Book Review

நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடி வரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைப் சித்தரிக்கிறது பாண்டியக் கண்ணனின் ‘நுகத்தடி’ நாவல். ஆர்.பி.கண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட பாண்டியக் கண்ணன் மதுரை மாவட்டம் கட்ராம்பட்டி கிராமத்தில் பிறந்து தற்போது விருதுநகரில் சுகாதாரப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகிறார். ‘சலவான்’, ’மழைப் பாறை’ நாவல்களைத் தொடர்ந்து, இவரின் மூன்றாவது நாவலாக ‘நுகத்தடி’ வெளிவந்துள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\R P Kannan.jpg

துப்புரவுத் தொழிலாளிகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் புறக்கணிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை இந்த நாவலில்  பாண்டியக் கண்ணன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். காலனிய காலத்தில் புழக்கத்தில் இருந்த கொடுஞ்சட்டமான ‘கள்ளர் பரம்பரைச் சட்டம்’ சுதந்திர இந்தியாவில் பிற சாதியினர்களுக்கெல்லாம் நீக்கப்பட்ட பின்னரும் குறவர் இன மக்கள் மட்டும் இன்றும் இக்கொடிய சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களை நிழல்களைப் போலத் தொடர்ந்து காவல்துறை வேட்டையாடி வருகிறது. சுகாதாரத்துறையும் துப்புரவுத் தொழிலாளர்களை அடிமைகளைப் போலவே பாவிக்கிறது. காலையில் சூரியோதயத்திற்கு முன் சுகாதார நிலையத்தில் ஆஜராகி தங்களின் அன்றாடப் பணியைத் தொடங்கும் இவர்கள் வாழ்வின் அனைத்துச் சுகங்களையும் இழந்தவர்கள்.

மிகுந்த கனத்த மனத்துடன் மட்டுமே ’நுகத்தடி’ நாவலை ஒருவரால் படித்திட முடியும். பிரபல ஆவணப்பட இயக்குநர் அமுதன் ‘பீ’ என்ற ஆவணப்படத்தில் கைகளில் மலத்தை அள்ளி தலையில் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளியான மாரியம்மாளின் ஒருநாள் பணியைக் காட்சிப்படுத்தியிருப்பார். படத்தைப் பார்க்கும் போது மலத்தின் வீச்சத்தை நாம் உணருவோம். படத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்கு மனமிருக்காது. முகத்தைச் சுழிப்போம். குமட்டல் வரும். ஆனால்  அதையே அன்றாட வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் நிலையை என்னென்பது?  பொதுவாக உண்மை சுடும் என்போம். ஆனால் உண்மை வீச்சமும் அடிக்கும் என்பதை அமுதனின் ஆவணப்படமும், பாண்டியக் கண்ணனின் இந்த நாவலும் உணர்த்துகின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Amudhan PEE.jpg

இந்த நாவலில் துப்புரவுத் தொழிலுக்குத் தள்ளப்படும் குமார் எனும் இளைஞனின் முதல் நாள் அனுபவம் படிப்பவரின் மனதைப் பதறவைக்கும். குமாரின் பெரியப்பா அவனுக்கு வேலையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருவார். ஹோட்டலில் உள்ள எச்சில் இலைத் தொட்டிக்குள் இறங்கி குமார் சுத்தப்படுத்துவான். தொட்டிக்குள் வயிற்றைக் குமட்டும் நெடியுடன் வெப்பமும் சேர்ந்து அவனை வாட்டிடும். அவன் கழிவுகளை அள்ளிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தவர்கள் தொட்டிக்குள் ஒரு மனிதப் பிறவி நிற்பதைப் பொருட்படுத்தாமல் எச்சில் இலைகளைத் தூக்கியெறிவார்கள். வாயைக் கொப்பளித்து துப்புவார்கள். அவ்வளவு அசிங்கங்களையும் சகித்துக் கொண்டு அவன் கழிவுகளை அள்ளி எடுக்க அவன் பெரியப்பா சுமந்து சென்று வண்டியில் ஏற்றுவார்.

இளைஞர்கள் கனவு காணவேண்டும் என்று நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் சொல்லியிருந்தாரே! குமாரும் கனவு காண்கிறான். திரைப்படத் துறையில் இயக்குநராகப் பரிணமிக்க வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால் அவன் மீது துப்புரவுத் தொழில் திணிக்கப்படுகிறது. குலத்தொழிலான துப்புரவுத் தொழில் அவனை ஊழ்வினையெனத் துரத்துகிறது. மேல்சாதிப் பெண் சுதாவை குமார் காதலித்துத் திருமணம் முடித்துள்ளான். பெண் வீட்டார் குமார் பெண்ணைக் கடத்திவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இந்த சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஆதரவாக காவல் நிலையத்தில் வாதாடுகிறார்கள். சுதா பதினெட்டு வயது நிரம்பியவள் என்பதை நிரூபிக்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் வேறு வழியின்றி அவர்களை விடுவிக்கிறார்.  விருதுநகரை மையமாகக் கொண்ட இந்த நாவல் மெல்ல மெல்ல நகர்ந்து சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதி வரை செல்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகம் எங்கு சென்றாலும் விடாது துரத்துகிறது அவர்களின் அவலம்.

குமாரின் அண்ணன் முத்தன் அவன் மனைவி உச்சிகண்ணி இருவரும் தியேட்டரில் துப்புரவுத் தொழிலாளிகளாக வேலை பார்க்கிறார்கள்.  அண்ணனைப் பார்க்க குமார் தியேட்டருக்கு வருகிறான். தம்பதிகள் இருவரும் துப்புரவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். துப்புரவுத் தொழிலை எங்கே பார்த்தால்தான் என்ன? எல்லா இடத்திலும் அதே வீச்சம்தானே. ஒவ்வொரு திரைப்படக் காட்சி முடிந்ததும் அரங்கத்தையும், கழிப்பிடங்களையும் சுத்தம் செய்வது அவர்களின் வேலை. பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையே இல்லாத தமிழ்ச் சமூகம் தியேட்டர்களை எவ்வளவு அசுத்தப்படுத்துகிறது என்பதை முத்தன் – உச்சிகண்ணி அனுபவங்கள்  வழி அறிகிறோம். தியேட்டரில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து படம் பார்க்க வருபவர்கள் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு தியேட்டரை எவ்வளவு அசிங்கப்படுத்திச் செல்கிறார்கள் என்பதை அறிகிறோம். முத்தன் தியேட்டர் மானேஜரைச் சந்தித்து தன் தம்பி குமாருக்கு துப்புரவுப் பணியாளர் வேலை கிடைக்கச் செய்கிறான். முத்தன் – உச்சிகண்ணி தம்பதிகள் தங்கள் சோகங்களை எல்லாம் மறந்து நக்கலும், கிண்டலுமாக நகைச்சுவை ததும்ப பேசிக்கொள்வது நாவலில்  காணப்படும் ஒரே மெல்லிய தருணம்.

Manual scavenging? Tanker driver and cleaner choke to death in ...

சந்திரனை ஆய்வு செய்ய சந்திராயன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கல்யான் என்று அனுப்புகின்ற அளவுக்குத் தொழில்நுட்பத் திறன் படைத்த இந்தியாவில் செப்டிக் டாங்கைச் சுத்தப்படுத்த மரணக் குழிகளில் இறங்கும் துப்புரவுத் தொழிலாளிகளைக் காப்பாற்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவின் ஐஐடியில் படிக்கும் இளைஞர்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் செய்து தர அமெரிக்கா, ஐரோப்பா சென்று விடுகிறார்கள். தங்கள் நாட்டு துப்புரவுத் தொழிலாளிகளின் தேவைகள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. நாள்தோறும் இந்தியாவின் ஏதேனும் ஒரு நகரத்தில் துப்புரவுத் தொழிலாளிகள் செப்டிக் டாங்குகளில் இறங்கி இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்களுக்கும் துப்புரவுத் தொழிலாளிகள் பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி செப்டிக் டாங்குகளில் இறங்கி உயிர்ப்பலியாவது குறித்து எந்த அக்கறையும் இல்லை.

உயிரைப் பணயம் வைத்து செப்டிக் டாங்கில் இறங்கி சுத்தம் செய்யும் நான்கு தொழிலாளிகளின் அவலத்தை ’நுகத்தடி’ நாவலில் நாவலாசிரியர் காட்சிப்படுத்துகிறார். காலையிலிருந்து மல்லுக்கட்டுகிறார்கள். நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. வேலை முடிந்தபாடில்லை. மாலையில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது. வேலையை நிறுத்திவிட்டு டீ குடிக்க மெயின் ரோடுக்கு வருகிறார்கள். சாலையோரம் அமர்ந்து களைப்பாற டீ குடிக்கிறார்கள். ரோந்து சுத்திவரும் காவல்துறையினர் அவர்களைக் கொத்தாக அள்ளிச் செல்கின்றனர். காவல்நிலையத்தில் லாடம் கட்டி அடிக்கின்றனர். அவர்கள் செய்யாத குற்றத்தைச் செய்ததாக எழுதிக் கையெழுத்து வாங்கி சிறைக்குள் அடைக்கிறார்கள்.

நாவலின் மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரமான சந்திரா படும் துயரம் படிப்பவர்களின் கண்களில் கண்ணீர் மல்க வைக்கும். தந்தையை இழந்த சந்திராவையும், மற்ற குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்று அவள் தாய் முத்துப்பேச்சி ஆசைப்படுகிறாள். ஊருக்கு வெளியே குப்பையைக் கொட்டுவதற்கு குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்லும் போது லாரியில் அடிபட்டு இறந்து போகிறாள். பெற்றோர்களை இழந்த சந்திரா தான் படிக்க முடியாவிட்டாலும் தன் தம்பி, தங்கைகளையாவது படிக்கவைத்து தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்று நினைத்துத்தான் துப்புரவுத் தொழிலாளியாக வேலைக்குச் சேருகிறாள். வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே அவளின் துயரம் தொடங்கிவிடுகிறது. அன்று தொடங்கும் துயரம் முடிவின்றி நீள்கிறது. அதிகாலை நகரச் சுகாதார அலுவலகம் முன் மற்ற சுகாதாரப் பணியாளர்களுடன் சந்திராவும் வரிசையில் நிற்கிறாள். வருகைப் பதிவு நடக்கிறது. மேஸ்திரி பெயர்களை வாசிக்கவும் ஒவ்வொருவரும் “இருக்கிறேன் எசமான்”. அல்லது ”இருக்கிறேன் சாமி” என்று பதிலளிக்கிறார்கள். சந்திரா பெயரைக் கூப்பிட்டதும் ”இருக்கிறேன் சார்” என்றதும் முறைத்துப் பார்க்கிறான் மேஸ்திரி. அவனைப் பொறுத்தவரை ‘சார்’ என்பதெல்லாம் மரியாதைச் சொல் ஆகாது. சாமி அல்லது எசமான் என்றே அழைக்க வேண்டும். புதிதாக வரிசையில் நிற்கும் சந்திராவின் இளமையும் அவன் கண்களை உறுத்துகிறது. அவளைச் சுகித்திட மேஸ்திரி திட்டமிடுகிறான். அவளை வெளி வேலைக்கு அனுப்பாமல் அலுவலகத்தைச் சுத்தப்படுத்தச் சொல்கிறான். அவள் உள்ளே வந்ததும் அலுவலகக் கதவை மூடி அவளை நெருங்குகிறான். சந்திரா புயலெனச் சீறுகிறாள். அவனைத் தள்ளிவிட்டு தப்பித்து ஓடுகிறாள். அவள் மோதிரத்தைத் திருடிவிட்டு ஓடிவிட்டதாகப் போலீசில் புகார் செய்கிறான். காவல்துறையினர் கைகளில் அகப்படும் சந்திரா முழுவதுமாகச் சிதைக்கப்படுகிறாள்.

நாவல் முழுவதும் காவல்துறை வன்முறைகளால் நிரம்பியுள்ளது. காவல்துறையினருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் வலுவான கூட்டு இருப்பதைக் காண்கிறோம். குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைக் கைது செய்து கூண்டில் ஏற்றுகிறார்கள் சிறையிலடைக்கிறார்கள். சாத்தான்குளம். காவல் நிலையத்தில் தந்தை-மகன் இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இத்தகு வன்முறைகள் எல்லாம் காவல் நிலையங்களின் அன்றாடக் காட்சிகள்தான் என்பதை ’நுகத்தடி’ நாவல் உறுதிப்படுத்துகிறது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்கு அசிங்கமாகவும். அகோரமாகவும் சித்திரவதை செய்கிறார்கள். விரும்பிய வண்ணமெல்லாம் அவர்கள் சட்டத்தை வளைக்கிறார்கள். அபலைப் பெண் சந்திராவை நரவேட்டை ஆடுகிறார்கள். காவல்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்படும் சந்திரா மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல்களினாலும் பாதிக்கப்படுகிறாள். மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடுகிறாள். காவல்துறையின் கண்களிலிருந்து குற்றவாளிகள் தப்பிவிடலாம். ஆனாலும் நிரபராதிகளால் தப்பிவிட முடிவதில்லையே!

மீண்டும் சந்திரா காவல்துறையின் பிடிகளில் சிக்குகிறாள். சீரழிக்கிறார்கள். இம்முறை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கள்ளக் கூட்டு இருக்கிறது. ஈவு இரக்கமற்ற அம்மருத்துவர் சந்திராவின் கிட்னியை எடுத்து விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். கிட்னி இழந்ததை அறியாத சந்திரா அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள். முருகனை வழிபட மயிலம் செல்கிறாள். அங்கும் அவள் ஏமாற்றப்படுகிறாள். கொடிய கடத்தல் பேர்வழியிடம் சிக்குகிறாள். லாட்ஜ் ஓனரிடம் பாலியல் தொழிலாளியாக விற்கப்படுகிறாள். அவளுடன் சேர்ந்து மேலும் சில அப்பாவிப் பெண்களையும் பாலியல் தொழிலாளிகள் என்ற குற்றம் சுமத்திக் காவல்நிலைய லாக்கப்பில் அடைக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றிட கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்களை விரட்டி அடிக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிப் பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் சிறைக்கு வருகிறார்கள். கைதிகளைச் சந்திக்க முறையான மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். சிறைத்துறையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. கைதிகளைக் காணவரும் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்குகிறார்கள். சிறையில் பணக்காரக் கைதிகள் அனைத்து வசதிகளையும் பெறுகிறார்கள். சிறையிலிருந்த சசிகலா பெங்களூர் நகரில் ஷாப்பிங் சென்றதைத்தான் சிசிடிவி கேமரா நமக்கெல்லாம் படம் பிடித்துக் காட்டியதே! சந்திராவும் மற்ற பெண்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர் போராட்டத்தால் விடுவிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் லஞ்சம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிலைத்திருப்பதை நாவல் இவ்வாறு காட்டிச் செல்கிறது. குற்றப் பரம்பரையினர் என்று சொல்லித் துன்புறுத்துகின்ற காவல்துறையினரிடம் இருந்து குறவர் இனத்தவர்களை நாம் எப்போது காப்பாற்றப் போகிறோம் என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது.

பாலியல் தொழிலாளிகள் வாழ்வின் துயரங்களை தன்னுடைய புனைவிலக்கியங்களில் பதிவு செய்த நாவலாசிரியர் ஜி.நாகராஜன் தன்னுடைய விமர்சகர்களை நோக்கி, “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இது உங்களுக்குப் பிடிக்காது இருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்; இதை எல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும்” என்று சொல்கிறார்.

பாண்டியக் கண்ணனும் விமர்சகர்களை நோக்கி இதேபோன்ற பதிலைத்தான் சொல்ல வேண்டியிருக்கும். நாவலில் இவ்வளவு அருவருப்பான வேலைகளை, வக்கிரங்களை, வன்முறைகளை விவரிக்க வேண்டுமா என்று கேட்பவர்களை நோக்கி அவரும் “ஊர்களில், காவல்நிலையங்களில், சிறைகளில், சுகாதாரத்துறையில், அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்புகளைத் திருடி வியாபாரம் செய்யும் தனியார் மருத்துவமனைகளில் நடப்பதைத்தான் எழுதுகிறேன். நாற்றம் சகிக்கவில்லை என்றால், உண்மை சுடுகிறதென்றால் நாவலைப் படிக்காமல் நகர்ந்து விடுங்கள். என் எழுத்துக்குத் தடையாக நிற்காதீர்கள்” என்றுதான் அவர் சொல்வார்.

 –பெ.விஜயகுமார்.

Leave a Response