Web Series

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 6

Spread the love

பத்மராஜன் பல படங்களை செய்திருக்கிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அவைகள் எல்லாமுமே பிடித்த படங்களுமே கூட. ஆனால் அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு கள்ளன் பவித்ரன் தான் முதலில் நினைவுக்கு வரும். அதுவும் பிற்காலத்தில் நான் அவ்வப்போது இந்தப் படத்தைப் பார்த்தவாறே இருந்து, சினிமா பேசும் நண்பர்களிடம் எல்லாம் சிலாகித்தவாறே இருந்தேன். உள்ளபடி சொன்னால் அந்த படத்தில் இருந்த ஒரு எளிமையான அகம்பாவம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

என்ன இப்படி ஒரு திமிரான படம் என்பதாக அதை ஆற்றிக் கொள்ள முடியவில்லை. சிறியது, பெரியது , நல்லது, கெட்டது போன்ற நமக்கு தெரிந்த வகைமைகளுக்குள் அதை சிக்க வைக்க முடியவில்லை என்கிற திமிறல். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதன் படைப்பாளி நம்மிடம் இருந்து விலகி சென்று அமர்ந்து புன்முறுவல் செய்கிறவராக இருந்தார். திருடர்களைப் பற்றின பொதுவான அச்சுறுத்தல், அல்லது அவர்களின் மனமாற்றம் இவைகளைக் கடந்து மறுபக்கத்தில் வேறு ஒன்றுமில்லை என்று கருதிக் கொண்டிருக்கிற காலத்தில் பத்மராஜன் ஒரு கார்ட்டூன் வரைந்தார். இப்படி ஒரு முன்னோட்டம் சரளம் செய்திராவிட்டால் திருடன் மணியன் பிள்ளை என்கிற புத்தகம் சாத்தியமாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

பவித்ரன் ஒரு சில்லறைத் திருடன் என்பது ஊருக்கு தெரியும். அவன் மாவுமில் முதலாளியான மாமாச்சனிடம் வேலை கேட்டிருக்கிறான். என்ன வேலை, என்னால் சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது என்று அவன் சொல்ல, விடாமல் நான் சம்பளம் எல்லாம் இல்லாமல் இங்கே இருந்து கொள்கிறேன் என்க, மாமாச்சனுக்கு அது ஒரு பிளான் என்று பட்டுவிடுகிறது. கிளம்பு என்று துரத்தி விட்டிருக்கிறான். அன்றே பவித்ரன் அந்தத் திருட்டை நடத்தி விட்டான். ஒற்றையாளான மாமாச்சனின் வீட்டிலிருந்த கிண்டி என்று சொல்லப்படுகிற ஒரு கூஜாவையும், கூட ஒரு பாத்திரத்தையும் காணோம். மாமாச்சன் போலீசாரோடு சேர்ந்து பவித்ரனைத் தேடி அவனது வீட்டில் வந்து தேடுவதில் தான் படம் துவங்குகிறது. பவித்ரனின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ போலீசாரின் உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு வேடிக்கை போல. அவர்கள் அவன் இல்லையென்பதை இளக்காரமாக சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறார்கள்.

பத்மராஜன் தனது திரைக்கதையில் மிக கவனம் செலுத்தியிருந்த இடம் தான் திருடிய பொருட்களுடன் பவித்ரன் அதை விற்கப் போகிற இடம். அவனது மிக நீண்ட சைக்கிள் பயணத்தை, அவன் பல இடங்களில் ஓய்வெடுத்துக் கொள்வதை நமக்கு சொல்லுகிறார். அவன் தனது பொருளின் மீது கவனம் வைத்திருப்பதை, அவனது கண்களில் இருக்கிற பதட்டத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். வியாபாரி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு பொருளை வாங்கி உள்ளே தனது ஆளிடம் கொடுத்து விட்டு தனது வேலையைப் பார்க்கிறார். நேரம் செல்கிறது. இவன் ஒருமுறை தன்னை கவனம் செய்யும்போது அவர் நீ யார், என்ன கிண்டி என்று கூட கேட்கிறார்.

அடுத்த முறை திருட்டு பொருளைக் கொண்டு வந்தவனுக்கு பொறுமை வேண்டாமா என்று அதட்டும்போது இவனுக்கு சர்வ நாடியும் ஒடுங்குகிறது. வியாபாரி சாதாரண ஆள் இல்லை. உள்ளே பொருளை வைத்து விட்டு எடை போடப் போன ஆள் எந்தப்பக்கம் எந்தக்கடைக்கு போனான் என்று சொல்ல முடியாது என்கிறார். அவருக்கு இந்த மாதிரி பதினான்கு கடைகள். இந்த பிரமிப்பு நீ உன் பொருளை எடு என்று கடையின் உள்ளே அழைத்து செல்லும்போது இன்னமும் கூடுகிறது. அது ஒரு மிகப்பெரிய பொக்கிஷ அறைதான். ஒரு விக்கிரகத்தை எடுத்துப் பார்க்கும்போது அதற்குள் இருந்து ஒரு நாகம் கூட வெளியேறுகிறது. திறந்த வாயை மூடாமல் பவித்ரன் அதிர்ச்சியில் இருக்கும்போது அவரும் இவனோடு வந்து சேர்ந்து கொண்டு பல்பை அணைக்கிறார். வெளியே போலீஸ். கடை மூடியதாக எண்ணி அவர்கள் சென்றபிறகு அவர் தனது கடையின் அமைப்பை சொல்லுகிறார். பவித்திரன் அவரது வித்தைகளின் மகாத்மியம் உணர்ந்து அவரது கால்களில் விழுந்து சேவிக்கிறான். அவர் இவனது பொருட்களுக்கான பணத்தைக் கொடுக்கிறார். அந்தியாகிறது கிளம்பு என்கிறார்.

வீட்டுக்கு திரும்புகிறான் பவித்ரன்.

அவனது படுக்கையறையில் அவனது மனைவியுடன் இருக்கிறான் மாமாச்சன்.

இந்தக் காட்சியின் விளைவு எப்படிப்பட்டது என்பதை அறிய வேறு சில விஷயங்களுக்குப் போக வேண்டும்.

மாமாச்சன் முன்னம் சொன்னது தான். தனியாக இருக்கிறவர். ஒழுக்கமாக இருந்து நல்ல பேரைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறவர். ஒய்ந்து போன ஒரு கடைத்தெருவில அவரது தொழில் வெறும் ஒரு வயிற்றுப் பிழைப்புதான். கிண்டி காணாமல் போனதும் அவர் பவித்ரனின் இரண்டாம் மனைவி வீட்டருகே சுற்றியது சும்மா வேவு பார்ப்பதற்கு மட்டுமே. பவித்ரனின் முதல் மனைவியைப் போல அல்லாது உயிர் பிழைப்பை பார்க்க வேண்டியிருந்த  அவளது கண்பார்வையும், சொக்குப்பொடியும் உண்மையில் அவரது வைராக்கியத்தை நொறுக்கி விட்டது. மிதமிஞ்சிய அசட்டுத்தனத்துடனும், எளிதாகக் கிடைக்கிறதே என்கிற பேராசையுடனும் தான் அவர் அந்தப் படுக்கையறைக்குள் நுழைந்திருக்க முடியும். பவித்ரன் மனைவியின் தங்கையைக் கடந்து உள்ளே வந்து இருவரையும் நேரிடும்போது அங்கே வெட்டு குத்து நடக்கவில்லை.பெரிய வாக்குவாதம் கூட இல்லை.

“ என்னய்யா இது? “ என்கிறான் பவித்ரன்.

“ அது வந்து..  இது..” மென்று முழுங்குகிறான் மாமாச்சன்.

“ என்ன இது, என்ன அது? “

“ நீ மட்டும் என் கிண்டியைத் திருடலாமா?”

மாமாச்சனுக்கு அவ்வளவு தான் பேச வரும். கிண்டிக்கு பதில் போண்டாட்டியாடா என்கிற கேள்வியெல்லாம் வீண். கோழைத்தனத்துடன் சிணுங்கலாக உட்கார்ந்து கொண்டிருக்கிற மாமாச்சனிடம் கிண்டிக்கு கொஞ்சம் பணத்தையும், இரண்டாம் மனைவியாக இதுவரை இருந்தவளுக்கு கொஞ்சம் பணத்தையும் வீசியடித்துவிட்டு வந்த பவித்ரனுக்கு சுவர்க்கம் காத்திருக்கிறது. மனைவியும் மக்களும் அவனில் அணைந்து கொள்ள அவனும் அவர்களில் தனது விடுதலையை அனுபவிக்கிறான். மட்டுமல்ல, எல்லோருடைய கடன்களையும் தீர்த்து முடிக்கிறான். அந்த ஊர் அவனைச் சுற்றி நடக்க அவன் எல்லாவிடத்திலும் காசை வீசுவது யாவருக்கும் நூதனமாக இருக்கிறது. வீட்டில் பொருட்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது என்பது குற்றமாக சொல்லப்பட்டாலும் அதை வேடிக்கை பார்க்கிற சுகம் சாதாரணமானது அல்ல. பவித்ரன் மினுங்கிக் கொண்டே வருகிறான். பிள்ளைகள் அலங்காரம் பிரம்மாதம். அந்த ஊர் போலீஸ்காரன் தான் இவனது கண்ணில்படாமல் சுற்றுகிறான். எடுபிடியாக இருக்க சில ஆட்கள், வீட்டில் கறிமீனுடன் உட்கார்ந்து சரக்கு போட கண்ணியவான்கள் என்று ரகளையான ஒரு வாழ்க்கை. அந்த ஊரில் இருக்கிற ஒரே மாவுமில்லில் தனது மனைவி நெல்லுகுத்த வேண்டி வருவதால் பவித்ரன் புதிய மில்லையே துவங்கி விடுகிறான். விளக்கை தேய்த்தவுடன் பூதம் வந்து ஏவியதை செய்து முடிப்பது போல பவித்ரன் தனது வாழ்விற்கு ஆணையிட்டு அதை மேய்த்துக் கொண்டிருக்கிறான்.

மில்லை விற்கப் போகிறாயாமே, தருகிறாயா என்று நேரடியாக சென்று கேட்டு மாமாச்சானை கதிகலங்க செய்கிறான்.

காரில் சவாரி செய்கிறான்.

இவனுக்கு இதற்கெல்லாம் எங்கிருந்து வருகிறது பணம்?

அந்த ரகசியத்தை தனது மனைவி உள்பட அவன் யாரிடமும் சொன்னதில்லை.

பாமாவிடம் தான் முதலில் சொல்லுகிறான்.

காசு என்பது முதலில் ஒருவனுக்கு பெரும் ஓய்வைத் தருகிறது. ஒருவிதமான விடுதலையை தருகிறது. சாய்ந்து அமர்ந்து தமது புதிய சுதந்திர தினங்களை அனுபவிக்கும்போது மனதிலும் உடலிலும் மதர்ப்பின் பூக்கள் வெடிக்கின்றன. கொழுப்பு குறுகுறுக்கிறது. பாமா வழக்கமான பத்மராஜனின் படங்களில் வருகிற அணுகுண்டு. அவளுடைய இளமையும் வாளிப்பும் எவருடைய விழிகளையும் குருடாக்கக் கூடும். அவள் சிரித்து, சிணுங்கி, சண்டை போட்டு, சமாதானம் எய்தி தன்னையே கொடுக்கிறாள். நான் உன்மீது காதலாக இருக்கிறேன் என்கிற பெண்ணின் வசனம் ஆணாக பிறந்தவனுக்கு மலையைத் தூக்கக் காரணமாகிற பொறி. அவன் எல்லா உண்மைகளையும் சொல்கிறான்.

கிண்டியை விற்ற அன்று வியாபாரியை பிரமிக்கிற பவித்ரன் அப்புறம் தன்னால் திருட முடியவில்லை போல பலவீனமாக உணருகிறான். ஒருநாள் ஊர்சுற்றி நள்ளிரவில் அவரது கடையை அடைந்து, பூட்டாத கதவை அதன் வித்தையுடன் திறந்து முன்பு பார்த்த அந்த விக்கிரகத்தைத் திருடுகிறான். ஆனால் அதை விற்கவில்லை. குற்றவுணர்வுடன் சுற்றுகிறான். எவ்வளவு பெரிய மேதை அவர், ஒரு குருவிடமே திருடி அவருக்கு துரோகம் செய்து விட்டேனே? அவர் என்னை தண்டிக்கட்டும். போலீசில் பிடித்து கொடுக்கட்டும். அவரது காலில் சரணடைவதற்காக கடைக்கு செல்லுகிறான். 

‘ வா பவித்ரா ! “  என்கிறார் அவர்.

பொருளை பார்க்கிறார்.

உள்ளே அழைக்கிறார்கள்.

பெரும் பதட்டத்தில் இருக்கிற பவித்ரனுக்கு ஒரு பெட்டி நிறைய பணம் அளிக்கப்படுகிறது.

பவித்ரன் பெரிய மனிதனாக ஆன கதை இதுதான். 

ஒரு திருடனின் மனைவியாக பதிவு திருமணத்துக்கு வரமாட்டேன் என்று பாமா சொல்லுவதால் பழைய கிண்டியைக் கொண்டு மாமாச்சனிடம் கொடுக்க அதைத் திருடிக் கொண்டு வந்த போது போலீஸ் கையும் களவுமாக கைது செய்கிறது. ஊரே வேடிக்கைப் பார்க்க கையில் விலங்கிடப்பட்டு கள்ளன் பவித்ரன் அழைத்து செல்லப்படுகிறான்.

பாமா பவித்ரனின் இரண்டாம் மனைவியாக இருந்து மாமாச்சனுக்கு கீப்பரான தமயந்தியின்  தங்கை.

நான் சொல்லிக்கொண்டு வந்தது வெறும் மேலோட்டமான கதை. இதன் காட்சிகள் எல்லாம் வேறு. கதை வேறு. திரைக்கதையே வேறு. எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

இந்தப் படத்தில் ஒரு கள்ளனை, கள்ளனான கணவனை அவனது மனைவி எப்படி அங்கீகரிக்கிறாளோ, அப்படியே நாம் பவித்ரனை எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் பத்மராஜன் திரைக்கதையின் முதல் வெற்றி. அதை வழக்கமான ஒரு தொழில் போலவே அந்தகாலத்தில் நிறுவி இருக்கிறார். அவர்களின் புத்திசாலித்தனங்களை மட்டுமில்லை மடத்தனங்களையும் விவரணை செய்திருக்கிறார். ஒன்று கவனித்தீர்கள் என்றால் தெரியும், வாழ்வின் மீதுள்ள தீராத ஆசை தான் உலகில் எத்தனையோ லட்சம் பேர் அனுபவித்துக் கொண்டிருக்கிற சொகுசில் முழ்குகிற திருடன் மூலம் வெளிப்படுகிறது. உண்மையில் மாமாச்சன்கள் தான் தனக்கு கிடைக்கிற வாழ்வை வாழத் தெரியாமல் இருக்கிறார்கள். கண்ணியமாக இருப்பதாக பேர் பண்ணிக் கொண்டு, பொறாமையின் வயிற்றெரிச்சலில் அவதிப்பட்டுக் கொண்டு, மற்றவர் குடிகெடுக்க நிம்மதி கெட்டு அலைகிறார்கள்.

தனது முழு சாமர்த்தியங்களால் வெற்றியைப் பறிப்பதாக நம்பிக் கொள்ளும் எந்த ஆணையும் முட்டாளாக்கிக் கொண்டேயிருக்கிறாள் பெண். அவளது சாக்குககள், சால்ஜாப்புகள், காதல், கண்ணீர் எல்லாமே அவள் ஏந்தியிருக்கிற ஆயுதங்களே. தமயந்தியை எடுத்துக் கொள்வோம், அவள் மீது விழுகிற அவமானங்களை துடைத்துப் போட்டவாறு மாமாச்சனை அசடாக்கிக்கொண்டே வந்து அவனது மகளே கூட உதறி விட்டுச் செல்லும் தனிமையைக் கொண்டு வந்து அவனைத் தன்னோடு இருத்திக் கொண்டு, பவித்ரனை பொறியில் சிக்க வைக்கிற சாதூர்யம் எப்படிப்பட்டது? பாமா உள்ளுர தனது நன்மையால் வந்து விட்ட காதலால், ஒருவேளை அதில் தோற்றவளாக இருக்கலாம். ஆனால் வாழ்வை அறிந்து கொண்டு விட்ட பெண். ஒரு கள்ளனோடு இரண்டாம்தர வாழக்கை அவளுக்கு தேவையே இல்லை. இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரும் காய்களை எல்லாம் நகர்த்தி விட்டுக் கொண்டு அமைதியாக தங்களுடைய இடங்களில் இருந்து விடுகிறார்கள் அவர்கள்.

இன்று இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு வீட்டில் திருட வந்த ஒருவன் நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டதால் மாட்டிக்கொண்டான் என்கிற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாவம், எவ்வளவு பசியா இருந்திருக்கும், சாப்பிட்டு தூங்கி விட்டிருக்கிறான் என்றாள் என் மனைவி.

பசியால் எழுகிற லீலைகளை உலகம் ஒருநாள் உணரும்.

 

***          

Leave a Response

Top Reviews

Video Widget

gallery