Article

ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காக இந்திய உணவுப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவது ஆபத்தானது – பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (தமிழில் மு.மாரியப்பன்)

Spread the love

 

மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள் மூலமாக, இந்திய விவசாயத்தை உலகளாவிய வணிகத்திற்குத் திறந்து விடுவதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும், உள்நாட்டுத் தேவைக்கான உணவின் அளவைக் குறைத்துவிடும்

உலகின் பெருநகரமுதலாளித்துவம் வியாபித்திருக்ககூடிய குளிர் பிரதேசங்களில் வளர்க்கவே முடியாத அல்லது ஆண்டின் பெரும்பகுதிகளில் வளர்க்க முடியாத, பானங்கள், இழைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் பல்வேறு வகையானபயிர்களை வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்க்க முடியும். இந்த வெப்பமண்டல நிலப்பரப்பின் அளவு அதிகரிக்க  முடியாதது மட்டுமல்லாது, அவையனைத்தும், ஏற்கனவேபயன்பாட்டில் இருந்து வருகின்றன.

நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமே, இந்த நிலப்பரப்பின் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது சாத்தியப்படும். மார்க்ஸ் மிகநுட்பத்துடன் கண்டறிந்தது போல, உற்பத்தி திறன் அதிகரிப்பிற்கு, அரசின் முதலீடுதேவைப்படுகிறது. ஆனால், பெருநகர முதலாளித்துவத்தல் கோரப்படுகின்ற  “நிதிநேர்மை” என்ற பெயரால் முன்வைக்கப்படுகின்ற, வரவுசெலவுத் திட்டங்கள் சமநிலையில் இருக்கின்றபோதுள்ள தங்கத்தின் அடிப்படையிலான தரத்தின் கீழ் அல்லது நிதிப்பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒருகுறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றுசொல்கின்ற நவீனதாராளமயத்தின் கீழ் அரசின் முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

தனக்குத் தேவையான பொருட்களைப் பெறும்பொருட்டு, வெப்பமண்டலப் பகுதியின் மீது கட்டுப்பாட்டை எவ்வாறு அடைவது என்பதே பெருநகர முதலாளித்துவத்தின் முன்பாக இருக்கின்ற பிரச்சனையாகும். அத்தகைய கட்டுப்பாடு, உள்நாட்டு உணவு உற்பத்திக்கு பாதகமாகவே இருக்கும். ஆகவே, தங்களுடைய நிலங்களில் தங்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்குப் பதிலாக, பெருநகரங்களுக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடும் வகையில், பெருநகர வாங்கும் சக்தியால் தூண்டப்படுகின்ற உலகவணிகத்திற்கு வெப்பமண்டல விவசாயத்தை திறந்து விடுமாறு மூன்றாம் உலக அரசுகளை வலியுறுத்துவதே பிரச்சனையாக இருக்கிறது.

MR Online | Imperialism and India's food economy

உள்நாட்டு உணவுத்தேவையைக் கட்டுப்படுத்தாமல், பெருநகரங்களுக்குத் தேவைப்படுகின்ற பொருட்களுக்காக நிலத்தைப் பயன்படுத்துவதற்காக வரிவிதிப்புமுறை பயன்படுத்தப்பட்டபோது, அந்த வரிவருமானத்தையே பயன்படுத்தி பொருட்களுக்கான பணத்தைச்செலுத்தி, அந்தப்பொருட்களை கைமாறாகப் பெற்றுக்கொள்வது, காலனித்துவத்தின்கீழ் எளிதாக இருந்தது.  விடுதலைக்குப் பின்னர், மூன்றாம் உலக அரசுகளிடம் உணவுதானிய உற்பத்தியை அதிகரிப்பது முக்கியத்துவம் அடைந்தது. ஆனால் நவீனதாராளமயக் கொள்கையின் மூலமாக, தனக்குத் தேவையானதைப்பெற பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை அளித்து, மீண்டும் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள நிலத்தை பெருநகரங்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கச் செய்ய முடிந்திருக்கிறது.

1991 மற்றும் 2015-16க்கு இடைப்பட்ட காலத்தில் ஒருநபருக்கான உற்பத்தி அளவு குறைந்து போயிருந்தாலும், உணவு உற்பத்தி மீது தன்னம்பிக்கை இழக்க முடியாது. அத்தியாவசியப் பணிகளை தனியார்மயமாக்கல், கிராமப்புறங்களுக்கான அரசு செலவினங்களைக் குறைத்தல், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர்கள்/கீழுள்ளவர்கள் என்ற வரையறை மூலமாக, உணவு கையிருப்பு அதிகரித்தல் மற்றும் தானியங்களை ஏற்றுமதி செய்வது அதிகரித்தல் போன்றவற்றால், உழைக்கும் மக்களின் தேவைகள் பல வகைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டன. அத்தகைய உணவு கையிருப்பே, தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது பொதுவிநியோக முறையின் மூலமாக இலவசமாக அளிக்கின்ற வகையில், 7.7 கோடி டன் தானியங்கள் அரசிடம் இருப்பதற்கு வழிவகுத்தது.

பொதுவாக இந்த அளவிற்கு அதிக அளவிலான உணவுதானியக் கையிருப்பை, வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பட்டினியுடன் இருப்பவர்கள் குறித்த 112 நாடுகளடங்கிய பட்டியலில், 100ஆவது நிலைக்கு மிக அருகிலே இருக்கின்ற இந்தியாவில், இவ்வாறு அதிக அளவில் வைத்திருக்கின்ற கையிருப்பிற்கான தீர்வு என்பது, தொடர்ந்து கடும் பட்டினியில் இருந்து வருகின்ற தொழிலாளர்களிடம் இருக்கின்ற வாங்கும் திறனை அதிகரிப்பதில்தான் உள்ளது. கையிருப்பைக் குறைத்துக்கொள்வதற்காக, உணவுதானிய உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதால் தீர்வு கிடைக்கப் போவதில்லை. அவ்வாறு செய்வது, பயிர் விளைச்சல் பொய்த்துவிடும் காலங்களில், நாட்டை பஞ்சம் போன்ற சூழலுக்கே எளிதாகத் தள்ளி விடும். பெருநகரங்களுக்குத் தேவையான பயிர்களுக்காக இந்தியா தன்னுடைய நிலப்பரப்பை அர்ப்பணிக்க வேண்டும்.

மாறாக உணவுத் தட்டுப்பாட்டை ஒருபோதும் எதிர்கொள்ளாதிருப்பதற்காக, உணவுதானியங்களை இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் வாதமாக இருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று காரணங்களுக்காக, இந்த வாதம்தவறாக இருக்கிறது. முதலாவதாக, உணவுதானியங்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு உலகச்சந்தைக்குச் செல்லும் பொழுது, தானியங்களின் விலை உடனடியாக அதிகரித்துவிடும். பொருளாதாரக் கருத்துக்களின் அடிப்படையில், ஏற்றுமதிக்கான பிற பயிர்களை உற்பத்தி செய்து, உணவுதானியங்களை இறக்குமதி செய்து கொள்வது மேலோட்டமாக விவேகமானதாகத் தோன்றலாம்; ஆனால் அதுபோன்ற செயல் அப்பட்டமாக விவேகமற்றசெயலாகவேஇருக்கும்.

இரண்டாவதாக, அத்தகைய ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிடுவதற்கு, ஒருஅலகு நிலப்பரப்பிற்கு மிகவும் குறைவான தொழிலாளர்களே தேவைப்படுவதால், அவ்வாறு மாறுவதன் மூலம், வேலைவாய்ப்பு குறையும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடமுள்ள வாங்கும் திறன் குறையும். வர்த்தகத்தின் மூலம் முன்பு கிடைத்ததைவிடக் கூடுதலான அளவில் உணவுதானியங்கள் கிடைத்தாலும்கூட, முன்னர் இருந்த அளவிற்கு உணவுதானிய தேவைகளை அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள இயலாது.

மூன்றாவதாக, தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு ஆதரவாக மூன்றாம் உலக நாடுகள் பயிரிட்டு வந்த பயிர்களைக் கைவிடுமாறு கூறிவிட்டு, பின்னர் அந்த நாடுகளுக்கு உணவு வழங்குவதான அரசியல் விளையாட்டை ஏகாதிபத்திய நாடுகள் விளையாடலாம். உணவு மறுப்பு என்பது ஏகாதிபத்திய நாடுகளின் படைக்கலங்களில் இருக்கின்ற மிக ஆற்றல் வாய்ந்த ஆயுதமாகும். அவர்கள் இரக்கமேயில்லாமல் அதைப் பயன்படுத்துவார்கள். ’இயல்பான’ பன்னாட்டு வணிகம் என்ற ஒன்று இனிவரும் காலங்களில் இருக்கப் போவதில்லை.

உணவுதானியங்களுக்குப் பதிலாக, உணவு அல்லாத பிற ஏற்றுமதிக்கான பயிர்கள் மீது செலுத்தப்படுகின்ற கவனம், சஹாராவிற்கு கீழ் உள்ள ஆப்பிரிக்காவை அவ்வப்போது உலுக்கிக் கொண்டிருப்பதால், ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, மேற்கூறப்பட்டவை அனைத்தும் போதுமான அளவிற்குத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

Indian Economy - Food Security - Tutorialspoint

தனக்கு உணவு கிடைக்க வேண்டுமென்பதற்காக, 1960களின் மத்தியில் இந்தியாவை கிட்டத்தட்டக் கட்டாயப்படுத்திய  அமெரிக்கா, பசுமைப் புரட்சியின் மூலமாக உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது. உணவுதானியம் கணிசமான அளவிற்கு இறக்குமதி சார்ந்த ஒன்றாக மாறும் என்று பயிர்விளைச்சல் மோசமாக இருந்த ஆண்டுகளிலும் கூட, அதற்குப் பின்னர் வந்த எந்தவொரு இந்திய அரசாங்கமும் நினைக்காமலிருந்ததில் வியப்பேதும் இல்லை.

இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு ஒரு விதிவிலக்காக இருக்கிறது, எதிர்பார்த்ததைப் போலவே, மத்தியகால மனப்பான்மையை மக்கள், பெரும்பாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் எந்தவொரு புரிதலும் இல்லாமல், நேர்மையான அறிவுத்திறன் கொண்ட கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பதே அண்மைக்கால பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றிருக்கிறன. அவர்களுடைய அறியாமை, அவர்களை  ஏகாதிபத்தியக் கருத்துக்களை அண்டி வாழ்பவர்களாக்கியுள்ளது. அவர்கள் முற்றிலுமாக, ஏகாதிபத்தியத்தியத்தின் கட்டளைக்குத் தலையசைக்கக் கூடியவர்களாகி விட்டார்கள். இந்தியாவின் பாரம்பரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக இப்போதுள்ள மத்திய அரசாங்கம் இருப்பதற்குச் சான்றாக, வேளாண் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்இருக்கின்றன.

அரசாங்கம் மூன்று அவசரச்சட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று, வேளாண்வணிகர்கள் இருப்பு வைத்திருக்கக்கூடிய அளவின் கட்டுப்பாட்டை நீக்குதல்; இரண்டு, குறிப்பிட்ட இடங்களில் தான் (வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு)வேளாண்விளைபொருள்சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையை நீக்குதல்; மூன்று, குத்தகைப் பண்ணை முறையை அனுமதித்தல்.

இந்த அவசரச்சட்டங்கள் எல்லாம், உலகவணிகத்திற்கு விவசாயத்தைத் திறந்து விடுவதைத் தவிர வேறொன்றையும் செய்யப்போவதில்லை. அயல் நாட்டு வணிகர்கள் உட்பட, தனியார் வணிகர்கள் எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல், வேளாண் பொருட்களுக்கான சந்தைக்குள் நுழைவதை எளிதாக்கி, விவசாயத்தை உலகளாவிய வணிகத்திற்குத் திறந்து விடுவதற்குரிய வழியாக மட்டுமே இந்த சட்டங்கள் இருக்கின்றன. இதுதான் ஏகாதிபத்தியம் நீண்ட நெடுங்காலமாக எதிபார்த்துக் கொண்டிருந்த, ஆனாலும் இப்பொழுது வரை எதிர்க்கப்பட்டுவந்த ஒன்றாகும். இத்தகைய எதிர்ப்பும், உள்நாட்டு உணவுதானிய உற்பத்தியை ஆதரிப்பதும், குறிப்பிட்ட நிறுவனமயமாக்கப்பட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளாலேயே சாத்தியமானது. இந்த அவசரச்சட்டங்கள், அத்தகைய இயக்கங்களின் முக்கியமான முட்டுக்கட்டைகளை அகற்ற முயல்வதாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, கொள்முதல் விலையை அறிவித்து, அரசால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய உணவுக்கழகத்தின் மூலமாக, குறிப்பிட்ட சந்தைகளில் உற்பத்தியாளர்களிடமிருந்து  தானியங்களை வாங்குவதன் மூலம் உணவுதானிய உற்பத்திக்கான ஆதரவு வழங்கப்பட்டது. அத்தகைய சந்தைகளின் முக்கியத்துவம் குறைக்கப்படுமேயானால், கொள்முதல் விலை மூலமாக வழங்கப்பட்டு வந்த ஆதரவை வழங்குவதுகூடக் கடினமாகிவிடும். அதேபோன்று, காலனித்துவக் காலத்திலிருந்ததைப் போல, உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிப் பயிர்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்படுமென்றால், காலப்போக்கில் அந்த ஏற்றுமதிப் பயிர்கள் உணவு உற்பத்திக்கு மாற்றாகி விடும்.

இன்னொருபுறம், இது விவசாயிகளின் நலன் சார்ந்ததாக இல்லையா என்ற கேள்வி கேட்கப்படலாம். முதலாவதாக, இந்த அமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தபோது, விவசாயிகள், நுகர்வோர்களின் நலன்களை நிறைவேற்றும் வகையில் இருந்தது. ஒரே சமயத்தில் நிகழக்கூடிய வகையில் இருந்த அந்த முக்கியத்துவம் இப்போது அழிக்கப்படுகிறது என்பதே அந்த கேள்விக்கான பதிலாக இருக்கும்.

Kisan plan not for families of MLAs, MPs & government staff - The ...

இரண்டாவதாக, இந்த நடவடிக்கைகள் மூலம், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயிகள் ஆதாயம் அடைவது போலத் தோன்றலாம். ஆனால் என்றென்றும், இந்த அவசரச்சட்டங்கள் விவசாயிகளை பன்னாட்டு வணிகர்களின் அடிமைகளாக்கி, அவர்களின் நலனிற்கு எதிரானவையாகி விடும்.

விவசாயம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத மத்திய அரசு, இந்தமூன்று அவசரச்சட்டங்களையும்மாநில அரசுகளுடன் எந்தஒரு ஆலோசனையையும் மேற்கொள்ளாமல் இயற்றியிருப்பது கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இந்தியாவில், விவசாயம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது.

வேளாண் வணிகம் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் வருவதால், இதில் சட்டவரம்பு மீறல் எதுவும் இல்லை என்ற வாதத்தை மத்திய அரசாங்கம் முன்வைக்கிறது. ஆனால், மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குட்பட்ட விசயங்களில், நீண்ட காலம்கழித்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை, மத்தியஅரசு மறைமுகமாகச் செய்வது மாநில அதிகாரத்தை மீறுவதற்கு ஒப்பானதாகும். மேலும் அது மத்திய அரசின் சட்ட வரம்புகளைக் கடந்து செயலாற்றுவதாகவும் இருக்கிறது. இந்தியாவை ஒற்றையாட்சி அரசாக மாற்றிக் கொண்டிருக்கிற பாஜக அரசாங்கத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இப்பொழுது இயல்பான செயல்பாடுகளாக ஆகியிருக்கின்றன. .

உலகவணிகத்திற்காக  விவசாயத்தை திறந்து விடுவதற்காக மேற்கொள்ளபப்டும் எந்தவொரு நடவடிக்கையும்,  உள்நாட்டில் உணவு கிடைப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைக்கான காரணமாகவே அமைந்து விடும். உணவுதானிய உற்பத்தியில் சரிவு ஏற்படும் பொழுதில், மிக அதிகமான உணவுப்பற்றாக்குறை உருவாகும் சூழலில், பதுக்கல் மற்றும் மிகைலாபத்தைத் தடுக்கும் பொருட்டு, தற்சமயம் நீக்கப்படுகின்ற தனியார் வணிகத்தில் இருப்புவைக்கக்கூடிய அளவின் மீதுள்ள கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்துவிடுவதாக பாஜக அரசு உறுதியளித்திருக்கிறது.

உணவுதானிய விலையில் குறிப்பிடத்தக்க விலை உயர்வு எதுவுமில்லாமலே, பட்டினி மற்றும் அதுதொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இயல்பாகத் தானே எழும் என்பதே இங்கே பிரச்சனையாக உள்ளது. அது காலனிய காலத்தில் அடிக்கடி நிகழ்ந்ததைப் போல,  உழைக்கும் மக்களின் தேவையை சுருக்குவதன் விளைவாக இருக்கலாம். ஒருநபருக்கான உணவு கிடைக்கும் அளவில்,1897 முதல் 1902 (199கிலோகிராம்) மற்றும் 1933 முதல் 1938ஆம் ஆண்டுகளுக்கிடையிலான (159 கிலோகிராம்) காலகட்டத்தில், ஏற்பட்ட மோசமான வீழ்ச்சி, ஏறக்குறைய 20 சதவீத அளவிற்கு இருந்தது. ஆனால், இந்த 36 ஆண்டு கால இடைவெளியில், உணவிற்கான செலவை மையமாகக் கொண்ட தொழிலாளர்களின் அன்றாடச் செலவிற்கான குறியீட்டெண் 23 சதவீதம் என்ற அளவிற்கே அதிகரித்திருந்தது. எனவே, பாஜகஅரசின் இத்தகைய உறுதிமொழிகள் முற்றிலும் அர்த்தமற்றவையாகவே இருக்கின்றன. ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்துபோகின்ற ஆவல் கொண்டுள்ள பாஜக அரசாங்கம், அதிகரிக்கின்ற பட்டினி மற்றும் பஞ்சத்திற்கான சாத்தியம் உள்ள பாதையிலே இந்திய மக்களைக் கொண்டு வந்து நிறுத்தி வைக்கின்றது.

நியூஸ் க்ளிக் இணைய இதழ், 2020 ஜுன் 13

https://www.newsclick.in/Opening-India-Food-Economy-to-Demands-of-Imperialism

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery