Book Reviewஇன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்: நிறம் மாறிய காகம் – தேனி சுந்தர்

 

இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு நூல். மிக எளிய வார்த்தைகளில், மிகச் சிறிய வாக்கியங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்நூலில் உள்ள இருபத்தோரு கதைகளும் பல்வேறு நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை. மொழிபெயர்க்கப்பட்டவை. வாசிப்புப் பயிற்சிக்கான கருவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் தொகுப்பாசிரியர் தோழர் யூமா வாசுகி. கதைகளுக்கேற்ற அழகிய சித்திரங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கி.சொக்கலிங்கம்.

இந்த கொரனா பொது அடங்கு காலத்தை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் வண்ணம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னை, ஈரோடு, தேனி, சேலம், திருப்பூர் என ஏராளமான இடங்களில் உள்ள நண்பர்கள் இணையவழிச் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அறிவியல் இயக்கக் கிளையின் சார்பில் நண்பர் மனத்துணைநாதன் ஒருங்கிணைக்கும் சிறார்களுக்கான புத்தக நண்பன் என்கிற நிகழ்வும் குறிப்பிடத் தக்க ஒன்று. தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் அந்நிகழ்வில் கதைகளைச் சொல்லி வருகின்றனர். அதில் எனக்கும் ஒரு நாள் மாலை கதைசொல்லி புத்தகத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பங்கேற்பாளர்கள் அனைவருமே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான். அன்று அவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தேர்வு செய்து பகிர்ந்து கொண்டது இந்நூலின் கதைகள் தான். குட்டிக் குட்டியாக நான்கு கதைகள் சொன்னேன். குழந்தைகள் பலரும் கத ரொம்ப நல்லாருந்துச்சு சார் என்று சொன்னார்கள். அதை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி..

நிறம் மாறிய காகம் - Niram Maariya Kaagam - Panuval ...

இடம் என்றொரு கதை. இரவு நேரம். ஓர் ஏழை தன் மிகச் சிறிய குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று கடுமையான மழை பெய்தது. அப்போது யாரோ கதவைத் தட்டிக் கேட்டார்கள், “மழைக்கு ஒதுங்குவதற்கு உள்ளே கொஞ்சம் இடம் இருக்குமா?”. அந்த ஏழை சொன்னான், “வாருங்கள், உள்ளே ஓர் ஆள்தான் படுத்துத் தூங்க முடியும். ஆனால், இரண்டு பேர் வசதியாக அமர்ந்து கொள்ளலாம். வாருங்கள், நாம் இங்கே உட்காரலாம்.” ஏழை கதவைத் திறந்ததும் வழிப்போக்கன் உள்ளே வந்தான். இருவரும் குடிசையினுள் அமர்ந்தார்கள். சற்று நேரத்திற்குப் பிறகு, மற்றொரு ஆள் கதவைத் தட்டிக் கேட்டான். ‘வெளியே கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது. உள்ளே வரலாமா?” ஏழை அவனையும் வரவேற்றான். “வாருங்கள், இரண்டு பேர் இங்கே வசதியாக அமர முடியும். ஆனால் மூன்று பேர் தாரளமாக நின்று கொண்டிருக்கலாம், வாருங்கள்.” இரவு முழுதும் கடுமையான மழை பொழிந்தது. மூவரும் குடிசையினுள் நின்றுகொண்டே இருந்தனர். விடிந்தது. அந்த இரண்டு பயணிகளில் ஒருவர் சொன்னார், நாங்கள் இருவரும் நிஜமான வழிப்போக்கர்கள் இல்லை. நான் இந்த நாட்டின் ராஜா. இவர் என் மந்திரி. இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது தான் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அதனால் தான் உன் குடிசைக் கதவைத் தட்டி இடம் கேட்டோம். உன் இரக்க குணத்தை பரிசோதிக்க வேண்டும் என்று தான் இரவு முழுவதும் உன்னுடன் இருந்தோம். நீ உண்மையிலேயே நல்லவன் தான். உன்னை என் நண்பனாக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறி அரண்மனைக்கே அழைத்துச் சென்று தங்க வைத்துக் கொள்கிறான் மன்னன்.

கல் எழுத்து என்றொரு கதை. இரண்டு நண்பர்கள் அரேபிய பாலைவனத்தில் வணிகத்திற்காக பொருட்கள் வாங்க பயணம் செய்கின்றனர். எதிர்பாராத விதமாக பாலைவனக் கொள்ளையர்கள் வழிப்பறி செய்து விடுகிறார்கள். இன்று போக வேண்டாம் என்று சொன்னேனே கேட்டாயா என்று கூறி அப்துலின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறான் சலீம். என்ன செய்வது, மீண்டும் வெறும் கையோடு வீடு திரும்ப முடியாது. திட்டமிட்ட ஊருக்கே சென்று எப்படியாவது உழைத்து பணமும் பொருளும் திரட்டிக் கொண்டு தான் சொந்த ஊருக்குச் செல்வது என்று உறுதியோடு பயணத்தைத் தொடர்கின்றனர். ஓரிடத்தில் ஓய்வெடுக்கின்றனர். அப்போது, என் நண்பன் சலீம் என்னை அடித்து விட்டான் என்று மணலில் எழுதுகிறான் அப்துல். சலீம் அதைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டான். பயணம் தொடர்கிறது. கால் தவறி, ஒரு பெரிய பள்ளத்தில் விழப்போன அப்துல்லை உடனடியாகக் கைகொடுத்து காப்பாற்றுகிறான் சலீம். அடுத்து ஓய்வெடுக்கும் இடத்தில் இன்று என் நண்பன் சலீம் எனது உயிரையே காப்பாற்றி விட்டான் என்று அருகில் இருக்கும் கல்லில் செதுக்குகிறான். ஏன் அப்போது மணலில் எழுதினாய், இப்போது மட்டும் கல்லில் செதுக்குகிறாய் என்று சலீம் கேட்கிறான். அப்போது என் மீது கோபம் கொண்டாய். அது தற்காலிகமானது. இப்போது என் மீது கொண்ட அன்பால் உயிரையே காப்பாற்றினாய். இந்த அன்பு நிரந்தரமானது. அதனால் தான் அதை நிரந்தரமாக இருக்கும்படி செதுக்கிக் கொண்டிருக்கிறேன் என்றான் அப்துல்.

நிறம் மாறிய காகம் Niram Mariya Kagam

இவைபோலவே இலட்சிய ஓவியம், நாயாகிய ஆடு, முட்டாள் தம்பதி, கண்ணாடி, புதையல் என இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய இருபத்தோரு கதைகளுமே அருமையானவை. இவை அனைத்தும் தினமணி நாளிதழின் இணைப்பாக வரக்கூடிய சிறுவர் மணியில் வெளியானவை. பாரதி புத்தகாலயத்தின் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. துவக்க வகுப்பு குழந்தைகளுக்கு வாசிப்பின் பால் ஆர்வத்தை ஊட்ட, பாட புத்தகங்களின் பால் இருக்கும் பயத்தைப் போக்க நிச்சயம் உதவும் என்பதற்கு நான் கேரண்ட்டி…

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/niram-maria-kaagam-1841/

–தேனி சுந்தர்

1 Comment

  1. நல்லதோர் படைப்பு. இனிய அறிமுகம். குழந்தைகளுக்கு பரிந்துரைக்க உதவும் நூல். நன்றி

Leave a Response