Articleகல்வி

புதிய கல்விக் கொள்கை – 1 (பள்ளிக்கல்வி) – ஆ. அறிவழகன்

190views
Spread the love

 

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்து கிடக்கின்றன.  தெளிவில்லாத, முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் இருக்கின்றன. மேலும் பல்வேறு கொள்கைகள் உத்தேசமாகத் சொல்லப்பட்டிருக்கின்றனவே தவிர உறுதியாகச் சொல்லப்படவில்லை. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து இதனை செயல்படுத்துவது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறி தான்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம்: பள்ளிக்கல்வி, பக்கம் 11 (e) (f) (g) (h) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

“மழலையர் கல்வியின் அனைத்து அம்சங்களும் (தற்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மறுபெயரிடப்படும்) கல்வி அமைச்சகம் என்பதின் அதிகாரத்தின் கீழ் வரும் இது நடைமுறை ரீதியில் மழலையர் கல்வியைப் பள்ளிக் கல்வியுடன் இணைத்துவிடும்.  இந்த மாற்றத்திற்கான திட்டம் கல்வி, பெண்கள், குழந்தை மேம்பாடு, நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகங்களால் 2019ற்குள் இணைந்து முடிவு செய்யப்படும்.”

“இணக்கத்தினை உறுதி செய்வதற்குப் பள்ளிக்கு முந்தைய கல்வி (தனியார், அரசு, கொடையாண்மைசார்) அனைத்தையும் ஒன்று சேரக் கண்காணிக்க ஒரு பயனுள்ள தர ஒழுங்கு முறை அல்லது சான்றளிப்பு அமைப்பு நிறுவப்படும்.”

“பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கற்றல் தேவைகளில் நேரடியாக உதவ வாய்ப்பளிப்பதற்கான தேவை, தகவல்களைப் பரந்தளவில் பரப்புவதன் மூலமும், பெருமளவில் ஆதரவு திரட்டுவதன் மூலமும் பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும்.”

“3-6 வயதுள்ள அனைவருக்கும் கட்டணமற்ற கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த கல்வி உரிமைச் சட்டம் 2009 விரிவுபடுத்தப்படும்.”

மேற்சொன்னவற்றில், 2019க்குள் அமைச்சகங்கள் இணைந்து முடிவு செய்துவிட்டதா? 3-6 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணமில்லா கட்டாயக் கல்வி விரிவுபடுத்தப்படும் என்றால் தனியார், அரசு, கொடையாண்மைசார், பங்குதாரர்கள் எதற்கு? போன்ற கேள்விகள் எழுந்தாலும், புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியை 5+3+3+4 என்ற முறையில் பயிற்றுவிக்கப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். இந்த முறை புதியதா? இதற்கு முன் உள்ள 10+2 முறையை விட இதனால் கல்வி கற்கும் இளம் சிறார்களுக்கு புதிய அறிவு ஒளிவட்டம் ஏற்படுமா? என்பதைப் பார்ப்போம்.

முந்தையை திட்டத்தை நாம் 10+2 என்று சொன்னாலும் இப்போது இவர்கள் அறிவித்திருக்கும் (5+3+3+4) முறைக்கும் இந்த 10+2 முறைக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.  சுருங்கச் சொன்னால் புதிய முறையில் 1ஆவதுக்கு முந்தைய மூன்று வருடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, 12 ஆண்டுகள் இருந்த பள்ளிக் கல்வியை 15 ஆண்டுகளாக மாற்றயிருக்கிறார்கள்.

10+2 கல்வி முறை என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், இது 5+3+2+2 என்ற அடிப்படையில்தான் நடைமுறையில் உள்ளது.  முதல் 5 வகுப்புகள் தொடக்கக் கல்வி (Primary School) என்றும், அடுத்த மூன்று வகுப்புகள் (6-8) நடுநிலைக் கல்வி (Middle School) என்றும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் (9-10) உயர்நிலைக் கல்வி (High School) என்றும், பள்ளியிறுதி ஆண்டுகள் (11-12) மேல்நிலைக் கல்வி (Higher Secondary) என்றும் உள்ளன. (இப்போதைய தமிழக கல்வித் திட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மால்கம் ஆதிசேசய்யா அவர்கள் எழுதிய கட்டுரையில் உள்ள படத்தை இணைத்துள்ளேன் (‘A Planning Model for education in Tamil Nadu’, Malcolm S. Adiseshiah, Monthly Bulletin, MIDS, January 1972).

புதிய கல்விக் கொள்கையில் (5+3+3+4) முதல் 5 வகுப்புகளை (1-5) இரண்டாகப் பிரித்து, பிளேஸ்கூல், எல்.கே.ஜி., யு.கே.ஜி./அங்கன்வாடி கல்வியைச் சேர்த்து (PS+LKG+UKG+1+2) 5 ஆண்டுகளாகவும்; 3,4,5ஆம் வகுப்புகளை சேர்த்து அடுத்த 3 ஆண்டுகளாகவும், 6,7,8 ஆம் வகுப்புகளைச் சேர்த்து அடுத்த 3 ஆண்டுகளாகவும், 9,10,11,12 ஆம் வகுப்புகளைச் சேர்த்து அடுத்த 4 ஆண்டுகளாகவும் வகைப்படுத்தி உள்ளார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம் பக்கம் 15 4(a) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

“அடித்தள நிலை (3-8 வயது): வேகமான மூளை வளர்ச்சி, விளையாட்டு, கண்டறி செயல் மூலம் கற்றல்

ஆயத்த நிலை (8-11 வயது): விளையாட்டு, கண்டறி செயல் மூலம் உருவாக்குதல்; அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட கற்றலுக்கு மாறத் தொடங்குதல்

நடுநிலைப் பள்ளி நிலை (11-14 வயது): பாடங்களில் கருத்துருக்களைக் கற்றல்; வளரிளம் பருவத்தினரை வழிகாட்டத் தொடங்குதல்

மேல்நிலை (14-18 வயது): வாழ்க்கைக்கும் உயர்கல்விக்கும் ஆயத்தமாதல்; இளம் வயதுவந்தோர் நிலைக்கு மாற்றம்”

மேற்குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் புதிய கல்விக் கொள்கையில் அடித்தள நிலையில் அங்கன்வாடி வகுப்புகளான மூன்று வருடத்தை நடைமுறைப் பாடத்திட்டத்தில் கொண்டுவந்துவிட்டது வெளிப்படை.

பொதுவாக நகரங்களில் 3 வயதுக்கு மேல் யாரும் இப்போது குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பதில்லை. கட்டாயமாக மூன்றாம் வயதிலேயே பிளே ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் இது கிராமங்களிலும் இனிக் கட்டாயமாக்கப்படும். காலத்தின் கட்டாயம் கருதி இவ்வகுப்புகளை அரசு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதா? அல்லது இவ்வகுப்புகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பினாமிகளைக் கொண்டு எல்லா கிராமங்களிலும் அடித்தளக் கல்வியை (புதிய கல்விக் கொள்கைபடி உள்ளூர்மொழி/ தாய்மொழியில்) மூன்று வயது சிறார்களுக்கு அளிக்கப் போகிறதா? என்பது தெரியவில்லை.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம் பக்கம் 15 4(b) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

“மேல்நிலையில் நான்கு ஆண்டுகள் பல்துறைசார் படிப்பினைக் கொண்டிருக்கும் ஆழ்ந்த பாட அறிவினையும், உய்யச் சிந்தனையையும், மாணவர் விருப்பத்திற்கான நெகிழ்வுத்தன்மையுடன் வாழ்க்கைப் பேரார்வங்களின் மீதான கவனத்தையும் உருவாக்கும்.”

புதிய கல்விக் கொள்கையில் உள்ள ...

மேலுள்ளது, புதிய கல்விக் கொள்கையின்படி (5+3+3+4) இறுதி நான்கு ஆண்டு மேல்நிலைப்படிப்பில் ‘மாணவர் விருப்பத்திற்கான நெகிழ்வுத் தன்மையுடன்’ என்பது எது? நெகிழ்வுத்தன்மை இப்போது நடைமுறையில் உள்ள பள்ளிக் கல்வியிலும் நம்மிடையே உண்டு. எனக்கு நிகழ்ந்ததையே இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

1973ஆம் ஆண்டு பிறந்த நான் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கவில்லை. என்னுடைய பக்கத்துவீட்டு நண்பன் (72ல் பிறந்தவர்) எல்.கே.ஜி., யு.கே.ஜி. முடித்து 1ம் வகுப்பு சேர்ரும்போது, என்னையும் என் பெற்றோர் அவனுடன் 1ம் வகுப்பு சேர்த்துவிட்டார்கள்.  அப்போது வயது ஒரு பொருட்டல்ல.  தலையைச் சுற்றி காதைத் தொட்டால் 1ம் வகுப்பு சேர்த்துக்கொள்வார்கள் (எனக்குக் கை கொஞ்சம் நீளம்தான்!). பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு 15 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு பதினைந்து வயது நிறைவடையவில்லை. என் பெற்றோரிடம் தலைமையாசிரியர், “‘பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு உடல், உள்ளத் தகுதி உள்ளது‘ என்று ஒரு மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொடுத்தால் தேர்வு எழுதலாம்… இல்லையேல் ஒரு வருடம் பொறுத்திருக்க வேண்டும்…” என்றார். என் பெற்றோர் மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொடுத்தார்கள். நானும் பதினைந்து வயது நிறைவடைவதற்கு முன்னமே பத்தாவது பொதுத் தேர்வு எழுதினேன்.

இதேபோல இடைநின்ற மாணவர்கள் மீண்டும் தொழிற்கல்வியிலும், கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்வது நம்மில் நடக்காதது இல்லை.  ஆகவே நெகிழ்வு என்பது மாணவர் உடல், உள்ளத் தகுதியைப் பொறுத்து நடைமுறையில் இருந்துகொண்டுள்ளதுதான்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம்: (2. a.) பக்கம் 13ல் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“ஊட்டச்சத்தும் கற்றலும் பிரிக்கமுடியாத தொடர்பினைக் கொண்டுள்ள மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் – ஊட்டச்சத்துள்ள காலை உணவு மதிய உணவு இரண்டும் தொடக்கப் பள்ளிக்கு முந்தைய மாணவர்களுக்கும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்.  கொடுக்கப்படும் உணவின் தரத்தினை உறுதிசெய்வதற்காக, திட்டத்திற்கான செலவு உணவு விலைவாசியுடனும் பண வீக்கத்துடனும் இணைக்கப்படும்.”

– இலவசம் கொடுத்து தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்று சொன்ன பல பேர் மேலுள்ளதைப் படித்தால் காமராஜரும், தமிழ்நாடும் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 சுருக்கம்: (4. e, f, i) பக்கம் 16ல் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“பாடத்திட்ட, பாடத்துணை அல்லது பாடத்திட்டம் சாராத பகுதிகளுக்கு எவ்விதக் கடுமையான பிரிவும் இல்லா நெகிழ்வுத்தன்மையுள்ள பாடத்திட்டம்; கலைகள் மற்றும் அறிவியல், ‘வாழ்க்கைத் தொழில்சார்’ மற்றும் ‘கல்விசார்’ படிப்புகள் ஆகிய பிரிவுகளும் இல்லாததாக – மேல்நிலைப் பள்ளி நிலையில் மாணவர்கள் பாடப்பிரிவுகளை மாற்றித் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.”

“கல்வி கற்றல் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை, விரும்பினால் 8 ஆம் வகுப்பு வரை உள்ளூர் மொழி/தாய்மொழியில் இருக்கும்.  தேவைப்படுகிற இடத்தில் (இருமொழிகளுக்கு) மாறிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையையும் இந்த அணுகுமுறை கொண்டிருக்கும்.”

“வாழ்க்கைத் தொழில்சார் அனுபவம் அனைத்து மாணவர்களுக்கும் முன்கூட்டியே அளிக்கப்படும். 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தொழிற்சார் திறன்களும் கைத்தொழில்களும் பற்றிய ஓராண்டு கால பொது ஆய்வு (சர்வே) படிப்பு வழங்கப்படும்.  9-12ஆம் வகுப்பில், மாணவர்கள் தொழிற்சார் படிப்புகளுடன் வழக்கமான கல்விசார் படிப்புகளைப் படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதில், மாணவர்களுக்கு ‘கலந்தும் இணைத்தும்’ தேர்வு செய்யும் வாய்ப்பும் உண்டு.”

மேலுள்ளவைகளுக்கான விளக்கங்களை யாராவது படித்துப் புரிந்தவர்கள் விளக்க வேண்டும். இவைகளெல்லாம் அரசிடம் உறுதித்தன்மை இல்லை என்பதைக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

Image

ஆ. அறிவழகன்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிப்பகத்துறையில் உதவியாளராகப் பணியாற்றும் இவர், ‘விதையாய் நீ விருட்சமாய் நான்’ (கவிதை), ‘வெள்ளந்தி மனிதர்கள்’ (சிறுகதை) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மால்கம் ஆதிசேசய்யா குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளவர், அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டுள்ளார்.

Leave a Response