Book Review

நூல் அறிமுகம்: ’பகல் கனவு’ கற்றல் கற்பித்தல் முறையில் மாற்றங்களைக் காண விழைந்த ஜிஜுபாய் பதேக்கா.!

Spread the love

 

கல்வியியல் சிந்தனைகள் என்றதும், ஜான் ஹோல்ட், பாவ்லோ ஃப்ரெயர், மரியா மாண்டிசோரி, ஜான் டூவி போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்களே நம்முடைய மனதில் தோன்றுவார்கள். அதே அளவிற்குக் கல்வியியல் சிந்தனைகளில் புரட்சிகரமான மாற்றங்களை முன்மொழிந்த இந்தியக் கல்வியாளர்களாக ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், விவேகாநந்தர், பெரியார் போன்றோர் திகழ்கிறார்கள். இவ்வரிசையில்1930களில் இந்தியாவில் ஆரம்பக் கல்வியின் கற்றல் கற்பித்தல் முறைகளில்  பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றிகண்டவராக ஜிஜுபாய் பதேக்கா இருக்கிறார். 

How Gijubhai Badheka taught - mumbai guide

ஜிஜுபாய் பதேக்கா

காலனிய காலத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்திட மெக்காலே கொண்டுவந்த கல்வி முறை இந்தியக் கனவுகளை நிறைவேற்றுவதாக இருந்திடவில்லை. ஜிஜுபாய் பதேக்கா முன்வைத்த கல்வியல் கோட்பாடு தாகூர் ‘சாந்தி நிகேதன்’ நிறுவனத்தில் முன்னெடுத்த முயற்சிக்கும், மகாத்மா காந்தி ’பால மந்திர்’ பள்ளிகளில் திட்டமிட்டவற்றிற்கும் இணையாக இருந்தது. 2005இல் இந்தியக் கல்வி முறைகளில் மாற்றங்களைப் பரிந்துரை செய்ய பேரா.யஷ்பால் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு ‘சுமையின்றி கற்றல்’ என்ற முழக்கத்தை வலியுறுத்திருந்தது. அதேபோன்று ஜுயாய் பதேக்காவும் குழந்தைகள் கற்றலைக் கற்கண்டாகப் பாவிக்க வேண்டும் என்றே நினைத்தார். காலையில் குழந்தைகள் பள்ளிக்கு  அரை மனதுடன் வருவதும், மாலையில் பள்ளி முடியும்போது துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் வெளியேறுவதும் கல்வி முறையில் இருக்கும் குறைபாட்டின் வெளிப்பாடு தானே! குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது பயமும், பாடங்களின் மீது வெறுப்பும் இருப்பது திட்டத்தில் நிலவிடும் போதாமையன்றி வேறென்னவாக இருக்க முடியும்? 

காந்திய சிந்தனைகளை மனதில் நிறுத்தி ஜிஜுபாய் பதேக்கா தன்னுடைய ‘பகல் கனவு’ (Divasvapna) என்ற நூலில் வித்தியாசமான கல்வியியல் கோட்பாட்டை முன்வைக்கிறார். அதனாலேயே அவர் ’குழந்தைகளின் காந்தி’ என்றழைக்கப்பட்டார். ஜிஜுபாய் பதேக்கா 1885இல் குஜராத் மாநிலத்தின் பவநகர் அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்து மேற்கத்தியவழி கல்வி கற்று வழக்கறிஞரானார். தென் ஆப்பிரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்றிருந்த போது ஆசிரியப் பணியால் ஈர்க்கப்பட்ட அவர், வழக்கறிஞர் தொழிலைத் துறந்து தன்னலமற்ற ஆசிரியராக மாறினார். இந்தியா திரும்பியதும் பவநகரில் இருந்த ‘தட்சிணா மூர்த்தி வித்யார்த்தி பவனம்’ என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றினார். களத்தில் நேரடியாகப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு கற்பித்தல் வழிமுறைகள் குறித்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘பகல் கனவு’ நூல் இன்றும் பொருத்தமாக இருப்பதன் காரணம் இந்தியக் கல்வி முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்திடவில்லை என்பதன் அடையாளம் அல்லவா? 

விடுதலைக்குப் பின் கல்வி பெறும் வாய்ப்பு கோடானு கோடி குழந்தைகளுக்குக் கிடைத்தது உண்மைதான் என்றாலும் கல்வியின் தரத்தை உயர்த்திடத் தேவையான மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியாமல் போனது அவலமே. நூறாண்டுகளுக்கு முன்னர் இறந்த ஒரு மனிதர் உயிர் பெற்று இன்று வருவாரேயானால், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் மாற்றங்களைக் கண்டு அவர் நிச்சயம் ஆச்சரியப்படுவார். அதே சமயத்தில், இந்திய வகுப்பறைகள் மட்டும் சிறிதும் மாறாமல் இருப்பது கண்டு அதிர்ந்தும் போவார். துணிவும், துடிப்புமிக்க ஆசிரியர்களால் மட்டுமே வகுப்பறைகளுக்குள் மாற்றங்களைக் கொணர்வது சாத்தியமாகும். ஜிஜுபாய் பதேக்காவின் ‘பகல் கனவு’ நூல் ஆசிரியர்களிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி அவர்களை நல்லாசிரியர்களாகப் பரிணமிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. 

‘பகல் கனவு’ நூலில் ஜிஜுபாய் பதேக்காவின் கற்பனை வகுப்பறையின் ஆசிரியராக லெட்சுமி சங்கர் என்ற வழக்கறிஞரைக் காண்கிறோம். லெட்சுமி சங்கர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியைச் சந்தித்து விநோதமான வேண்டுகோளை முன்வைக்கிறார். தனக்கு ஆசிரியர் பணியில் விருப்பம் இருப்பதாகவும், கற்பித்தல் முறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள நாட்டமுள்ளதாகவும் கூறுகிறார். எனவே ஓராண்டு மட்டும் தன்னுடைய சோதனை முயற்சிக்கு அரசு பள்ளியில் வாய்ப்பளித்து உதவிட வேண்டும் என்கிறார். ஆசிரியர் பணிக்கான முறையான பயிற்சி பெறாத ஒருவரை ஆசிரியர் பணியில் நியமனம் செய்ய முடியாது என்று கல்வி அதிகாரி மறுக்கிறார். லெட்சுமி சங்கர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால் அவரின் ஆர்வத்திற்குத் தடையாக நிற்காமல் கல்வித்துறை அதிகாரி இறுதியில் ஒத்துக்கொள்கிறார். ஓராண்டு காலம் இப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்களின் ஆசிரியராக இருந்து பெற்ற அனுபவங்களை தன்னிலை மொழியில் லெட்சுமி சங்கர் வாசகர்களிடையே பகிர்ந்து கொள்வதாக இந்த நூல் அமைந்துள்ளது.

லெட்சுமி சங்கரின் முதல்நாள் அனுபவம் மிகுந்த ஏமாற்றத்துடனே  தொடங்கியது. அவரை மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றதும், மாணவர்களைப் பார்த்து பெருமிதத்துடன் “அன்பார்ந்த மாணவர்களே! நம்முடைய இன்றைய பாடத்தை தியானத்துடன் தொடங்குவோம்; நான் ’ஓம் சாந்தி’ என்று தொடர்ந்து சொல்லும்போது நீங்கள் கண்களை மூடி தியானத்தில் இருக்க வேண்டும்” என்று சொல்லி வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை எல்லாம் மூடுகிறார். இருட்டறையில் ஆசிரியர் தியானத்தில் உட்கார்ந்ததும் மாணவர்கள் காட்டுக் கூச்சல் போட்டு பள்ளியை அதிர வைத்து விடுகிறார்கள். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் வகுப்பறையின் கதவைத் திறக்கிறார். வெளியே தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கூடி நிற்கிறார்கள். “என்ன லெட்சுமி சங்கர்! இது என்ன கூத்து! இதற்கெல்லாம் இங்கு இடமில்லை. உங்கள் பரிசோதனை முயற்சி என்பது இதுதானா?” என்றதும் லெட்சுமி சங்கர் பயந்து போகிறார். அன்றைய நாளை ஒருவாறு சமாளித்துவிட்டு வீடு சென்று இரவு முழுவதும் தூக்கமின்றி என்ன தவறு நடந்தது என்று சிந்திக்கிறார். மாணவர்களைத் தயார்படுத்தாமல் தியானத்தைத் தொடங்கியது தவறு என்பதை உணர்கிறார். எந்தவொரு பரிசோதனையையும் மாணவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே துவக்கிட வேண்டும் என்ற பாடத்தை அன்றைய தினம் அவர் கற்றுக்கொண்டார். அடுத்தநாள் கதைகளுடன் வகுப்பைத் தொடங்கி மாணவர்களின் அன்பைப் பெற்றார். குழந்தைகளை அன்பினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

மாணவர்கள் பலரும் விரல் நகங்களை வெட்டிவிடாமல் நகஇடுக்குகளில் அழுக்குடன் காணப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த தொப்பிகள் கிழிந்தும், தூசி படிந்தும் காணப்பட்டன. மாணவர்களிடம் ”நாளை பள்ளிக்கு வரும்போது நீண்ட நகங்களை வெட்டிவிட வேண்டும். இவ்வளவு அழுக்கான தொப்பிகளை வீட்டில் எறிந்து விட்டு வாருங்கள்”, என்று சொல்லி அனுப்புகிறார். உடல் சுத்தம்தான் மன சுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எண்ணுகிறார். ஆனால் நகங்களை வெட்டிவிட்டு, சுத்தமாக ஒரு சில மாணவர்களே வருகிறார்கள். பெரும்பாலானோர் அழுக்குத் தொப்பிகளுடனேயே வருகிறார்கள். சிறிது நேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வருகிறது. தலைமை ஆசிரியர் அறையில் பெற்றோர்கள் குவிந்துள்ளனர். தலைமை ஆசிரியர் “என்ன லெட்சுமி சங்கர்! கல்வியில் மாற்றம் என்று சொல்லித்தானே வந்தீர்கள்! இப்போது சமூக மாற்றம் என்று கிளம்பிவிட்டீர்களே! ”இதோ பாருங்கள்! பெற்றோர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். தொப்பிகளைக் கழற்றிவிட்டு குழந்தைகளை வரச் சொல்லியுள்ளீர்கள்! சட்டைகளுக்குப் பொத்தான் தைக்கச் சொன்னீர்களாம்!” இதெல்லாம் நம்முடைய பிரச்சனை இல்லை. இப்படி எல்லாம் கெடுபிடி செய்தோமேயானால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்கிறார். அன்றைய பிரச்சனையை தலைமை ஆசிரியர் எப்படியோ சமாளித்துவிடுகிறார். ஆசிரியர் தவறு எங்கு நடந்துள்ளது என்பதை உணர்கிறார். பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறாமல் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதறிகிறார். 

குருகுலம் தமிழ் செய்திகள்!: The Great ...

அடுத்த நாள் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் நான்காம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுகிறது. லெட்சுமி சங்கர் மாணவர்களின் உடல் சுத்தம் பற்றி நீண்ட சொற்பொழிவு ஆற்றுகிறார். பெற்றோர்கள் தெளிந்த மனதுடன் திரும்புகிறார்கள். சில நாட்களில் நான்காம் வகுப்பு மாணவர்களிடையே பளிச்சென்று வித்தியாசம் தெரிகிறது. உடல் சுத்தம், ஆடை சுத்தம் என்று கலக்குகிறார்கள். லெட்சுமி சங்கர் தன்னுடைய முதல் வெற்றியை ஈட்டுகிறார். 

தினமும் கதைகளுடன் வகுப்பு தொடங்குவதால் வகுப்பில் மாணவர்களின் வருகை நன்றாக இருக்கிறது. வகுப்பில் எப்போதும் அமைதி நிலவுகிறது. மற்ற ஆசிரியர்கள் பொறாமை அடைகிறார்கள். தலைமை ஆசிரியரிடம் முறையிடுகிறார்கள். ”இது என்ன பரிசோதனை? ஆண்டு முழுவதும் கதை சொல்லப்போகிறீர்களா? பாடங்களை எப்போது முடிப்பீர்கள்?” என்று கோபத்தில் தலைமை ஆசிரியர் கத்துகிறார். கதை சொல்வது தன்னுடைய பாடத் திட்டத்தில் ஓர் அங்கம் என்றும் மாணவர்களை இறுதியாண்டு பரீட்சைக்குத் தயார் செய்துவிடுவேன் என்றும் உறுதியளிக்கிறார். ஆசிரியர்கள் சிலர் ”நாள்தோறும் உங்களால் எப்படி கதை சொல்ல முடிகிறது?” என்று கேட்கின்றனர். ஒவ்வொரு நாள் இரவும் தான் வகுப்புக்காக பல மணி நேரங்கள் படித்து தயாரிப்புடன் வருவதாக அவர் கூறியதைக் கேட்டு ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்கின்றனர். 

கதை சொல்வதிலிருந்து பாடல்கள் பாடுவது, மாணவர்களைப் பாடச் சொல்வது, உரையாடல் நடத்துவது, விளையாடச் செய்வது என்று புதுப்புது முயற்சிகளில் இறங்குகிறார். மாணவர்களின் நம்பிக்கையை முழுவதும் பெற்று விடுகிறார். படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு நூலகம் வேண்டும் என்பதை உணர்கிறார். தலைமை ஆசிரியர் தன்னிடம் இதற்கான அதிகாரம் இல்லை என்று சொன்னதும், மாவட்டக் கல்வி அதிகாரியைச் சந்திக்கிறார். ”என்ன லெட்சுமி சங்கர்! பாட்டு, விளையாட்டு என்று அசத்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்” என்று அவர் சொன்னதும் மன நிம்மதி அடைகிறார். “நன்றி! ஐயா! என்னுடைய முயற்சிகளில் சிறிது வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது. உங்களின் உதவியை நாடி வந்துள்ளேன். மாணவர்களுக்காக கதைப் புத்தகங்கள் வாங்க வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கான பணத்தில் கொஞ்சம் தருவீர்கள் என்றால் உதவியாக இருக்கும்” என்று வேண்டி நிற்கிறார். “நல்லது! உங்கள் நல்ல முயற்சிகளுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு”, என்று சொல்லி அனுப்புகிறார். அனுமதியைப் பயன்படுத்தி நாற்பது புத்தகங்களை வாங்கி வருகிறார். ஒரு சில நாட்களிலே, வகுப்பின் நாற்பது மாணவர்களும் நாற்பது கதைப் புத்தகங்களைப் படித்தவர்களாகின்றனர். வாசிப்பை நேசிக்கும் மாணவர்களாகப் பரிணமிக்கிறார்கள்.

ஒரு நாள் அடுத்த வகுப்பறையில் ஒரு மாணவர் அலறும் சத்தம் கேட்கிறது. மாணவன் ஒருவனை வகுப்பாசிரியர் பிரம்பால் அடிப்பதைப் பார்த்து வருத்தமடைகிறார். “ஏன் இப்படி அடிக்க வேண்டும்? எந்த மாணவனையும் அன்பால் திருத்த முடியுமே?” என்று அவர் ஆதங்கப்படுவதைப் பார்த்து மாணவர்கள் வியக்கிறார்கள். 

மாணவர்களிடம் ஒழுக்கம், சுத்தம், கல்வியில் கவனம் ஆகியன ஏற்பட்டதும் முதலில் மொழிப் பாடத்தை ஆரம்பிக்கிறார். பெயர்ச் சொல், வினைச் சொல், துணைச் சொல் பயிற்றுவிக்க இரவு முழுவதும் கார்டுகளைத் தயாரிக்கிறார். அதுவரையிலும் கசந்திருந்த இலக்கணப் பாடம் மாணவர்களுக்கு இப்போது இனிக்கிறது. அறிவியல் பாடம் கற்பிக்க மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்கிறார். ஆற்றோரம் மரத்தடியில் வித்தியாசமான சூழலில் இயற்கையுடன் இயைந்து மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். மண்ணைக் குழைத்து, பிசைந்து மாணவர்கள் பல அறிவியல் மாடல்களைச் செய்கிறார்கள். மாணவர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்ட பொருட்களால் வகுப்பறை நிறைகிறது. வரலாறு கற்பிக்க கதைகளே சரியான வடிவம் என்பதால் வரலாறு முழுவதையும் கதை வடிவில் சொல்லிப் புரியவைக்கிறார். அவருடைய புவியியல் வகுப்பை மாணவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். உலக வரைபடத்தை வகுப்பறையின் சுவற்றில் மட்டுமல்ல மாணவர்களின் மனதிலும் பதியவைக்கிறார். 

அடுத்து கல்வி இயக்குனரின் வருகை என்று சொல்லி பள்ளி அல்லோகலப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் வகுப்பின் கெட்டிக்கார மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, சொற்பொழிவு ஆற்றவும், கவிதைகள் படிக்கவும் அவர்களைத் தயார் செய்கிறார்கள். இதற்கென ஆசிரியர்கள் எழுதிக்கொடுத்ததை, அந்த மாணவர்கள் பல நாட்களுக்கு மனனம் செய்கிறார்கள். அந்த மாணவர்கள் மட்டுமே இயக்குனர் முன்பு நிறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்ற இந்தச் சடங்கு, இயக்குனருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் அவரும் சடங்காகச் சில வார்த்தைகளைச் சொல்லி பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் நான்காம் வகுப்பு மாணவர்கள் தனித்த அடையாளத்துடன் வெளிப்படுகின்றனர். லெட்சுமி சங்கர் ஒரு நாடகத்தை இயற்றி மாணவர்கள் கையில் கொடுத்துவிடுகிறார். அவர்களே கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வசனங்களை அவர்களே எழுதி மேடையில் அரங்கேற்றுகிறார்கள். அசத்துகிறார்கள்! ஆங்கிலேயரான அந்தக் கல்வி இயக்குனரும், மாவட்டக் கல்வி அதிகாரியும், பிறரும் மாணவர்களை வியந்து பாராட்டுகிறார்கள். 

Divaswapna

பள்ளி ஆண்டுத் தேர்வில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட கல்வி அதிகாரியின் நேரடிப் பார்வையில் தேர்வு நடைபெறுகிறது. கணிதப் பாடம் மட்டும் முற்றுப்பெறாமல் இருப்பதை லெட்சுமி சங்கர் ஒத்துக்கொள்கிறார். இருப்பினும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அதிகாரி தயாராக இருக்கிறார். வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டும் பயிற்சியில் வளர்ச்சியடையாமல் இருப்பதால் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவிப்பது சரியல்ல என்கிறார். அடுத்த கல்வி ஆண்டில் கணிதம் கற்பிப்பதிலும் புதுமைகளைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் இதனால் இன்னும் ஓராண்டு தனக்கு வாய்ப்பளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வி அதிகாரியிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். அவர் ஒப்புதல் அளிப்பதை பள்ளியின் அனைத்தாசிரியர்களும் கைதட்டி வரவேற்கிறார்கள். லெட்சுமி சங்கரின் ’பகல் கனவு” நனவாகிறது.  லெட்சுமி சங்கர் போன்ற பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இதுபோன்ற புது முயற்சிகளைச் செய்து காட்டிடக்  காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் கரடு தட்டிப்போயிருக்கும் நம்முடைய கல்வித்துறை அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை என்றைக்கு வழங்கப் போகிறது? 

  -பெ.விஜயகுமார்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery