகச் சேர்ந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை சரிதான் என்பது இப்போதும் நிரூபணம் ஆகிப் போனது.  

மறுநாள் ஆஸ்பத்தியில் இருந்த எல்லா டாக்டர்களையும் கொரோனா தொற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிமுறையைத் தெரிந்து கொள்வதற்காகவும், மருத்துவமனை ஊழியர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, மருத்துவமனை நிர்வாகம்  வேண்டுகோள் விடுத்திருந்தது. பேசுவதற்கு முன்பாகவே ஓய்ந்து போயிருந்த பேராசிரியர் ஒருவர் மேடையேறினார். பயிற்சி பெற்ற, அனுபவம் மிக்க மருத்துவ ஊழியர்களிடையே அவர் உரையாற்றத் தொடங்கினார்… 

”இதற்கு கொரோனோ வைரஸ் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? கொரோனா என்றால் ஸ்பானிஷ் மொழியில் (உண்மையில் அது லத்தீன் மொழியில் என்று மனிஷ் நினைத்தார்.. சரி, அது போகட்டும்) கிரீடம் என்று அர்த்தம். இந்த வைரஸுக்கு ஒரு கிரீடம் இருக்கிறது. 

கிரீடம் என்றால் என்னன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? ராஜாக்களும் ராணிகளும் தலையில் ஒரு மகுடத்தை வைத்துக் கொள்வார்கள் இல்லையா, அதுதான்

அந்த கிரீடத்தை விளக்குவதற்கு பவர் பாயிண்ட் ஸ்லைடு காண்பிக்கப்பட்டது. கிரீடம் அணிந்த மத்திய காலத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் கார்ட்டூன் படம் காண்பிக்கப்பட்டது. என்ன, அந்த கார்ட்டூன் மிகமிக மோசமாக வரையப்பட்டிருந்தது. தான் விளக்கியது சரியான முறையில் பார்வையாளர்களுக்கு புரியவில்லையோ என்று நினைத்த அந்த சொற்பொழிவாளர், தன் தலையைச் சுற்றி கிரீடம் இருப்பது போல அதன் வடிவத்தைத் தலைக்கு மேலே சுற்றிக் காண்பித்தார். இவ்வாறு கொரோனா வைரஸை விளக்குவதிலேயே பல நிமிடங்கள் ஓடிப் போனது. 

பிறகு சார்ஸ்-கோவி2 எப்படித் தோன்றியது என்பது குறித்து அந்த பேராசிரியர் பேச ஆரம்பித்தார். வவ்வால் சூப் சாப்பிடும் சீனர்களிடருந்து இது தோன்றியது என்று நம்பப்படுகிறது. சீனர்கள் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் உள்ளே தள்ளுபவர்கள் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே.. ஹா ஹா ஹாஎன்று சிரித்தார்.

பார்வையாளர்களும் பேராசிரியர் ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்ற நினைப்பில் சிரித்து வைத்தனர். 

அடுத்து, ஒரு கப்பில் உள்ள வவ்வால் சூப்பை ஒரு சீனக் குடிமகன் அள்ளி அள்ளி விழுங்குவது போன்ற அப்பட்டமான இனவெறி நிறைந்த கார்ட்டூன் காண்பிக்கப்பட்டது. 

பேசிக் கொண்டிருக்கிற இந்த ஆளை அவனிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று மனிஷ் நினைத்துக் கொண்டார். கிண்டர்கார்டன் வகுப்பில் படிக்கும் பேராசிரியரின் குழந்தைகள் எம்எஸ் பெயிண்ட் வைத்து வரைந்த கார்ட்டூன்களை ஒருவேளை கொண்டு வந்து விட்டாரா அல்லது stupidracism.com என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இந்த இனவெறிக் கார்ட்டூன்களைக் கொண்டு வந்திருக்கிறாரா? என்பது மனிஷுக்குப் புரியவில்லை. 

Millyz - Pandemic Pandemonium (audio) - YouTube

கொரோனா வைரஸ் குறித்து இந்த அருமையான காட்சிகள், விளக்கங்களுக்குப் பிறகு கேள்வி-பதில் படலம் தொடங்கியது. பார்வையாளர்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அது சரிதான். நீங்கள் எதிர்பார்த்துதான் நடந்தது. சரிபாதி மைக்குகள் வேலை செய்யவில்லை. அதனால் கேள்விகள் யார் காதிலும் விழவில்லை. குழறலான ஒலிகளை யராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

போதுமான அளவிற்கு கேள்விகள் கேட்கப்பட்டதும், பேராசிரியர் பதில் சொல்ல ஆரம்பித்தார். அவர் எங்கே பதில் சொன்னார், கேள்வி கேட்டவர்களைத் தாக்க ஆரம்பித்தார்.. அவர்களைப் பார்த்துக் கத்தினார்.. எந்தவொரு கேள்வியையும் நேரடியாகச் சந்திக்காமல் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை இவரிடம்தான் கற்க வேண்டும். பிபிஈ என்று சொல்லப்படும் தனிப்பட்ட பாதுகாப்புக் கருவி பற்றாக்குறையாக இருப்பது சம்பந்தமான கேள்வி எதுவும் இருந்தால், பதிலளிக்கும்  பொறுப்பை யாரிடமாவது தள்ளிவிடுவது என்ற முடிவிலேயே அவர் இருந்தார்.

ஒரு தைரியசாலி முட்டாள் எழுந்து ஒரு வேளை எனக்கோ அல்லது வேறொரு சுகாதாரப் பணியாளருக்கோ உடல்நலமில்லாமல் போய்விடுவதாக வைத்துக் கொள்வோம்.. நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும்போதே தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது அல்லது வென்டிலேட்டர் தேவைப்பட்டது என்றால், எங்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுமா? அப்படி அளிக்கப்படுமானால் எனது இன்சூரன்ஸ் பாலிசி அந்த சிகிச்சைக்குப் பயன்படுமா? அப்படி எங்களுக்கு சிகிச்சையளிக்க இந்த ஆஸ்பத்திரி மறுத்து விடுமானால், எனது இன்சூரன்ஸ் பாதுகாப்பு வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் பயன்படுமா? என்று வரிசையாக சில கேள்விகளை அடுக்கினார்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் பேராசிரியர் கோபம் அடைந்தார். 

அது சரி.. முதலில் உனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்று நீ ஏன் நினைக்க வேண்டும்? நீ ஒரு இளைஞன்.. நல்ல உடல்நலத்தோடுதானே இருக்கிறாய்?.. ஹா ஹா ஹா.. 

என்னைப் பாருங்க.. அறுபது வயதைத் தாண்டிக் கொண்டிருக்கிறேன். நான் இந்த மாதிரியெல்லாம் கவலைப்படுவதில்லை. நல்லாக் கேளுங்க.. உங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாம் எப்போதுமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கணும்னே நினைக்கறீங்க. அந்தக் காலத்திலே நாங்க நான்கு நாளைக்கு தொடர்ச்சியா கண்முழிச்சப்பறமும் எங்ககிட்ட எனெர்ஜி இருக்கும்.. வீட்டுக்குப் போயி அங்கே உள்ளவங்களை அடிக்கற அளவு எனெர்ஜி இருக்கும்.. ஹா ஹா ஹா…

அந்த ஜோக் ஒரு பக்கம் இருக்கட்டும். உனக்கு உடம்பு சரியில்லாமப் போயிட்டா, உன்னை முதல்லே வெளியே அனுப்பிருவோம். மற்றவங்களுக்கு நீ வைரசைக் கடத்தி விட்டுட்டேன்னா என்ன செய்றது? அந்த ரிஸ்கையெல்லாம் நாங்க எடுக்க மாட்டோம். உன்னை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவோம். 

Image

முன்பு வேலைபார்த்த அரசாங்க ஆஸ்பத்திரி மனிஷ் நினைவிற்கு வந்தது… அங்கே போயிட்டா, இன்சூரன்ஸ் பிரச்சினை இருக்காது இல்லியா? அங்கேதான் சிகிச்சை இலவசமாச்சே? ..

பேராசிரியர் தொடர்ந்தார்…

ஆனா என்ன… அங்கே மூணு டி.பி. நோயாளிகளோட சேர்ந்து ஒரே படுக்கையிலே ஒரு வேளை படுக்க வேண்டியிருக்கலாம்… நர்சுங்களுக்கெல்லாம் ஓவர் வொர்க்ங்கறதினாலே அப்பப்ப தப்பான மருந்தை குடுத்துடுவாங்க.. ஒரே சிரிஞ்சையும் ஊசியையும் பல பேருக்குப் போடுவாங்க, தெரியுமில்ல? ஆனா உன்னைப் போன்ற ஒரு ராணுவ வீரனோட வாழ்க்கையிலே இதெல்லாம் சாதாரணமப்பா..நானும் ராணுவத்திலே முன்னாலே இருந்திருக்கேன்.. ஆனா, ஆபீசரா இருந்திருக்கேன்..இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நாங்க எப்பவும் புகார் செஞ்சதே இல்லே. எல்லாத்தையும் யாராவது வெள்ளி ஸ்பூன்ல எடுத்துக் குடுக்கறதை வாங்கியே உங்களுக்கெல்லாம் பழக்கம் ஆயிடிச்சு. நாம இப்ப போர்க்களத்திலே இருக்கோம் மை டியர் பாய்.. சியாச்சின் பனிமலை மேலே நின்னுக்கிட்டிருக்கற ராணுவ வீரர்கள் மாதிரி.. நீங்க இப்ப எல்லாத்தையும் ஒதுக்கிட்டு ஒரே டீமா எழுந்து நிக்கணும்..பாதுகாப்பு கவசம் இல்லே.. அது இல்லே, இது இல்லேன்னு புலம்பிக்கிட்டு நிக்காதீங்க.. சரியா

டாக்டர்கள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டனர். பேராசிரியர் போட்ட போடில் அனைவரும் அமைதியாகி விட்டனர். கேள்வி கேட்டவர் பரிதாபமாக தலை வணங்கிவிட்டு அமர்ந்து கொண்டார். பேராசிரியர் எல்லோரையும் வெற்றிவீரனாகப் பெருமிதத்துடன் பார்த்தார். எவனாவது என்னைக் கேள்வி கேப்பீங்க? என்று அதற்கு அர்த்தம். அந்தளவுக்கு முட்டாள்கள் யாரும் அங்கே இல்லை. கேள்விகள் எதுவும் எழவில்லை.

சொற்பொழிவாளர் பார்வையாளர்களைப் பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டு ஒரு கமர்சியல் பிரேக் விட்டார்.

*நிர்வாகத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தனது போராட்டத்தைத் தொடர்ந்து, ஓரிரு நரைமுடிகளுடன் வழுக்கைத்தலையாகிப் போன ஒரு டாக்டர் கொரானா காலத்து  மருத்துவ உண்மைகளைப் பற்றி எழுதியதில் ஒரு பகுதி. 

லைவ் ஒயர் இணைய இதழில் Pandemic and Pandemonium என்ற தலைப்பில் வந்த கட்டுரை.வந்த கட்டுரை. 

தமிழில் பேரா. கே.ராஜு 

ஒரிஜினல் கட்டுரையைப் படிக்க லிங்க்: 

https://livewire.thewire.in/health/kafkaesque-medical-reality-india/

 

  

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery